தினமணி கதிர்

திரைக்கதிர்

DIN

"ரெட்டைசுழி', "நெடுஞ்சாலை', "தரணி' உள்பட பல படங்களில் நடித்த ஆரி தனது பெயரை ஆரி அர்ஜுனா என்று மாற்றிக் கொண்டு தற்போது நடித்து வருகிறார். "பகவான்', "நெஞ்சுக்கு நீதி' படங்களில் நடித்து வரும் அவர், பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே தமிழில் "சென்னை டூ சிங்கப்பூர்', "இக்ளு' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். இந்தப் படத்தை மணிவர்மன் இயக்குகிறார். தமன்குமார் இசை அமைக்கிறார். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு  பூஜையுடன் தொடங்கி உள்ளது. 

----------------------------------

தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்களைத் தயாரித்தவர் கே.டி. குஞ்சுமோன். அது போல் ஷங்கர் உள்ளிட்ட பல இயக்குநர்களை உருவாக்கியவர். இவர் தயாரிப்பில் வெளிவந்த "ஜென்டில்மேன்' உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடம் தனி கவனத்தைப் பெற்றன.  பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர், தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். தற்போது "ஜென்டில்மேன் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியுள்ளார். 

இப்படத்தின் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போது ரசிகர்களுக்கு இதனை ஒரு போட்டியாக அறிவித்துள்ளார். படத்தில் பங்கு பெறும் ஒவ்வொருவரையும் யாரென சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்கக் காசுகள் பரிசு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். முதல் கட்டமாக இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இசையமைப்பாளராக  கீரவாணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது மட்டுமே இசையமைத்து வருபவர் கீரவாணி. இப்படத்துக்கு அவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

-------------------------------

இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் கரு. பழனியப்பன். "பார்த்திபன் கனவு' படத்தின்   மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து "சிவப்பதிகாரம்', "பிரிவோம் சந்திப்போம்', "மந்திரப்புன்னகை', "சதுரங்கம்', "ஜன்னலோரம்' படங்களை இயக்கினார். "மந்திர புன்னகை', "நட்பே துணை' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள "கள்ளன்' படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. போதிய சினிமா வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரை பக்கம் சென்ற அவர்  9 ஆண்டுகளுக்குப் பிறகு படம் இயக்குகிறார். "ஆண்டவர்' என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

-------------------------------

சமீபத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியான படம் "புஷ்பா'. அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.  படத்தின் மேக்கிங் ஸ்டைலுக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்துள்ளன.

தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் இப்படத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். படம் வசூலைக் குவித்து பல சாதனைகளைப் படைத்து வரும் நிலையில் கமல்ஹாசன் படத்தைப் பார்த்து பாராட்டி உள்ளார். இது தொடர்பாக படத்தின் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது சுட்டுரையில் தெரிவித்திருப்பதாவது... ""  நேரம் ஒதுக்கி எங்களின் "புஷ்பா' படத்தைப் பார்த்த அன்புள்ள உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர். எங்கள் அனைவரது பணி குறித்தும் நீங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி'' என்று பதிவிட்டுள்ளார். அல்லு அர்ஜுனும் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

-------------------------------

டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதிகளின் இரு மகள்களும் நடிகை ஆகிவிட்டார்கள். மூத்த மகள் ஷிவானி தெலுங்கு படத்தில் அறிமுகமாகி "அன்பறிவு' படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். இளைய மகள் ஷிவாத்மிகா "ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். 

இந்த நிலையில் அடுத்து தந்தை டாக்டர் ராஜசேகருடன்  ஷிவாத்மிகா இணைந்து நடிக்கிறார். தற்போது தயாரிப்பில உள்ள "சேகர்' என்ற தெலுங்கு படத்தை ராஜசேகர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷிவானி டாக்டர் ராஜசேகரின் மகளாக நடிக்கிறார். ஆனால் ஹீரோயின் இல்லை. "தந்தையும் மகளும், திரையிலும் அப்படியே தங்களை பிரதிபலித்திருக்கிறார்கள்' என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஜீவிதா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT