மறக்க முடியுமா? - டாக்டர் வா. மைத்ரேயன்
தஞ்சை மாவட்ட பாபநாசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கே.ஆர்.வாசுதேவன்மாயவரத்தில் கோபால ஐயங்கார் - பட்டம்மாள் தம்பதியினருக்கு 20.03.1922 இல் மூத்த மகனாகப் பிறந்தார்.
தினமணி கதிர்மறக்க முடியுமா? - டாக்டர் வா. மைத்ரேயன்
தஞ்சை மாவட்ட பாபநாசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கே.ஆர்.வாசுதேவன்மாயவரத்தில் கோபால ஐயங்கார் - பட்டம்மாள் தம்பதியினருக்கு 20.03.1922 இல் மூத்த மகனாகப் பிறந்தார்.
தஞ்சை மாவட்ட பாபநாசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கே.ஆர்.வாசுதேவன் மாயவரத்தில் கோபால ஐயங்கார் - பட்டம்மாள் தம்பதியினருக்கு 20.03.1922 இல் மூத்த மகனாகப் பிறந்தார். 20.03.2022- இல் அவரது நூற்றாண்டு நிறைவு.
நூற்றாண்டு நினைவாக அவருடைய மூத்த மகன் டாக்டர் வா.மைத்ரேயன் (நாடாளுமன்ற முன்னாள்உறுப்பினர்) எழுதும் கட்டுரை இது.
அன்புள்ள அப்பாவுக்கு!
பாபு ( மைத்ரேயேன்) எழுதியது. இன்று உங்களுக்குப் பிறந்தநாள். இன்று நூறாண்டு நிறைவு பெறுகிறது. நம் குடும்பத்தினர் சார்பில் உங்களுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா.
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து 35 ஆண்டுகள் கடந்த போதிலும் உங்கள் பிம்பமும் நினைவுகளும் எங்கள் நெஞ்சில் இன்றும் பசுமையாக நிழலாடுகிறதேஅப்பா. குள்ளமான உருவம், சிரித்த முகம், ஆழமான கண்கள்,கனிவான பார்வை, ஆச்சரியப்படவைக்கும் அறிவு, அன்புநெஞ்சம், தூய வெண்கதராடை, நெற்றியில் ஸ்ரீ சூர்ணம், சக்திக்கு மீறிய பரோபகார குணம். எப்படி என்னால் உங்களை மறக்க முடியும்?
வெள்ளி நாக்கு பேச்சாளர் எனப்படும் (சில்வர் டங்க்டு ஆரேட்டர் )துணை வேந்தர் மகாகனம் சீநிவாச சாஸ்திரியாரின் அன்பிற்குரிய மாணவராக அண்ணாமலை பல்கலைக்கழக எம்.ஏ. பட்டம் பெற்ற நீங்கள் மத்திய அரசுப் பணியில் கலால் துறையில் சேர்ந்தீர்கள். அதிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் ஓய்வு பெறும்போது ஒரு மூத்த அரசு அதிகாரியாக ஓய்வு பெற்றிருப்பீர்கள். ஆனால் சுதந்திரப் போராட்டம் தந்த தாக்கத்தினால் கோபாலகிருஷ்ண கோகலே தொடங்கிய (சர்வன்ட்ஸ் ஆஃப் இந்தியா) இந்திய ஊழியர் சங்கத்தில் ஆயுட்கால முழுநேர ஊழியராக 15 ஆண்டுகள் பணியாற்றிய உங்கள் பொது நல சேவையையும் மக்கள் நலம் சார்ந்த சிந்தனையையும் மறக்க முடியுமா?
நாகபுரியில் 1972- இல் பள்ளி இறுதித் தேர்வில் நான் மாநிலத்திலேயேமுன்னணியில் வந்தபோது ஐ.ஐ.டி பிட்ஸ் பிலானி போன்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நேரடியாக சேர வாய்ப்பு கிடைத்தது. அதே நேரம் பல்வேறு வங்கிகளிலிருந்தும் பணியில் சேர வாய்ப்பு வந்தது. அன்று இருந்த குடும்ப பொருளாதாரச் சூழ்நிலையில் வங்கிப்பணி உதவியாகஇருந்திருக்கும். ஆனால் ""குடும்ப பொருளாதாரச் சூழ்நிலைதற்காலிகமானதுதான். நான் சமாளித்துக் கொள்வேன். படிப்பில்ஆர்வமும் திறமையும் கொண்ட நீ மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும்'' என்று கூறினீர்களே, எத்தனை தந்தையர்களுக்கு இத்தகைய கண்ணோட்டம் வரும்? இதை என்னால் மறக்க முடியுமா?
இந்திய ஊழியர் சங்கத்தில் இருந்து விலகிய பிறகு, பத்திரிகை துறையில் கால் பதித்த நீங்கள் நாகபுரியில் "நாக்பூர் டைம்ஸ்',
"ஹிதவாதா' ஆகிய ஆங்கில நாளிதழ்களிலும் பின்னர் சண்டீகரில் "தி டிரிப்யூன்' என்ற நாளிதழில் பணியாற்றி ஆங்கில நாளிதழ்களில் உங்கள் தடம் பதித்தீர்கள்.
அவசர நிலை காலகட்டத்தில் சென்னை வந்து தினமணியில் ஏ.என்.சிவராமனிடம் உதவி ஆசிரியராகப் பணியாற்றினீர்கள்.
தினமணி கதிரில் இருந்து பிரபல எழுத்தாளர் சாவி விலகிய பிறகு 1977-இல் அதன் ஆசிரியராக இருக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது.
தினமணி கதிரின் ஆசிரியராக நீங்கள் பணி புரிந்த காலம் தானே இதழியல் துறையில் உங்கள் பொற்காலம்? ஆசிரியருக்கான பக்கத்தில் நீங்கள் எழுதி வந்த தரம் வாய்ந்த இலக்கிய, பக்திக் கட்டுரைகளுக்கென்றே ஒரு மிகப்பெரிய வாசகர் கூட்டம் இருந்ததை நான் நேரில் கண்டு மகிழ்ந்தவனாயிற்றே!
பிறகு சிவகாசியிலிருந்து வெளிவந்த "ரத்னபாலா' என்ற சிறுவர் வண்ண மாத இதழின் ஆசிரியராக இறுதி வரை இருந்தீர்கள்.
ஆங்கில பத்திரிகைகள், தமிழ் நாளிதழ், தினமணி கதிர் என்ற தமிழ் வார இதழ், "ரத்ன பாலா' என்ற சிறுவர் மாத இதழ் என்று நீங்கள் தொட்ட துறைகளில் எல்லாம் உங்களுக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்ததைப் பார்த்துப் பார்த்து வியந்ததை மறக்க முடியுமா?
நாம் மயிலாப்பூர் பலாத்தோப்பிலே இருந்த போது "கவிதை இன்பம்' என்ற அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பில் பிரபல கவிஞர்களை அழைத்து கவியரங்கம் நடத்தியது எத்தனை இன்பமயமானது தெரியுமா அப்பா?
நம் குடும்பத்தினர் அனைவரும் பணி நிமித்தமாக எங்கு சென்றாலும் தினமும் இரவு உணவுக்குப் பிறகு கட்டாயமாக ஒன்று கூடுவோமே, ஞாபகம் இருக்கா அப்பா? இந்த வீட்டு பார்லிமெண்டில் அன்று நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்தீர்கள், யார் யாரை சந்தித்தீர்கள் என்றெல்லாம் எடுத்துக் கூறி, எங்களது அனுபவத்தையும் கேட்பீர்களே, அந்த விவாதங்கள் எவ்வளவு சுவையானது தெரியுமா? பிற்காலத்தில் எங்களுக்கு பல்வேறு அனுபவங்களுக்கு உரமாக இருந்தது அந்த அலசல்கள்தானே அப்பா!
அலுவலக நேரத்திற்குப் பிறகு, அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், எழுத்தாள நண்பர்கள், ஆன்மிக அன்பர்கள், ஜோதிடர்கள் என்று பலதரப்பட்டவர்களை நீங்கள் சந்திக்கச் செல்லும்போது என்னையும் உங்களோடு அழைத்துச் செல்வீர்கள். உங்களோடு வந்து நான் கற்ற அனுபவப் பாடங்கள் தானே இன்று என்னை பொது வாழ்க்கைக்கு தகுதியுள்ளவனாக ஆக்கியுள்ளது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நான் பணியாற்றியபோது, 1987-ஆம் ஆண்டு மேல்பயிற்சிக்காக அமெரிக்கா சென்றேன். 1987, ஜூலை 6- ஆம் தேதி அன்று சென்னை விமான நிலையத்தில் என்னை வழியனுப்பி வைப்பதற்காக வந்த நீங்கள் என்னை கட்டித் தழுவிக் கொண்டு, "" பாபு, (வீட்டில் என்னை அப்படித்தானே நீங்கள் வாய் நிறைய அழைப்பீர்கள்) அமெரிக்கா செல்லும் நீ எக்காரணம் கொண்டும் வீட்டில் எது நடந்தாலும் சரி, உனது மேல் பயிற்சியை நிறைவு செய்யாமல் நீ பாரதம் திரும்பக் கூடாது'' என்று கூறினீர்களே , ஞாபகம் இருக்கா அப்பா?
நான் கூட நீங்கள் ஏன் அவ்வாறு கட்டளையிட்டீர்கள் என்று சஞ்சலம் அடைந்தேன். நான் அமெரிக்கா சென்ற, ஒரு மாதத்திலேயே ஆகஸ்ட் 19-ஆம் தேதி சென்னையிலே நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டதா? அதன் காரணமாக நீங்கள் இறந்தாலும் எனது அயல்நாட்டு மேல் படிப்பு தடைப்பட்டுவிடக் கூடாதே என்ற அக்கறையின் காரணமாகத்தான் அவ்வாறு சொன்னீர்களா? அது தானே அப்பா நீங்கள் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள்!
இன்று உங்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள். அதையொட்டி நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடும் உங்கள் நினைவாக வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர் அப்பா.
பல இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் உங்களுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து 35 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் எவ்வளவு பாசம் நிறைந்த நண்பர்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போது நான் உங்கள் மகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.