மாம்பழம் சாப்பிடுங்கள்... சர்க்கரை குறையும்!
நமது நாட்டில் சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நமது நாட்டில் சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சாதாரணமாக ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதை நாம் பார்க்கிறோம். பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோய் வரக்கூடாது என்பதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என அரும்பாடுபட்டு வருகின்றனர்.
சர்க்கரை நோய் வந்தவர்கள் இதைச் சாப்பிடலாம், இதைச் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் நிறைய அறிவுரைகளைக் கூறி வருகின்றனர்.
இதில் ஒன்றாக மருத்துவர்கள் கூறுவது, மாம்பழத்தை சர்க்கரை நோயுள்ளவர்கள் தொடவே கூடாது என்பது. மாம்பழங்களில் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதும், மாம்பழங்களை உண்டால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்த நேரிடும் என்பதே அதற்குக் காரணம்.
மாம்பழத்தை அளவோடு சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என புதுவை மத்திய பல்கலைக்கழக உயிரிதொழில்நுட்பவியல் பேராசிரியரான ஹன்னா ரேய்ச்சல் வசந்தி கண்டுபிடித்துள்ளார்.
இதனை "பைட்டோமெடிசின்' என்ற சர்வதேச மருத்துவ நாளிதழில் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த பைட்டோ வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அழைப்பின் பேரில், பல்கேரியா நாட்டில் அண்மையில் நடைபெற்ற "இயற்கை பயன்பாடு மற்றும் மருந்து தாவரவியல்' என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டில், ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து உரை நிகழ்த்தியுள்ளார்.
இது குறித்து பேராசிரியர் ஹன்னா ரேய்ச்சல் வசந்தி நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
""எனது அம்மா சர்க்கரை நோயுடன் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருந்துகளைப் பயன்படுத்தி வந்தாலும், அவ்வப்போது மாம்பழங்களை ருசித்து உண்பார். இதனால் தற்போதும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். இது எப்படி என நான் சிந்தித்து, பல்கலைக்கழக மாணவி விதுஷினி சேகர் உள்ளிட்டோருடன் இதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கினேன்.
இதற்காக "சோட்டாபுரி' எனப்படும் கிளிமூக்கு மாங்காய் மற்றும் மாம்பழங்களிலிருந்து (மாஞ்சிபெர்ரா இண்டிகா) மாஞ்சிபெரின் என்ற மருந்து மூலக்கூறு பொருளை உயிரிதொழில்நுட்ப முறையில் தனியாகப் பிரித்தெடுத்தோம். இதனை அரசு அனுமதியுடன் கூடிய விலங்குகள் பரிசோதனைக் கூடத்தில், டைப் - 2 சர்க்கரை நோயுடைய எலிகளை உருவாக்கி, அவற்றுக்கு 28 நாள்கள் மாஞ்சிபெரினை மருந்தாகக் கொடுத்தோம். இதில் வியக்கத்தக்க வகையில், மாஞ்சிபெரினை உண்ட எலிகளின் ரத்த சர்க்கரை அளவு குறைந்திருந்தது. அதிலும், மற்ற சுகர் மருந்துகளுடன் (மெட்பார்மின், க்ளைக்கலசைடு உள்ளிட்டவை) இணைந்து மாஞ்சிபெரினை உட்கொண்ட எலிகளின் ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிட்டது.
மாஞ்சிபெரின் இன்சுலினின் செயல்பாட்டுத்திறனை அதிகரிக்கிறது. அதீத உடல் எடையைக் குறைக்கிறது. சர்க்கரை நோயினால் ஏற்படும் அதிக தண்ணீர் தாகத்தைக் குறைக்கிறது. அதீத பசியைக் கட்டுப்படுத்தி, சாப்பிட்டது போன்ற உணர்வைத் தருகிறது.
பொதுவாக, சர்க்கரை நோய்க்கு மெட்பார்மின், அக்ராபோஸ், ராசிக்கிளிட்டோசோன், க்ளைக்கலசைடு, மாஞ்சிபெரின் ஆகிய வேதிப் பொருள்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் மாஞ்சிபெரின் வேதி மூலக்கூறு மாம்பழத்திலேயே அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ மாம்பழத்தில் 3.06 மில்லிகிராமும், மாங்காயில் 1.32 மில்லிகிராமும் மாஞ்சிபெரின் வேதி மூலக்கூறுகள் உள்ளன. மாம்பழத்தில் காலிக் ஆசிட், காட்டிக்சின், எபிக் காட்டிக்சின் போன்ற உடலுக்குத் தேவையான மற்ற வேதிப்பொருள்களும் உள்ளன.
கல்லீரலில் உருவாகும் ஆல்பா குளுக்கோசிடேஸ், ஆல்பா அமைலேஸ் நொதிகள் ஸ்டார்ச் உணவைக் குளுக்கோஸாக மாற்றி, உடலுக்குச் சக்தியை அளிக்கின்றன. மாம்பழத்தில் உள்ள மாஞ்சிபெரின் மருந்து மேற்கண்ட நொதிகளின் இயக்கத்தை மட்டுப்படுத்தி, உணவு குளுக்கோஸாகும் செயல்பாட்டைக் குறைக்கிறது.
சர்க்கரை நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும் போது ஏற்படும் வயிறு உப்புசம், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பக்கவிளைவுகளை மாஞ்சிபெரின் வெகுவாகக் குறைக்கிறது.
மாஞ்சிபெரின் வேதி மூலக்கூறை மருந்தாக வாங்கினால் அதிக செலவாகும். ஆனால் அதுவே மாம்பழமாக வாங்கி சாப்பிடும் போது, குறைந்த செலவில், கூடுதலான சத்துகளும் நமக்குக் கிடைக்கும். மருந்தாக இருந்தாலும் அளவாகவே சாப்பிட வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு, அளவாக மாம்பழங்களை உணவில் சேர்த்து பயனடையுங்கள்'' என்றார் ஹன்னா ரேய்ச்சல் வசந்தி.