தினமணி கதிர்

பேட்டரியில் இயங்கும் சைக்கிள்!

எம். சக்கரை முனியசாமி

பேட்டரியில் இயங்கும் சைக்கிள், சிறிய வகை மண் அள்ளும் இயந்திரம், கதிரடிக்கும் இயந்திரம் ஆகியவற்றை வடிவமைத்து சாதனை படைத்து வரும் 8- ஆம் வகுப்பு பள்ளி மாணவரை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி - ஸ்ரீதேவி தம்பதியின் மகன் சிவசங்கர் (13).

இவர் ராமசாமிபட்டி அடுத்துள்ள எம்.ரெட்டியபட்டி தனியார் பள்ளியில் 8 - ஆம் வகுப்பு படித்து வருகிறார். ""பொதுவாகவே மற்ற மாணவர்களை விட ஏதாவது வித்தியாசமாக தான் இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவான்'' என பெற்றோர்கள் கூறுகின்றனர்.

பள்ளியில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் தண்ணீரை வீணாக்காமல் பேட்டரியில் செயல்படும் சிறிய ரக நீரூற்று, டிராக்டர் டேங்கர், கலப்பைகள், கதிரடிக்கும் இயந்திரங்களைத் தயாரித்து, மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்றுள்ளார். யோகாசனத்திலும் சிறந்து விளங்கி பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

கரோனா காலத்தில் வீணாகப் பொழுதைக் கழிக்காத மாணவர் சிவசங்கர், சூரிய ஒளியில் இயங்கும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வடிவமைக்க உள்ளதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் குடும்பப் பொருளாதாரம் குறைவாக உள்ள காரணத்தால், சைக்கிளில் சூரிய ஒளி அல்லது பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்க, சிவசங்கரை அவரது பெற்றோர் ஊக்கப்படுத்தினர்.

இதனையடுத்து மாணவர் சிவசங்கர், தனது சைக்கிளில் 9-12 "ஆம்ஸ்' திறன் கொண்ட இரு பேட்டரிகளை 4 ஆயிரம் ரூபாய்க்கும், ஆக்ஸிலேட்டர் உள்பட மற்ற உதிரிபாகங்களை "ஆன்லைனில்' 7,200 ரூபாய்க்கும், சார்ஜர் ஆயிரம் ரூபாய்க்கும் வாங்கி, தனது சைக்கிளில் பேட்டரியுடன் இயங்கும் வகையில் வடிவமைத்து, சாதனை படைத்துள்ளார்.

இரு பேட்டரிகளை 4 மணிநேரம் சார்ஜ் ஏற்றினால், 25 கிமீ., துôரம் வரை செல்லும் வகையில் இருப்பதால், மாணவரின் சொந்த ஊரான ராமசாமிபட்டியிலிருந்து பள்ளி திறந்தவுடன் தான் படிக்கும் பள்ளிக்குச் சென்று வர ஆகும் 12 கிமீ., தூரத்தை பேட்டரியில் இயங்கும் சைக்கிளில் தனது தங்கை பாண்டீஸ்வரியுடன் சென்று வர திட்டமிட்டுள்ளார்.

இதேபோல் பிவிசி பிளாஸ்டிக் பைப்பில், "புளுடூத்' தில் இயங்கும் ஸ்பீக்கரையும் குறைந்த செலவில் புதிதாக வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவர் சிவசங்கர் கூறியது:

""எனது பெற்றோர் எனக்கு அளித்த உற்சாகமே, பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பேட்டரியில் இயங்கும் பொருள்களை வடிவமைக்க உறுதுணையாக இருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த பேட்டரியில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தேன். தொடக்கத்தில் சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை வடிவமைக்கவே ஆசைப்பட்டேன். பொருளாதாரச் சிக்கலால், இந்த பேட்டரி சைக்கிள் வடிவமைப்பு. பணம் இருந்தால், சூரிய ஒளியில் இயங்கும் காரினையே வடிவமைப்பேன். பேட்டரி சைக்கிள் கண்டுபிடிப்பால் எனக்கும், என் தங்கைக்கும் பள்ளிக்கு வாகனத்தில் சென்று வரும் செலவு மிச்சம். மேலும் அடுத்தடுத்து எனது வீட்டில் உள்ள மின்சாதனப் பொருள்கள் அனைத்தும் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT