சென்ற இதழ் தொடர்ச்சி...
துலாம்: ராசிச் சக்கரத்தில் ஏழாம் ராசி துலாம். இதன் சின்னம் தராசு. ஏழாம் பாவம் களத்திர ஸ்தானம், காம ஸ்தானம் என்றெல்லாம் சொல்லப்படும். மேலும் மர்ம உறுப்பைக் குறிக்கும் ஏழாம் பாவம்.
தராசின் இரண்டு தட்டுகளும் ஒரு முள்ளும் இருப்பதுபோல் இரண்டு பீஜங்களும் ஒரு லிங்கமும் காணப்படுகிறது. இதன் காரணத்தினால் மர்ம உறுப்பைப் போன்ற தோற்றமுள்ள தராசு ஏழாம் ராசியான துலாத்திற்குத் தரப்பட்டிருக்கிறது.
விருச்சிகம்: ராசிச் சக்கரத்தில் எட்டாவது ராசி விருச்சிகம். இதன் சின்னம் தேள். ஜாதகத்தில் எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம். அதாவது மரணத்தைக் குறிக்கும் இடம் எட்டாம் இடமாகும். உடல் முழுவதும் விஷத்தன்மை பரவினால் மரணம் ஏற்பட்டு விடும். இதனை உருவகப்படுத்தும் விதமாகவே விஷ ஜந்துவான தேளின் உருவம் எட்டாவது ராசியான விருச்சிகத்திற்குத் தரப்பட்டுள்ளது.
ஜாதகத்தில் எட்டாம் இடம் எதிர்பாராமல் வரக்கூடிய விபத்துகள், ஆபத்துகளைக் குறிக்கும். தேள்கள் நாம் எதிர்பாராத இடங்களிலிருந்துதான் கொட்டுகின்றன. விருச்சிக ராசிக்குத் தேளின் உருவம் தரப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
தனுசு: ஜாதகத்தில் ஒன்பதாம் பாவத்திற்கு தர்ம ஸ்தானம் என்று பெயர். ராசிச் சக்கரத்தில் ஒன்பதாவது ராசியான தனுசுக்குச் சின்னம் வில். சமூகத்தில் தர்மத்தை, அதாவது நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் அரசர்கள் ஆவர். அக்கிரமக்காரர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க அரசர்கள் வில்லேந்தினார்கள். ராமாயணத்தில் ராமனும், பாரதத்தில் அர்ஜுனனும் வில்லேந்தியது அதர்மக்காரர்களை அழித்து நீதியை நிலைநாட்டுவதற்குத்தான். தர்மத்தைப் பாதுகாப்பதின் அடையாளமாக வில் உருவம் கருதப்பட்டது. எனவே ஒன்பதாம் பாவமான தர்மஸ்தானத்திற்கு வில் உருவம் தரப்பட்டது.
மேலும் ஒன்பதாம் இடம் ஆன்மிக ஈடுபாடுகள் தொடர்பான விஷயங்களைக் குறிக்கும். ஆன்மிகத்தில் முக்கியமான அம்சம் மனதை ஒருமுகப்படுத்துவதாகும். வில்லேந்தும் வீரர்களுக்கு மன ஒருமைப்பாடு மிக மிக அவசியம். மன ஒருமைப்பாடுள்ள வில் வீரனுக்கு அர்ஜுனனே ஓர் உதாரணம். மன ஒருமைப்பாட்டை உருவகப்படுத்தும் விதமாகவும் தனுசு ராசிக்கு வில் சின்னம் தரப்பட்டது.
மகரம்: ராசிச் சக்கரத்தில் பத்தாவது ராசி மகரம். பத்தாம் பாவம் தர்மஸ்தானம் அல்லது தொழில் ஸ்தானம் எனப்படும். மகர ராசியின் உருவம் முதலை. முதலை பெரும்பாலும் சேற்றுப் பகுதியில்தான் வசிக்கும்.
"சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கை வைக்க முடியும்'' என்பது பழமொழி. சேற்றில் கால் வைப்பது என்பது விவசாயம் செய்வதைக் குறிக்கும். ஆதிகாலத்தில் தொழில் என்றால் அது விவசாயமாகத்தான் இருந்திருக்கிறது. உழைக்காமல் யாரும் உண்ண முடியாது. முதலைக்கு அசுர பலம் தரும் இடம் சேற்றுப்பகுதிதான். அதை விட்டு வெளியே வந்தால் அதற்கு எந்த பலமும் கிடையாது. இதுபோல் மனிதனுக்கு வேலை இருந்தால்தான் தன் சொந்தக்காலில் நிற்க முடியும். வேலைவெட்டி இல்லாதவன் நடைப்பிணம்தான். இதனை உருவகப்படுத்தவே பத்தாவது ராசியான மகரத்திற்கு முதலை உருவம் தரப்பட்டுள்ளது.
கும்பம்: ராசிச் சக்கரத்தில் 11-ஆவது ராசி கும்பம். இதன் உருவம் பானை. ஜாதகத்தில் 11-ஆம் பாவம் லாபஸ்தானம் எனப்படும் லாபமாக ஈட்டிய பொருள்களைச் சேமித்து வைப்பதற்கு ஆதிகாலத்தில் பானைகள்தான் பயன்பட்டன.
தற்காலத்தில் பணப்புழக்கம் நடைமுறையில் உள்ளதுபோல் முற்காலத்தில் இந்தியாவில் பணப்புழக்கம் எதுவும் கிடையாது. பண்டமாற்று முறைதான் புழக்கத்தில் இருந்துள்ளது. தங்கக் காசுகள், வெள்ளிக்காசுகள் புழக்கத்திற்கு வந்த காலத்தில்கூட அவை மண்பானைகளில்தான் சேமித்து வைக்கப்பட்டன. இதனை உருவகப்படுத்தும் விதமாகவே ராசி சக்கரத்தில் 11-ஆவது ராசியான கும்பராசிக்குப் பானையின் உருவம் தரப்பட்டுள்ளது.
மீனம்: ராசிச் சக்கரத்தில் 12-ஆவது ராசி மீனம். இதன் சின்னம் மீன் உருவம். ஜாதகத்தில் 12-ஆம் பாவம் விரைய ஸ்தானம் எனப்படும்.
"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு'' என்பது பழமொழி. ஒருவன் சிக்கனக்காரனா அல்லது செலவாளியா என்பதை அவன் தண்ணீரை எப்படிப் பயன்படுத்துகிறான் என்பதைக் கொண்டு நிர்ணயிப்பது வழக்கம். மீன்கள் தண்ணீரில் வசிப்பவை. மீன்கள் வசிக்கும் இடம் தண்ணீர் என்பதால் விரையத்தை உருவகப்படுத்தும் விதமாக ராசி சக்கரத்தில் 12-ஆவது ராசியான மீன ராசிக்கு மீன்கள் வசிக்குமிடம் உருவமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இறப்பை (மரணம்) குறிக்குமிடம் 12-ஆம் பாவமாகும். முற்காலத்தில் இறந்தவர்களின் உடலை ஆற்றில் வீசி எறியும் வழக்கம் இருந்திருக்கிறது. உடலை எரித்தபின் சாம்பலை ஆற்றிலோ, கடலிலோ கரைப்பதுதான் வழக்கம். இதனைக் குறிக்கும் விதமாகவும் 12-ஆவது ராசியான மீன ராசிக்கு மீனின் வசிக்குமிடம் உருவமாகத் தரப்பட்டுள்ளது.
புரொபசர் கே.கே.பாலேந்தர் எழுதிய ஜோதிடவியல்
(முதல் பாகம்) என்னும் நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.