தினமணி கதிர்

விஜய் - ஷாரூக் கூட்டணி ?

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வெளியான 'ஜவான்'  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெற்றிகரமாக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது.

டெல்டா அசோக்

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வெளியான 'ஜவான்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெற்றிகரமாக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்த நிலையில் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ, விஜய் குறித்தும், ஷாருக்கான் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், 'விஜய், ஷாருக் - இருவரில் யாரை உங்கள் அடுத்த படத்தின் கதாநாயகனாகத் தேர்ந்தெடுப்பீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு அட்லீ, '' நான் இருவரையும்தான் தேர்ந்தெடுப்பேன்'' என்றார்.

''இருவரையும் நடிக்க வைக்க உங்களிடம் போதுமான பட்ஜெட் இருக்கிறதா?'' என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, ''அடுத்த படத்தை 3 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறேன். நான் இருவரையும் நடிக்க வைக்க விரும்புகிறேன். ஒருவர் என் மனைவியைப் போன்றவர். மற்றொருவர் என் தாயைப் போன்றவர். எப்படி இருவரையும் விட்டுக் கொடுக்க முடியும்? இன்றைக்கு நான் இந்த இருக்கையில் உட்கார்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் விஜய்தான். என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். அதேபோல ஷாருக் சார், அவர் அழைத்தால் பல இயக்குநர்கள் அவரை வைத்து படம் எடுக்க ஓகே சொல்லி இருப்பார்கள். ஆனால் அவர் என்னை நம்பி தேர்ந்தெடுத்தார். அந்த நம்பிக்கைதான் என்னை மிகுந்த பொறுப்புடனும், அன்புடனும் ஜவானை இயக்க வைத்தது'' என்றார்.

பொங்கல் ரேஸில் தங்கலான் ?

பா.ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவான 'தங்கலான்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சென்னையில் மும்முரமாக நடக்கின்றன. படத்தை முடித்த திருப்தியில் இருக்கிறார் விக்ரம். படத்தின் முன்னோட்ட வீடியோவில் விக்ரமின் உழைப்பு மிரட்டலாக இருந்தது. கதாநாயகிகளுள் ஒருவரான மாளவிகா மோகனனும், 'இதுவரை நான் நடித்ததில் எனக்குச் சவாலான கதாபாத்திரம், 'தங்கலான்'-இல்தான் கிடைத்தது. அதில் எனது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

1800, 1900-ஆம் ஆண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி உள்ளது இந்தப் படம். கோலார் தங்கவயல் குறித்தான கதை இது.

'கே.ஜி.எஃப்.' எப்படி உருவானது, அதற்காக நம் மக்கள் கொடுத்த விலை என்ன உள்பட பல்வேறு கோணங்களில் கதை நகர்கிறது என்கிறார்கள். இதற்காக கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட கோலார் தங்க வயலில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. சென்னையிலும், மதுரையிலுமாக படப்பிடிப்பு நடந்து முடிந்தது. விக்ரமுடன், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் உள்பட பலரும் நடிக்கின்றனர். 'நட்சத்திரம் நகர்கிறது' கிஷோர் குமாரின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் கவனித்து வருகின்றனர். இப்போது பின்னணி இசையும், எடிட்டிங் வேலைகளும் தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. இதில் விக்ரம் 30 வயது இளைஞர், வயதான முதியவர் என இரண்டு தோற்றங்களில் வருகிறார் என்கிறார்கள். 'தங்கலான்' பொங்கலுக்கு வரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வங்கதேசத்தில் லியோ

விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அக்டோபர் 19 -ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் இசை வெளியீட்டு விழாவும் ரத்தானது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றதை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக 'லியோ' படக் குழு தினமும் அப்டேட்களை அள்ளித் தெளித்த வண்ணமிருக்கின்றனர். 'லியோ' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையடுத்து, ட்விட்டரில் 'லியோ' படத்தைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் தயாரிப்பாளர் லலித் குமார், 'ட்ரெய்லரை எடிட் செய்யும்போது நானும், லோகேஷும் இருந்தோம். அப்போ விஜய் கால் பண்ணி ட்ரெய்லர் எப்படி இருக்குனு கேட்டார். அவருக்கு அனுப்பினோம். விஜய் சார் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு 'ஓ.கே. நல்ல இருக்கு' ன்னு சொன்னார். காஷ்மீரில் 41 நாட்கள் படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மைனஸ் டிகிரியில் எல்லோரும் வேலைபார்த்தார்கள். அதனால்தான் பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டோம். படத்தை நாங்கள் பார்த்துவிட்டோம், விஜய் சாரும் பார்த்துவிட்டார். எல்லோருக்கும் முழு திருப்தி.
படத்தின் இசை வேலைகள் முடிந்துவிட்டன. படத்தை தமிழ்நாட்டில் ஏராளமான திரையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். உலகம் முழுவதும் 25,000 - 30,000 திரையில் வெளியிடவுள்ளோம். 'லியோ' படம் குறித்த அப்டேட்டுகள் இன்னும் நிறைய வரும் நீங்களே பார்ப்பீர்கள். இந்த முறை வங்கதேசத்திலும் 'லியோ' வெளியாகும். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது' என்றார்.

தாய்லாந்தில் கங்குவா

மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பி வருகிறது சூர்யாவின் 'கங்குவா'. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நோக்கி, தீவிரமாக நடைபெற்றுகொண்டிருக்கிறது. கொடைக்கானல், ராஜமுந்திரி ஆகிய இடங்களைத் தொடர்ந்து வெளிநாட்டில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. 'சிறுத்தை' சிவாவின் இயக்கத்தில் சூர்யாவின் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். அவர்களுடன் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், ஜெகபதிபாபு, நட்டி நட்ராஜ், 'கே.ஜி.எஃப்.' அவினாஷ், கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, கருணாஸ் என பலரும் நடிக்கின்றனர். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசைமைக்கிறார். 'கங்குவா'வின் மிக முக்கிய கட்ட படப்பிடிப்பாக வெளிநாட்டு படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள்.

தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இதற்காக சூர்யா உள்பட படக் குழுவினர் புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர். கொடைக்கானல், ராஜமுந்திரியில் உள்ள அடர்ந்த காடுகளின் படப்பிடிப்பின் தொடர்ச்சியாக தாய்லாந்து படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள். அங்கேயும் போர்க்களக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளனர். சூர்யா தொடர்ச்சியாக 20 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படத்தை முடித்து விட்டு சுதா இயக்கும் படத்துக்குத் தயாராகிறார் சூர்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT