நாயகன் படத்தின் தொடர்ச்சி ?
'நாயகன்' படத்துக்குப் பிறகு மணிரத்னம், கமல் இணைந்திருக்கும் திரைப்படத்துக்கு 'தக் ஃலைப்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மல்டி ஸ்டாரராக உருவாகும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் ஆகியோரும் இணைந்திருக்கின்றனர்.
மணிரத்னத்தின் ஆஸ்தான தொழில்நுட்பக் கலைஞர்களான எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதில் கைகோர்த்துள்ளனர். ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் வடிவமைக்கின்றனர். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு விடியோ ஒன்று தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் கமல் தன்னை, 'ரங்கராய சக்திவேல் நாயக்கர்' என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அதன்பிறகு, 'காலன் என்னைத் தேடி வந்தது இது முதல் முறையல்ல, கடைசி முறையும் இல்லை' என்ற வசனத்துடன் எதிரிகளை ஜப்பானிய சண்டைக் கலையால் துவம்சம் செய்கிறார்.இதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது அவரது பெயர்தான்.
இதே 'சக்திவேல் நாயக்கர்' எனும் பெயர்தான் 'நாயகன்' படத்தில் கமலின் பெயர். படத்தில் அவரின் பேரனின் பெயரும் அதுதான். இதையெல்லாம் சேர்த்து பார்த்தால் இந்தப் படத்தில் வரப் போகிற கமல், 'நாயகன்' பட வேலு நாயக்கரின் பேரனாக இருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு ஏற்றார் போலப் படப் பூஜைக்கான அறிவிப்பு விடியோவிலுமே 'நாயகன்' படம் இடம் பெற்றிருக்கும். அந்தப் படத்திலிருந்துதான் விடியோவே ஆரம்பமாகும். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இப்படம் 'நாயகன்' படத்தின் யூனிவர்ஸில் இடம்பெறலாம் என்பதாகவே தெரிகிறது. கமலும் இந்த புரொமோவில் தன் பெயரை இரண்டு முறை அழுத்திச் சொல்வதால் அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்பதே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
சென்னையில் 'தலைவர் 170'
ரஜினியின் சினிமா கிராப் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது. இப்போது த.செ.ஞானவேல் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜின் 'தலைவர் 171' படத்துக்குச் செல்கிறார். இதனை முடித்துவிட்டு மீண்டும் நெல்சனுடன் இணைகிறார். 'ஜெயிலர் 2' உருவாகிறது என்ற பேச்சு இருக்கிறது.
இதற்கிடையே 'தலைவர் 170' பற்றி விசாரித்தில் கிடைத்த தகவல்கள்:
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்தப் படத்திலும் ஏகப்பட்ட மல்டி ஸ்டார்கள் இருக்கின்றனர். அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். திருவனந்தபுரத்தில் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர், நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடந்தது. அதில் ரஜினி, மஞ்சு வாரியர் காம்பினேஷன்கள் மட்டுமே படமாக்கப்பட்டன. இதனை அடுத்து மும்பையில் அமிதாப் பச்சனின் காம்பினேஷனில் படப்பிடிப்பு நடந்தது. அமிதாப்பின் போர்ஷனை முதலில் சென்னையிலேயே எடுத்துவிட நினைத்தனர். ஆனால், நாம மும்பைக்கே போய் ஷூட் பண்ணிடுவோம் என ரஜினி கேட்டுக் கொண்டதற்காக மும்பை பறந்து வந்தனர் என்கிறார்கள்.
''33 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய வழிகாட்டி, ஆளுமை, அமிதாப் பச்சனுடன், என்னுடைய 170-ஆவது படத்தில் மீண்டும் பணிபுரிகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது'' என ரஜினியும் சிலாகித்திருந்தார். அமிதாப்பின் போர்ஷன் அடுத்து ஒரு ஷெட்யூல் மீதமிருக்கிறது என்கிறார்கள்.திருவனந்தபுரம், மும்பை படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்து சென்னையில் படப்பிடிப்பு தொடரும் என முன்பே சொல்லியிருந்தோம். சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் அரங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பிரமாண்டமான இரு செட்கள் அங்கே அமைக்கப்பட்டு வருகின்றன. அதனால் மும்பை படப்பிடிப்புக்கு இப்போது சின்ன பிரேக்கில் இருக்கிறது படக்குழு.
சூர்யாவுடன் இணையும் அமீர்
ரமேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் அமீர் நடித்துள்ள 'மாய வலை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் அமீர், 'வாடிவாசல்' படத்தில் நடிப்பது குறித்தும் கார்த்தி, சூர்யாவுடனான இடைவெளி குறித்தும் மனம் திறந்து பேசினார். 'வாடிவாசல்' குறித்துப் பேசியவர், 'சூர்யா நடிக்கிற 'வாடிவாசல்' படத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு ஓகேவா' என்று வெற்றி என்னிடம் கேட்டார். நான் 'ஓகே நடிக்கிறேன்' என்றேன். அப்படித்தான் 'வாடிவாசல்' படத்தில் கமிட்டானேன். மற்றபடி சூர்யாவுடன் நடிப்பதற்கு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் என்னுடைய கதாநாயகன்.
'மௌனம் பேசியதே' படத்திலிருந்து சூர்யாவுடனும், அவரது குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகி வருகிறேன். சூர்யா, கார்த்தி இருவரையும் வைத்து 'மௌனம் பேசியதே', 'பருத்திவீரன்' படங்களை இயக்கியுள்ளேன். தமிழ்த் திரையுலகில் அண்ணன், தம்பி இருவரையும் வைத்து இயக்கிய இயக்குநர் நான்.
ஆனால், 'பருத்திவீரன்' படத்துக்குப் பிறகு அவர்களுக்கும் எனக்குமான உறவில் இடைவெளி உண்டாகிவிட்டது. நான் அவர்களிடமிருந்து ஒதுங்கிவிட்டேன். இதில் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் வெற்றிமாறன் என்னிடம், 'வாடிவாசல்' படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க சம்மதமா என்று ஒரு தயக்கத்துடன் கேட்டார். நானும் ஓகே சொல்லிட்டேன். இதில் வேறெந்த உள் அர்த்தங்களும் இல்லை.''
நடிகர் கார்த்தியின் 25-ஆவது படமான 'ஜப்பான்' இசை வெளியீட்டு விழாவில் கார்த்தியின் கார்த்தியின் வெற்றிப் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, பா. ரஞ்சித், முத்தையா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், கார்த்தியின் முதல் படமான 'பருத்திவீரன்' படத்தை இயக்கிய ஆமீர், இவ்விழாவுக்கு வரவில்லை.
இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த அமீர், 'என்னைக் கூப்பிடாத இடத்துக்குச் சென்று எனக்குப் பழக்கமில்லை. என்னை அவ்விழாவுக்கு அழைத்ததாகக் கூறுகிறார்கள், என் முன்னாடி வந்து, 'உங்களை அழைத்தேன் என்று' சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். யாரும் என்னை அழைக்கவில்லை. அதனால், நானும் செல்லவில்லை. இதைப் பேசினால் தேவையில்லாத சர்ச்சையாக மாறிவிடும், வேண்டாம்' என்றார்.
சமந்தாவின் ருசிகர பதில்
மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 'கேப்டன் மார்வெல்' படத்தின் சீக்குவலான 'தி மார்வெல்ஸ்' திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 'கேப்டன் மார்வெல்' கரோல் டான்வர்ஸ், 'மிஸ் மார்வெல்' கமலா கான் மற்றும் மோனிகா ராம்பியூ ஆகிய மூன்று பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன. நியா டகோஸ்டா இயக்கியுள்ள இப்படத்தில் ப்ரி லார்சன், டியோனா பாரிஸ், சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே அஸ்டன், இமான் வெல்லானி, சியோ-ஜுன் பார்க் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை சமந்தாவிடம், ''மார்வெல்லில் எந்தெந்த இந்திய நடிகர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்கும்?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'அல்லு அர்ஜுன், விஜய், பிரியங்கா சோப்ரா மற்றும் அலியா பட் ஆகியோர் இணைந்து நடித்தால் நல்லா இருக்கும்' என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தவிர, விஜய்க்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா, சமந்தா, அசின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் சிறந்த ஜோடி, யார் என்ற ட்வீட்களும் ரசிகர்கள் மத்தியில் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.