முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோயை குணப்படுத்துவது எப்படி?

எனக்கு வயது 51. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிக அளவு இருப்பதால், கால்பாத எரிச்சல், மதமதப்பு, உணர்வற்ற தன்மை ஆகியவற்றால் பெரிதும் அவதியுறுகிறேன்.

Updated On : 9 ஜூலை, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:31 PM

எனக்கு வயது 51. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிக அளவு இருப்பதால், கால்பாத எரிச்சல், மதமதப்பு, உணர்வற்ற தன்மை ஆகியவற்றால் பெரிதும் அவதியுறுகிறேன். உடல்சூடும் அதிகமிருக்கிறது.  கால் நரம்புகளை வலுப்படுத்த மாத்திரைகள் சாப்பிட்டும் பலனில்லை. இதை எப்படி குணப்படுத்துவது?

ராமநாதன்,
திருநெல்வேலி.

'பித்தம்வினாதாஹ' என்ற ஆயுர்வேத கூற்றுப்படி, பித்ததோஷத்தின் சீற்றத்தால் உங்களுக்கு சர்க்கரையின் அளவும், பாத எரிச்சலும் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது. உடற்சூடும் அதிகமிருப்பதால் இது மேலும் தெளிவாகிறது.

Advertisement

மதமதப்பும், உணர்வற்ற தன்மையும் நரம்புகளில் வாயுவின் குணப்பிரதிபளிப்பைக் காட்டுகிறது. பித்தமில்லாமல் எரிச்சலில்லை என்ற ஆயுர்வேதக் கருத்தை மனதிற்கொண்டு, அதற்குத் தகுந்தவாறு சிகிச்சை செய்வதே நல்லது.

கசப்பு துவர்ப்பு இனிப்புச் சுவை கொண்ட உணவு மற்றும் மருந்துகளால் மட்டுமே பித்த சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் கசப்பு துவர்ப்பினால் வாயுவின் சீற்றம் கூடுவதும், இனிப்புச் சுவையால் சர்க்கரையின் அளவு கூடுவதும் நிச்சயம் என்பதால், தர்ம சங்கடமான ஒரு நிலையில் இருக்கிறோம்.

கல்லீரல், மண்ணீரல், பித்தப் பை ஆகிய பகுதிகளிலுள்ள பித்த நீரை பேதி மூலம் வெளியேற்றி அதன் பிறகு  அதை கட்டுக்குள் வைத்திருக்கும் மூலிகை நெய் மருந்துகளால் உங்களுக்கு இந்தப் பிரச்னையிலிருந்து தீர்வைப் பெறலாம். 

திரிபலையைக் கஷாயமிட்டு அதில் சிவதைவேரை சூரணமாகக் கலந்துகுடிப்பதால் நீர்ப்பேதியாகி, பித்தம் வெளியேறிவிடும். ஆயுர்வேத மருந்துக்கடைகளில் திரிபலைசூரணம் கிடைக்கும் சுமார் பதினைந்து கிராம் சூரணத்தை ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டுக் காய்ச்சி, அரை லிட்டராக வற்றியதும் வடிகட்டி, பத்து கிராம் சிவதை வேர் சூரணம் கலந்து காலையில் உண்ட உணவு செரித்து, மதியம் பசி எடுத்துள்ள நிலையில் வெதுவெதுப்பாகக் கலந்து குடிக்க வேண்டும். 

பத்து நாட்களுக்கு ஒருமுறை இப்படியாக மூன்று நான்கு தடவை செய்தால் போதுமானது. பித்த நீரின் வெளியேற்றத்தால், பாத எரிச்சலும், உடற்சூடும் நன்றாகக் குறைந்துவிடும்.

அதன்பிறகு மூன்று வாரங்களுக்கு வாஸாகுடூச்யாதி எனும் கஷாயத்தை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, கல்லீரல், மண்ணீரல் பகுதிகள் சுத்தமடைந்து, சுத்தமான அளவிற் குறைந்த, ஆனால் தேவையான அளவில் பித்தநீர் உருவாவதை உறுதிப்படுத்தும்.

பாத எரிச்சலும் மட்டுப்படும். தான்வந்திரம்கிருதம் எனும் மூலிகை நெய் மருந்தை, காலை இரவு என இரு வேளை உணவிற்கு ஒருமணி நேரம் முன்பாக, நீராவியில் உருக்கிச் சாப்பிட்டு வர, கால் மதமதப்பு, உணர்வற்ற தன்மை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவை குறையத் தொடங்கும்.

உள்மருந்துகள் மட்டும் சாப்பிட்டு வந்தால் போதுமா என்றால் போதாது என்றுதான் கூற வேண்டும்.  

நிசோஉசீராதி தைலம், பிண்ட தைலம், ஹிமஸாகரனதைலம், அமிருதாதி தைலம் போன்றவற்றில் ஒன்றிரண்டை மருத்துவர் ஆலோசனைப்படி, சூடு செய்யாமல் அப்படியே  பாதங்களில் தேய்த்து அரை முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, தண்ணீரால் கழுவி விடலாம். பச்சைப்பயறு மாவை நீரில் கரைத்து எண்ணெய் பிசுக்கை அகற்றலாம்.

இரவில் தைலத்தை பாதத்தில் தடவக் கூடாது. காலை உணவிற்கு முன் செய்வதே நல்லது.

கசப்பு துவர்ப்புச் சுவையை மிதமாக உணவில் சேர்த்து, மூலிகைத் தைலத்தைப் பாதத்தில் தேய்த்து குளித்து வருவதால் பித்த வாயு  சீற்றங்களை அடக்கி, ஏற்பட்டுள்ள உபாதைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.