ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவு... செயல்... மருந்துகள்!
என் வயது 80. எனக்கு உணவுக்குழாயில் அடைப்பு உள்ளது. சாதத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து தண்ணீர் போல சாப்பிட்டு வருகிறேன்.
என் வயது 80. எனக்கு உணவுக்குழாயில் அடைப்பு உள்ளது. சாதத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து தண்ணீர் போல சாப்பிட்டு வருகிறேன். மிகவும் சிரமப்படுகிறேன். உணவுக்குழாயில் சதை வளர்ந்துள்ளது. எனவே ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றார்கள். எனக்கு உடம்பு தெம்பு இல்லை. நடக்கவே சக்தியில்லை. எனவே இந்த உபாதைக்கு ஆயுர்வேதம் மூலமாக தீர்வு காண முடியுமா?
அ.சரஸ்வதி, குன்னத்தூர்.
உந்துதல் அல்லது ஊதிப் பெரிதாக்குதல் எனும் ஒரு சக்தியை உணவுக்குழாய் பகுதியில் சஞ்சரிக்கும் பிராண, உதான, சமான மற்றும் அபான வாயுக்கள் பெற்றிருப்பதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. கபத்தினுடைய ஆதிக்க ஸ்தானமாகிய உணவை ஏந்திச் செல்லும் மேற்புறக் குழாயில் உங்களுக்கு வயோதிகத்தினால் அவற்றினுடைய ரப்பர் போன்ற தன்மையை இழந்து சதை வளர்ச்சி ஏற்பட்டு, அங்கு வாயுவும் கபமும் சேர்ந்து செய்திருப்பதாகத் தோன்றுகிறது. அதனால் வாயு மற்றும் கபதோஷங்களுக்கான சிகிச்சைமுறையால் உங்களுக்குத் தீர்வு ஏற்படலாம்.
Advertisement
வாயுவை அதிகரிக்கச் செய்யும் வறட்சி தரும் உணவு, லேசான தன்மை உடைய கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை சார்ந்த உணவுகள், உணவுக்குழாயில் கடும் வறட்சியை ஏற்படுத்தி அங்குள்ள நெய்ப்பு, மந்தம், வழுவழுப்பு ஆகிய குணங்களைக் கொண்ட கபத்தை ஊதிப் பெரிதாக்கி அடைப்பை ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த இரு தோஷங்களையும் குறைக்கக் கூடிய உணவு, செயல் மற்றும் மருந்துகள் என்ற முறையில் அமைத்து செயல்படுத்தும்பட்சத்தில் அவையே ஒரு நிரந்தரமான தீர்வைத் தரலாம்.
சிலாசத்து எனும் பற்பம் குடல் உட்புறப் பகுதியில் உள்ள சதை வளர்ச்சியை கரைக்கக் கூடிய மருந்தாக ரஸரத்னசமுச்சயம் எனும் ஆயுர்வேத நூலில் காணப்படுகிறது. காப்ஸ்யூல் வடிவத்தில் விற்கப்படும் இந்த பற்பத்தை காலை, மதியம் இரவு உணவிற்குப் பிறகு அரை மணிநேரம் கழித்து, சுமார் 48 நாட்கள் சாப்பிடலாம். தேவதாரு, தசமூலம், ஷட்பலம் எனப்படும் ஆறு மருந்துகளின் கூட்டாகிய இந்துகாந்தம் எனும் கஷாய மருந்தும், சிலாசத்து பற்பம் செய்யும் அதே செயலைச் செய்யக் கூடியது. சுமார் 15 மி.லி. கஷாயத்தை 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீருடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் 3-6 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடலாம். உடலின் வலுவை இழக்கச் செய்யாமல், உட்புறச் சதையைக் கரைக்கக் கூடியது. திரிகடுகம் எனும் சுக்கு, மிளகு மற்றும் திப்பிலியின் சூரணத்தை இரவு படுக்கும் முன் 1/2 - 1 ஸ்பூன் ( 5 கிராம்) எடுத்து சுமார் 10 மி.லி. தேனுடன் குழைத்துச் சாப்பிடவும். இதனால், கபம் மற்றும் வாத தோஷத்தால் ஏற்பட்ட உணவுக்குழாய் அடைப்பானது நீங்கக்கூடும்.
உறங்கும்போது, மார்பு மற்றும் தலைப்பகுதி சற்று உயர்வாக இருக்கும்படி அமைத்துக் கொள்ளவும். குளிர்ந்த நீரையோ, குளிர்பானங்களையோ குடிப்பதைத் தவிர்க்கவும். யோகப்பயிற்சிகளை நீங்கள் கற்று அறிந்திருந்தால், சில எளிதான பயிற்சிகளை மேற்கொண்டு அதனுடன் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியையும் செய்யலாம். கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடைய உணவுகளால் உணவுக்குழாய்ப் பகுதியில் மேலும் வறட்சி ஏற்பட்டு வாயு அதிகரிக்கலாம் என்பதால், அவற்றைப் பெருமளவில் குறைக்கவும். இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையினால் கப தோஷம் அதிகரித்துச் சதை வளர்ச்சி மேலும் ஏற்படலாம் என்பதால் அவற்றின் சேர்க்கையையும் குறைப்பது நல்லதே. உணவைச் சாப்பிட்ட பிறகு நீர் அருந்துவதைத் தவிர்த்து உணவுக்கு நடுவே சிறிது சிறிதாக இளஞ்சூடான பதத்தில் பருகலாம். ஏலாதி எனும் ஆயுர்வேத தைல மருந்தை வாரம் இருமுறை தலை மற்றும் உடலெங்கும் தேய்த்துக் குளிக்கவும். அதிக அளவில் பேச்சு, சிரிப்பு, சிந்தனை, வேலை ஆகியவற்றைத் தவிர்க்கவும். உண்ட உடன் படுத்து உறங்குவதைத் தவிர்த்துச் சிறிது நேரம் நேராக நிமிர்ந்து அமர்ந்து, அதன் பிறகு பத்து நிமிடங்கள் எளிய நடைப்பயிற்சியை முடித்த பிறகு உறங்குவது நல்லது. இடதுபுறமாக சரிந்து படுப்பதும் நலமே.
(தொடரும்)