தினமணி கதிர்

பித்த வாயுக்களை மட்டுப்படுத்த...! ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

பித்தம் வினா தாஹ: என்கிறது ஆயுர்வேதம். அதாவது, பித்தத்தினுடைய தொடர்பில்லாமல் எரிச்சல் ஏற்படுவதில்லை என்று அதற்கு அர்த்தம் கூறலாம். அத்தனை சூடான ஒரு பொருளை செரிமானத்திற்கான வயிற்றுப் பகுதியில்,

DIN

என் வயது 53. கண் எரிச்சல், தலை சுற்றல், பாத எரிச்சல், வலது கால் கட்டைவிரல் மேல் நரம்பு கூச்சம், முட்டிக்குக் கீழே உளைச்சல், வலது கை ஆள்காட்டி விரல் மேல் நரம்பு உளைச்சல் போன்ற உபாதைகளால் அவதிப்படுகிறேன். நல்ல ஓய்விலிருந்தால் இவை குறைகின்றன. இவை எதனால் ஏற்படுகின்றன? என்ன மருந்து சாப்பிடலாம்?
-A.M. ஆரோக்கியசாமி, பந்தல்குடி.

பித்தம் வினா தாஹ: என்கிறது ஆயுர்வேதம். அதாவது, பித்தத்தினுடைய தொடர்பில்லாமல் எரிச்சல் ஏற்படுவதில்லை என்று அதற்கு அர்த்தம் கூறலாம். அத்தனை சூடான ஒரு பொருளை செரிமானத்திற்கான வயிற்றுப் பகுதியில், இயற்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அறுசுவைகளில் காரம் - புளி - உப்புச் சுவையாகிய மூன்றும், பித்தத்தினுடைய சூட்டை குறைத்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் திறனுடையவை. இவையே சற்று அதிக அளவில் நாம் உணவில் எடுத்துக் கொண்டால், பித்தத்தினுடைய நீர்த்த குணமானது, தன் இடம் விட்டுப்பெயர்ந்து, பிற இடங்களுக்கு சுற்றுலா சென்று வரப் புறப்பட்டுவிட்டால், நீங்கள் குறிப்பிடுவது போன்ற எரிச்சல் உடலில் ஆங்காங்கே தென்படத் தொடங்கும். உடலெங்கும் பரவியிருக்கும் நரம்பு மண்டலங்களில், வாயுவினுடைய ஆட்சி நடப்பதால், அங்குவந்து சேரும் பித்தமானது, வாயுவுடன் கலந்துவிட்டால், கூச்சம், உளைச்சல் போன்ற உபாதைகளும் தலைதூக்கிவிடும். அதனால், உங்களுடைய உடலில், பித்த - வாயுக்களுடைய சீற்றமானது அதிகரித்திருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.
மேற்குறிப்பிட்ட மூன்று சுவைகளுக்கு எதிரான இனிப்பு - கசப்பு - துவர்ப்புச் சுவைகளை உணவில் அதிகப்படுத்தினால், எரிச்சலானது மட்டுப்படும். இனிப்புச் சுவை பொதுவாகவே, பித்த - வாயுக்களுக்கு எதிரானவை. தங்களுடைய நீண்டதொரு கடிதத்தில், சர்க்கரையின் சுவை ரத்தத்தில் வெறும் வயிற்றில் 121 மிக அளவில் இருப்பதால், ஆயுர்வேத மருந்து எடுத்துக் கொள்வதாகவும், இனிப்பை அறவே நீக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். கசப்பு, துவர்ப்புச் சுவையினால், பித்த எரிச்சல் மட்டுப்பட்டாலும் வாயுவிற்கு அவை அனுகூலமானவை.
மேற்கூறிய காரிய காரணங்களை அலசிப் பார்த்தால், இந்த இரு தோஷங்களில் எது அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், பித்தம், வாயுவை விட, ஒரு படி மேலே நிற்பதாகத் தோன்றுகிறது. அதனால், நீங்கள் உணவில் கசப்புச் சுவையுள்ள மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக் கீரை, பாகற்காய், துவர்ப்புச் சுவையுடைய கோவைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, சுண்டைக்காய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். பித்தத்தினுடைய சீற்றம் உடலெங்கும் பரவியிருப்பதால், அதை குடலுக்குக் கொண்டு வந்த பின்னர், பேதி மூலம் அறவே நீக்க வேண்டும். அதற்கு, மேற்குறிப்பிட்ட சுவைகள் உதவினாலும், தலைக்குச் சந்தனாதி தைலம், ஹிமஸôகர தைலம், அமிருதாதி தைலம் போன்ற ஆயுர்வேத தைலங்களில் ஒன்றை, மருத்துவர் ஆலோசனைப்படி, தேய்த்துக் குளித்து வர வேண்டும். சுமார் 7 முதல் 10 நாட்களுக்குள், பித்தம் தன் சுற்றுலா சென்ற இடங்களைவிட்டு, நெகிழ்ந்து வெளியேறி குடலில் வந்து தஞ்சமடைந்துவிடும். ஆனால், இது தூய நிலையிலுள்ள பித்தமாக நாம் கருத முடியாது, பல இடங்களுக்கு சென்று வந்த கார், எப்படிப் புழுதிபடிந்த நிலையிலிருக்குமோ, அது போன்ற இந்தப் பித்தத்தை, சுத்தப்படுத்துவதைவிட, வெளியே அனுப்பிவிடுவதே சாலச் சிறந்தது. அதற்கு திரிவிருத் லேஹ்யம், அவிபத்தி சூரணம் உதவிடக் கூடியவை. காலையில் குடித்த கஞ்சி செரித்து, மதியம் பசி வந்துள்ள நிலையில், லேஹ்ய மருந்தானால் 20 - 25 கிராம் அளவில் நக்கிச் சாப்பிட்டு, ஓர் இடத்திலும் அமராமல் நடப்பதும், வெந்நீர் அருந்துவதும், உள்ளங்கைகளைத் தேய்த்துச் சூடாக்கி, வயிற்றில் வைத்துக் கொள்வதுமாகச் செய்தால், பித்தம் பேதி மூலமாக வெளியேறிவிடும். இதனால் பசி மந்தமாகிவிடக் கூடிய ஆபத்திருப்பதால், அன்றைய தினம் மிளகு, சீரகம், பூண்டு போட்ட சூடான ரசம், புழுங்கலரிசிச் சாதம், கத்தரிக்காய்க் கூட்டு, சுட்ட அப்பளம், மோர் சாதம், நார்த்தங்காய் வத்தல் என்ற வகையில் சாப்பிட வேண்டும். இரவில் எப்போதும் போல, நீங்கள் சாப்பிடும் உணவையே சாப்பிடலாம்.
பித்த வாயுக்களை மட்டுப்படுத்தும் விதார்யாதி கசாயத்தை, 15 மி.லி. எடுத்து, 60 மி.லி. சூடான பால் கலந்து ஒரு கேப்ஸ்யூல் அப்ரக பஸ்மத்துடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட உகந்தது.
(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT