தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரகங்கள் சீராகச் செயல்பட...!

என் கணவருக்கு வயது 46. 13 ஆண்டுகளாக சர்க்கரை வியாதி உள்ளது. கடந்த ஜூலை மாதம் நிமோனியா நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

எஸ். சுவாமிநாதன்

என் கணவருக்கு வயது 46. 13 ஆண்டுகளாக சர்க்கரை வியாதி உள்ளது. கடந்த ஜூலை மாதம் நிமோனியா நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 5 மாதங்களாக நுரையீரலில் நீர்க்கோர்வையை கவனிக்கத் தவறியதால் 2 கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின் சரியானது. ஆனால் க்ரியாடின் 3.7 என்ற அளவில் உள்ளது. இது சிறுநீரகச் செயல் குறைபாடு என்று கூறுகிறார்கள். இதை சரி செய்வதற்கு வழி என்ன?

விஜயா, கோவை.

இதுபோன்ற உடல்நிலையில் இரத்த அணுக்களில் குறைபாடு ஏதேனும் உள்ளதா? என்பதை உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த அணுக்களின் அளவானது சீராக இருக்கும் நிலையில் இரத்த அழுத்தம் நாளங்களில் சரியாக இயங்கும். சிறுநீரகங்களில் இந்த இரத்த அழுத்த பிரதிபலிப்பானது ஏற்ற இறக்கத்துடன் இருக்குமேயானால், அது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால் இரத்த அழுத்தத்தைச் சரியான விகிதத்தில் கடைபிடித்து அதன்மூலம் அவருடைய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

ஆடாதொடை, சீந்தில் கொடி, திரிபலை எனப்படும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கடுகு ரோஹிணீ, நிலவேம்பு மற்றும் வேப்பம்பட்டை ஆகிய மூலிகை மருந்துகள் இரத்த அழுத்தத்தை நல்ல ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க உதவுபவை. இவற்றைத் தனித்தனியே பயன்படுத்தியும் பலன் பெறலாம் அல்லது இவற்றினுடைய சேர்க்கை கஷாய வடிவமாகவும் தயாரித்துச் சாப்பிடலாம். ஆடாதொடையினை நன்றாக இட்லித் தட்டில் நீர் ஊற்றி வேக வைத்து இடித்துப் பிழிந்தெடுத்த சாறு 15 மி.லி. அளவில் எடுத்து அரை ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிட, சிறுநீரகங்களில் இரத்த அழுத்தமானது சீராகி அவற்றினுடைய செயல்திறனை மேம்படுத்துவதால் க்ரியாட்டினுடைய அளவு குறைவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. சீந்தில் கொடியும், கடுகு ரோஹிணியும் ஆடாதொடைக்கு சளைத்தவை அல்ல. இவையிரண்டையும் நன்றாக இடித்து சுமார் 15 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் வேக வைத்து கால் லிட்டராக குறுக்கி வடிகட்டி காலையில் 125 மி.லி. மாலை 125 மி.லி. என்ற அளவில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறிது பேதியாகி குடலின் உட்புற அழுத்தத்தைக் குறைப்பதால் அங்கிருந்து பிரதிபலிக்கும் சிறுநீரகங்களின் இரத்த அழுத்தமும் சீராவதால் சிறுநீரகக் குறைபாடுகளை நாம் பெருமளவில் குறைக்கலாம். திரிபலைக் குடிநீர் எனப்படும் திரிபலையின் சூரணத்தை 5 கிராம் எடுத்து 300 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 60 மி.லி. ஆக குறுக்கி வடிகட்டி அதனுடன் இரண்டு கேப்ஸ்யூல் கண்மதம் எனப்படும் சிலாசத்து இரவு படுக்கும் முன் சாப்பிட உடலின் உட்புறங்களில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை வலுவாய் வெளியே எடுத்துச் செல்லும் சக்தியிருப்பதால் சிறுநீரகங்களின் செயல்பாடானது சீராகும். மேற்குறிப்பிட்ட அனைத்து மருந்துகளையும் சேர்த்து வாசாகுடூச்யாதி என்ற பெயரில் விற்கப்படும் கஷாயத்தை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கல்லீரல் செயல்பாடானது மேம்பட்டு இரத்த அணுக்கள் உடலில் வலுப்பெறுவதால் சிறுநீரகங்களின் வேலைத் திறனானது செவ்வனே நடைபெறத் தொடங்கும்.

தண்ணீரினுடைய அளவு குடிப்பதற்கு சுமார் 700 மி.லி. முதல் ஒரு லிட்டர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று இதுபோன்ற நிலையில் அறிவுறுத்தப்படுகிறது. தர்ப்பைப் புல் 15 கிராம் அளவில் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி அரை லிட்டராக குறுக்கி வடிகட்டி ஒரு நாளில் பலதடவை சிறுக சிறுகப் பருகுவதால் இரத்தத்திலுள்ள தேவையற்ற கொழுப்பை அது குறைக்கும். அதனால் சிறுநீரகங்களுக்கு வேலைப் பளுவானது குறையும்.

மூத்ரஸ்ய க்லேதவாஹனம் எனும் ஆயுர்வேத சித்தாந்த பிரகாரம் க்லேதம் என்ற வார்த்தையின் அர்த்தமானது பிசுபிசுப்புடன் கூடிய பொருட்களைச் சிறுநீர்மூலம் வெளியேற்றுவது என்று கூறலாம். அதாவது சிறுநீரகத்தின் வழியாக நாம் சாப்பிடும் பிசுபிசுப்பான உணவுப்பொருட்களாகிய உளுந்து, மைதாப்பொருட்கள், வெல்லம், தயிர், பிட்சா, பன் பட்டர் ஜாம், உப்பு தண்ணீரில் வாழக் கூடிய மீன், நண்டு, இரால் போன்றவற்றைத் தவிர்த்து எளிதில் செரிமானம் ஆகக் கூடிய அரிசி, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, நீர்மோர், நெல்லிக்காய், கொடிக்காய்கள், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, சீரகம், மிளகு, தனியா போன்றவற்றை உணவுகளில் சீரான வகையில் சேர்த்துக்கொள்ள உங்களுடைய கணவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்குத் தீர்வாக அமையலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT