டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியர்கள் பற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதிவுக்கு பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காததற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்...
இந்தியர்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைப் பதிவுக்கு எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் சாதிப்பதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை நரகத்தின் குழிகள் எனவும், அந்நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் நபர்கள் தங்களின் குழந்தைகளுக்குக் குடியுரிமை பெறுகின்றனர் எனவும் விமர்சித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்தப் பதிவுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுபற்றி, மத்திய அரசின் கருத்தை எதிர்பார்த்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “நாங்கள் சில அறிக்கைகளைப் பார்த்தோம், அத்துடன் நான் அதை விட்டுவிடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டிரம்ப் இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் இழிவான ஒரு சொல்லைப் பயன்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மௌனம் சாதிப்பதாக, காங்கிரஸ் தலைவர் கார்ஜே குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி, வியாழக்கிழமை (ஏப். 23) அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
“மோடியின் நெருங்கிய நண்பரான ‘நமஸ்தே டிரம்ப்’ இந்தியாவை இழிவுபடுத்தும் வகையிலும், மிகவும் இழிவான ஒரு சொல்லைப் பயன்படுத்தியும் ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.
இந்த அபத்தமான பேச்சுகள் குறித்து மோடி முற்றிலும் மௌனம் சாதிக்கிறார். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அதை நான் அத்துடன் விட்டுவிடுகிறேன் எனக் கூறுகிறார். பிரதமர் மோடி நீங்கள் எதைக் கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்கள்?
அமெரிக்காவின் வெற்றியில் இந்தியர்கள் முக்கியமான பங்காற்றியுள்ளனர். அமெரிக்க அரசின் மிக உயரிய நிலைகளிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு எது நம்மைத் தடுக்கிறது?
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் ஒருதலைப்பட்சமான கட்டமைப்பு முதல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போரை நிறுத்தத்திற்கு தான் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் முன்பு கூறியது வரை; பிரிக்ஸ் அமைப்பு இறந்துவிட்டது என டிரம்ப் பேசியபோது அவருக்கு முன்னால் புன்னகைத்து நின்றது முதல், இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்தது வரை - ஒவ்வொரு கட்டத்திலும் மோடி இந்தியாவின் நலன்களை அடகு வைத்துள்ளார்.
தீவிரமான தேர்தல் பிரசாரத்துக்கு இடையே 140 கோடி இந்தியர்கள் எதிர்கொள்ளும் இந்த மிரட்டல் குறித்து பதிலளிக்க பிரதமருக்கு சிறிது நேரம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
Kharge has accused PM Modi of maintaining silence by refraining from offering any comments regarding the controversial post made by Trump concerning Indians.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.