தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நின்றால் வலி!

சுமார் 2 ணீ மணி நேரம் ஓர் இடத்தில் நின்று கொண்டே காத்திருந்த நேரத்தில், இரு தொடைகளிலும், பாத நரம்புகளிலும் கடுமையான வலி ஏற்பட்டு அவதிப்பட்டேன்.

எஸ். சுவாமிநாதன்

சுமார் 2  மணி நேரம் ஓர் இடத்தில் நின்று கொண்டே காத்திருந்த நேரத்தில், இரு தொடைகளிலும், பாத நரம்புகளிலும் கடுமையான வலி ஏற்பட்டு அவதிப்பட்டேன். உட்கார்ந்தால் போதும் என்றாகிவிட்டது. 32 வயதிலேயே இப்படி ஏற்பட்டால், இன்னும் வயது ஏற ஏற என்ன ஆகுமோ? என்று பயமாக உள்ளது. இப்படி வலி ஏற்பட என்ன காரணம்?

-முத்துராமன், தஞ்சாவூர் .

முதுகுத் தண்டுவடத்தின் கீழ்பகுதியில் அமைந்துள்ள எலும்பு அடுக்குகளின் இடையே குஷன் போன்ற வில்லைகள் இருக்கின்றன. அவற்றின் உள்ளே இருக்கும் நீர்ப்பசை வற்றிவிட்டாலோ, உயரம் குறைந்தாலோ, இடம் நழுவி பிதுங்கிவிட்டாலோ ஏற்படும் நரம்பு அழுத்தம், நீங்கள் குறிப்பிடும் தொடை வலியையும், பாத நரம்பு வலியையும் ஏற்படுத்தும். வில்லைகள் இடம் நழுவுதல், உயரம் குறைதல், நரம்புகளை அழுத்துதல் போன்றவற்றிற்குக் காரணமாக, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அதிக நேரம் ஓட்டுதல், குடல் வாயு மற்றும் மலத்தேக்கம் - அதனால் ஏற்படும் அழுத்தம், வாயுவை அதிகரிக்கச் செய்யும் வேர்க்கடலை, மொச்சை, பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல், கீழ் இடுப்பில் அழுத்தம் ஏற்படும் வகையில் கூன் போட்டு அமர்தல், குளிர்ந்த நீரை குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்துதல், சில்லிட்டுப் போன படுக்கையில் படுத்திருத்தல், நீச்சல் குளத்தில் தன் சக்திக்கு மீறிய சாகசங்களில் ஈடுபடுதல், தண்டுவடத்தில் அதிர்வுகள் ஏற்படும் விதத்தில் விழுந்து அடிபடுதல் போன்றவற்றை சில உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

க்யூவில் அதிகம் நேரம் நிற்க வேண்டிய நிலைகளில், ஒரு கால் பாதத்தின் குதிகால் பகுதியை அழுத்தி முன் பாதத்தை தூக்குவதையும், பிறகு முன் விரல்கள் பகுதியை அழுத்தி, குதிகால்களை உயர்த்துவதையும், பிறகு மற்ற கால் பாதத்தை இது போலவே செய்வதையும் பயிற்சியாக மேற்கொள்ள, ரத்த ஓட்டம் சீராவதுடன், நரம்புகளும் சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதனால் வலியை மட்டுப்படுத்தலாம். கால் பாதங்களுக்கு மிருதுவான குஷன்போன்ற காலணிகளை அணிந்துநிற்பதாலும் வலியைக் குறைக்கலாம்.

பிதுங்கியுள்ள வில்லைகள், நீர்வற்றி சுண்டிப் போனவில்லைகள் ஆகியவற்றை அறுவைச் சிகிச்சையின்றி குணபடுத்த முடியுமா? என்று நீங்கள் கேட்டால், அதற்கு பதில் - அவற்றின் நிலை படுமோசமாக இருந்தால் - அறுவைச் சிகிச்சை, மோசமாகவோ, சுமாரான பிதுக்கங்களாகவோ இருந்தால், சிகிச்சை செய்து குணப்படுத்த முயற்சிக்கலாம் என்பதே.

சிகிச்சை என்பது அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும். சிலருக்குச் சில நாட்கள், கீழ் இடுப்பில் தவிடு அல்லது ஆற்று மணல் கொண்டு மூட்டைகட்டி, வெதுவெதுப்பாக ஒத்தடம் கொடுத்து, அதன் சூடு அடங்கிய பிறகு, மூலிகைத் தைலம் கட்டுதல் முறையும், சிலருக்கு ஒத்தடம் தேவைப்படாமல், நேரிடையாகவே தைலம் கட்டுதல் முறையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் நேரலாம். ஆசனவாய் வழியாக, குடலுக்கு மூலிகைத் தைலம் செலுத்தி, அங்குள்ள வாயுவை வெளியேற்ற கஷாயவஸ்தி எனும் சிகிச்சைக்கான தேவை ஏற்படலாம். மூலிகை இலைகளைச் சிறு துண்டங்களாக நறுக்கி, மூட்டை கட்டி, மூலிகைத் தைலத்தில் தோய்த்து எடுத்துச் சூடாக்கி, கீழ் இடுப்பில் ஒத்தடம் போடுதல் முறையும் பயனளிக்கலாம்.

அறுபது நாளில் விளையக் கூடிய காரஅரிசியை சித்தாமுட்டி வேர்க்கஷாயத்தில் பாலும் கலந்து வேக வைத்து, அந்த சோற்று மூட்டியை கீழ் இடுப்பில் உருட்டி உருட்டி தேய்ப்பதனால், வில்லைகள் வலுப்படுதலும், நீர்ப்பசையை மறுபடியும் பெறுதலையும் செய்வதற்கான சிகிச்சை முறையை இறுதியாக கையாள்

வதையும் ஆயுர்வேதம் அங்கீகரித்திருக்கிறது. மருந்துவமனையில் தங்கி, சிகிச்சை செய்து கொள்ளும் இம் முறைகள் தற்சமயம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தங்கும் நாட்களில், உள் மருந்தாக, கஷாயங்கள், அரிஷ்டங்கள், இன்னும் பிற மருந்துகளைத்தந்து, தண்டுவட எலும்புகளை வலுப்படுத்த மருத்துவர்கள் முயற்சிப்பார்கள் என்பதால், நீங்கள் அவற்றைச் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. பத்திய முறையாக, இனிப்பு, புளிப்பு வகைகளை சற்றே தூக்கலாகவும், உணவை வெது வெதுப்பாகச் சாப்பிடுவதையும் தேவைப்படும் முக்கிய அறிவுரைகளாகக் கூறலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT