தினமணி கதிர்

மோர் கேட்ட அம்மன்

காரை ஆடலரசன்


உங்களுக்கு மோர்கேட்ட அம்மனைத் தெரியாது. அது தெரிந்தால்தான் அதனால் எனக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் உங்களுக்குத் தெரியும், புரியும்.

மோர்கேட்ட அம்மன் என் அப்பா ரெங்கசாமி எடுத்து வைத்து கும்பிட்ட மாரியம்மன் தெய்வம்.

ஊருக்குத் தென்மேற்கில், ஆற்றுக்கு அக்கரையில், அரை கிலோமீட்டர் தள்ளி வயல்களின்நடுவில் ஒரு தீவாய் இருக்கும் திடலில் அமர்ந்திருக்கும் தெய்வம்.

மூன்று ஆண்பிள்ளைகள், ஏழு பெண்பிள்ளைகளுக்குத் தகப்பனாரான என் தந்தை கிராமத்தில் பெரிய மிராசு. ஐந்து வேலி நிலங்களுக்குச் சொந்தக்காரர்.

நிலங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று ஊரைச் சுற்றி கட்டளை கட்டளைகளாக உள்ளது. அதாவது அடைத்தநிலங்களாக கொத்து கொத்தாக உள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும், நாற்றங்கால், நாற்று பறி, நடவு வேலைகளென்றால் பல நாட்கள் நடக்கும்.

தலைச்சன் பிள்ளைக்கு அடுத்தபிள்ளையான நான் பள்ளி விடுமுறை நாட்களில் வேலை நடைபெறும் இடங்களுக்குப் பெற்றவருக்கு பிளாஸ்கில் காபி எடுத்துச் செல்வேன். அதோடு மட்டுமில்லாமல், எனக்கு விவசாயம் பிடிக்கும். நாற்று பறிப்பது, நடவு வயல்களில் நாற்று நடும் பெண்களுக்கு நாற்று முடிகள் வீசுவது, கொஞ்சம் ஏர் உழுவது என்றுவேலை செய்வது பிடிக்கும். இந்த பிடிப்பில்தான் வேலை எங்கு நடந்தாலும், அப்பா இருக்கும் இடம் செல்வேன். அப்படித்தான் இந்த இடத்திற்கும் சென்றேன்.

 எட்டு வயதாய் இருக்கும் என்னை,""ராமு... மோரங்கட்டளையில் வேலை நடக்குது. அப்பாவுக்கு காபி எடுத்துப் போ'' சொல்லி காலை எட்டு மணிக்கு அம்மா கையில் பிளாஸ்க் கொடுத்தாள்.

"" அது எங்கே இருக்கு? '' என்றேன்.

இடத்தைச் சொன்னாள்.

நான் அங்கு சென்ற போது இந்த தீவுத் திடல் ஓரம் உள்ள நாற்றங்காலில் பத்து ஆட்கள் நாற்று பறித்துக் கொண்டிருந்தார்கள். அதை ஒட்டிய வயலில் மாடுகள் பூட்டி ஐந்து நாட்டுஏர்கள் உழுது கொண்டிருந்தன. அப்பா அவர்களைக் கவனித்துக் கொண்டுவயல் ஓரம் உள்ள ஒதியன் மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பின்னால் வேப்பமரத்தடியில் குப்புறக் கிடந்தது ஒரு கற்சிலை. அதற்குப் பின்னால்சுவர்கள் எழுப்பப்பட்டு உத்திரங்கள் சரிக்கப்பட்ட நிலையில் நிற்கும் சின்னா பின்னமாகக் கிடக்கும்ஒரு பழங்கால கட்டடம்.

அந்த இடத்திற்கு முதன்முதலாகச் சென்ற நான் அப்பா கையில் பிளாஸ்க்கைகொடுத்துவிட்டு,

"" அதென்னப்பா கட்டடம்? '' கேட்டேன்.

"" மாரியம்மன் கோயில்டா...பிளாஸ்கின்மூடியில் காபி ஊற்றிக் கொண்டே சொன்னார்.

"" கோயிலா? அது ஏன் இப்படி கிடக்கு? '' என்றேன்.

""அதுவா? என் தாத்தா காலத்துல கீத்துக் கொட்டகையாய் இருந்துது.கோயிலை மாத்தி ஓட்டு கட்டடமாய்க் கட்டலாம்ன்னு ஊர் மக்கள் ஏற்பாடு பண்ணி இருக்காங்க. அதனால கூரையில் இருக்கும் சாமியை அப்புறப்படுத்தி இந்த வேப்ப மரத்தடியில் வைச்சுட்டுசுவர் எழுப்பிமேல ஓடு போடுறதுக்காக உத்திரம் போட்டு தச்சு வேலை நடந்துஇருக்கு. முதல் நாள் விட்ட வேலையை அடுத்த நாள் வந்து தொடங்கும்போதுஉத்திரத்தில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து ஆடி, உஸ்ஸ்... உஸ்ஸூன்னு சீறி இருக்கு.அவ்வளவுதான்.பயந்து போன தச்சு ஆட்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம்ன்னு ஓடி...மறு நாள்மறுநாளும்உயிருக்குப் பயந்து யாரும் வேலைக்கு வரலை. எப்படிகெஞ்சியும் திரும்பலை. போட்டது போட்டபடிகட்டடம் அப்படியே நின்னு போச்சு. பயத்துல மக்களும் திரும்பிப் பார்க்கலை. கால வெள்ளத்தில் கட்டடம் சிதைஞ்சு போச்சு. கும்பிடாத சிலையும் இப்போ குப்புறக் கிடக்கு'' காபியைக் குடித்துக் கொண்டே சொன்னார்.

""ஊருக்கு ஒதுக்குப்புறம் இந்த இடத்துல எப்படிப்பா சாமி?'' என்றேன்.

""அதுவா?மோர் கூடையை தலையில் சுமந்து இந்த இடம் தாண்டி ஒரு பொம்பளை அசலூருக்குப் போயிருக்கு. அப்போ"அம்மா. தாகமா இருக்கு. மோர் கொடுத்துட்டுப் போ' ன்னுபின்னால் குரல் கேட்டிருக்கு. திரும்பிப் பார்த்தால் யாருமில்லே. சிலைதான் மரத்தடியில் இருந்திருக்கு. அவ்வளவுதான் பயந்து போன அவள் தலைச் சுமையை இறக்கி சிலைக்கு முன் வைத்து விட்டு ஊருக்குள் போய் சேதிசொல்லி இருக்கார். மக்கள்கூடி வந்து பார்க்கும்போது மோர் இருந்த பானை காலி.

பரவசத்தில் மக்கள்...

""அம்மா... தாயே... பரமேஸ்வரி... மோர் கேட்ட அம்மனேன்னு கையெடுத்துக் கும்பிடஅதுக்கு அப்புறம்தான் கொண்டாட்டம், கட்டடம் அந்த கூத்து'' சொல்லி நிறுத்தினார்.

அதோடு இல்லாமல் எழுந்து போய்தலையில் பாம்படத்தோடு குப்புறக் கிடந்த அந்த சிலையை நிமிர்த்தினார்.

குப்புற விழுந்ததில் பாம்படம் மட்டும் உடைந்து போக சிலை வேறு வின்னமுமில்லாமல்முழுதாய் இருந்தது.

அப்பாவிற்கு சிலையை அப்படிப் பார்க்க விருப்பமில்லை.

உடைந்த பாம்படத்தை எடுத்து ஒட்ட வைத்து நிறுத்தினார். அது எந்தவித பிடிமானமுமின்றி அப்படியே நின்றது.

"" அப்பாசிலை நிறைவாய் இருக்கு. இப்பதான் பார்க்க அழகாய் திருப்தியாய் இருக்கு''மகிழ்ச்சியாய்ச் சொன்னார்.

எனக்கும் பாம்படத்துடன் மாரியம்மன் சிலை அழகாகவே இருந்தது.

மறுநாள் வேலை நடந்த அந்த இடத்திற்குப்போய் வந்தவர் முகத்தில் சோகம்.

"" என்னப்பா?'' கேட்டேன்.

"" நிறுத்தி வச்ச பாம்படம் கவிழ்ந்து விழுந்து சிலை மூக்கு உடைஞ்சிடுச்சு. வின்னப்பட்டுப் பட்டுப் போச்சு'' விசனப்பட்டார்.

அடுத்த நாளும் அந்த உறுத்தலோடு இருந்தவர் முன் ""அம்மி, குடக்கல் கொத்தலையோ?''கூலிஒருவன் கூவிச்சென்றான்.

"" இங்கே வா'' திண்ணையில் அமர்ந்தபடி அப்பாஅவனை அழைத்தார்.
"" என்ன சாமி? '' அவன் அருகில் வந்தான்.
"" சாமி சிலை ஒன்னு மூக்கு உடைஞ்சி போச்சி. சரி பண்ண முடியுமா ?'' கேட்டார்.
"" பார்த்து சொல்றேன் சாமி'' என்றான் அவன்.
"" சரி... வா''
உடன் ஆளைஅழைத்துச் சென்றார். இரண்டு மணி நேரத்தில் முகத்தில் புன்னகையுடன் வீட்டிற்கு வந்தார்.
"" என்னப்பா?'' என்றேன்.
"" மூக்கு மட்டுமில்லே. அம்மன் தலையே சரியாயிடுச்சு. பாம்படம் உடைஞ்ச இடம் தெரியாமல் சரி
பண்ணிட்டான்'' சந்தோசமாக சொன்னார்.
அன்றிலிருந்து வெட்ட வெளியில் இருக்கும் அந்த சிலைக்கு பட்டு சாத்தி, செங்கல் கூட்டி மாடமாக ஆக்கி அதில் விளக்கேற்றி வணங்க ஆரம்பித்து விட்டார்.
அடுத்து சில நாட்களில் பக்தி முற்றி நெற்றியில் பட்டை , கழுத்தில் ருத்ராட்சகொட்டை , இடுப்பில் காவி வேட்டி, துண்டு கட்டி, முழு சாமியாராகி அந்த இடமே கதியாய்க் கிடக்க ஆரம்பித்து விட்டார்.
சொந்த செலவில் கூரை போட்டு மேடை கட்டி சாமி கோயிலாயிற்று.
மக்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த தென்னங்கீற்று ஓலைக் கூரை குடிசைக் கோயிலில் ஐந்தாறு திருமணங்கள் வெகு விமர்சையாக நடந்தன. அப்பா தன் தலைப்பிள்ளையின் திருமணத்தையே அங்கேதான் நடத்தினார். எந்தக் குறையுமில்லாமல் தம்பதிகள் மறு வருடமே ஒரு பிள்ளைக்குச் சொந்தக்காரர்கள் ஆனார்கள்.
சுமார் ஐந்தாண்டு காலம்மொட்டையடித்து, கழுத்தில் உத்ராட்சை கொட்டை அணிந்து, பட்டை போட்டு, காவி அணிந்து சாமியார் என்று பெயர் எடுத்த அப்பா தன் ஆறு மாதசெல்ல பெண் குழந்தை,வீட்டிற்கு எதிரில் உள்ள குளத்தில் தவறி விழுந்து இறந்த பிறகு, பட்டை, கொட்டை எல்லாம் துறந்து மீண்டும் சராசரி மனுசனானார்.
ஆனாலும் தினம் காலை, மாலை கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்ற தவறுவதில்லை. முடியாத நாட்களில் என்னை அனுப்புவார். நான் ஆற்றைக் கடந்து வயல்வெளிகளுக்குள் போய் பாம்பு, பூச்சி, பொட்டுகளுக்குப்பயந்துபோய் திரும்புவதற்குள் உயிர் போய்உயிர் வரும். அப்படியும் அந்தக் கோயிலில் ஒருநாள்நான் பாம்பைப் பார்த்து விட்டேன். ஆள்வரும் காலடி சத்தம் கேட்டதும் சிலைக்குப் பின்னால் சென்று சுவர் ஏறி மண்டிக்கிடக்கும் புல் காட்டுக்குள் மறைந்தது.
வெட்டவெளி, சுற்றிலும் வயல்வெளி . எலி, பூச்சி, பொட்டுகள் குடியிருப்பு. பாம்புகள் இருக்காமல் என்ன செய்யும்?
அப்பா எத்தனை வருடங்களுக்குத்தான் தன் சொந்த செலவில் கூரை கொட்டகையை எடுத்து எடுத்துக் கட்டுவார்? ஒரு சில வருடங்களுக்குப் பின் வணங்கவும் ஆளில்லாமல் இவர் ஓர் ஆளாகச் சென்று வருவதால் ஒரு கட்டத்தில் விட்டு விட்டார். கீற்றுகள் விட முடியாமல் மூங்கில் மரங்கள் தொங்கிஅந்த குட்டிச் சுவரிலும் இவர் விடாமல் விளக்கேற்றி வந்தார்.
அதோடு மட்டும் விடாமல், வீட்டில் அம்மாவோடு சண்டை, மன வருத்தமென்றால் அந்த ஓட்டைக் குடிசையில் போய் சிலைக்கு எதிரேதுணியை விரித்துப் போட்டு படுத்து விடுவார். இரவானாலும், பகலானாலும்
திரும்ப மாட்டார். காலை மதியம் வேலைக்கார ஆட்கள் வந்து வீட்டில் சாப்பாடு எடுத்துப்போவார்கள். இரவானால் நான்தான் செல்வேன்.
இருட்டில் ஒரு கையில் அரிக்கேன் விளக்கு. மறு கையில் சோற்று வாளி. மழையானாலும், கோடையானாலும், பூச்சி, பொட்டுகளுக்குப் பயந்து சென்று திரும்புவது என்பது பெரும்பாடு.
அந்த மாதிரி சமயங்களில்இந்த மனுசன் ஏன்தான் இப்படி செய்கிறாரோ? என்று நினைக்க ஆத்திரமாக இருக்கும். என்னதான் வலி வருத்தமாக இருந்தாலும் ஓலைக் குடிசையில் பாம்பிற்குப் பயப்படாமல் கிடக்கிறாரே... தீண்டிவிட்டால்? பயம் வரும்.
"" என்னப்பா பாம்பு உன் கண்ணில் படவில்லையா?'' என்று கேட்டால்
"" பாம்பு கண்ணில் படுது. சமயத்தில் என் மேலேறி போவுது'' சொல்வார்.
கேட்கும் நமக்கே குலை நடுங்கும். அவருக்கு? பயம் இருக்காது.
காலவெள்ளம் அப்பா இருக்கும் நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று எல்லா பெண் பிள்ளை
களுக்கும் திருமணம் முடித்து பையன்களுக்கும் முடித்து விட்டார்.
சாகும் காலத்தில் இருக்கும் நிலத்தில் ஆண் பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஐந்து மாவும், பெண் பிள்ளைகளுக்கு அம்மா பெயரில் உள்ள வீடும்,கொடுத்துதனக்கும்
மூன்று மா ஒரு ஏக்கர் நிலம்வைத்து தனக்குப் பின் கோயிலுக்கு என்று சொல்லிவேலையை முடித்துச் சென்று விட்டார்.
இப்போது அந்த ஒரு ஏக்கர் நிலத்தின் அறுவடை நெல்லுக்குத்தான் அண்ணனும் தம்பியும் தங்களுக்கு வேண்டும் என்று சொல்லி என்னிடம் சண்டை போடுகிறார்கள்.
"" ஊர் கோயில்மண்டபம் வைத்து கட்டி கொண்டாடும்போது கஷ்டப்படும் நமக்கு இல்லாமல் அதற்கு எதற்கு நிலம், வருவாய்? '' என்கிறார்கள்.
அவர்கள் சொல்வது நியாயமாக இருந்தாலும், சரி இல்லை.
""அப்பா பெயரில் உள்ளது பிள்ளைகளுக்கு. உனக்கு வேண்டாமென்றால் போ, ஒதுங்கு. நீ ஏன் கோயிலுக்குச் சேர்க்கிறாய்?'' -வாதம் செய்கிறார்கள்.
"" அப்பா ஆன்மா, ஆத்மா சாந்தி அடையுமா, அடையாதா? எல்லாம் அப்பாற்பட்ட விசயம். பிள்ளைகள் நன்றாக வாழவேண்டும், இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றவர்கள் ஆசை. சாமி சொந்தக்காலில் நிற்கிறது. நீ தள்ளு. விலகு'' சொல்கிறார்கள்.
குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்த விவசாயி அறுவடை நெல்லை வைத்துக் கொண்டு
""அண்ணே யாருக்குக் கொடுக்க?''விழிக்கிறார், முறையிடுகிறார்.
என்ன செய்ய? சிக்கலை எப்படி அவிழ்க்க?யோசனையுடன் முன்னும் பின்னும் அலைந்தேன்.
அந்தக் கோயிலும் ஓட்டைக் கூரையாய் நிற்கையில் அதிசயமாய் ஒரு முறைஅப்பா வாங்கி வைத்த பித்தளை தாம்பாளம் , மணி, குடம் , ஊதுபத்தி நிறுத்திஎன்று எல்லாம் திருடு போனது. நல்ல வேலையாய் அம்மன் கழுத்தில்அப்பா அணிவித்த அரை பவுன் தாலி மட்டும் பட்டு மறைப்பில் இருந்து தப்பியது. அதைஉடனே அப்பா எடுத்து வந்து பத்திரப்படுத்தினார்.அப்புறம்
""நடக்கிறது நடக்கட்டும்''என்று சொல்லி அதை விற்று மணி, தாம்பாளம், குங்குமச் சிமிழ் என்று திருடு போனவை அனைத்தையும் வாங்கி
வணங்கினார்.
இது நினைவிற்கு வந்த அடுத்த விநாடி... கோயில் முன் நின்று குழம்பி இருந்த எனக்கு தெளிவு ஏற்பட்டது.
உள்ளே அமர்ந்திருக்கும் மோர்கேட்டமாரியம்மன் முகத்திலும் புன்னகைப் படர்ந்தது.
நிலத்தில் பாத்யதைக் கேட்ட இருவரையும் அருகேஅழைத்தேன்.
""என்ன?''முறைப்புடன் கேட்டு எதிரில்
நின்றார்கள்.
""அது இந்தஅம்மன் நிலம்... சாமி நெல்லு...யாருக்கும் கிடையாது''
ஆணித்தரமாகச் சொன்னேன்.
"" எங்களுக்கு இடைவெட்டுப் பிள்ளை. அதை எப்படி நீ சொல்லலாம்?'' - என்றான் அண்ணன்.
"" சொல்ல உரிமை இருக்கு. அதுக்கான காரணமும் இருக்கு''
"" சொல்லு ?'' - தம்பி.
 ""அப்பா தான் கட்டின பொண்டாட்டி, பெத்த பிள்ளைகள் யாரையும் நிர்க்கதியாக விட்டுப் போகலை. இருக்கிறதை எல்லாருக்கும் கொடுத்து தனக்கும் ஒரு ஏக்கர் ஒதுக்கிதனக்குப் பிறகு கோயிலுக்குன்னு சொல்லி போனார்''
"" அது பழைய கதை எங்களுக்குத் தெரியும். விட்டுத் தள்ளு. வேற ஏதாவது புதுசா சொல்லு?'' - அண்ணன்.
""சொல்றேன் தனக்குப் பிறகு கோயிலுக்கு அம்மனுக்குன்னு அப்பா ஒன்னும் சும்மா விட்டுப் போகலை''
இருவரும் துணுக்குற்று குழம்பிபார்த்தார்கள்.
""கதை இல்லே. நிஜம்நடந்த உண்மைவீட்டில வலி வருத்தம் , அம்மாவோடு சண்டைன்னா ராத்திரி, பகல்,வெயில், மழை, பனின்னு பார்க்காமல் கோயில் குட்டிச் சுவராய் இருந்தாலும் அப்பா இந்த அம்மன் காலடியில்தான் படுத்துக் கிடந்தார். இங்கேயே பழியாய்க் கிடந்து,கோபம், தாபம் தணிந்தபின்வீட்டுக்கு வந்தார். இந்த மோர்கேட்டஅம்மனோடு அவர் அப்படிபழியாய்க் கிடந்து உயிராய் இருந்ததினால்தான் பாம்பு, விஷ பூச்சி, பொட்டுகள் கடித்து செத்துப் போகாமல் உயிராய் வந்தார். அப்படிப்பட்ட அம்மன் தனக்குப் பிறகு நிர்க்கதியாய் ஆகிடக் கூடாதுன்னுதான் தனக்குப் பிறகு அதுக்குதான் நிலம்ன்னு சொல்லிப் போனார். இப்போ சொல்லுங்க? அப்பா செய்தது சரியா? தப்பா? அந்த அறுவடை நெல்லை நீங்க கேட்கிறது முறையா சரியா?'' நிறுத்தினேன்.
அவர்கள் முகங்களில் யோசனைகள் படர்ந்தன.
""அண்ணா... தம்பி...பெரிய பெரிய ராசாக்கள், மன்னர்கள் எல்லாம் கோயிலைக் கட்டி அதுக்கு நிலமும் காணிக்கையாவும், கொடையாவும் எழுதி வைச்சது எல்லாம் தனக்குப் பிறகு இந்த தெய்வம் யார் தயவும் இல்லாமல் இருக்கணும் என்கிறதுக்காத்தான்'' முடித்தேன்.
அவர்கள் முகங்கள் தெளிந்தன.
"" சாமி கும்பிடுற எங்களுக்குப் புத்தி இல்லே. கும்பிடாத உனக்குப் புத்தி . அது கோயில் நிலம்தான், மோர்கேட்ட
அம்மன் நெல்தான் எங்களுக்கு வேணாம்''
அண்ணன் தெளிவாய்ச் சொல்ல, தம்பியும் அதை ஆமோதிப்பது போல்மெளனமாய் இருந்து நகர்ந்தார்கள்.
திரும்பிப் பார்த்தேன்.
மோர்கேட்ட அம்மன் முகத்தில் இப்போது அபரிமித புன்னகை, மகிழ்ச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT