நான் மாடியிலுள்ள ஒரு ப்ளாட்டில் குடியிருக்கிறேன். என் வீட்டிற்கு கீழுள்ள ப்ளாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. என் மகனுக்கு சளித் தொல்லையும், தும்மலும், தலைவலியும் உள்ளதால் மிகவும் பயத்தில் இருக்கிறேன். கரோனா தொற்று ஏற்பட்டுவிடாமலிருக்க என்னென்ன மூலிகைகள் பயன்படும்? அவை நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவையாக இருந்தால் நல்லது.
- மஞ்சுளா, சென்னை.
கரோனா பயம் சற்றும் விலகாத நிலையில் காலத்தைக் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் மனித சமுதாயம் திண்டாடுவது மிகவும் வருத்தமளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதன் மூலமாகவும், வைரஸ் தொல்லையைத் தவிர்க்கும் வகையிலும் சில மூலிகைகளின் சேர்க்கையானது, அவற்றின் தொடர் உபயோகத்தின் பயனாக மனிதர்கள் பெறக் கூடும். அந்த வகையில் - சீந்தில் கொடி, வேப்பம்பட்டை, நெல்லிக்காய், மஞ்சிட்டை, அதிமதுரம், சுத்தமான குக்குலு, சோமலதா, மஞ்சள், மூக்கிரட்டை, துளசி மற்றும் சங்க பஸ்மத்தின் சேர்க்கையானது மிகவும் பயன்படும்.
இவை அனைத்தையும் நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி சுத்தப்படுத்தி தயார் செய்து சாப்பிடுவதற்கு இன்று மனிதர்களுக்குப் பொறுமையில்லாததாலும், அவை பற்றிய நுண்ணறிவு இல்லாததாலும், மாத்திரையாகக் கிடைத்தால் வெந்நீருடன் விழுங்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாமே என்ற மனோ பாவத்தினாலும், இவற்றை நாம் கடையிலிருந்து வாங்கித் தயாரிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, தனியார் கம்பெனிகளே நல்ல மூலிகைகளை தரம் பிரித்து, அவற்றின் தன்மையை ஆராய்ந்து, மருந்தாக விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள்.
நாமே மருந்து மூலிகைகளை வாங்கித் தயாரித்துச் சாப்பிட்டால் விலை குறைவுதான். ஆனால் மேற்குறிப்பிட்ட மனிதர்களின் சுபாவத்தையும், எண்ணத்தையும் கருத்திற் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. கேப்ஸ்யூலாகக் கொண்டு வரப்படும் இம்மருந்தை காலை, மாலை ஒன்றிரண்டை வெந்நீருடன் உணவிற்கு ஒரு மணி நேரம் முன் சாப்பிடலாம்.
மேற்குறிப்பிட்ட இம்மூலிகைகளில் வேப்பம்பட்டை, நெல்லிக்காய், மஞ்சள், துளசி போன்றவை பாமரனும் அறிந்திருக்கக்கூடியவை என்பதால், அவை பற்றி விளக்காமல், மற்றவை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்.
சீந்தில் கொடியின் முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டவை. பேதி, வெள்ளைப் படுதல் ஆகியவை குணமாகும். இலை, தண்டு உடல் பலத்தை அதிகரிக்கும். சிறுநீர் பெருக்கும். முறைக்காய்ச்சலைத் தீர்க்கும். அஜீரணம் குணமாகும். வாத நோய்கள், கிரந்தி முதலியவை கட்டுப்படும். கிழங்குமேகம், காய்ச்சல், கழிச்சல், மாந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றைக் குணமாக்கும். முதிர்ந்த கொடிகளை தோல் நீக்கி, உலர்த்தி பொடி செய்து, காலை, மாலை வேளைகளில் ஐந்து கிராம் எடுத்து, இருநூறு மில்லி இளஞ்சூடான பாலுடன் சாப்பிட நோயால் இளைத்த உடல் உறுதியடையும்.
மஞ்சிட்டை பித்தத்தினால் ஏற்படும் காய்ச்சலை மட்டுப்படுத்தும். உடல் நிறத்தை அழகாக்கும். ரத்தத்தைச் சுத்தமாக்கும். கேன்சர் கட்டிகளைக் குணமாக்கும். சூடான வீர்யமுடையதாகினும், கப - பித்த தோஷங்களை அடக்கும் தன்மையுடையது. உடல் உட்புற விஷங்களை முறிக்கும். இதன் வேர்ப்பகுதிதான் மருத்துவத்தில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதிமதுரத்தின் காய்ந்த வேர்ப்பகுதி இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. புண்கள், தாகம், அசதி, கண்நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றைக் குணமாக்கும். காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், படர்தாமரை ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். ஆயுளை அதிகரிக்கும்.
கசப்பும் காரமும் கொண்ட குக்குலு லேசானது. வறட்சி தரும். சூடான வீர்யம் உடையது. உடலில் தேவையற்ற கொழுப்பு, குடல் வாயுவை நீக்கக் கூடியது. யோகராஜ குக்குலு, காஞ்சநார குக்குலு போன்றவை மூட்டு வலியைக் குணப்படுத்தும் மருந்துகளில் குக்குலு முதன்மையானது.
மூலிகைகளில் மிகச் சிறந்த சோமலதா எனும் கொடியினத்தைச் சார்ந்த செடியானது உடல்நலத்திற்கு மிகவும் உயர்ந்தது. தண்டு மூச்சுக் குழாயை விரிவடையச் செய்து பிராண வாயுவை நன்கு உட்செலுத்தக் கூடியது. கட்டிகள், எலும்பு முறிவு, மூட்டுவலி, உடல் பருமன் போன்ற உபாதைகளுக்கு நல்லதொரு நிவாரணியாகும். இலைகளும், வேர்களும் பாம்புக்கடி, மூளை உபாதைகள், ஜலதோஷம், நாய்க்கடி, காயம், குடல்புண் போன்ற உபாதைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மூக்கிரட்டை, சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றும்.
மஞ்சள் காமாலை, மேக வெட்டை போன்ற நோய்களால் அவதிப்படும்போது, சிறுநீர் எளிதில் வெளியேற இது உதவுகின்றது. செடி, வேர், கோழை அகற்றும். மலமிளக்கும். வயிற்றுப் புழுக்கள், பெரு வயிறு, சோகை போன்றவற்றைக் குணமாக்கும். கீல்வாதம், இரைப்பு, இதயநோய்கள், மண்ணீரல் வீக்கம், காசநோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். இஅடநமகஉ -அவமஏ யச என்ற பெயரில் தற்சமயம் வரத் தொடங்கியுள்ளது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.