அனந்தராமன் அறையில் அடைந்து கிடந்தார். வெளியே தலைநீட்டப் பிடிக்கவில்லை. ஊரும் உலகமும் எப்படியோ போகட்டும் என்றிருந்தது. இருட்டிய பிறகு மாடிக்குப் போய் நடப்போம் என்று தோன்றியது. தொலைக்காட்சி பார்க்கவும் விருப்பமில்லை. கடைசியில் நேரம் வீண் என்று வெறுப்பாகிறது.
ஒவ்வொரு செய்திச் சேனலாக விடாமல் பார்த்தவர்தான். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என்று. புரிந்தவரை சரி என்றும், தமிழ்நாட்டுச் செய்தி அங்கே எப்படிச் சொல்லப்படுகிறது என்றும் அறிவதில் ஓர் ஆர்வம்.
சினிமா பார்ப்பதை என்றோ
நிறுத்தி விட்டார். அதற்கான பொறுமை இல்லாமல் போனது. பார்த்தாலும் கொஞ்ச நேரம்தான். பிறகு வழக்கம்போல் செய்திகளுக்குப் போய் விடுவார். இப்போது அதுவும் அலுத்து விட்டது. விளம்பரக் கொடுமையைத் தாங்க முடியவில்லை.
ருக்கு இருந்தவரை விச்ராந்தியாக எல்லாம் செய்து கொண்டிருந்தவர்தான். அவளை இழந்தது முதல் அவர் உலகம் இருண்டு போனது. அவளோடு கழித்த நாட்களை அசை போட்டுக் கொண்டிருக்கிறார் இப்போது. தனக்குள்ளேயே மறுகிக் கொண்டிருக்கிறார்.
"ஆன மட்டும் சொன்னேனே அநியாயமா ஏமாத்திட்டுப் போயிட்டியே' என்று கோபம்தான். யாரை முதலில் கொண்டு போகும் என்று யாருக்குத் தெரியும்? பதினாலாம் நாள் முதல் தனிமைதான். எப்பொழுது பதின்மூன்று கழியும் என்று காத்திருந்தது போல் ஓடிவிட்டார்கள். சம்பிரதாயத்துக்கு "எங்களோட வந்திருங்களேன்'' என்று ஒரு வார்த்தை. உதட்டளவில். புரியாதா இவருக்கு? அவள் இருக்கும்போதே அவர்கள் காது கேட்கவும் இவர் சொல்லிக் கொண்டிருந்ததுதானே? இப்பொழுது மட்டும் மாறி விடவா போகிறார்? பையனிடமோ, பெண்ணிடமோ சென்று இருக்க விருப்பமில்லைதான். அதெல்லாம் சரிப்படாது இவருக்கு. "நான் என்னைக்குமே தனிக்காட்டு ராஜாய்யா' என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வார்.
"ஓடுறதே போனஸ் பீரியட்தான். இன்னும் கொஞ்ச காலத்துக்கு. இதுல இவங்ககிட்டப் போய் ச்சீ..ப்படவா?'
வாசலில் அவர்களுக்கு ஆட்டோ வந்தபோது, அப்படியே நின்று "டாட்டா' காண்பித்துத் திரும்பி, கதவைப் பூட்டி திரையைப் போட்டுக் கொண்டவர்தான்.
நல்ல காலத்திலேயே தனிமை பிடிக்கும் அவருக்கு. அமைதியும் பிடிக்கும். அதுவும் கையில் ஒரு புத்தகம் கிடைத்து விட்டால் கேட்கவே வேண்டாம். அவர் உலகம் தனி.
ருக்மணி இருக்கும்போதே, "என்னை நிம்மதியாப் படிக்க விட மாட்டேங்கிறியே. எதாச்சும் வேலை சொல்லிட்டேயிருக்கியே'' என்று அலுத்துக் கொள்வார்.
"நல்லா, ஒத்தையா உட்கார்ந்திட்டு ஆனந்தமாப் படிங்கோ'' என்று அவள் சொல்லிச் சென்று விட்டதுபோல் இருந்தது. மனிதன் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது என்பது வேறு. உண்மையாக அமைந்துவிட்ட தனிமை என்பது வேறு. இந்த வித்தியாசம் அவள் போன பின்னால்தான் தெரிகிறது. ஆட்கள் இருக்கும்போது அவர்களின் அருமை தெரிவதேயில்லை. பின்னர் ஓலமிட்டு என்ன பயன்?
"இப்டித் தனியா இருக்கமே, ராத்திரிப் படுத்து காலைல எழுந்திரிச்சாத்தானே நிச்சயம்?'' என்று பல சமயங்களில் தோன்றும்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு.
உறங்குவது போலும் சாக்காடு. உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
அப்படியே போய் விட்டால் என்ன நடக்கும்? என்ற கற்பனைக்குள் புகுவார்.
"என்னா சாரு ஆளையும் காணோம். பேரையும் காணோம்'' என்று எதிர்வீட்டு ஃபிரான்சிஸ் வர வாய்ப்பு உண்டு. டெலிபோன் டிபார்ட்மென்டில் டிரைவர். எப்ப போவார், எப்ப வருவார்ன்னு தெரியாது. இறந்து கிடக்கும் தன்னை எப்போது பார்ப்பார்? என்பதும் தெரியாதுதான். அதற்கும் ஓர் அதிர்ஷ்டம் வேணும்தான். இல்லையென்றால்... நாறிக் கிடந்தால்?
கதவை உடைத்துக் கொண்டுதான் உள்ளே வர வேண்டியிருக்கும். தனியாக வந்து கதவை "டம்...டம்'என்று உடைக்க முடியுமா? நாலு பேரை சாட்சிக்குக் கூட்டி வந்துதான் செய்ய முடியும்?
இப்படி நினைத்துத்தான் ஒரு ஜன்னலை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு படுக்கிறார். அது வழியாய் கொசுப்படை வருகிறதுதான். குட்நைட் எரிகிறது. ஆனாலும் செத்த பிணம் அழுகி நாறக் கூடாதே என்று பயப்படுகிறது மனசு. ஒருவன் இறந்த பிறகு நடப்பவை எதற்கும் அவன் சம்பந்தப்படுவதில்லைதான். ஆனாலும் தூற்றும்படியாகவா வைத்துக் கொள்வது?
"இந்தாளால என்னைக்கும் பாடுதான்யா''என்று வந்து நிற்கும் பையனின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விடக் கூடாது. அது தனக்குத் தெரியப் போவதில்லை. இருந்தாலும் சுற்றி நிற்போர் காதில் விழுந்தால் அவனைப் பற்றித் தவறாக நினைக்கக் கூடுமே? அதையே பெருமையாய் சொன்னாலும் சொல்லக் கூடும். "அப்பாவைக் கூப்பிட்டு வைத்துக் கொள்ள இருந்தேன்' என்பதை அங்கேதானே நியாயப்படுத்த முடியும்? கெட்டிக்காரப் பசங்க.
எது பேசினாலும் எதற்கும் தான் பொறுப்பாக முடியாது. வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவன் புத்திசாலித்தனம். மனதுக்குள் ஆயிரம் இருக்கலாம். விருப்பு, வெறுப்பு. அப்பாவைப் பிடிக்காமல் கூட இருக்கலாம். ஒரு மட்டுக்கும் தொலைஞ்சாருய்யா என்று கூடத் தோன்றலாம். என்றாவது அந்த வீட்டில் அவன் வந்து இருக்க வேண்டியிருக்குமே? அப்போது எதிர் வீடு, பக்கத்து வீடு என்று பழக வேண்டியிருக்குமே? முகம் கொடுக்க ஆள் வேண்டாமா? சாகும்வரை நாலு சனம் வேண்டும்தானே? விட்டு உதற முடியுமா?
எவ்வளவோ அவனிடம் பேச ஆசைதான். எதையும் காது கொடுக்கத்தான் பொறுமையில்லையே. ஒரு பாங்க் செலான் ஃபில்லப் பண்ணத் தெரியுமா? செக் எழுதத் தெரியுமா? போட்டிருக்கும் சேமிப்புகளைப் போய் மீள வாங்கத் தெரியுமா? எந்தெந்த வங்கி, நிறுவனம் எங்கெங்கே இருக்கிறது என்று பொறுமையாய்த் தேடவாவது செய்வார்களா? நாமினி போட்டிருக்கும் சேமிப்புகளுக்கு லீகல் ஹேர் - சட்டபூர்வ வாரிசு நான்தான் என்று வாங்கிக் கொடுக்கத் தெரியுமா? அதைப் பெற கலெக்டர் ஆபீசுக்கு அலைவானா? சமத்தாய் வாங்கி விடுவானா? அந்த சாமர்த்தியமெல்லாம் உண்டா அவனுக்கு? எதுவுமே தெரியாது இவருக்கு.
என்னவோ படிச்சாச்சு. வாசலுக்கு வந்தவுடனே வேலை வாங்கியாச்சு. போயாச்சு. சம்பளம் வாங்கியாச்சு... அப்டீன்னா உலகத்துல எல்லாம் தெரிஞ்சிடுத்துன்னு அர்த்தமா? குண்டுச் சட்டிக்குள்ள குதிரை. அவ்வளவுதானே?
நினைப்பதுபோல் அந்த வீட்டுக்கு வருகிறானோ இல்லையோ, அல்லது விற்று விடுகிறானோ? எவன் கண்டது? எதற்கு இந்த யோசனையெல்லாம்? என்ன ஆனால்தான் என்ன? அவனவன் வாழ்வு, அவனவன் பாடு அவனவனுக்கு. என் மூலமாக வந்தவன் அவன். அவ்வளவுதானே?
அந்த வீடுதான் அவரது ஆலயம். அதன் ஒவ்வோர் அறையிலும் அவர் இருக்கிறார். அவரது கோபத்தையும், மகிழ்ச்சியையும், ஆதங்கத்தையும் அது, கண்டிருக்கிறது, கேட்டிருக்கிறது. தனிமையில் அந்த சுவரோடும், தூணோடும், தரையோடும் பேசியிருக்கிறார். அடுப்படியில் நிற்கையில் இப்பவும் ருக்குவோடு பேசுவார். ஆள்தான் இல்லையே ஒழிய, ஆன்மா இருக்கிறதே?
"சித்த நேரம்தான் சிவனேன்னு உட்காரேன். ஏதாச்சும் செய்திட்டே இருக்கணுமா? வீடுன்னா ஏதாச்சும் தூசி, துப்பட்டைன்னு அங்கங்க இருக்கத்தான் செய்யும். கண்ணுக்குப் படத்தான் செய்யும். இப்டி விடாமத் துடைச்சு முடியுமா?'' அலுத்துக் கொள்வார்.
"அப்டிச் சொல்லாதீங்கோ. துஷ்ட தேவதைகள் எப்ப எப்பன்னு காத்திண்டிருக்குமாம். வந்து உட்கார்ந்துக்கிறதுக்கு. அதுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாதாக்கும். அதான் மூலைலல்லாம் அழுக்குச் சேராமத் துடைக்கிறேன்.''
அவள் ஏற்றி வைத்த தீபம் அணையா விளக்கு. அதை இன்றுவரை பாதுகாக்கிறார் அனந்த ராமன். அந்த ஒளிக்குள்ளிருந்து புன்னகையோடு ருக்கு இவரைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். அது தீப ஒளியா? அவள் கண்களின் ஒளியா?
"பார்த்தியா... கிளம்பும்போது உன்னை மறந்துட்டேன். நாளைக்கு மழை பேய்ஞ்சிதுன்னா நீ நனைய மாட்டியோ? உன்னோட ஜன்னல சாத்திட்டுப் போகணும்ங்கிறது எனக்கு மறந்து போச்சு பார்'' என்று சொல்லிக் கொண்டே அடுப்படி ஜன்னலைச் சாத்துவார்'' பேசியது அந்த அறையோடு..
ஒவ்வோர் இடமாகச் சென்று பார்த்து லைட் அணைத்து, ஜன்னல்கள் மூடி ஃபேனை நிறுத்தி, குழாய்களை இறுக்கி.... "எல்லாம் சரியா இருக்கா? நான் கிளம்பட்டுமா?'' சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டு விட்டுத்தான் கிளம்புவார். யாரும் பார்க்க நேர்ந்தால் பைத்தியம் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அதைச் செய்து பழக்கப்பட்டவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்களின் ஏளனம் ஒரு பொருட்டில்லை.
ருக்மணி போன பிறகு அந்த வீட்டைத்தான் அவர் தனக்குத் துணையாக நினைத்தார். தினமும் கூட்டிச் சுத்தம் செய்து வாரத்துக்கு ரெண்டு முறை சோப் தண்ணீர் போட்டுத் துடைத்தார். பத்து நாளைக்கு ஒரு முறை ஒட்டடை அடித்தார். சும்மா இருக்கையில் ஒரு கிழிசல் துணியை எடுத்துக் கொண்டு ஜன்னல் கம்பிகளைத் துடைத்து சுத்தம் செய்து கொண்டேயிருந்தார். எதிலாவது ஈடுபடுத்திக் கொண்டு அவளை நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அது மட்டும்தான் இன்று அவருக்கிருக்கும் ஒரே சந்தோஷம். மானசீகமாய் வாழ முடியாது என்று யார் சொன்னது? நேரில் இருந்து வாழ்வதை விட அதுதான் ஆத்ம ஞானம்.
ருக்மணி இருந்தவரை அவள்தான் இதெல்லாம் செய்தாள். "நானும் வரேனே' என்று உதவ நினைத்தாலும், வேண்டாம் என்று சொல்லி விடுவாள். அவளே அத்தனையையும் செய்தாக வேண்டும். அப்பொழுதுதான் திருப்தி. சும்மாயிருந்து பார்த்ததேயில்லை. ஒன்றுமேயில்லாத போதிலும் கொல்லைப் புறத்தில் செடிக்கு மண் அணைத்துக் கொடுத்துக் கொண்டிருப்பாள். பழுத்த வாடிய இலைகளைப் பிடுங்கி, செடிகளைக் குளிப்பாட்டி, பளபளவென்று வைப்பாள். அவள் கைப்பட வைத்த எந்தச் செடியும் வளராமல் போனதில்லை. தளிர் விட்டிருக்கிறதா? என்று தினமும் காலையில் போய் அதன் முன்பு உட்கார்ந்திருப்பாள்.
"அப்படி உறுத்துப் பார்க்கக் கூடாதும்பா'' என்பார் இவர்.
வாசலில் ஒரு மல்லிச் செடி இருந்தது. எப்படி அது அங்கு வந்தது என்று தெரியவில்லை. வைத்ததாகவே நினைவில்லை. அடிக்கும் காற்றில் மெல்லிய மணம் வீட்டுக்குள் பரவும்.
வீடு கட்டிய போது இருந்த வாட்ச்மேனைக் கூடக் கேட்டுப் பார்த்து விட்டார்.
"தெரிலீங்களே நல்ல மணம்மா இருக்கு. நல்லதுதான சாமி. பாம்பு, தேளு வராது'' என்னத்தையோ சொல்கிறானே? என்றிருந்தது.
"ஓ மல்லி பூத்திருத்து'' சொல்லிக் கொண்டே வந்து, ஒவ்வொரு மொட்டுக்களாய்ப் பறித்து பூக்கட்ட ஆரம்பிப்பாள் ருக்கு. மொத்தமே ஒரு முழம் பூதான் என்றாலும் மூன்று நான்காகப் பிரித்து பக்கத்து வீடு, எதிர் வீடு என்று கொடுத்து வருவதில் ஒரு சந்தோஷம். அடுத்தவாளுக்குக் கொடுக்கிற சந்தோஷம் இருக்கே அது தனிதான்- இன்று அந்த மொட்டுக்களைப் பறிப்பதற்கு யாருமில்லை. பறித்துதொடுத்து. யாருக்கு நேரம் இருக்கு?
"நீயின்னா பையனுக்குப் பிரியம். "அம்மாஅம்மா'ன்னு உன் மடிலயே கிடந்தவனாச்சே. என்னானாலும் அப்பான்னா ஒரு படி கீழதான். நான் போயிடறேன்டி, உன் மடிலயே படுத்துண்டு போய்ச் சேர்ந்துடறேன். அதுக்கு மட்டும் இடம் கொடு. நீ தைரியமா இருந்துப்பே. ஆனா எனக்கு அத்தனை போறாது. உன்னோட முடிஞ்சு போச்சு என்னோட ஆட்டமெல்லாம். அத்தனையும் பொறுத்துண்டவ நீதான். என்னெல்லாம் படுத்தியிருக்கேன் உன்னை. எல்லாத்தையும் வாங்கிண்டயே, எனக்கு வேணுங்கிறபோதெல்லாம் கொடுத்தியே. தவிச்சிப் போயிடுவேன்டி நீ இல்லைன்னா. யார்ட்டயும் போயி இருக்கவும் பிடிக்காது. கூப்பிட்டாலும் போக மாட்டேன்னு வச்சிக்கோ. அதுனாலதான் இதுக்கு மட்டும் வேண்டிக்கோன்னு நான் உன்னை வேண்டிக்கிறேன். எனக்கு சாமி நீதான். இந்த வீட்டு சுமங்கலி இந்த வீட்டு மகாலட்சுமி. பெண்கள் ஒரு வயசுக்கு மேலே அந்த வீட்டோட தெய்வம்பா. அன்னமிட்ட கையில்லயா இது? அன்னலட்சுமியில்லயா நீ? எனக்கு அந்த ஒரு பாக்கியத்தை மட்டும் கொடுடியம்மா...'' மனம் கசிந்து அவள் மடியில் கிடந்திருக்கிறார் அனந்து. தன்னை அப்படித் தலை சாய்க்க விட்டதே அவள் தந்த பெறும் ஆறுதல்.
ஆனால் நடந்ததா?
எனக்குப் படணும்னு இருக்கு. போயிட்டா, புண்ணியவதி. நான் கிடந்து அல்லாடறேன். கடவுளுக்கு என் மேலே பிரியமில்லை. அதான் கூப்பிட மாட்டேன்னுட்டான். அதுக்கெல்லாம் பெரிய்ய்ய்ய புண்ணியம் பண்ணியிருக்கணும்.
இருக்காரா? செத்தாரா என்று கூடக் கண்டு கொள்வதில்லை பையன். என்றைக்காவது இவராகப் பேசினால் எண்ணி ரெண்டு வார்த்தை. அதுவும் கூட ஃபோன் லைன் கட் ஆகிவிட்டால், அத்தோடு போனது. இவர்தான் மறுபடி பேசியாக வேண்டும். என்னவோ பிஸியாய் இருக்கிறானாம். உலகத்தில் இல்லாத பிஸி. கூட இருக்கையில் பார்த்துப் பார்த்து மனசு விட்டவர்தான். அப்போதே விலகி விட்டார். எங்கிருந்தாலும் நன்னா இருக்கட்டும். அதுவே அவர் பிரார்த்தனை.
மாய்ந்து மாய்ந்து பொண்டாட்டிக்கு செய்வான். காபி போடட்டுமா? காய் நறுக்கட்டுமா? என்று வலியக் கேட்டு நடப்பான். ப்ரொவிஷன்ஸ் எல்லாம் இருக்கா? வெஜிடபிள்ஸ் இருக்குதானே? என்று அலசுவான். ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்து வாங்கக் கிளம்புவான். அத்தனை பொறுப்பாய் இருக்கிறானாம். எல்லாம் ஏற்கெனவே வாங்கி வந்து நிறைத்திருக்கும். அது என்ன மெப்பனையாய்? தெரியாதா இவன் லட்சணம்?
உடம்பு முடியாத அம்மா, "சித்த கடைக்குப் போய் இத மட்டும் வாங்கிட்டு வாடா'' என்று என்றைக்காவது அபூர்வமாய்ச் சொன்னால்... அன்றைக்கென்று இல்லாத அலுப்பெல்லாம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொள்ளும்.
"காலைலதானம்மா கடைக்குப் போயிட்டு வந்தேன்? அப்பயே எல்லாத்தையும் நினைவு வச்சு வாங்கித் தொலைக்க மாட்டியா? லிஸ்ட் போட்டு எடுத்திட்டுப் போன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ஏம்மா இப்டி என்னை உசிரை வாங்கறே? ஆபீஸ்லயும் பிடுங்கல். வீட்லயுமா?''
பெரியவங்ககிட்ட அதுவும் பெத்த தாய்ட்ட தொலைக்கிறது... கிலைக்கிறதுன்னெல்லாமா பேசுறது?
அப்படி சர்வ சகஜமாய்ப் பேசுகிறானாம்... மடையன்...
ருக்மணி ஆதங்கத்தோடு இவரைப் பார்ப்பாள். இவர் வாங்கக் கிளம்புவார். "வண்டிலதானப்பா போறே? ஏறி ஒரு அழுத்து அழுத்தக் கூடாதா? அஞ்சு நிமிஷத்துல வந்திரலாமே?'' சொல்லியிருக்கிறார். சத்தம் குறைந்துதான் போனது. அவன்பால் சற்றே பயம் வந்து என்றோ ஒட்டிக் கொண்டு விட்டது இவரிடம். தோளுக்கு மேல் போனால் தோழனாம். அப்டியா இருக்க முடியுது. இருக்கிற மரியாதையைக் காப்பாத்திட்டா போதாதா?
"நீங்க பேசாம இருங்கப்பா'' என்பான். ஏன் அப்படிச் சொல்கிறான் என்று வெகுநாட்களுக்கு இவருக்குப் புரிந்ததில்லை. எதிர்த்துப் பேசுவதை அப்படித் தவிர்க்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறானோ?
"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது' என்கிறானே. இவனுக்கு அப்படி என்ன தெரிந்து விட்டதாம்? எடுத்த எடுப்பில் முப்பதாயிரம், நாற்பதாயிரம் கொடுத்தால், இப்படித்தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள். அதை எவனாவது உணர்றானா? உணராம என்ன? மனசில இருக்கும்தானே... தெரியாதா அவனவன் லட்சணம்? வாயில் எப்படியெப்படியோ வரும் இவருக்கு.
"போங்கடா போக்கத்தவங்களா. ஐ.டி. கம்பெனி வேலை பார்க்கிறவங்களெல்லாம் இப்படித்தான் பேசிட்டுத் திரியறானுக. காலைல ஆபீஸ் போயி இவங்கள உள்ளே விட்டாத்தான் நிச்சயம். என்னை மாதிரி மாசம் பொறந்தா முப்பதினாயிரம் எவனுக்கு உண்டு? சாகுறவரைக்குமாக்கும்? எங்கே இவங்களைச் சொல்லச் சொல்லு. நித்திய கண்டம் பூர்ண ஆயுசு. எத்தனை வருஷம் சர்வீஸ் போட்டிருந்தாலும். நீங்க பேப்பர் போட்டிருங்கன்னு மேலிருக்கிறவன் ஒரு வார்த்தை சொன்னான்னா போச்சு. வேறே எடத்தைப் பார்க்க வேண்டியதுதான். போற எடத்துலயும் எத்தனை காலம்னு எவனுக்கும் தெரியாது. என்னவோ பெரிய புடுங்கின்னு நெனப்பு. இந்தப் பக்கம் வாங்கி அந்தப் பக்கம் விட்டுக்கிட்டிருக்கானுக. எவனுக்காச்சும் தான் வாங்குற காசு மேலே மரியாதை இருக்கா. பணத்தை மதிக்கத் தெரியணும். அது தனக்குப் பின்னால வர்ற மாதிரி வச்சிக்கணும். அத முன்னால ஓடவிட்டுத் துரத்திட்டுத் திரியறானுக.. ஐ.டி. ஃபீல்டு ஒரு சமயம் படுத்திச்சே. அப்போ எத்தனை பேரு தான் வாங்கிய காருக்கும், ஃப்ளாட்டுக்கும் தவணை கட்ட முடியாமத் தவிச்சானுங்க? எத்தனை பேரு வித்துட்டு வெறுமே நின்னான்? அளந்து அடியெடுத்து வைக்கணும்னு எவனுக்காச்சும் தெரிஞ்சிதா? என்னமோ வாழ்க்கைங்கிறதே டூயட் பாடுறதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கானுக. நாறப் பசங்க''
"என்னது நாறப் பசங்களா?''
"ஆமா நாறப் பசங்கதான். எப்ப நேரங்காலம் இல்லாம ஊரும் உலகமும் உறங்குற நேரத்துல வேலைக்குப் போயிட்டு வர்றாங்களோ, எப்போ வயித்துக்குப் போடக் கூடாத நேரத்துல கொட்டிக்கிறானுகளோ, எங்க ஒழுங்கான தூக்கமும், முழு நேர ஓய்வும் இல்லாம இருக்கோ... அங்கே ஒழுக்கம்ங்கிறது இல்லாமத்தான் போகும். எழுதி வச்சுக்கய்யா நான் சொல்றத. அப்டித்தான் அலையுறானுக இந்தப் பசங்க. நம்ம பையனும் அதுலதான் இருக்கான்ங்கிறதுக்காக அதெல்லாம் நியாயமாயிடுமா? இல்ல... சொல்லாமத்தான் இருக்க முடியுமா?
எந்தப் பெரியவங்களயாவது இந்தப் பையன்க மதிக்கிறாங்களா? பெரிசுங்கிறான், ரெப்பைங்கிறான். சொட்டைங்கிறான். கெழடுங்கிறான். இன்னும் என்னென்னவோ சொல்றானுங்க. எங்கிருந்து வந்திச்சு இந்தக் காலி பாஷையெல்லாம்? மொழி வளர வேண்டிதான். இதெல்லாம் எப்டி வளர்ச்சியாகும்? வளர்ச்சியா? சிதைப்பா?
அறுக்காத... கடல போடாத... ஜல்லியடிக்காத... சொம்படிக்காத... நூல் விடாத.... இதெல்லாம் என்ன பேச்சு? பொத்து, மூடு, அமுக்கு. அட கஷ்ட காலமே காதால் கேட்கவா முடியுது? இந்த வார்த்தைகளே இவங்க ஒழுக்கங் கெட்டவங்கன்னு காண்பிக்கல..? ஒழுக்கம் கெடுறதுன்னா... தண்ணியடிக்கணும். பொம்பள சகவாசம்னு அலையணும்ங்கிறதில்ல... இந்த மாதிரிக் கண்டமேனிக்குப் பேசிட்டு, பொறுப்பில்லாமத் திரியறதும் கூட ஒழுக்கங் கெட்டதுதான். எந்த அப்பனயாவது கேட்டுப் பாருங்க, எம்பையன் அப்படியில்லன்னு எவனையாச்சும் சொல்லச் சொல்லு... அவன் பேத்தறான்னு அர்த்தம்..
நல்லதை நினைக்கிறது. நல்லதைப் பேசுறதும், நல்லதைச் செய்றதும் எங்கே இல்லையோ, அங்கே ஒழுக்கம் நிச்சயமா இருக்காதாக்கும். அதுக்காகத்தான் அந்தக் காலத்துல பெரியவங்க நியமங்களையே உண்டாக்கி வச்சாங்க. அந்த நியமங்கள் எங்க பின்பற்றப்படலையோ, அந்தக் குடும்பம் நாசமாத்தான் போகும்.
இப்படி முத்திப் போய்தான் ஒரு நாள் பெரிய சண்டையே வந்து வீடு அதகளமாகி விட்டது.
வெகு நாளைக்குப் பையனோடு பேசாமல் இருந்தார் அனந்தராமன். அவன் வந்தாலே வாசலில் போய் உட்கார்ந்து கொள்வார். இல்லையென்றால் மொட்டை மாடிக்குப் போய் விடுவார். மூஞ்சியில் முழிப்பதையே தவிர்த்தார். நல்லது சொல்லிக் கேட்காத பிள்ளை என்ன பிள்ளை? அணில் பிள்ளை... தென்னம்பிள்ளை...' அவருக்கு மனசு வெறுத்துத்தான் விட்டது.
என்னவோ, பெத்த கடனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிக் கொடுத்துவிட்டால் கடமை முடிந்தது. அதுக்கு என்ன பாடு? எத்தனை ஜாதகம்தான் பார்ப்பார். பார்த்துப் பார்த்து அவரும் ஓய்ந்துதான் போனார். எதைப் பார்த்தாலும் பிடிக்கலை... பிடிக்கலை.. என்று சொன்னால்... "இவன் ரொம்ப அழகனோ?' ஒரு நாள் கேட்டே விட்டார்.
"ஏன் அவனுக்கென்ன குறைச்சல்?'' என்றாள் ருக்மணி.
"உன் பிள்ளையை நீதான் மெச்சிக்கணும். உன் பையன் உன் கண்ணுக்கு அழகாய்த்தான் தெரிவான்''
"அதுவும் உங்களுக்குத் தெரியலையே'' பட்டென்று பதில் கேள்வி போட்டாள் அவள்.
"நான் மத்தவன் பார்வைல பார்க்கிறவன். உலகம் எப்படிப் பார்க்கும்னு தெரிஞ்சவன். பரவாயில்லாம இருந்தா சரின்னு சொல்லணும்டி. வர்றதெல்லாம் ஒதுக்கிக் கிட்டேயிருந்தா... அப்புறம் இவனுக்குன்னு வானத்துலேர்ந்து அப்சரஸ்ûஸயா கொண்டு வந்து நிறுத்த முடியும்? இவனை வேண்டாம்னு சொல்றதுக்கு எம்புட்டு நேரம் ஆகும்? இவன் சரின்னு சொல்லி, அந்தப் பொண்ணு பிடிக்கலைன்னா... அதுவும் நடக்கலாமில்ல? நல்ல குடும்பமா, குணமான்னுதான் பார்க்கணும். இதையெல்லாம் சொன்னாவே சிரிப்பானுக இப்ப. ஏன்னா... வேலை பார்க்கிற இடத்துல ஒவ்வொருத்தனும் ஒவ்வொருத்தியோட அலையுறான். இன்னிக்கு ஃப்ரென்ட்ஸô இருக்கானுங்களாம். எப்டிக் கூத்து இது? சந்தர்ப்பம் பார்த்துக்கிட்டிருக்கான்னு வேணா சொல்லலாம். ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பாரு. எத்தனை அபார்ஷன் கேசு வருதுன்னு. இதுக்குன்னே ஸ்பெஷல் டாக்டர்கள்லாம் இருக்காங்க இப்ப. எப்படி சம்பாதிச்சா என்ன? அதான் காசு வருதே அவ்வளவுதான். பணத்தை எங்கே முதலா வைக்கிறானோஅங்கெல்லாம் ஒழுக்கம் கெடும். இது சத்தியம். ஒழுக்கம்னா ஆளு கெட்டுப் போறது மட்டும்னு நினைச்சிடாதே. நேர்மைக்கும், சத்தியத்துக்கும் புறம்பானது எல்லாமே ஒழுக்கக் கேடுதான்''
பேச ஆரம்பிச்சா இந்தப் பெரிசத் தூக்கி வெளில எறிங்கய்யான்னுடுவாங்க இந்தக் காலத்துப் பசங்க. எப்டியோ போய்ட்டுப் போறானுங்க. எல்லாம் முட்டி மோதி ஒரு நாளைக்குத் திரும்பத்தானே போகுது. என்ன, அன்றைக்கு ஆறுதல் சொல்ல ஆள் இருக்காது. மூத்த தலைமுறையெல்லாம் மூச்சு நின்னு எம்புட்டோ வருஷமாயிருக்கும்?
பல நாளைக்கு இப்படிப் பொழிந்து திரும்பும்போது ருக்மணி இருந்ததேயில்லை. எப்பொழுது இடம் விட்டு அகன்றாள் என்பதே தெரியாதுதான். அவளுக்கே அப்படியென்றால்... எதை நோக? யாரைச் சொல்ல?
எழுந்து வந்து வாசல் லைட்டைப் போட்டார் அனந்து. இருட்டி ரொம்ப நேரமாகிவிட்டது தெரிந்தது. பனிக்காலம். சீக்கிரமே இருண்டு விடுகிறது. அதுவும் ஒரு வகைக்கு நல்லதுதான். கைகால் முகம் கழுவிக் கொண்டு வந்து சாமி விளக்கேற்றினார். நெற்றிக்கு இட்டுக் கொண்டு கண்மூடிக் கும்பிட்டார். ருக்மணிதான் தேஜோமயமாய் மனதில் வந்தாள்.
அம்பாளே அவள்தான். அவளன்றி வேறொரு தெய்வம் ஏது? மூடிய கண்களைத் திறக்கவே வேண்டாம் போலிருந்தது. அப்படியே அவளோடு ஐக்கியமாகி விடமாட்டேனா? கடவுள் கூப்பிட மாட்டார். நீதான் என்னை அழைத்துக் கொள்ள வேண்டும். நீதான் என்னை ரட்சிக்க வேண்டும். மெய்யுருக வேண்டினார் அனந்தராமன்.
வாசல் லைட்டை அணைத்து விட்டு, கதவை உட்புறமாகப் பூட்டிக் கொண்டு இருளுக்குள் மாடிப் படியை நோக்கி சத்தமின்றி நகர்ந்தார்.
அந்தத் தெருவைச் சேர்ந்த யாரோ ரெண்டு பேர் மெலிதாய்ப் பேசிக் கொண்டே கடப்பது துல்லியமாய்க் கேட்க, காதுகள் கூர்மையாயின இவருக்கு.
"பையன சதா எதாச்சும் நொட்டைச் சொல் சொல்லிட்டேயிருந்திருப்பார் போலிருக்கு. விட்டிட்டுப் போயிட்டான் கிடக்கட்டும்னு. ஒத்த மரத்துக் கொரங்காட்டம் இருந்து கழிச்சிட்டிருக்காரு''
அவர்கள் யாருக்குச் சொன்னார்களோ, தெரியாது. தனக்கே சொன்னதாய் இவருக்குத் தோன்ற... "உலகம் இவ்வளவுதான்' என்று நினைத்தவராய் படிகளில் தடுக்காமல் மேலேறி திடமாய் முன்னேறினார் அனந்தராமன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.