தினமணி கதிர்

உயிரை வளர்த்தல்

ஜங்ஷன்

அந்த அரசு மருத்துவமனையில் ஊடகக்காரர்கள் தேனீக்களைப் போல் மொய்த்து இருந்தனர். அவர்கள் அனுப்பி வைக்கும் முதல்கட்ட செய்திகள் காட்சி ஊடகங்களில் பரபரப்பை பற்ற வைத்துக் கொண்டிருந்தன. அவசர சிகிச்சைப் பிரிவில் விலங்குகள் பராமரிப்பு உதவியாளர் சுப்பையா அனுமதிக்கப் பட்டிருந்தார். அவ்வறைக்கு முன்னால் சுப்பையா மனைவி மீனாட்சி இருண்டுபோன முகத்தில் கண்ணீர் வழிய ஓரிடத்தில் நிலையாக நிற்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். உடன் இரண்டு பக்கத்து வீட்டுப் பெண்கள் அவளை ஆதரவாய்ப் பிடித்தபடி நின்றிருந்தனர். அவர்களது முகங்களிலும் புதிரும் பீதியும் அப்பி இருந்தன.

உள்ளே அவசரப்பிரிவு மருத்துவர்கள் இருவர் கவனித்துக்கொண்டிருந்தனர். படுக்கையில் சுப்பையாவின் முகத்தில் ரத்தத்தாரைகள் காய்ந்து மின்ன... கண்கள் கட்டப்பட்டிருக்க வலியால் முனகியபடி படுத்திருந்தார். விலங்கு காப்பலுவலர் உயரமான தனது உடலைக் கொண்டை ஊசிபோல் வளைத்து சுப்பையாவிடம் நலம் விசாரித்து ஆறுதல் சொன்னார்.

""எல்லா வகை மருத்துவ உதவிகளும் அரசுச் செலவில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவலைப்படாமல் உடலைத் தேற்றிக் கொண்டு வாங்க. செய்திக்காரங்க வாயைக் கிண்டுவாங்க. எதையும் உளறிக்கொட்டி வம்பில் மாட்டிவிட்டுறாதிக. பயப்படாம இருங்க. உங்களை டிபார்ட்மெண்ட் காப்பாத்திரும்'' என்று சுப்பையாவிடம் மெல்லச் சொன்னார். சுப்பையா வலியோடு தலையசைத்தார். அவர் சுப்பையாவின் தோளை ஆறுதலாக மெல்லத் தட்டி நிமிர்ந்தார்.

மருத்துவர்களிடம், ""சுப்பையாவைக் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு பார்த்துகுங்க. பாவம்... நல்ல மனுசன். பத்திரிகைகாரங்ககிட்ட மட்டும் கொஞ்சம் கவனமாப் பேசுங்க'' என்று கூறி அவர்களது கைகளைக் குலுக்கி வெளியேறினார்.

செய்தியாளர்கள் அவரை மொய்த்துக் கொண்டனர். 

""என்ன சார்... என்ன நடந்தது?'' எண்முனைகளிலிருந்தும் கேள்விகளை எறிந்தனர்.

""ஒண்ணுமில்லைங்க, புலி கால் பட்டதில் முகத்தில் கொஞ்சம் காயம். உயிருக்கு ஆபத்தில்லை. இரண்டொரு நாளில் குணமாகிடுவார். அப்புறம் அவருகிட்டேயே விவரமா கேட்டுக்குங்க'' என்று அவர்களது முற்றுகையிலிருந்து விடுபட்டு வேகமாக நடந்தார். சுப்பையாவின் மனைவியைப் பார்த்தார். 

""அம்மா பயப்படாதிங்க... அவருக்கு ஒண்ணுமில்லை. புலியின் முன்னத்தங்கால் பட்டுறமோன்னு விலகினவர் தடுமாறி விழுந்துட்டார். முகத்தில் கொஞ்சம் காயம். சீக்கிரமா குணமாயிருவார். அவருக்கு எல்லா வைத்திய செலவுகளையும் அரசாங்கமே பார்த்துக்கும். உங்களுக்கு என்ன உதவி தேவையினாலும் உங்க மகன் கிட்ட சொல்லுங்க. நாங்க செய்யிறோம்'' என்று வணங்கி தனது உதவியாளரோடு நடத்தார்.

மீனாட்சியம்மாள் கதறினார். 

""புலி அடிச்சா மனுஷன் தாங்குவாரா? அவருக்கு என்ன ஆச்சோ... பாவிக பார்க்க விடமாட்டேன்கிறாக'' மீனாட்சியம்மாளின் கதறல் படத்தோடு செய்திகள் பறந்தன. "புலி தாக்கி பராமரிப்பாளர் கவலைக்கிடம். அந்தப் புலியை பல ஆண்டுகளாக காப்பகத்தில் உணவுகொடுத்து பராமரித்து வந்தவரை அந்தப் புலி ஏன் தாக்கியது? எப்படித் தாக்கியது? அதற்கு வெறி பிடித்துள்ளதா? மர்மமாகவே இருக்கிறது. அதிகாரிகள்குழு விசாரணை; பராமரிப்பாளர் சுப்பையா மயக்க நிலையில் கவலைக்கிடமாக உள்ளார். மருத்துவர்களும் வனத்துறை அதிகாரிகளும் உண்மையை மறைப்பதாகத் தெரிகிறது' என்ற ரீதியில் செய்தி தீப்பொறிகள் ஊடகங்களில் ஆக்ரோஷமான புலிகளின் படங்களுடன் படர்ந்து கொண்டிருந்தன.

கடந்த பதினைந்தாண்டுகளாக அரசு விலங்குகள் காப்பகத்தில் சுப்பையா பணியாற்றி வருகிறார். அந்த விலங்குகள் காப்பகத்தில் உள்ள ஐந்து சிங்கங்கள், எட்டு புலிகள் சுப்பையாவின் பராமரிப்பில் உள்ளன. 2 வெள்ளைப் புலிகள்... 4 வங்காளப்புலிகள்... இன்னொருவர் பராமப்பில் உள்ளன. இம்மிருகங்களுக்கு மாமிசம் வைத்தல், குடிதண்ணீர் வைத்தல், அவற்றின் கூண்டைத் திறந்து விட்டு காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை வேலியிடப்பட்ட வனவெளிக்குள் உலாவவிடுதல். தடுப்பு வேலிகளுக்கு வெளியே நின்று பார்க்கும் பார்வையாளர்கள் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்வது; அவற்றிக்கு நோய் தொற்று, சுகவீனம் ஏற்பட்டால் உடனே மருத்துவர்களுக்குத் தகவல் சொல்லி உடனிருந்து சிகிச்சைக்கு உதவுவது. இதுதான் அவர்களிருவரது வேலைகள். 

பார்வைக்குத்தான் அவை கொடூரமான விலங்குகள். திறந்து விட்டவுடன் அப்பிராணிகளாக வெளியே போகும். இருட்டத் தொடங்கியதும் அவையே அதனதன் கூண்டுக்குள் நுழைந்து கொள்ளும். இவர்களது வேலை கூண்டின் கதவுகளைச் சரியாக மூடி பூட்டுப் போடுவதுதான். குழந்தைகளாவது அதன் நோக்கத்திற்கு அடம் பிடிக்கும்; இவை அடம்பிடிப்பதில்லை. இந்த விலங்குகள் அவற்றின் தேவைகளை உணர்வுகளை அவற்றின் உறுமல்களின் வேறுபாடுகளிலிருந்து வெளிப்படுத்தலைத் தெரிந்து கொள்ள வேண்டியது தான்.
சுப்பையாவிடம் சிங்கம், புலிகள் முரண்டு பிடிப்பதே இல்லை. அவர் சொல்வதை எல்லாம் கேட்கும்! முக்கிய நபர்கள் கூண்டினருகே பார்க்க வரும் போது சுப்பையாவின் சொற்களுக்கு கட்டுப்பட்டு நிற்கும். ஆவேச உறுமலோ, உடலசைவுகளோ இல்லாமல் கம்பீரமாய் படுத்திருக்கும். சில நேரங்களில் கூண்டுக்குள் உலாத்தும். கூண்டுப்புலி, சிங்கங்கள் அருகே நின்று ஒளி வீச்சில்லாமல் தன் ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்ள... தூர இருந்து ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்ள ஒத்துழைக்கும்.

பார்வையாளர்கள் சீண்டாத வரையில் அவை உறுமுவது கூட இல்லை. சுப்பையா பராமரிப்பில் அவற்றுக்கு பசி... குடிநீர்..உறக்கம்..உடல் நலிவு என்று எந்த இடையூறும் வந்ததில்லை. அவரும் தனது மகன் மகளை பிரியம் காட்டி வளர்த்ததை விடக் கூடுதல் கவனம் செலுத்தினார்.

காலை எட்டுமணிக்கு உள்ளே வந்து காக்கி உடைகளுக்குள் நுழைபவர் இரவு ஏழுமணிக்குத்தான் அவருக்கான அறையில் துணிகளைக் கழற்றுவார். டெட்டால் போட்டு கைகால்களைத் தேய்த்து குளித்து வழக்கமான உடை பூணுவார். அதுவரை அந்த மிருகங்களின் கவிச்சியை... வீச்சத்தை... அவை வெளியேற்றும் காற்றுகளை சகித்து பழக்கமாகிவிட்டது. அவர் தரும் இறைச்சிகளை நுகர்ந்து பார்த்துவிட்டு அவை உண்ணும் லாவகம்... நகத்தால் பற்றி வாயில் பற்கள் கவ்வி அசைபோடும் விதம் சுப்பையாவின் ரசனைக்குரியதாக இருக்கும். பார்வையாளர்கள் அந்நேரம் அனுமதிக்கப்படுவதில்லை. சில நாள்கள் இறைச்சியை நுகர்ந்து பார்த்து விட்டு, முன்னங்காலால் கூண்டின் வலது ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டு, இடது ஓரம் வந்து படுத்துக் கொள்ளும். பசித்த பின்னால் சாப்பிடும். பசி நேரத்தில் இறைச்சி முன்னால் இல்லை என்றால் குரல் எழுப்பி உறுமும். அந்த சத்தமே பசியை உணர்த்தும். முள்குத்தியோ... காயம் பட்டோ வலியிருந்தால் அதன் முனகல் நோய்மையைத் தெரிவித்து விடும். மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை கொடுக்கும் போது உணர்ந்து, ஒத்துழைப்பு தரும். இவற்றின் குணங்கள் சுப்பையாவை வீட்டை மறக்கச் செய்யும். அவரது அன்பும் பிரியமும் அவற்றிடம் கூடக் கூட அவற்றினுடனான நெருக்கமும் கூடியது. கூண்டுக்கு வெளியே நாட்டில் உலாவும் மனிதர்களிடம் காணும் அகங்காரமோ... அதிகார ஆதிக்கமோ விலங்குகளிடம் இல்லை. அவற்றிற்குத் தேவை இடையூறில்லா உலாத்தல்... பசிக்கும் போது உணவு, வெயிலுக்கு நிழல்... மழைக்கு மறைப்பு... தினவைத் தணித்தல்.

சிங்கங்களும் புலிகளும் இவர் சொல்லுக்குக் கட்டுப்படும். அவற்றிடம் இவர் குரல் உயர்த்தி அதிகாரம் செலுத்தியதில்லை. சுப்பையாவின் பராமரிப்பு கண்டு அதிகாரிகளும், அவருக்கு பரிச்சயமான மனிதர்களும் மரியாதை தந்தார்கள்.
சுப்பையாவின் மனைவி மீனாட்சியம்மாளுக்கு புலிக்காரம்மான்னு தெருவில் பெயர். அந்தத் தெருவில் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தனி மரியாதை உண்டு.

""அப்பாடி மனுஷன் பயங்கரமான புலி சிங்கங்களையே தன் கைக்குள்ளே அடக்கி வச்சிருக்காரு!'' என்ற பெருமிதம் தொனிக்கவே பேசுவார்கள். மீனாட்சியம்மாவுக்கு வேறு வகையான சந்தோசம். "சிங்கம், புலிகளை அடக்கி வச்ச மனுஷனே தனக்குள்ளே அடக்கம். வச்சதை சாப்பிடுவார்... சொன்னதைச் செய்வார். அவர் துணிகளை அவரே துவைச்சுக்குவார். சம்பளத்தை வாங்கி அவரது கைச் செலவுக்கு போக அப்படியே கொடுத்திருவார். எந்த சண்டையும் சடவுமில்லை. அவரவருக்கு தேவைப்பட்டதை தீர்த்துக் கொள்ளுவார்கள். வம்போ வறட்டு வீம்போ இல்லை. என்ன மற்ற ஆம்பிள்ளைக மாதிரி பிள்ளைக படிப்பு, அவங்க தேவை, வீட்டுக்குத் தேவைன்னு இருந்து பார்த்து செய்யறதில்லை. ஒரு நல்ல நாள் பெரிய நாளுன்னு வீட்டில இருந்து தின்போம். பிள்ளைகளோட சந்தோசமா இருப்போம்னு இல்லை. சொந்தம் பந்தம்னு வீட்டு விசேஷங்களுக்கு போக வர முடியாது. இவரு புலிக்காரர் ஆனதால யாரும் சடவு சொல்றதில்லை!சொந்தங்களும் தெருக்காரங்களும் இவரைச் சொல்லி விலங்குகளைச் சுற்றி பார்க்க, ஒரு நாளைக் களிக்க வாய்ப்பிருந்தது.

மீனாட்சி அம்மாளுக்கு அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை. அவரது செல்வாக்கை வைத்து மகனுக்கு வனத்துறையிலேயே வேலை வாங்கிக் கொடுத்துவிட்டார். மகளையும் கல்யாணம் செய்து வைத்தாகிவிட்டது. "மனுஷனுக்கு எதுவும் ஆகிப்போனா என்ன செய்யறது. ஏது செய்யிறது. இப்படி குற்றுயிரா ஆஸ்பத்திரியில கிடக்காரே. மனுஷன், புலிகளை தன் கைக்குள்ள வச்சிருந்தாரே. இவரை எப்படி அது தாக்கியிருக்கும்?. டீவிக்காரங்க சொல்றது மாதிரி புலிக்கு வெறிப்பிடிச்சிருச்சா? என்னதான் ஆனாலும் மிருகம் தானே? மனுஷப் பயலே மிருகமாகத் திரியும்போது மிருகத்துக்கு கோப தாபம் இருக்காதா? என்ன இழவோ... நம்ம தலையில வந்து விழுந்திருக்கு.

மனுஷன் பகல் முச்சூடும் வீட்ல இல்லாட்டியும் புருஷன் இருக்காரு... பிள்ளைகளுக்கு அப்பா இருக்காரு என்ற தைரியமாவது இருக்கும். புலிக்காரம்மான்னு மரியாதை இருக்கும். இதுக்கெல்லாம் ஆபத்து வந்துறக்கூடாது கடவுளே! அய்யப்பா... உன் புலி வாகனம் எங்க குடும்பத்தை பலி வாங்கிறக் கூடாதப்பா..' என்ற படி தாலிக்கயிறெடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு கும்பிட்டாள். பக்கத்து வீட்டுப் பெண்கள், ""அண்ணனுக்கு இருக்கிற நல்ல மனசுக்கு எந்த ஆபத்தும் வராதுக்கா! தைரியமா இருக்கா'' என்று அவரது தோளைத் தொட்டு ஆறுதல் சொன்னார்கள்.

சுப்பையாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். வலது கண்ணில் புலி நகம்பட்டு கண் கோளம் கலங்கி உருக்குலைந்து விட்டது. முகத்தில் கன்னத்தில் நகக்கீறல்கள், ரத்தக்கசிவு இருந்தது. ஆய்ந்ததில் புலி தாக்கியது மாதிரி இல்லை. எதிர்பாராத காலசைவில் விரல் நகம் பட்டிருக்கிறது. கனமான தாக்குதல் இல்லாவிட்டாலும் நகத்தின் கூர்மையால் வலது கண் பார்வை போய்விட்டது. இன்றைய மருத்துவ வசதி கொண்டு மாற்றுக்கண் பொருத்திவிடலாம். உடலிலும் சர்க்கரை வியாதியோ, இரத்த அழுத்தமோ இல்லை. அதனால் கவலைப்பட வேண்டாம். ஆனால் என்ன நடந்தது என்று சொன்னால் உடலில் வேறு எதாவது பாதிப்பு இருக்கிறதா, அல்லது இப்போது புலப்படாமல் இருந்து எதிர்காலத்தில் பாதிக்கும் ஆபத்துண்டா என்ற கோணத்தில் உடலைப் பரிசோதிக்க உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
சுப்பையா, ""வேறு யாரும் இருக்காங்களா?'' என்று சைகையில் கேட்டார். ஒரு மருத்துவர் அறையைச் சுற்றிப் பார்த்து விட்டு அறைக் கதவை மூடினார்.
சுப்பையா அந்த நாளின் நிகழ்வுகளை மனக்கண் முன் ஓடவிட்டு சொல்லத் தொடங்கினார்.

அன்று காலை எட்டு மணிக்கெல்லாம் வந்ததும் துணி மாற்றிக்கொண்டு அவரது பொறுப்பில் உள்ள நான்கு சிங்கங்கள்... எட்டுப் புலிகள் அடைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளைப் பார்த்து வந்தார். அவை இவரைப் பார்த்தும் காலை வணக்கம் சொல்வது போல் மென்மையான உறுமலில் வலது முன்னங்காலைத் தூக்கி அசைத்து கூண்டுக் கதவைத் திறக்கச் சொல்லின. இவர் முதலில் புலிகள் கூண்டை ஒரு ஐந்து நிமிட இடைவெளிகளில் வெளியே செல்ல... அவகாசம் கொடுத்து ஒவ்வொன்றாய் திறந்து விட்டார். புலிகள் வனப்பகுதிக்குள் சென்றதை உறுதிப் படுத்திக் கொண்டு நூறடி தூரம் தள்ளி அடுத்த பகுதியில் உள்ள சிங்கங்களை ஒவ்வொன்றாகத் திறந்து விட்டார். புலிகள், சிங்கங்கள் வழக்கம் போலவே உலவச் சென்றன. எந்த மாற்றமும் இல்லை.

இதே போல மாலை ஐந்து மணி வாக்கில் ஒவ்வொன்றும் அதனதன் கூண்டிற்குள் வந்து அடைந்து கொண்டன. அப்பொழுதும் ராமு முதல்கொண்டு எல்லாப் புலிகளும் வழக்கம் போலவே அமைதியாக இருந்தன. வந்ததும் அதனதன் கூண்டிற்குள் வைக்கப்பட்ட சிறு தொட்டியிலுள்ள தண்ணீரைப் பருகின. எந்த மாற்றமும் இல்லை.

ஆறுமணி வாக்கில் இறைச்சி வாளிகள் வந்தன. ஒவ்வொன்றின் முன்னாலும் இறைச்சிக்கான கதவைத் திறந்து இறைச்சி வாளியைக் குப்புறச் சாய்த்தார். வழக்கமாய் தரும் கறி இல்லை. ராமு உறுமியது. அதற்கு பசியில்லை என்று நினைத்துக் கொண்டு அடுத்த இறைச்சி வாளியை எடுத்து பக்கத்திலிருந்த மல்லிகாவின் முன் இருந்த சின்ன இறைச்சிக் கதவைத் திறந்து கொட்டிவிட்டு நகர்ந்தார். இப்படியே அடுத்தடுத்த ஆறு புலிகளுக்கும்; அடுத்தக் கட்டடத்திலிருந்த சிங்கங்களுக்கும் இறைச்சிக் கொட்டி வந்தார். இருந்தாலும் பசி வந்ததும் சாப்பிடும் என்று நினைத்து சிங்கங்களின் கூண்டுகள் சரியாகப் பூட்டப் பட்டுள்ளனவா என்று சரிபார்த்தவாறு திரும்பினார்.

சிங்கங்கள் வாயைத் திறந்து திறந்து கொட்டாவி விட்டனவே தவிர, எவையும் தின்னத் தொடங்கவில்லை. இதே போல் ஒவ்வொரு புலிக்கூண்டாகப் பார்த்து பூட்டப்பட்டதை சரி பார்த்து திரும்பினார். இறுதியாக முதல் புலியான ராமுவிடம் வந்தார். ராமுவுக்கும் அவருக்கும் பத்து வருஷப் பழக்கம். இவர் பேசும் சொற்களை ராமு சரியாகவே புரிந்து கொள்ளும்.

""என்ன ராமு இன்னும் திங்கலையா?'' என்று சொல்லும் சைகையுமாக கேட்டபடி கூண்டுக்குள் எட்டிப் பார்த்தார். கூண்டின் கம்பி இடைவெளியில் வலது முன்னங்காலை நீட்டி ஏதோ சொல்வது போல் வேகமாய் அசைக்க, ராமு புலியின் கால்நகம் அவரின் வலது கண்ணாம்பட்டையில் இழுபட சலசலவென்று ரத்தம் கண்ணில் ஒழுகுவதை உணர்ந்து "அம்மா'ன்னு கத்தியபடி கீழே விழுந்தார். இவர் கீழே விழுந்ததைப் பார்த்த ராமு வித்தியாசமாக ஒலி எழுப்பியது. இதைத் தொடர்ந்து மற்ற புலிகளும் ஒலி எழுப்பின.

சத்தம் கேட்டு இறைச்சி வண்டிக்காரரும், உதவியாளனும் ஓடிவந்து தூக்கி வந்து இளநிலைக் காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். காப்பக ஜீப்பில் சுப்பையாவை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.

வார்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. முதுநிலைக் காப்பாளர் வந்தார். மருத்துவரிடம் சுப்பையாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

சுப்பையா மெல்லத் தலையைத் தூக்கி வலது கையால் வணக்கம் செய்தார். அவரும் வணக்கம் செய்தபடியே, ""தற்போது வலி குறைந்திருக்கா?'' என்று மெல்லக்கேட்டார் அவர் தலையசைத்தார்.

காப்பாளர் மூத்த மருத்துவரிடம் கேட்டார்.

""சுப்பையாவை விலங்குகள் காப்பகம் வரை அழைச்சிட்டுப் போய் ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்து விட்டுர்றோம்.இதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்குமா?''

""அவர் மன தைரியத்தோடுதான் இருக்காரு. ஆனால் வலது கண்ணை உடனே வெளியே எடுத்து மாற்றுக்கண் பொருத்தியாகணும். மருத்துவ நியதிப்படி அவரை அனுப்ப முடியாது. நோயாளி சம்மதிச்சாருன்னா... இதன் பின் ஏற்படும் விளைவுகளுக்கு எங்களை பழி சொல்லமாட்டோம்னு உறுதி கொடுத்தா அழைச்சிட்டுப் போங்க''.

""டாக்டர்... அங்கே இருக்கிற புலிகள் சிங்கங்கள் ஒன்னும் சாப்பிடாம கத்திகிட்டே இருக்குதுக. ஒரு வேளை சுப்பையா வந்து பார்த்ததும் அவரது சைகையறிந்து சாப்பிட வாய்ப்பிருக்கிறது. புலிகள் ரெண்டு நாளா சாப்பிடாமல் இன்னும் ஆக்ரோஷமாய் நடந்து கொண்டால் எங்களுக்கும் அரசுக்கும் சிக்கலாகிவிடும்'' என்றபடி சுப்பையாவிடம் சென்றார்.

இந்த உரையாடலைக் கேட்டபடி படுத்துக்கிடந்த சுப்பையாவின் இடது கண்ணில் கண்ணீர் வழிந்தது. சுப்பையாவின் முகத்தருகே குனிந்த காப்பாளரிடம் பலவீனமான குரலில், ""புலிகளுக்கு நல்ல கறி வச்சிங்களா?'' என்று கேட்டார்.

"" நல்ல கறி கிடைக்கலை சுப்பையா'' சுப்பையா மயக்கமாகிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT