தினமணி கதிர்

புழுதி

அலையாத்தி செந்தில்

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை

வெயில் அந்த ஊரை முழுவதுமாக விழுங்கியிருந்தது, காற்றே மரித்துவிட்டது போல, மூச்சுவிட மறந்து அசைவற்றுக் கிடந்தது...
இத்தனைக்கும் தென்னை மரங்களடர்ந்த ஊரது.ஆங்காங்கே, சில வீடுகளில், இதுநாள் வரை சேகரித்த பழுப்பு மட்டைகளைச் சுருங்கி கிடந்த ஊமச்சி குட்டையில் ஊற விட்டிருந்தனர். ஊமச்சி குட்டையைச் சுற்றி காட்டாமணக்கும் கற்றாழைகளும் சூழ்ந்திருந்தன. அதையொட்டி எண்ணிலடங்கா ஈச்சைமரங்கள், பனைமரங்கள், இலுப்பை, நாவல் மரங்களடங்கிய பெருங்காடு நீண்டு விரிந்திருந்தது. முழங்கால் அளவே தண்ணீர் கிடந்த குட்டையில் மட்டைகட்டுகளை தண்ணீருக்குள் முழுவதுமாக மூழ்கடிக்க, அதன் மீது உடைந்த கருங்கற்களையும் இடுப்புயர மரக்கட்டைகளையும் வைத்திருந்தனர். அவற்றுள் சில தன் தலைமீதான சுமைகளை உருட்டிவிட்டு வீட்டுக்கு அடங்காத பிள்ளைகளைப் போல மிதப்பில் கிடந்தன. நன்றாக ஊறிய முடையும் பதம் வந்த மட்டை கட்டுகள் கரையேற்றப்பட்டு அந்த பகுதியே மட்டை ஊறல் வாடையில் நிரம்பியிருந்தது.
சில வீடுகளில் பெண்களை வேலைக்கு வைத்து மட்டைகளை முடைந்து கொண்டிருந்தனர்.
"என்னடியாயா வெயிலு இந்தோ எரி எரிக்கிது ய்யே...யப்பா...''
"சரி உடாத்தா இன்னயோட மட்டமொடையறது முடிஞ்சிரும் நாளலேர்ந்து பழயதை அரிச்சி தின்னுட்டு செவனேனு படுத்து தூங்கேன், யாரு வேண்டான்னா'' 
"ஆ... நான் தூங்குனேன், பளயாத்தாங்கரைக்கு கட்டையில போற மட்டும் இந்த மட்டயோடதான்டி எம்பொழப்பு. ஆன... என்ன ஒன்னு இன்னயோட இந்த தவணைக்காரர்க்கு சோலி முடியுதுடி. ரெண்டு மாத்தக்கி முன்னாடி எடுத்ததுடியாயா ஒரு சொப்புக் கொடம், அது இன்னக்கி நாளக்கினு இலுத்துகிட்டே போவுனுச்சி, பொழுது சாய சின்னத்தேவரு பழையபாக்கிய குடுத்தவோனே ஒரேயடியா பூரா காசையும் உட்டெறிஞ்சிரலான்னு இருக்கண். ஆமாங்குறேன், "வாழ்றவன் வூட்டு வாசல்லையும் பத்து பேரு வாங்குனவன் வூட்டு வாசல்யும் பத்து பேரு'ங்குற மாரி இனி நம்ம வூட்டுக்கு இந்த ரோடு போட்ற வேல இருக்கப்புடாதுந்றேன்....''
"ம்க்கும்...நல்லாச்சொன்ன ப்போ...சின்னத்தேவர்ட்ட ஏதாத்தா காசு, எப்டியும் தேங்கா வெட்டு முடிஞ்சாதான் கைக்கு காசு வரும்னு தெரியாதா ஒனக்கு, என்னமோ ப்புதுசா கனாக்காண்ற...''
"இல்லடீ... இன்னக்கி காலைல நீ வாரத்துக்கு முன்னாடி தேவரு சொன்னாவோ, "சாய்ந்தரம் பழைய பாக்கியெல்லாம் பட்டுவாடா பண்ணிபுடலாம்... நான் டெப்போ மேனசரு ஊட்ல போயி ஒரு ஆயிரம் ரூபா கைமாத்தா வாங்கியாரேன்... மலமலன்னு பாக்கி மட்டயல போட்டடிச்சி மொடஞ்சிபுட்டு இன்னக்கி பொழுது இருக்க சோலிய முடிச்சிபுடனும்' ன்னவோடி.''
"சரி அப்ப நடயகட்டு... வெயிலு உச்சிக்கு வந்துட்டாத்தா ரெண்டு சோத்த தின்னுட்டு மிச்ச மட்டையையும் மொடைஞ்சிபுட்டு காலத்தோட ஊடு போயி சேருவோம்....''
எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் பருவமழை தொடங்கிவிடும். அதற்குள், தங்கள் கூரை வீட்டையும் தமது ஆநிரைகள் உறங்கும் மாட்டுகொட்டகையையும் சீர் செய்து
விடவேண்டுமென்ற முனைப்பில் ஆங்காங்கே மட்டைகள் முடையலாகிக்கொண்டிருந்தன.
தற்சமயம் மழை பெய்ய தொடங்கிவிட்டால் நடந்துகொண்டிருக்கும் வேலை தடைபட்டுவிடும் எனினும், அவர்
களால் அந்த வெக்கையை வசைபாடாமலிருக்க இயலவில்லை. 
"யாண்டா மருதா ஒரு இல கொட முடையலயே... பாழும் வெய்லு மனுசன பொசுக்கிபுட்டுத்தான் தொலயும் போலயே''
சின்னத்தேவர் சொல்லிக் கொண்டே மட்டையைக் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்தார்.
"ஆமாம் தேவர நம்மூட்டு மாமரத்த பாத்தியளா? க்கா பீச்சி எடுத்துருக்கு இப்டி மாங்காய் காச்சி தள்ளினாக்க மழை ரொம்ப பிந்துன்னு சொல்லுவோம். இன்னும் என்ன செய்ய காத்துருக்கோ...''
"ஆமாடா பாத்தன் பாத்தன்...."மாவுக்கு மங்கும் புளிக்கு பொங்கும்'னு அந்தகாலத்லே சும்மாவா சொன்னானுவோ? நம்ம கள்ளு
கடையடில உள்ள புளியமரத்த பாத்தியா ஒத்த பிஞ்சியக் கூட உடலையே... பத்தாதத்துக்கு பூவரசு ஒதியல்லாம் மொசுக்கட்ட புளுத்து எளயிது, நாசமாப்போன இந்தூருக்கு இந்த வருசமும் காச்சபாடுதான் போல... இது என்னக்கிதான் நமக்கு சாதகமா இருந்துருக்ங்ற... எரிச்சா ஒரேயடியா எரிச்சி கொட்டும்... வக்காளி ஊத்துனிச்சினா பத்துப்பயஞ்சி நாள்ன்னு பொத்துகிட்டு ஊத்தும். அதுவும் கருதறுப்பப்பதான்டா அடச்சிகிட்டு கொட்டும்... அட... அத ஏஞ்சொல்ற இப்ப யேன் அண்ணன் அம்பதறுவது ஆள வுட்டு கோரை யாத்தாங்கரை சேத்த கொழச்சி, நெதம் பச்ச கல்ல காய வச்சி சுண்டிபாத்து சுண்டிப் பாத்து அடுக்கிட்டு கெடக்றானே.. நீனா நாளைக்கு ஒரு மேஸ்த்ரிய வுட்டு அருவுனி கல்ல அடுக்கிப் புட்டு காளா வைய கொளுத்த சொல்லேன் பாப்போம். ஹா... ஹா... ஹா... இப்போ ஊர மெரட்டி எரிக்கிதே வக்காளி, மானம் அப்பயே பொத்துகிட்டு ஊத்தும்டா ஹா... ஹா... ஹா....''"
"ஹா... ஹா... ஹா அது என்னமோ உண்மதான் தேவர...''"
"நானும் பத்துப் பதினைஞ்சி வருசமா பாத்துட்டன்டா மருதா, வருசா வருசம் எங்க நடுளவங் காளவாய கொளுத்றன்னிக்கு மட்டும் பெயமொவன் மானம் வேலய காட்டிப்புடும் பாத்துக்க. நீ காளவாய கொளுத்துறன்னிக்கு எங்க நடுளவன பாத்ருக்கியா... ச்சும்மா மேலு பூரா துன்னுத்து பட்டய பூசிக்கிட்டு துண்ட சுருட்டி இடுப்புல கட்டிக்கிட்டிக்கிட்டு மாவேசு மருவேசா நிப்பான், முன்னடியாரப்பா, தூண்டிகாரா, நொண்டிவீரானு....இந்த வெளிபட்டசாமியயும் கூப்ட்டு ரெண்டே ரெண்டுநா காவந்து பண்ணியூட்ரப்பான்னு காளவாய சுத்திசுத்தி வருவான் பாரு... பகலு பூரா வேண்டுதலுக்கு நல்லா வெட்டாப்பு கொடுக்கும் மசண்ட நேரமா அப்டி தீய போட்டுட்டு, பொட்டுகல்ல சக்கரைய குடுப்பான், குடுத்துட்டு கொளுத்தியூட்ட கையோட ஒரு தரத்துக்கு வெத்தலை பாக்கு போடலான்னு செத்த அப்படி அசந்து ஒக்காருவாம் பாரு... பெயமொவன் மானம் அப்பயே பொத்துகிட்டு ஊத்தும்டா - அப்டியே தலையில கைவச்சிகிட்டு கொட்டாவைல போயி ஒக்காந்ருவான். இப்ப எதுக்கு இந்த மானம் இப்டி பண்ணுதுங்குற எல்லா நம்ப குடிய கெடுக்குறத்துக்குத்தான். பெயமொவன் மானம் நம்பள அழிச்சிபுட்டுதான்டா ஓயும் போல...''
இதைச்சொல்லும் போது இதுவரை குனிந்து மட்டையை கிழித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தவர் நிமிர்ந்து வெட்டரிவாளை தனது கட்டைவிரலால் ஒருமுறை பதம் பார்த்தார். தற்சமயம் தீட்ட தேவையில்லை என தனக்குள் சொல்லிக் கொண்டார்..." 
"ஆங் எடுத்துபோடு அடுத்தமட்டைய...''"
"நீங்க வேற யாந் தேவர. நான் என்ன செத்தா பொய்ட்டேன்... என்னமோ இப்பத்தான் புதுசா கத சொல்றிய, நானும் பூரா கூத்தையும் பாத்துகிட்டுதான கெடக்குறேன். ஏன் மூனாவருசம் நம்ப பாளையங் கோட நானும் காளவாய்க்கி மரம் உடைக்க போவலயா, அந்த வருசமும் மானம் இப்டித்தான் கூத்து கட்டி அடிச்சிது. ஆனா, நடுத்தேவரு பாடு என்னமோ காலொடிஞ்ச ஒழவுமாடு கத தான்''"
"நூத்ல ஒரு வார்த்தடா மருதா, மொடவங் கொம்பு தேனுக்கு ஆசபட்ட கதயா அவஞ் சத்திக்கு மீறி இதல்லாம் பண்ணிட்டு கெடக்றான். நா எத்னயோ மொற அவங்கிட்ட நேர்லயே சொல்லிபுட்டனே. கடனொவுடன வாங்கியல்லாம் பண்ணாத... இதுக்கு சொந்தமா டிராக்கிட்டரு இருக்கணும். படுவைல சேத்துமண்ணுக்கு ஒரு ஒன்னு ஒன்ற மா சொந்தமா நெலம் இருக்கணும். வெறவுக்கு மரம் வாங்க கைக்காசு இருக்கணும். நீ உறியமட்ட வாங்க கோட அஞ்சு வட்டிக்குதான் வாங்குற. இதல்லாம் பெருந்தனக்காரன் பன்ற வேலப்பா... நம்ப ஏதோ ஊரோட ஊரா நாத்த பறிச்சமா போட்டு நட்டமா பொங்க கெளிச்சி துண்ட ஒதறி முண்டாச கட்டிகிட்டு அறுப்புக்கு ஆளு பாத்தமானு இருக்கனும்னு... எத்னயோ வாட்டி சொல்லியாச்சி... அவன் இங்க வந்து சொல்றத்துக்கு போயி எரவானத்ல சொல்றாங்ற கணக்கா, நம்ப பேச்சு அங்க எடுபடல. அது கொளுத்தியுட்ட பெறவு வெந்த கள்ளு பாதி வேவாத கள்ளு பாதினு ஒருபக்கம் உருக்கு உளந்தது போவ கெட்டத்துக்கு பாதியா வித்து நட்டத்துக்கு இல்லாம ஏதோ வாய்க்குங் கைக்கும் ஒட்டியிட்டு கெடக்றான்... இருந்தாலும் இவ்ளத்துக்கு அவனும் தாக்குப்புடிச்சி ஓட்றாம்பாரு அதச்சொல்றா மருதா, நான்னா ஒருவாட்டி நொடிச்சாக்க மாக்குனு செத்துப் பொய்ருவேன். அவனுக்கு அப்பைலேருந்தே இடிமேல இடிதான்டா. 
ஆனா அவனுக்கு ஒன்னு வந்து பொறந்துருக்கே யேப்பா செத்த அசந்தா செகத்தயே அழிச்சிபுடும். அப்பன மாதிரியே அதுக்கும் வாயிதான் மூலதனம்... கண்டதக் காணலம்பான், காணாததக் கண்டாதா சொல்லுவான்... வாயத்தொறந்தாலே புளுவுதான்.
இங்கேரு ஒரு கதயா கேளு... ஹா... ஹா... ஹா, ரெண்டு நா முன்னாடி மசன்ட நேரமா இந்தபய ஊட்டுக்கு வந்தான்டா, வந்தான்னாக்க என்னமோ பனமட்டயில மூத்தரம் பேஞ்சா மாறி வாயி சும்மா படபடனு பொரியும். அன்னிக்கும்,"அப்பா ஊசி நூலு வாங்கியார சொன்னிச்சி ஊசி நூலு வாங்கியார சொன்னிச்சின்னு ஒரேதா குதிச்சான். 
ஏலேய்! இப்ப எங்கடா கால்ல சுடுதண்ணி ஊத்ன மாரி குதிக்கிற? தேடிதான எடுக்க முடியும்? செத்த ஒக்கார்ன்னே.
"நாளைக்கு கருக்கல்ல அப்பா தலைஞாயித்துக்கு மாடு வாங்க போவுது கால்ச்சட்ட தக்கைணும் இருட்னபெறவு துணி தக்கைப் புடாதுனு ஆத்தா திட்டுது. இந்தால இருட்டபோவுது. நீ ஒடனே தா ஒடனே தான்னு குதிச்சான். சரினு குடுத்துட்டேன். 
கொண்டுகிட்டு இந்தப் புழுதிகுள்ள கெடந்து ஓடுனதுல எங்கயோ ஊசி, நூலு ரெண்டையும் உட்டுட்டான் போல...''
"ஹா... ஹா... ஹா...'' 
"கதய முழுசா கேளு... நீ பெறவு சிரிக்கலாம்... சரின்னுட்ட அப்பறம் அன்னநட போட்டு என்ன சொல்லாங்குற நெனப்புலயே இவ்வோ ஊடு போயி சேந்ருக்கவோ... ஊடு போயி சேந்தாச்சி... ஹ் ஹி... ஹி... ஹி... நடுளவன் அங்க கிழிஞ்சி போன பட்டாபட்டிய கைல வச்சிகிட்டு, எங்கடா ஊசின்ட்ருக்கான். அதுக்கு இந்தப்பய என்ன சொல்லிருக்காங்ற... 
"வர்ர வழில ஒரு பாம்ப பாத்தம்ப்பா. இதுக்கு கண்ணு தெரியிறதாலதான எல்லாரையும் கடிக்கிதுனுட்டு அது கண்ண தச்சியுட்ரலாம்னு அத புடிச்சி அதோட கண்ணதச்சிகிட்டு இருந்தனா ஒத்த கண்ண தச்சதோட அப்டியே ஊசிய நூலோட பரிச்சிக்கிட்டு விருட்னு ஓடிட்டப்பானு" போட்டானாம் ஒரு போடு...''
"ஹா ஹா ஹா...''
"எல்லாங்கெடந்து விழுந்து சிரிச்சி...அங்க நம்ம மாட்டுத்தரவு கோயிந்தண்னே வேற இருந்ருக்கு. அதுவும் கெடந்து சிரிச்சிபுட்டு ஒன் புள்ளகிட்ட பாத்து பத்ரமா இருக்னும்யா. அசந்தா நம்பளோட சேத்து தில்லாவிளாகத்தையே வித்துபுடுவான்ட்டு துண்ட சுருட்டிகிட்டு ரெண்டு அடிகுடுத்துட்டு போனாராம்...'' 
"ய்யேப்பா பெரிய கூத்தாவுல இருக்கு''
"இன்னுயிருக்கு கேளு...முழுசா, பெறவு என்னாச்சினா மறுநா நம்ப பெரியண்ணவூட்டு மாட்டுகொட்டாவையில ஒரு சாரைப்பாம்பு பூந்துட்டு சரியான லெகிடு.... ஒரேதா சத்தங்குடுத்தவோ அப்பறம் நானும் நம்ம தேங்காவெட்டு வீரையனும் ஓடிப்போயி கலச்சூட்டு அடிச்சிப்புட்டோம்னு வச்சிக்கயேன்...
பொதச்சிப் புடலாந் தேவரேன்னான். ஏலேய் நீ செத்த இருடான்னுட்டு இந்த பய யேன் ஊட்டடிலதான் ஆடிகிட்டு கெடந்தான். ரெண்டு விடுத்தான உட்டு வெவரத்த சொல்லதாதியடா சித்தப்பா கூப்டுச்சினு மட்டுஞ்சொல்லுனு சொல்லி அலச்சிட்டு வரச் சொன்னே... நா வைக்கப்போரு பின்னாடி பாம்பபோட்டுகிட்டு அங்கயே நின்னுகிட்டு இருந்தனா...இவ்வொ வந்தவோ பாரு வந்தவோளா.....ஹி ஹி ஹி....
மொதல்ல நான் ஒன்னுங் காட்டிக்காம எனம்பனமா கேட்டேன். யாண்டா புள்ள நேத்து பாம்ப கண்ண தச்சது நெசமாடான்னே...
ஆமா சித்தப்பா நெசமாதான்னான். ஏலேய் ச்சும்மா புளுவாதடா புளுவுனிப்பயலேன்னல... அதுக்கு அவன் ங்கேர்றா மருதா, "சத்தியமா சித்தப்பா இத்தோ பெரிசு" ன்னு ரெண்டு கையையும் விரிச்சிட்டு அப்டியே தாந்தலயிலே மடார்னு அடிச்சி இப்டிச் சத்தியம் பண்ணாம்பாரு....
எங்க இந்த பாம்பானு பாருனுட்டு வைக்க போரடிலேருந்து....அப்டி சாரகெடாய கம்பால தூக்கி போட்டன்ல்ல....ஹா ஹா ஹா உட்டாம் பாரு ஓட்டம்... தெக்காக்க உளுந்து ஓடுனாம் பாரு.... ச்சும்மா பிகிலு பிகிலா போனவோ...ஹா ஹா ஹா...
"ஹோ"......ன்னு அலறிகிட்டு ஓடுனவன் நம்ம நாவமரத்தடி போயிதான் திரும்பி பாத்துருக்கான். ஹா ஹா ஹா புளுவுன்னா புளுவு...யேப்பா அண்டபுளுவு ஆகாசபுளுவு... இங்கதான் எங்காவது நே மாரி திரியும் இப்ப அதோட எங்க சின்னவன் மொவனும் கூட்டு ரெண்டிபேரும் சேந்துகிட்டு இந்த வெளிமுழுக்க லோலாயிதான்...''"
"ஆமாந்தேவர நாங்கோட நேத்து ரெண்டியேரையும் தெக்க அளத்துல பாத்தனே...''"
"அளத்லயா அங்க எங்கடா வந்தானுவோ?''"
"ஏதோ பொன்வண்ட தேடி வந்தாங்களாம்....சாயந்தரம் வர அங்க தெக்குக்கடசி கருவக்காட்ல பூந்து பெரப்போட கர அந்த வடக்குகடசி கொடுக்காபுளி மரத்தடி வரயும் முலுகோட்டவத்தையும் தப்படிபோட்டு அளவையாவுனுச்சி'' "
"ங்கொப்புறான... இப்ப இந்தப்பயலுக்கு யேன் அப்பஞ் செத்ததுலதான் கொலுப்பு கொண்டு ஆடுதுவோ... இந்த பதுனாறு நாளும் பள்ளிகோடம் போ வேண்டான்னதும் அதுவோ நெலகொள்ளாம நிக்கிதுவோ... வரட்டும் இன்னக்கி வளைச்சி வச்சி ஒதச்சாதான் சரிபடுவானுவோ படவாக்க''
இப்படி கோபத்தில் திட்டி சிலநேரங்களில் அடித்தாலும் அண்ணன் மகன் மீது அவருக்கு எல்லையில்லாப் பிரியம். எப்போதாவது சாலையில் திரிபவனை இழுத்து கொண்டுவந்து பைப்படியில் அமர வைத்து சீயக்காயை உச்சந்தலையில் வைத்து தேய்த்து தண்ணீர் ஊற்றுவார். அழுக்கு திரண்டோடுவதைப் பார்த்தபடி,
"புள்ள வளக்குறானுவோ புள்ள....எட்டியேய்....அந்தத் துண்ட எடுத்தாடி...'' 
என தன் மனைவிக்கு குரல் கொடுப்பார். 
அவளுக்கும் இது விருப்பமான நிகழ்வு "அந்த குதிகால தேயுங்கங்றேன் பாருங்களேன் எவ்ளோ அழுக்குனு....''
"இந்த ஊர்ல இது கால்படாத எடம்னு ஒன்னு இருக்குங்ற.... ச்சும்மா..எங்கயோ கெடந்த தத்தாரி....மூளி....''
"ஏங்றேன்.... ஊரா ஊட்டு புள்ளய திட்டாதிங்கங்றேன்''
இந்த வார்த்தையைக் கேட்டதும் அப்படியே நொறுங்கிப் போவார்.
தனக்கொரு மகன் இருந்திருந்தால் இந்நேரம் இவனுயரத்தில் இன்னும் கொஞ்சம் கருப்பாக தன்னைப்போல இருந்திருப்பானோ என இவனைப் பார்க்கும்போதெல்லாம் நினைக்காமல் இருந்ததில்லை.
"சரி நீ போயி சோத்தப்போடு....அந்த வெண்ணய சிலுப்பி வச்சிருந்தியே... அதுல ரெண்டு முருங்க கொளுந்த போட்டு உருக்கி வைடி. புள்ள நெய்யின்னா பிரியமா சாப்புடுவான்''
என ஏதாவது காரணம் கூறி இதுபோல தான் உறுதியிழக்கும் தருணங்களில் மனைவியை தூரமாக்கிவிடுவார்.
அடுத்த குவளை தண்ணீரைத் தலையில் ஊற்றும்போது, "யகேவ்....வ்வ்... சித்தப்பா ச்சித்ப்பா தேமுது ச்சித்தப்பா யகேகேவ்வ்வ்....'' என்பான்.
"ஒப்புறான புள்ளக்கி தேம்புதுல செத்த பொறுமையாத்தான் ஊத்துங்களேன்'' என சமையல் கட்டிலிருந்து சத்தம் வரும்.
தலையைத் துவட்டி நடுவீட்டில் ஒரு வேட்டியை விரித்து அவனை அமர வைத்து 
"எட்டியேய் சோத்தப்போட்ரி, அடங் கொப்றான தண்ணி யார்ரீ வப்பா? அதுக்கு வளவனாத்துக்கு கெழக்கேர்ந்து ங்கொப்பனா கொண்டாருவான் ப்போ தண்ணியெடுத்தா''
"அட செத்த இருங்கங்றேன் ஒங்களுக்கு மொவன கண்டா தலகாலு புரியாதே''
"இந்தாடா புள்ள ஒனக்கு புடிச்ச கோலா உருண்ட கொழம்பு, ஊருகாட்ல ஒத்த கொளங்குட்ட இல்ல பூரா வத்தி வறண்டு பொருக்கு தட்டி போச்சி இல்லனா புள்ளக்கி விராமீன கொதிக்க உட்ருப்பேன். இன்னய பாடு இதான். ஏட்டி அங்க என்னடி பன்ற அந்த நெய்ய எடுத்தா ஆங்..ஊத்து நீ..சாப்ட்ராபுள்ள''
எனச்சொல்லி அவன் சாப்பிடுவதை ஆவலோடு பார்க்கும் நாட்களில் இரவு படுத்தவுடனே உறங்கிவிடுவார்.
"அந்தோ அந்த வெய்க்கப்போரும் அத ஒட்டியே ஒரு கூரகட்டு ஊடும் தெரியுதுல... அதாங்க நீங்க கேட்ட ச்சின்னத்தேவ ரூடு, இப்டியாளபோங்க இந்த புலுதிரோடுதாம் பாத ஆளு தங்கமான மனுசன் ஆனா என்ன ஒன்னு ஒரு புள்ளகுட்டி இல்ல '' என கை நீட்டி வழி சொல்பவன் பேச்செல்லாம் அன்றிரவு அவரின் நிம்மதியைக் குலைக்கும் வலிமையிழந்து போயிருக்கும்.
கட்டுதரி எதிரில் மட்டைகட்டை பிரித்து கொண்டிருந்த மருதனிடம் குரல் கொடுத்தார். 
"ஆங் மருதா ரொம்ப நேரமாய்ட்டு வா வா, செத்த வெரசா கட்ட பிரி....எடு அந்த மட்டய இழுத்து இங்க போடு... பொண்டுவோ ஆளுவோ சாப்ட்டு வாரத்துக்குள்ள ரெண்டு கட்ட கிழிச்சி போட்டுட்டா நம்ப சாப்ட்டு செத்த காத்தாட ஒக்காரலாம்'' 
"ஆமாந் தேவரே காத்து எங்க ஆடுது நாம வேணும்னா செத்த ஆடிக்கலாம்....இந்தோ புழுங்கு புழுங்குது ச்செய்...''"
சாலைவழி ஓடிக்கொண்டிருந்த ஒரு கருப்பு நாய் அந்த ஈரமான மட்டை குவியலைக் கண்டதும் வேலியிடுக்கில் புகுந்து மட்டைக் குவியலை நோக்கி ஓடி வந்தது."அட்றா வக்க மாற.. நன்றியெட்ட ந்நாயி சோத்தமட்டும் இங்க திங்கிறது காவலுக்கு மாரியப்பன் ஊட்டுக்கு வாசலுக்கு போய்ர்றது, உட்டெறி சொல்றேன் அருவாள...ஆங் அப்டித்தான்...''"
வ்வவ்....வ்வோவ்.... 
"ங்கொப்பறான தப்பிட்டு...''
நாய் முழுவேகத்தோடு ஓடத் தொடங்கியது. கண்களை பாதி மூடி காதுகள் பின்புறமாக தலையோடு தலையாக ஒட்டியிருக்க இன்னும் தனது வேகத்தை கூட்டி ஒரு பட்டுப்போன கிளவை வேலி பகுதியைக் குறிவைத்து விரைந்தது.
"பூரா எடத்துலையும் பொத்தல போட்டுபுர்ரது, இங்கனக்குள்ள இருக்க இந்த வெளிப்பட்ட ஆடுமாடுவோலும் இந்த தோப்புகுள்றதான் குடியே. இங்ன இருக்கவளுவோ எவதான் ஆடுமாடுவோளுக்கு தும்பு போடுறாளுவோ?அவளுவோ ஆடுமாடுவோதான் பட்டி மூளியேன்னா அவளுவோ அதுக்குமேல பட்டியா இருக்காளுவோ. அப்பறென்னத்த, சொல்றது? மொதல்ல இந்த நே பன்னய ஒழிச்சி கட்னா எல்லாஞ்சரியாய்டும்''"
வெக்கையின் மீதான வெறுப்பு கருப்புநாய் ஒரு பலமான அடி வாங்கியிருந்தால் கொஞ்சம் குறைந்திருக்கும் தப்பிவிட்டுது... அந்த வெறுப்பை தன்குரலை உயர்த்தி அண்டைவீட்டாட்களுக்கு மடைமாற்றினார்... இந்த வசவு தினசரி வாடிக்கைதான் இது கோடை
காலமாதலால் நிறைய வேலி கம்புகள் பட்டு போயிருக்கும். கோடைவெயிலில் மேய்ச்சல் இல்லாமையால் இயல்பாகவே ஆடுமாடுகள் தோப்புக்குள் வருவது இயல்புதான்.
"ய்யே யப்பா மருதா... அருவாள இப்டி வெட்டுவாய உட்டு வீசிருக்கியே... அய்யோ பொடங்கருவால உட்டு வீசப்பா வெட்டி இட்டி புட்டுச்சினா போச்சி நாங்க வைரங்கோயிலுக்கு பாத்தியபட்டவைங்கனு ஒனக்கு தெரியாதா என்ன?''" 
"நாயி தகட்டூரு வைரவரு வாகனம்ப்பா...எங்க கொல தெய்வம், அட நாலு வாட்டி அடிச்சி வெரட்டுனா இந்த பக்கம் வராது...'' "
"என்ன தேவர ஒருவாட்டி அடி கொல்லுங்கிரிய... அப்பறம் சாமி னு கும்புடுரீங்க...''"
"சரி....வ்வா வா... ஓடியா ஓடியா செத்த கரயேத்து இன்னம் ரெண்டு கட்ட இழுத்தா சொல்றேன்...செத்த நெலச்சாஞ்சிட்டா வேல இன்னங்கொஞ்சம் வெரசாபோவும்... ஓடியா ஓடியா...'' "ஓட்டமும் நடையுமாக சின்னத்தேவர் மட்டைகட்டுகளை நெருங்கினார்.
கருப்பு நாய் கொதிப்பேறிய புழுதிச்சாலை தொடங்கிய இடத்திலிருந்த ஒரு பூவரச மரத்தின் பின்புறம் தனக்கான இடத்தைக் கண்டுகொண்டது. ஓரிரு முறை அக்கரம் சுற்றி குழிபறித்து தனதுடலை லேசான குளிருக்குள் ஒடுக்கியது. தான் எதிர்பார்த்த அளவு பூமி குளிரவில்லை யென்றாலும் அது அப்போதைக்கு போதுமானதாக இருந்தபடியால்... கண்களை ஒடுக்கியது.
சின்னத்தேவரின் தேடுபொறிக்குள் இன்னும் அகப்படாத அவரது அண்ணன் மகன்கள் இருவரும் அதே பூவரச மரத்தடியை வந்தடைந்தனர். 
"ட்டே...ட்டே...பூசர மரத்துல போயி சாஞ்சி ஒக்காரகுள்ள பாத்து ஒக்காரனுமுடா... அங்கபாரு மொசுக்கட்ட அடயா இருக்கு....இன்னேரம் முதுவு பலுத்துருக்கும்...''"
"அய்யயோ ஆமான்ணே...''
"இங்க தள்ளி ஒக்காரு''
"நெலல்ல மரகலருக்கே இருக்கதால தெரியலண்ண..ஆமா, ஒரு மரத்துல நசுக்கட்ட இருக்குனு எப்டிண்ணே கண்டுபுடிக்கிறது?'' "
"இங்க பாரு, இப்டி மரத்தடி பூரா கருப்பு கருப்பா சின்ன சின்ன உருண்ட உருண்டையா புளுக்க கெடக்கும்''"
"அட ஆமா, இது என்னன அங்க ஒரு எடத்துலதான் நசுகட்ட அடயா இருக்கு இங்க பாத்தா மரத்தடி பூரா புளுக்க கெடக்கே...''
"ட்டே பகல்ல நசுக்கட்ட யெல்லாம் ஒரே எடுத்துல தூங்குண்டா, ராத்ரி மரம்பூரா எலஞ்சி பூசர எலய தின்னுட்டு அங்கங்க நின்னு புலுக்கபோட்டு வைக்கும்...பெறவு வெயிலு கௌம்புனதும் தூரடில ஒன்னா அடஞ்சிரும்''"
"ஓ...ஓ..ஆடு மாடு பகல்ல மேய்ரா மாரி மொசுக்கட்ட ராத்ரில மேயிது...சர்ன சர்ண்ணே... ஆமா, இன்னக்கி வெயிலு இந்தோ கொளுத்து கொளுத்துதே... இந்த வெயில்ல வருவாப்ளயா''"
"நீனா பாரு கண்டிப்பா வருவாப்ள...வெயிலு வந்தாதாண்டா அவுங்களுக்கு யாவாரமே...கொட்ற மழையில ஆரனடிச்சிகிட்டு வந்தா ஊருக்குள்ள அத்ன பேரும் சிரிப்பானுவோ...ஹா ஹா ஹா....''
"இது எப்டி இருக்குனா நேத்து ராத்திரி எங்கூட்டு ரேடியா பொட்டில எலங்கையில ஒரு பாட்டுபோட்டானுவோ. படம்பேரு ஏதோ சொன்னானுவோ. மறந்துட்டேன். புதுப்பட பாட்டுடா "ஒன்ன நெனச்சேன் பாட்டுபடிச்சேன்'...னு ஒரு பாட்டு அதுல நடுவுல ஒரு வரி வரும்டா பாடுறேம்பாரு.. 
கொட்டும் மழக்காலம் உப்பு விக்கப்போன
காத்தடிக்கும் நேரம் மாவு விக்கப்போன ....
இந்த மாரி இருக்கு, நீ கேட்டது. என்ன வெளங்குதா? ஆனா என்ன ஒன்னு நானும் நெறய வாட்டி பாடி பாக்குறேன் நம்ம பாடுறது அவனுக பாடுறது மாதிரி வரமாட்டுதுடா''"
"அது அவனுவோ மீசிக்கி அடிக்கிறானுவோல்ல அதாங்காரணம்னே''"
"ஆமாடா...அதான்ங்காரணம். சரி, ஒங்க வூட்ல இலங்க எடுக்குதா...?'' 
"ஆங்.. எடுக்கும்னே நேத்து நானும் ஒரு பாட்டுகேட்டனே. யாரோ நாவூர் கனிபா பாடுன பாட்டுனு போட்டானுவோ. கொரலு கொன கொனன்னு இருந்துச்சுனே''
"ட்டே ட்டே... இர்ரா... அந்தோ பார்ரா.... த்தூரத்துல ஒரு புள்ளியா தெரியுது பாரு பின்னாடி பொட்டி தெரிது பார்ரா.... வர்ரார்டா...''"
"ஆமாண்ணே...அவரேதான்....ஹா ஹா..அடிசக்க...ஒக்காந்து கெடந்தது வீண்போவலண்னே.... ஏ அங்க பாரேண்ன. அங்கயே அவரு மல்லுகட்டி பார்ல ஏறிதான் மிறிச்சிட்டு வாராரு இங்க தெக்கால போக்குள்ள சத்தியமா மிறிக்க முடியாது. சரியான புலுதி எதிருகாத்தோட வெயிலு வேற....கொளுத்துது....அப்ப நீ சொன்னது உண்மைதானா?''
"அப்பறம்,உண்மையில்லாம பொய்யா? ஆனா இது இங்க எவனுக்கும் தெரியாது நீ போயி முனியப்பன், செயமுருவன், சேகருட்டயெல்லாம் இங்க நடந்தத சொல்லிகிட்டு இருக்காத... யேன் அண்ணன் குமார்ட்ட கொட சொல்லாத... நாளலேருந்து அவனுவோலும் வந்துட்டானுவோன்னா அவ்ளோதான் நம்ம வெறுங்கையோட போ வேண்டிதான்...''"
"இல்ல இல்ல நா சொல்லல...''"
"அவரு மிறிச்சு இங்க வந்து சேர ரொம்ப நேரமாவும் நீ ஒக்காரு பொட்டிய கண்டதும் அப்டியே துள்ளுரியே ஹா ஹா ஹா...''"
"ட்டே நீ சேமியா ஐசு தின்ரிக்கியாடா...''"
"இல்லணே ஆனா பாலைசு தின்றுக்கேன்...''"
"சேமியா ஐசு செமயா இனிக்குன்டா உள்ள சேமியால்லாம் போட்ருப்பானுவோ...''"
"அப்படியா இது எப்டினே தயாரிக்கிறானுவோ?'' "ஆங் அப்பறம் நீ ஐசுபொட்டிக்குள்ள என்ன இருக்குனு பாத்துருக்கியா?''
" எனக்கு ஒயரம் பத்தலனே....''"
"ம்... பாத்ருக்கனே....அது உள்ள ஐசு தயாரிக்கிற மிசினு இருக்கும்டா உள்ள சின்ன சின்ன தொளையா இருக்கும் ஐசு வைக்கிறத்துக்கு, அது....எப்டினா நம்ம ராமரு கோவில்ல மாடப்புறாலாம் அடஞ்சிருக்கும்ல சின்ன சின்ன ஓட்ட, அதுமாரி அதவிட இன்னும் சின்னதா தொள தொளயா இருக்கும்...'' "பாத்துருக்கேன் ஆனா இருட்டா இருந்துச்சி சரியா தெரியல...''"
"அதுலதான் தண்ணி சேமியா பாலு சீனிலாம் போட்டு ஒரு குச்சி போட்டு வச்சிருப்பாங்களாம். ஒருநாளு நம்ம அட்டகண்ணி புள்ளயாரு கோயிலுகிட்ட போம்போது ஐசுகார்ரு எறங்கி திருவு பைப்புல தண்ணி புடிச்சி உள்ளேருந்து அந்த மிசின எடுத்து ஒன்னு ஒன்னா ஊத்தி சேமியா சீனி பாலெல்லாம் போட்டு குச்சி போட்டு பொட்டிகுள்ள வச்சத சத்திவேலு பாத்தானாம் உண்மயா என்னனு தெரியல...''
"ட்டே ஒனக்கொன்னு தெரியுமா யேன் அண்ணன் ஐஸ்கிரீம்லாம் சாப்ட்ருக்கான்டா...''
"ஐஸ்கிரீமா?''"
"ஆமாடா ஐஸ்கிரீம்ன்றது இந்த ஐச விடலாம் சூப்பரா இருக்குமாம்ன்டா. முந்திரி பருப்பு இன்னும் பேரு தெரியாத பருப்பெல்லாம் நெறைய போட்ருக்குமாம்...போன வாரம் மாட்டு கொட்டவைல ஊஞ்சலாடும்போது கீழ விழுந்ததுல எங்கண்ணனுக்கு கைய்யி ஒடஞ்சி போனிச்சில, அப்ப முத்துபேட்ட மீராஉசேன் ஆசுபித்திரிக்கு கொண்டு போனாவோ கட்டுகட்டும் போதாலாம் பயங்கரமா கத்திருக்கான். பஸ்ல ஏறும்போது ஐஸ்கிரீமு வாங்கி தந்தாலே தா னு முத்துபேட்டையே கிழிய கத்திருக்கான். எங்கம்மாவுக்கு சரி கோவம் போல. ராத்ரி சரி திட்டு. இன்னக்கி முத்துபேட்டை பஸ்டான்டுல இது அடிச்ச கூத்த வேடிக்க பாக்காத சனம் பாக்கியில்ல, கத்துன கத்துல பஸ்டான்டே ரெண்ட்ரெண்டா போவுனிச்சி. இது என்ன புள்ளயா இது எங்கயோ கெடந்த அவட்ட" னு அம்மா ராத்திரி அவன் அந்தோ திட்டு திட்னுச்சி.
இவன் அந்த திட்டல்லாம் காதுலயே வாங்கிக்கல. அவன் மத்தியானந்தின்ன ஐஸ்கிரீம் நெனப்லே படுத்துக்கெடந்தான். கட்டுபோட்ட கைய்ய தடவிகிட்டே அப்பப்ப என்கிட்ட ஐஸ்கிரீம் தின்னத பத்தி சொல்லி சொல்லி கடுப்பேத்னான். எனக்கப்டியே முறிஞ்ச கைலே ஏறி ஓங்கி ஒரு மிதி மிதக்கலாமானு இருந்துச்சி... பல்ல கடிச்சிகிட்டே படுத்ருந்தேன் அப்பறம் எப்படி தூங்னேன்னு தெரியலடா, மத்தியானம் இவங் கத்துன கத்துல வாங்கி குடுத்து கூட்டிவந்துருக்கவோ. தின்ன பெறவுதான் அவனுக்கே தெரியுமாம்டா எவ்ளோ ருசியா இருக்குனு. வந்து கதகதயா சொல்லி என்ன வெறுப்பேத்துனான். கொஞ்சம் மெதுவாவாவுது திங்க புடாது. ஊர்ல ஒருத்தன் இருக்காங்குற நெனப்பு கொட இல்ல. ஆனா அப்டி பாதி இருந்தாலும் வந்து எனக்கு குடுக்க மாட்டான்டா. பாக்கவச்சி திம்பான். சரி இவன உடு வாங்குனவைங்களாவது எனக்கு ஒன்னு வாங்கி வந்துருக்க கூடாது... ரொம்ப வெறுப்பாவுதுடாம்பி...''"
"அண்ணே கைய்யி ஒடிஞ்சி போச்சி அழுதான்னு வாங்கி குடுத்துருக்கவோ... எனக்கும் எப்பவாவது சொரம் அடிக்கும்ன்னே அப்ப முத்துபேட்ட மீரா
உசேன் ஆசுபித்ரி போனாக்க நானும் காட்டு கத்தா கத்தி அழுவுறேம்பாரு...''"
"ஹா ஹா ஹா..ட்டே கிறுக்கா சொரம் அடிக்க குள்ற எப்ட்றா ஐஸ்கிரீமு வாங்கி தருவோ... ஹா... ஹா... ஹா... நீ என்ன கத்னாலும் சொரம் அதிமாய்டும் னு சொல்லி பட்டாணி கல்ல இல்ல உப்பு கல்லய வாங்கி குடுத்து கூப்ட்டு வந்ருவானுவோ...ஹா ஹா... ஹா''"
"ஆமால்லா எனக்கு சொரம் மட்டுந்தான்ன எப்பவாவது வருது? வேற எதுவும் ஆவ மாட்டுதுன்னே..ச்சே...கைய்யி காலு ஏதும் ஒடஞ்சாக்க நானும் ஐஸ்கிரீமு திங்கலாம்ல....ரொம்ப நல்லாருந்துச்சாமா...''"
திடீரென அவர்களின் உரையாடல் நடுவே... வானிலிருந்து ஒரு சத்தம்... 
(அடுத்த இதழில் நிறைவு பெறும்)

திருத்துறைப்பூண்டியை அடுத்த தில்லைவிளாகத்தைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. துபையில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். "கஜா' புயல் பாதிப்புக்குப் பிறகு ஊர் திரும்பி, தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். புழுதி - இவரது இரண்டாவது சிறுகதை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT