பேல் பூரி
வாழ்க்கையில் உயரும்வரை காதை மூடிக்கொள்ளுங்கள்! உயர்ந்த பிறகு வாயை முடிக்கொள்ளுங்கள்!
தினமணி கதிர்பேல் பூரி
வாழ்க்கையில் உயரும்வரை காதை மூடிக்கொள்ளுங்கள்! உயர்ந்த பிறகு வாயை முடிக்கொள்ளுங்கள்!
கண்டது
(திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள ஒரு பகுதியின் பெயர்)
'நெய்பர் குட்'
ஜே.கமலம்,
திருநெல்வேலி.
(ஈரோட்டில் டெம்போ ஒன்றின் பெயர்)
'தோழர்கள்''
-க.ரவீந்திரன்,
ஈரோடு.
(காஞ்சிபுரத்தில் ஓர் ஆட்டோவில் கண்ட வாசகம்)
'தோல்விகள் பலமானதுதான்.
நீ பலவீனமாக இருக்கும் வரை..!''
ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.
கேட்டது
(புவனகிரியில் உள்ள ஓர் திருமண மண்டபத்தில்..)
'பொண்ணு ஓவர் மேக்கப் போல..!''
'இயற்கையாவே அழகாதான் இருக்கும். ஆனா, மேக்கப் போட்டு ஆதார் கார்டுல இருக்கிற மாதிரி பண்ணிடுறாங்க?''
பி.பரத்,
சிதம்பரம்.
(அண்ணாமலை நகரில் இரு பெண்கள்)
'ஏன்டி தினமும் டி.வி. சீரியல் பார்க்குறே. என்னதான் கத்துகிட்டே?''
'ம்ம்.. மாமியாரை எப்படியெல்லாம் விரட்டலாமுன்னுதான்!''
பி.பாலாஜிகணேஷ்,
சிதம்பரம்.
(பாளையங்கோட்டை வ. உ. சி. மைதானம் அருகே இரு இளைஞர்கள்)
' வா மாப்ளே! பக்கத்தில் இருக்கிற ஏடிஎம் வரைக்கும் போயிட்டு வருவோம்.''
' அக்கவுண்ட்ல பணமே இல்லைன்னு சொன்ன?''
' பணம் எடுக்க இல்லை. அடிக்கிற வெயிலுக்கு அரைமணிநேரம் ஏ.சி.ல சும்மா ஜில்லுன்னு நின்னுட்டு வருவோம்.'
-க.சரவணகுமார்,
திருநெல்வேலி.
யோசிக்கிறாங்கப்பா!
வாழ்க்கையில் உயரும்வரை காதை மூடிக்கொள்ளுங்கள்!
உயர்ந்த பிறகு வாயை முடிக்கொள்ளுங்கள்!
அ.கருப்பையா,
பொன்னமராவதி.
மைக்ரோ கதை
மாலை ஆறு மணிக்கு கோயிலுக்குள் சென்று, தரிசனம் செய்துவிட்டு சிறிது நேரம் வளாகத்தில் அமர்ந்தேன். வெளியே வர இரவு எட்டு மணி ஆகிவிட்டது.
கோயிலுக்கு வெளியே கழற்றிப் போட்டு இருந்த என் செருப்பு காணாமல் போய் இருந்தது. அங்கே இங்கே சென்று கவனித்து பார்த்தேன். என் செருப்பை யாரோ அணிந்து போய்விட்டார்கள்.
வெறுங்காலில் நடந்து எனக்கு பழக்கம் இல்லை. வீட்டிலிருந்து நடந்துதான் வந்தேன். நடந்து தான் திரும்பி செல்ல வேண்டும். எப்படி போவது என்று விழித்துக் கொண்டு நின்றேன்.
'கோயில் வாசலில் செருப்பை தொலைத்து விட்டு வந்து நிற்கிறீர்களே!'' என என் மனைவி திட்டுவாள். அதை எண்ணி இப்போதே மனம் கலங்கியது.
அங்கு நின்ற ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு வந்தேன். ஆட்டோக்காரர் நூற்றைம்பது ரூபாய் வாங்கிக் கொண்டார்.
வாசலில் நின்ற மனைவி ஆட்டோவில் இருந்து நான் இறங்கி வருவதைக் கண்டாள். வீட்டின் உள்ளே சென்றதும் கேட்டாள்.
விவரம் சொன்னேன்.
'உங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருக்கிறதா? நூற்றைம்பது ரூபாய் செலவு செய்து ஆட்டோவில் வந்திருக்கிறீர்களே! கோயில் வாசல் பக்கம் இருக்கும் செருப்பு கடையில் நூறு ரூபாய்க்கு ஒரு புது செருப்பை வாங்கி அணிந்து வந்திருக்கலாமே! புது செருப்பு கிடைத்த மாதிரியும் இருக்கும். யோசனை இல்லாமல் ஆட்டோவுக்கு பணத்தை கொடுத்து இருக்கிறீர்களே!'' என்றாள்.
என் மந்திரியான மனைவியின் புத்திசாலித்தனம் அப்போதுதான் எனக்கு புரிந்தது. அசட்டுதனமாக வழிந்தேன்.
கு.அருணாசலம்,
தென்காசி.
எஸ்எம்எஸ்
புடம் போட்ட தங்கம்தான் என்றாலும்
எடை போட்டுதான் வாங்க வேண்டும்.
வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.
அப்படீங்களா!
குறுந்தகவலை உலகம் முழுவதும் பேசும் பொருளாக்க (டிரென்டிங்) ட்விட்டர் உதவுகிறது. 2006இல் தொடங்கப்பட்ட ட்விட்டர் சமூக வலைதளம் அந்தந்த நாட்டு மக்களால் விவாதிக்கப்படும் தலைப்பை தினசரி டிரென்டிங் செய்து வருகிறது. இப்படி டிரென்டிங்கிற்கு பெயர்போன ட்விட்டரில் விரைவில் தொலைபேசி சேவையும், விடியோ ஒளிபரப்பு சேவையும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் தொலைபேசி எண்ணை எதிர்தரப்பினருக்கு வழங்காமல் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளலாம் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
வாட்ஸ்ஆப் போலவே தனி நபருக்கான தகவல் பரிமாற்றத்தை பாதுகாப்பானதாகவும் ஆக்கியுள்ளது ட்விட்டர். இதன் மூலம் 'டேரக்ட் மெசேஜ்' எனப்படும் ட்விட்டரில் இருப்பவர்களுக்கு தனிநபர் அனுப்பும் தகவல்கள் யாருக்கும் தெரியாத வகையில் பாதுகாப்பானதாக இருக்கும்.
வாட்ஸ்ஆப்: இதேபோல் வாட்ஸ்ஆப்பில் இரு நபர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றமான சாட்டை மட்டும் லாக் செய்து வைக்க புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடவுச் சொல் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் பதிவுகளை வைத்து தனி நபருடனான சாட்டை லாக் செய்து வைத்து கொள்ள முடியும்.
வெளிநபர்கள் யாராவது அறிதிறன் பேசியை எடுத்து பார்த்தாலும் லாக் செய்யப்பட்ட சாட்டை காண முடியாது. இந்த சேவையைத் தொடங்க, வாட்ஸ் ஆப்பில் உள்ள நபரை தேர்வுசெய்து மூன்று புள்ளிகளை தேர்வுசெய்தால் 'டிஸ்அப்பியரிங் மேசேஜஸ்' என்பதற்கு கீழ் புதிதாக 'சாட் லாக்' சேவை இருக்கும். இதை தேர்வு செய்தால், அந்த நபருடனான சாட்கள் அனைத்தும் லாக் செய்யப்பட்டு விடும். கடவுச் சொல்லை உள்ளீடு செய்தால் மட்டும் பார்க்க முடியும். இந்த சேவையைப் பெற வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
அ.சர்ப்ராஸ்