பயணத்தை ரத்து செய்வது என்றால், விமானக் கட்டணம் ரூ.12,000-த்தை இழக்க நேரிடும். அந்த அளவிலான வசதி எனக்கு இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, நான் பயணத்தை ரத்து செய்தாலும் பிரணாப் முகர்ஜியையோ, காட்கில்ஜீயையோ, பிரதமர் அலுவலகத்துடன் தொடர்புடையவர்களையோ சந்தித்து உடனடியாகத் தகவல் தெரிவித்துவிடவும் முடியாது. அப்படியே தெரிவித்தாலும், அவர்களால் நடக்க இருப்பதைத் தடுத்துவிடவும் முடியாது.
அதையெல்லாம் யோசித்து, பயணத்தை ரத்து செய்யாமல் சென்னை திரும்புவது என்று முடிவெடுத்தேன். சென்னைக்குப் பறக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கான பாதுகாப்புச் சோதனை அறிவிப்பு அலறியது. பிரமுகர்கள் காத்திருக்கும் அந்த அறையிலிருந்து வெளியேறி, பாதுகாப்பு சோதனைக்குநகர்ந்தேன்.
விமானத்தில் என்றல்ல, அது ரயிலோ, காரோ எதுவானாலும், பயணத்தில் தூங்கிவிடுவது எனது இயல்பு. கண்ணை மூடினால் அடுத்த சில நொடிகளில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவதுதான் இந்தப் பிறவியில் நான் வாங்கி வந்திருக்கும் வரம். தேவையற்ற எந்த சிந்தனையும் எனது தூக்கத்தைக் கெடுப்பதில்லை.
அன்றைக்கு விபரீதமாக எனக்குத் தூக்கம் வரவில்லை. விமானத்தில் ஏறி அமர்ந்தும்கூட, மனு சாப்ரியா தெரிவித்த அந்தத் திடுக்கிடும் தகவல் தந்த திகைப்பிலிருந்து நான் மீளவில்லை. அவர் சொல்வதுபோல இரண்டு நாள்களில் பெரியதொரு பூகம்பம் வெடிக்கும் என்பதும், பிரதமர் நரசிம்ம ராவ் பதவி விலக நேரும் என்பதும் நிகழக்கூடும் என்று எனக்குத் தோன்றியது.
மும்பையில் வெடிக்க இருக்கும் பூகம்பத்தின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கக்கூடும் என்கிற சிந்தனையில் அமர்ந்திருந்த எனக்கு, தில்லிக்கும் சென்னைக்கும் இடையேயான 2 மணி 40 நிமிட விமானப் பயணம் சில நொடி
களில் கடந்துவிட்டதாகத் தோன்றியது.
விமானநிலையத்திலிருந்து தி.நகர்உஸ்மான் சாலை சிவா விஷ்ணு ஆலயத்துக்கு அருகிலுள்ள சுந்தரம் காபி கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்த எனது நியூஸ் கிரைப் செய்தி நிறுவன அலுவலகத்துக்கு விரைந்தேன். தொலைபேசியில் நான் தொடர்பு கொண்ட நபர் புவனேஷ் சதுர்வேதி.
பிரதமர் அலுவலகத்தில் இணையமைச்சராக இருந்த புவனேஷ் சதுர்வேதி உடனடியாக எனது அழைப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து, அவருக்கும் ஏதோ
அரசல் புரசலாகச் செய்தி கிடைத்திருக்கும் என்று நினைத்தேன்.
""எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. நான் சென்னையில் இருக்கிறேன். மிகவும் நன்றாகத் தெரிந்த ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.''
""மும்பையிலிருந்து கிடைத்த செய்தியா?''
""ஆமாம், உங்களுக்குத் தெரியுமா?''
""நானும் கேள்விப்பட்டேன். அதில் ஆதாரம்எதுவும் கிடையாது. வீண் பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். காரணங்கள்ஒன்றுமில்லை.''
""பிரமருக்குத் தெரியுமா?''
""நன்றாகத் தெரியும். அவர் எந்தவிதசலனமும் இல்லாமல், தனது அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்.''
""உங்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காகத்தான் அழைத்தேன்.''
""நன்றி. அடுத்த முறை தில்லி வரும்போது மறக்காமல் என்னை வந்து பாருங்கள்.''
இணைப்பைத் துண்டித்து விட்டார். நானும் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்ட திருப்தியில் சமாதானமானேன். பிரணாப் முகர்ஜி, வி.என்.காட்கில் இருவரையும் அழைத்தேன். தொடர்பு கொள்ள முடியவில்லை. அத்துடன் விட்டுவிட்டேன்.
மனு சாப்ரியா சொன்னது போலவே அந்த பூகம்பம் வெடித்தது. 1992 வங்கி மோசடியில் தொடர்புடைய ஹர்ஷத் மேத்தாதான் அந்த பூகம்பத்திற்குக் காரணம். மும்பையில் பத்திரிகையாளர்களைக் கூட்டி அவர் முன்வைத்த குற்றச்சாட்டு, பிரதமரை மட்டுமல்ல ஒட்டுமொத்தஇந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரதமர்கள் மீது அதற்கு முன்னும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. முந்த்ரா ஊழலில் ஜவாஹர்லால் நேரு மீதும், நகர்வாலா மோசடியில் இந்திரா காந்தி மீதும் சந்தேகம் எழுப்பப்பட்டன என்றாலும் கூட, பிரதமர் ஒருவர் நேரிடையாக லஞ்சம் வாங்கினார் என்று அதுவரையில்யாரும் குற்றம் சாட்டியதில்லை. ஆனால், ஹர்ஷத் மேத்தா குற்றம் சாட்டினார்.
வங்கி மோசடி வழக்கிலிருந்து தன்னைத் தப்பிக்க வைப்பதற்காகப் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு அவரது இல்லத்திற்குச் சென்று ஒரு கோடி ரூபாய் பணம் அடங்கிய பெட்டியை லஞ்சமாகக் கொடுத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார் ஹர்ஷத் மேத்தா. அப்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த சத்பால் மிட்டலும், இப்போது பாரதி ஏர்டெல் தகவல் தொடர்பு நிறுவனத்தின் தலைவராகஇருக்கும் அவரது மகன் சுனில் மிட்டலும்உடனிருந்தனர் என்றும் மேத்தா தெரிவித்தார்.
ஹர்ஷத் மேத்தா முன்வைத்த குற்றச்சாட்டு இதுதான் - ""ஒரு கோடி ரூபாய் கரன்சி நோட்டுகள் அடங்கிய சூட்கேசுடன் பிரதமரின் இல்லத்திற்குப் போனோம். என்னுடன் சத்பால் மிட்டலும்,அவரது மகன் சுனில் மிட்டலும் உடனிருந்தனர். பிரதமர் நரசிம்ம ராவின் உதவியாளர் ராம் காண்டேகரிடம் அந்தப் பெட்டியை ஒப்படைத்தோம். சத்பால் மிட்டலின் ஆலோசனையின்படிதான் நரசிம்ம ராவை சந்தித்து அந்த நன்கொடையை அளித்தேன். என்னை வழக்குகளிலிருந்து காப்பாற்றுவதற்காக அந்தப் பணம் தரப்பட்டது.''
எல்லா அரசியல் கட்சிகளும் நன்கொடை பெறுவது வழக்கம். குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை வசூலிப்பதில் மும்பையில் எஸ்.கே.பாட்டீலும், ரஜினி படேலும் சமர்த்தர்கள் என்று சொல்வார்கள். எல்லா அரசியல் கட்சிகளுக்கும், தொழிலதிபர்களிடமிருந்து நன்கொடை பெற்றுத் தருவதற்கும், அதற்கு பிரதி உபகாரமாக பல சலுகைகளைப் பெற்றுத் தருவதற்கும் சில அரசியல் இடைத்தரகர்கள் இருப்பதுண்டு.
அப்படிப்பட்டவர்களில்ஒருவர்தான் சத்பால் மிட்டல். அமைச்சர்களுக்கும், கட்சித் தலைமைக்கும் நன்கொடை வசூலித்துத் தருவதில் சமர்த்தர் என்பதால்தான், தேர்தலில் போட்டியிடாமல், 1976 முதல் அவர் மரணமடைந்த 1992 வரை தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக அவரால் இருக்க முடிந்தது.
லூதியானாவில் வெற்றிலை பாக்குக் கடை (பான் பந்தர்) வைத்துக் கொண்டிருந்த ஒருவரின் மகனாகப் பிறந்த சத்பால் மிட்டல் மூன்று தடவை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தது மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் வளர்ந்தது பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே இடைத்தரகராக இருந்ததால்தான்.
இந்திரா காந்தியுடனும், பின்னர் ராஜீவ் காந்தியுடனும் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. அவர் இறந்தபோது, இறுதிச் சடங்கில் பிரதமர் நரசிம்ம ராவ் கலந்து கொண்டார். இப்போது அவரது மகன்களான சுனில் மிட்டலும், ராகேஷ் மிட்டலும் இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் தொழிலதிபர்கள் என்பதிலிருந்து, சத்பால் மிட்டல் போட்டிருக்கும் அடித்தளம் எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
எதிர்பார்த்தது போலவே, ஹர்ஷத் மேத்தாவின் குற்றச்சாட்டு அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது. நரசிம்ம ராவ் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், உலகமயமாக்கல்,
சந்தைப் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து ஏற்கெனவே கருத்து வேறுபாடு கொண்டிருந்த எதிர்கட்சிகளை அயோத்யா பிரச்னை பிளவுபடுத்தி வைத்திருந்தது. ஹர்ஷத் மேத்தா எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டு, அவர்களை இணைக்கும் பாலமாக மாறியது.
பாஜகவும், இடதுசாரிகளும் ஹர்ஷத் மேத்தா குற்றச்சாட்டின் அடிப்படையில் இணைந்து, "பிரதமர் பதவி விலக வேண்டும்' என்கிற கோரிக்கையை எழுப்பின. பிரதமர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது என்று முடிவெடுக்கப்பட்டது.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்னவாயிற்று, அதைப் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் எப்படி எதிர்கொண்டார் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஹர்ஷத் மேத்தாவின் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, அவர் உண்மையிலேயே நேரிடையாகப் பிரதமர் வீட்டுக்குச் சென்று ஒரு கோடி ரூபாய் பணம் நன்கொடையாக (லஞ்சமாக) கொடுத்தாரா என்பதுதான் அதைவிட முக்கியமான கேள்வி.
ஹர்ஷத் மேத்தாவின் குற்றச்சாட்டில் பெரிய ஓட்டைகள் இருக்கின்றன. ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தை மோசடி கண்டுபிடிக்கப்பட்டது 1992 ஜூன் மாதத்தில். சத்பால் மிட்டல் 1992 பிப்ரவரியில் இறந்து விட்டார். 1993 ஜூலை மாதம்தான் வழக்கில் சிக்கிய ஹர்ஷத் மேத்தா தனது குற்றச்சாட்டை முன்வைக்கிறார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, ஆட்சி கவிழ்வதன் மூலம் தமக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் அவர் கையாண்ட உத்தியாகக் கூட அவரது குற்றச்சாட்டு இருக்கக்கூடும்.
2001-இல், தனது 47-ஆவது வயதில் திடீர் மாரடைப்பால் ஹர்ஷத் மேத்தா மரணமடைந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட 27 கிரிமினல் வழக்குகளில் வெறும் நான்கு வழங்குகளைத்தான் நிரூபிக்க முடிந்தது. அதற்காக அவர் தண்டனையும் பெற்றார். தனது மரணம் வரை 9 ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராடிய ஹர்ஷத் மேத்தா, பிரதமருக்குப் பணம் கொடுத்தாரா இல்லையா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் என்று பரவலாக அடிபடும் அந்த வழக்கு பற்றி எல்லோரும் குறிப்பிடுகிறார்களே தவிர, உண்மையில் என்னதான் நடந்தது என்று கேட்டால் வங்கித் துறை தொடர்பான புரிதல் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அதுகுறித்துத் தெரியும். கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது, பணம் கையாடல் செய்வது போன்ற குற்றமெதுவும் அவர் இழைக்கவில்லை.
வங்கித் துறையில் காணப்பட்ட ஓட்டைகளையும், பலவீனங்களையும் பயன்படுத்திப் பல கோடி ரூபாய்களை அவர் மடை மாற்றம் செய்து விட்டார் என்று வேண்டுமானால் கூறலாம். அதுகூட சரியான குற்றச்சாட்டாக இருக்காது.
1991 பொருளாதார சீர்திருத்தம் பல புதிய பணக்காரர்களை உருவாக்கியது. குறிப்பாக, பங்குச் சந்தை சார்ந்த முதலீடு இல்லாத கோடீஸ்வரர்களை உருவாக்கியது எனலாம். (உருவாக்கிக் கொண்டிருக்கிருக்கிறது என்றும் சொல்லலாம்).
ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்ட மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தஹர்ஷத் மேத்தா கணக்கு எழுதுபவராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, பங்குச் சந்தை இடைத்தரகர்களின் அலுவலகங்களில் பணியாற்றி, ஒரு கட்டத்தில் மும்பை பங்குச் சந்தையில் இடைத்தரகராக அங்கீகாரம் பெற்றார். "க்ரோ மோர் ரிசர்ச் அண்ட் அùஸட் மேனேஜ்மெண்ட்' என்கிற பங்குச் சந்தை நிறுவனத்தை அவர்ஏற்படுத்திக் கொண்டார்.
பங்குத் சந்தை வட்டாரங்கள் அவரது பிரமிக்கத்தக்க நடவடிக்கைகளைப் பார்த்து வியந்தன. மும்பையின் வர்லி பகுதியில், கடற்கரையை எதிர்நோக்கும் அவரது பங்களாவில் நீச்சல் குளம், கோல்ஃப் மைதானம் எல்லாம் இருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலைமதிப்புள்ள கார்கள் பல அவரிடம் இருந்தன. அவரை "பங்குச் சந்தையின் அமிதாப் பச்சன்' என்றும், "பிக் புல்' என்றும் வர்த்தக இதழ்கள் வர்ணித்தன.
அவரால் எப்படி திடீர் கோடீஸ்வரராக முடிந்தது என்று யாரும் சந்தேகிக்கவில்லை. பொருளாதார தாராளமயம் வழங்கிய கொடை என்று சிலாகித்தனர். ஒரு கட்டத்தில் பங்குச் சந்தை வர்த்தகத்தின் அடையாளமாகவே மாறிவிட்ட ஹர்ஷத் மேத்தாவுக்குப் பெரிய அளவில் அரசியல் தொடர்புகள் இருக்கவில்லை. ஆனால், அதிகாரிகள் பலர் அவரது நட்பு வட்டத்தில் இருந்தார்கள்.
இந்திய வங்கித் துறையில் காணப்பட்ட பலவீனங்களும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இருந்த நிர்பந்தங்களும், பங்கு வர்த்தகத்தில் தனக்கிருந்தசாதுர்யமும், ஹர்ஷத் மேத்தாவால் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட்டபோது, சுமார் ரூ.5000 கோடி வங்கிப் பணம் காணாமல் போயிருந்தது. அப்படி என்னதான் செய்தார் ஹர்ஷத் மேத்தா?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.