என் வயது 74. மூட்டுவலி, கால்வலி, இடுப்புவலி இருப்பதால் கற்பூராதி தைலம் தடவி வருகிறேன். தொண்டையில் இரு வருடங்களுக்கு ஒரு முறை கட்டிபோல் உருளுவதாகத் தோன்றுகிறது. அது சமயம் அசௌகரியமாக உணர்கிறேன். இது ஏன் ஏற்படுகிறது? குணப்படுத்த மருந்துண்டா?
-அ.சந்தானலெட்சுமி, கும்பகோணம்.
"தோன்றுகிறது...' " உணர்கிறேன்' போன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தியுள்ளதால் டெஸ்ட் செய்து கொள்ள பயப்படுகிறீர்கள் என்பது தெளிவாகிறது! வயோதிகத்தின் காரணமாக பலருக்கும் இது போன்ற சலிப்பும், ஏதேனும் சொல்லி விடுவார்களோ? என்ற பயமும் ஏற்படுவது இயற்கையே. ஆனாலும் உறுதிப்படுத்திக் கொண்டால் சிகிச்சை செய்து கொள்வது சற்று எளிதாக இருக்கும்.
கெட்டியான தன்மையுடைய "கபம்' எனும் தோஷத்தை மேலும் இறுக்கி, வறட்சியடையச் செய்யும் தன்மையுடைய "வாயு' எனும் தோஷம் அதனுள் கலந்து, கட்டி போல உருளச் செய்யும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம். வாயு - கபங்களுடைய இணைபிரியாத இந்த நட்பு, உடைத்தெறியப்பட வேண்டும். ஏனென்றால், இது நல்ல கூட்டணியல்ல. தத்தம் தொழில்களை அவை தனியே செய்ய வேண்டிய நிலையை விட்டு, "உடலை குட்டிச்சுவராக்குகிறேன்' என்று அவை புறப்பட்டுவிட்ட நிலையில், நீங்கள் அசௌகர்யத்தை உணர்வதில் வியப்பேதுமில்லை.
வறட்சியும், சூடும், லேசான தன்மையுடையவையும், ஊடுருவும் தன்மை கொண்டதுமான உணவும் செயலும் - மருந்தும் மட்டுமே இது போன்ற கட்டி உருவாவதைத் தடுக்கமுடியும். குதிரைவாலி, சாமை, திணை, பார்லி, கொள்ளு, தேன், கடுகெண்ணெய், சுக்கு, மிளகு, திப்பிலி, பசுவின் சிறுநீர் போன்றவை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய சில உதாரணங்கள். பசுவின் சிறுநீர், கட்டிகளைக் கரைப்பதில் மிகவும் சிறந்த நீர்ப் பொருளாகும். சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இதை நீங்கள் காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 15 - 20 மி.லி. அருந்தினால், கட்டிகளோடு, மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரையும் வற்றச் செய்து வலியையும் குறைக்கும். உடல் பருமன் குறையவும், கொழுப்பையும் கரைத்துவிடும். கொழுப்பைக் கூட்டும் பால், நெய், மைதா, சர்க்கரை, வனஸ்பதி, பன், பட்டர், ஜாம், எண்ணெய்யில் பொரித்தவை, புலால் உணவு போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
செயல்களில் - மந்தமான சுறுசுறுப்பற்ற, அலுப்பு - சலிப்புடன் கூடிய வாழ்க்கை முறையைத் தவிர்க்க வேண்டும். வயோதிகத்தில் இவை ஏற்படக் கூடியவை தான் எனினும், நடைப்பயிற்சி, சமையல், கோலமிடுதல், பக்கத்திலுள்ள கோயில்களுக்குச் சென்று பிரதஷணமாக சுற்றிவருதல், வீட்டிற்குத் தேவையான சிறிய சிறிய மளிகைப் பொருட்களை மற்றவர் துணையுடன் சென்று தேர்ந்தெடுத்தல், கறிகாய், துணிமணி, நகை என்று எது தேவைப்பட்டாலும் அவற்றில் முனைப்புடன் நல்ல வகைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் போன்ற வகைகளிலெல்லாம் உங்களை ஈடுபடுத்தி
சுறு சுறுப்புடன் வாழ்தல் மூலம் கட்டி உருவாகாமல் தவிர்க்கலாம்.
சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், பச்சிலை, லவங்கம், ஏலக்காய், நாககேஸரம், குக்குலு, காஞ்சநாரம், கொடுவேலி, ஓமம், சீரகம், பெருங்காயம் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சில ஆயுர்வேத மருந்துகள், கட்டி உருவாவதை தவிர்க்கக் கூடியவை. "திரிகடுகம்' எனும் சுக்கு, மிளகு, திப்பிலியும் அதிமதுரத்தையும் கலந்து பொடியாக்கி, 5 கிராம் மொத்தமாக எடுத்து 10 மிலி தேன் குழைத்து காலை - இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பலனை தரக் கூடியது. ஏற்பட்டுள்ள கட்டிகளையும் நன்கு கரையச் செய்யக் கூடியவை.
வரணாதி கஷாயம், குக்குலுதிக்தகம் கஷாயம், காஞ்சநார குக்குலுமாத்திரை, சிலாசத்துபற்பம், லோத்ராஸவம், நிம்பாமிருதாஸவம், திரிபலாகுக்குலு மாத்திரை போன்ற ஆயுர்வேத மருந்துகள் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட உகந்தவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.