தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு டிரெண்ட் ஃபார்முலாக்கள் 'க்ளிக்' ஆகும். ரீமேக், ஹீரோயின்களை மையமாகக் கொண்டவை, காமெடியால் கல்லா கட்டுபவை, பேய் சினிமாக்கள், ரத்தம் சதை என வன்முறையை களமாக கொண்ட படங்கள், இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டு உருவாகும் படங்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விதமான டிரெண்ட் சினிமாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் சில எவர்கிரீன் டிரெண்ட்களும் இருக்கின்றன. அதுதான் 'பார்ட் 2' பார்முலா. ஒரு திரைப்படத்துக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்துவிட்டால், அதன் அடுத்தடுத்த பாகங்களுக்குத் திட்டமிடுவது தமிழ் சினிமாவின் வழக்கம்தான். இந்த பார்முலா பல திரைப்படங்களுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமைந்திருக்கிறது.
இந்த ஆண்டில் பல ஹிட் திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்தான அறிவிப்புகள் வெளிவந்திருக்கின்றன.
நான்காவது பாகமான 'அரண்மனை 4' திரைப்படம் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்தது. மேலும் ஷங்கர் இயக்கியிருக்கும் 'இந்தியன் 2' திரைப்படமும் வெளியாகியிருந்தது. இவை இரண்டும்தான் இந்தாண்டு வெளியாகியிருக்கிற ஹிட் சினிமாக்களின் அடுத்தடுத்த பாகங்கள். விமர்சனங்களைக் கடந்து இரண்டும் நன்றாகக் கல்லா கட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.
இதைத் தாண்டி பல திரைப்படங்களும் வரிசைகட்டி நிற்கின்றன. கார்த்தி நடித்திருந்த 'சர்தார்' திரைப்படம் 2022இல் வெளியாகி ஹிட்டானது. இரண்டாம் பாகமும் தற்போது தயாராகி வருகிறது.
மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 'கைதி' திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்து நீண்ட நாள்களாக பேசப்பட்டு வந்தது.
2025ஆம் ஆண்டு 'கைதி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதை கார்த்தி சமீபத்திய நிகழ்வு ஒன்றில் அறிவித்திருந்தார்.
2015ஆம் ஆண்டு வெளியாகி நடிகர் ஜெயம் ரவியின் கரியரில் முக்கிய திருப்பத்தைக் கொடுத்த 'தனி ஒருவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. ஜெயம் ரவி தற்போது 'ப்ரதர்', 'காதலிக்க நேரமில்லை', 'ஜீனி' ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதையெல்லாம் முடித்த பிறகு 'தனி ஒருவன் 2' பக்கம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் நடித்திருந்த 'துப்பறிவாளன்' திரைப்படம் 2017ஆம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். ஆனால் இதன் இரண்டாம் பாகத்தை விஷாலே எழுதி இயக்கி வருகிறார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிற திரைப்படம் 'டிமான்டி காலனி 2' வரும் 15ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் முதல் பாகம் 2015இல் வெளியாகி இயக்குநர் அஜய் ஞானமுத்துவுக்கு பிராண்டாக அமைந்தது.
மேலும், வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி இருந்தது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் வெளியாகி மூன்றாண்டுகளைக் கடந்திருக்கிறது. இத்திரைப்படம் குறித்தான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. இத்திரைப்படத்துக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படியான பட்டியலைத் தாண்டி சி.வி. குமாரின் 'திருகுமரன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தற்போது பல பார்ட் 2, பார்ட் 3, பார்ட் 4 படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் 'இன்று நேற்று நாளை 2', 'மாயவன் 2', 'சூது கவ்வும் 2', 'பீட்சா 4' ஆகிய திரைப்படங்கள் அடங்கும். இவற்றில் ‘மாயவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சி.வி. குமாரே எழுதி இயக்கி வருகிறார்.
இப்படியான பட்டியலைத் தாண்டி பரத் நடிப்பில் 'காளிதாஸ்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கிறது. இதன் முதல் பாகம் 2019இல் வெளியாகியிருந்தது. இதேபோல, இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகி 2017ஆம் வெளியாகியிருந்த 'இவன் தந்திரன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் கௌதம் கார்த்தி, ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த இரண்டாம் பாகத்தில் சரண், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்தப் பட்டியலில் ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்துக்கான கதை விவாதங்களும் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.