தினமணி கதிர்

ரேஸ் அமெரிக்கா போட்டியில் தடம் பதித்த இந்தியர்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட இந்தியரின் பெயர் டாக்டர் சீனிவாச கோகுல்நாத். எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் தற்போது இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்தி

ஏ. பேட்ரிக்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட இந்தியரின் பெயர் டாக்டர் சீனிவாச கோகுல்நாத். எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் தற்போது இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்தில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். இவரது பெயர் அமெரிக்க ஊடகங்களிலும், விளையாட்டு சஞ்சிகைகளிலும் அதிகம் பகிரப்பட்டதற்கு காரணம், உலகின் மிகச் சிறந்த சைக்கிள் பந்தயங்களில் ஒன்றான "ரேஸ் அக்ராஸ் அமெரிக்கா' எனப்படும் (ரேம்) சைக்கிள் போட்டியில் 5,000 கி.மீ. தூரத்தை 11 நாள் மற்றும் 18 மணி நேரத்தில் கடந்ததேயாகும். இந்த சாதனையைப் படைத்த முதல் இந்தியர் இவரேயாவார். 
அண்மையில் "ரைட் எ சைக்கிள் பவுண்டேசன்' அமைப்பின் சார்பில் பெங்களூருவிலிருந்து மைசூரு, மடிக்கேரி, சுல்தான்பத்தேரி, முதுமலை என 3 மாநிலங்கள் வழியாக உதகைக்கு வந்து உதகையிலிருந்து மீண்டும் மைசூருவுக்குத் திரும்பி செல்லும் வகையிலான நடத்தப்பட்ட "டூர் ஆப் நீல்கிரிஸ்' சாகச சைக்கிள் பயணத்தில் பங்கேற்றிருந்த டாக்டர் சீனிவாச கோகுல்நாத் உதகையில் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:
""சைக்கிள் ஓட்டுவது என்பது கனவாக இருந்திருக்கவில்லை. அதிலும் நான் சைக்கிள் சாம்பியனாவேன் என நினைத்ததுமில்லை. கடந்த 2009}ஆம் ஆண்டில் பெங்களூருவில் இந்திய ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்த பின்னர் குடியிருப்பிலிருந்து அலுவலகத்திற்குச் சென்று வர சைக்கிளைப் பயன்படுத்தினேன். இதில் ஏற்பட்ட பிடிப்பே பெங்களூரைச் சுற்றிலும் சிறிய அளவிலான தூரங்களுக்கு சைக்கிளிலேயே சென்று வரும் ஆர்வத்தை அதிகரித்தது. அதனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லலாம் சுமார் 200 கி.மீ. தொலைவு வரை சைக்கிளிலேயே சென்று திரும்புவேன்.
அப்போது பெங்களூருவிலுள்ள சைக்கிள் கிளப்புகளிடத்தில் தொடர்பு ஏற்பட்டு "அல்ட்ரா சைக்கிளிங்' எனப்படும் 7 முதல் 8 மணி நேரம் வரையிலான சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றேன். இந்தப் போட்டிகளில் பங்கேற்றபோது இந்தியாவில் காஷ்மீரிலுள்ள "லே முதல் கன்னியாகுமரி' வரையிலும், அமெரிக்காவில் நடத்தப்படும் ரேஸ் அமெரிக்கா என்ற பிரசித்தி பெற்ற சைக்கிள் போட்டியிலும் பங்கேற்பதே எனது கனவாக இருந்தது. இதில் 2014 ஆம் ஆண்டு லே முதல் கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பயணத்தைத் தனியாக 15 நாட்களில் முடித்தேன்.
இதை முடித்த பின்னர்தான் ரேஸ் அமெரிக்கா குறித்த தகவல்களைத் திரட்டினேன். ரேஸ் அமெரிக்காவில் பங்கேற்க வேண்டுமெனில் அதற்கென நடத்தப்படும் தகுதி போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்காக டெக்கான் கிளிவேங்கா பகுதியில் நடத்தப்படும் போட்டியில் 650 கி.மீ தூரத்தை 32 மணி நேரத்தில் கடக்க வேண்டும். அதேபோன்று, கோவாவிலிருந்து பெல்காம் வழியாக பூனாவுக்கு செல்லும் பந்தயத்திலும் பங்கேற்று தேர்ச்சியடைந்தேன். தொடர்ந்து 2016}ஆம் ஆண்டு போட்டியில் பங்கேற்றதில் 11 நாட்களில் 4,200 கி.மீ. தூரத்தையே கடக்க முடிந்ததால் இதில் தேர்ச்சி பெற முடியவில்லை.
அதைத்தொடர்ந்து 2017}ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு கடற்கரையான கலிபோர்னியாவிலிருந்து கிழக்கு கடற்கடை பகுதியான அனபோலிஸ் மேரிலேண்டு வரையிலான 5,000 கி.மீ.தூரத்தை 11 நாள் 18 மணி நேரத்தில் கடந்தேன். வழியில் 50 டிகிரி வெப்பநிலையிலிருந்து 5 டிகிரி வெப்பநிலை வரையிலான பல்வேறு பருவநிலை சவால்களையும், 4 மலைப்பகுதிகள், 4 ஆறுகள், 3 நேரம் மாறுதலுக்கான நிலைகளையும் கடந்தேன். கடந்த 36 வருடங்களாக நடத்தப்பட்டுவரும் மிகவும் கடினமான இப்போட்டியில் இதுவரையிலும் 265 பேர் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை எட்டியுள்ளனர். அவர்களில் முதல் இந்தியனாக நான் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
எனது வெற்றிக்கு கடுமையான பயிற்சியும், இலக்கை எட்ட வேண்டுமென்ற குறிக்கோளுமே காரணமாகும். 5,000 கி.மீ தூரத்தை 12 நாளில் கடக்க வேண்டுமென்ற சூழலில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் வரையிலும், 450 கி.மீ தூரம் வரையிலும் சைக்கிள் ஓட்டியுள்ளேன். மனதைத் தளர விடாமல் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தி செயல்பட்டதே எனது வெற்றிக்கான காரணம். எனது மனைவியும், எனது துறை ரீதியிலான ஒத்துழைப்புமே எனது நோக்கங்கள் நிறைவேற உதவுகிறது'' என்றார் லெப்டினென்ட் கர்னல் டாக்டர் சீனிவாச கோகுல்நாத். 
ரேஸ் அமெரிக்கா போட்டியில் தடம் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமையை கொண்டுள்ள இவர், இப்போட்டிகளைத் தொடர்ந்து 2018}ஆம் ஆண்டில் இந்தியாவின் சார்பில் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று ஒலிம்பிக்கிலும் சாதனை நிகழ்த்த வேண்டுமென்பதே தனது லட்சியமென்கிறார். அதற்கேற்றாற்போல 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சைக்கிள் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க இந்தியரான அலெக்ஸி கிரேவலும் இவருடன் உதகைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT