குளிர் காலங்களில் குளிர், சளி, சைனஸ் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் ஆயுர்வேதம் கூறும் மருத்துவக் குறிப்புகள் எவை? எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள், தலைக்கும், உடலுக்கும் தேய்க்க வேண்டிய எண்ணெய்கள், தவிர்க்க வேண்டிய உணவுகள், அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் (காய்கறி, கீரை, பழவகைகள்) மற்றும் மூக்கில் விடக்கூடிய மருந்துகள், குடிநீர் (சீரகம், சுக்கு) விவரங்கள் அனைத்தையும் தெரிவியுங்கள்.
-எம்.முஹம்மது பஹாவுத்தீன், செங்கல்பட்டு.
உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் சூடானது, குளிர்காலங்களில் காற்றின் ஈரப் பதத்தால் தடையுறுவதால், அதன் வெளியேற்றம் தடைபட்டு, உள்நோக்கித் திரும்புவதால், பசியும் தாகமும் காலையில் எழும் போதே உணரப்படுகின்றன. பசியை மதிக்காமல் விட்டு விட்டால், அதுவே வயிற்றுப்புண், வாயு உபாதைகளுக்குக் காரணமாகி விடும் என்பதை நன்கு உணர்ந்த நம் முன்னோர், மார்கழித் திருநாளில் பொங்கலையும், தைத் திருநாளில் சர்க்கரைப் பொங்கலையும் காலத்திற்கு ஏற்ற உணவாகக் கண்டுபிடித்துத் தந்ததைப் பாராட்டுவோம். நோய் எதிர்ப்பு சக்தி குன்றாதிருக்க உதவிடும் பசித்தீயை மதித்து நடந்திடுவோம்.
குளிரால் ஏற்படும் வறட்சியானது உடலின் நீர்கசியும் பகுதிகளான தோல், உதடு, மூக்கு ஆகியவற்றை வறளச் செய்துவிடும் அபாயமிருப்பதால், நல்லெண்ணெய்யில் மிளகு, சீரகம், ஓமம் ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி உடலெங்கும் பூசி நன்கு தேய்த்துவிட்டு, ஊறிய பிறகு வெந்நீரில் குளிப்பதால் வறட்சி பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பனி வறட்சியால் ஏற்படும் தோல் அரிப்பு, சினப்பு ஆகியவற்றை தூர்வாதி கேர தைலம், நால்பாமராதி கேர தைலம், தினேசவல்யாதி கேர தைலம் போன்றவற்றில் ஒன்றின் மூலமாக, உடலில் தேய்த்துக் குளிப்பதால், எளிதில் மாற்றி விடலாம். கொசு அதிகமாகப் பரவுவதால் ஏற்படும் டெங்குக் காய்ச்சலின் தாக்கம் ஏற்படா
திருக்க, ” பார்ங்கியாதி கஷாயம்” எனும் மூலிகை மருந்தை அனைவரும் பருக வேண்டிய காலமிது. சிறு தேக்கு, கோரைக்கிழங்கு, பர்படகம், சிறுகாஞ்சூரிவேர், சுக்கு, நிலவேம்பு, வெண்கோஷ்டம், திப்பிலி, கண்டங்கத்திரிவேர், சீந்தில்கொடி ஆகிய பத்து மருந்துகளையும் வகைக்குச் சம எடை எடுத்து காய்ச்சப்படும் இந்த கஷாய மருந்தினால், டெங்கு காய்ச்சல் மட்டுமல்ல, பல வகையான முறைக் காய்ச்சலும் கூட குணமாகி, நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
தலையில் நீர் கோர்த்துள்ளதால் நஐசமநஐபஐந எனும் நீர்க்கோர்வை உபாதையினால் தாக்கப்பட்டவர்கள் மிகுந்த தொல்லைக்கு ஆட்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அஸனபில்வாதி தைலம், அஸனமஞ்சிஷ்டாதி தைலம், அஸனஏலாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை வெதுவெதுப்பாக தலையில் தேய்த்துக் குளித்து வர, நீர்க் கோர்வை வராமல் பாதுகாக்கலாம். வந்துள்ள உபாதையையும் குறைத்துவிடும். ஏலக்காயையும் கிராம்பையும் வெற்றிலைச் சாறு விட்டரைத்து லேசாகச் சூடாக்கி நெற்றியில் பற்றுப் போட, மூக்கின் அடிப்பகுதி, தலை, நெற்றிப்பொட்டு, புருவம் ஆகிய பகுதிகளில் ஏற்படும் கனமும் குத்து வலியும் நன்கு குணமாகும்.
நீர்க் கோர்வையை எளிதில் பழுக்கச் செய்து வெளியேற்றி, தலையிலுள்ள நீரை வறளச் செய்து வேதனையைக் குறைக்கவும் உதவும். ராஸனாதி சூரணத்தையும், ஏலாதி சூரணத்தையும் சம அளவு கலந்து இஞ்சிச் சாறுடன் குழைத்துச் சூடாக்கி நெற்றியில் பற்று இடுவது மிகவும் நல்லது. காலையில் பல் துலக்கிய பிறகு, அணு தைலத்தை 2 சொட்டுகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் சளி உடைந்து வெளியேறும். கடுமையான நீர்க் கோர்வையைச் சமாளிக்க உதவும். லக்ஷ்மி விலாஸ ரஸம் மாத்திரை, கர்ப்பூராதி சூரணம், தாளீசபத்ராதி சூரணம், வ்யோசாதிவடகம், ஹரித்ரா கண்டம் ஆகியவை குளிர் காலத்தில் வீட்டில் இருக்க வேண்டிய தரமான மருந்துகளாகும். உடலின் சகிப்புத் தன்மை குறையாதிருக்க தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தாதி லேகியம், சியவனப்ராசம், கூஷ்மாண்ட ரஸாயனம் முதலிய பலம் தரும் மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும்.
நெய்ப்பும், இனிப்பும், புளிப்பும், உப்புச் சுவையும் கொண்ட உணவு வகைகள், மாமிசச் சூப்பு வகைகள், உளுந்து, கரும்புச் சாறு, பாலிலான இனிப்பு வகைகள், புது அரிசியினால் தயாரிக்கப்பட்ட சாதம் போன்றவை பசித்தீயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். காரம், எண்ணெய்யில் பொரித்தவை, நீர்க்காய்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. கீரைகள் எதுவாயினும் நன்கு வேக வைத்து, நீர் பிழிந்து அகற்றி, மறுபடியும் வேக வைத்துச் சாப்பிடுதல் நலம். ஆப்பிள், மாதுளை, கொய்யா, பப்பாளிப் பழம் சாப்பிடலாம். கோரைக்கிழங்கு, சுக்குபோட்டுக் காய்ச்சிய வென்னீர் அருந்தலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.