'ஆச்சரியங்களை ஏற்படுத்துவது மாயமோ, மந்திரமோ, மாயாஜாலமோ இல்லை; அறிவியல்தான் அதிகம்'' என்கிறார் முப்பத்து மூன்று வயதான மேஜிக் கலைஞர் அருண்குமார்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட குழித்துறையைச் சேர்ந்த இவர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனது சிறுவயதில் மேஜிக் நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கியபோது, அறிவுக்கு எட்டாத அதிசயமாகவே நினைத்தேன். இது மந்திரத்தால் கட்டுப்படுத்தப்படுவது என்ற நினைப்புபே எழுந்தது. எட்டாவது வயதில் மேஜிக் கற்க ஆரம்பித்தேன். அதன்பின்னர் 'இது மந்திரம் அல்ல; அறிவியல்' என்ற உண்மை தெரியவந்தது.
கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாட் என்பவரிடம் முழுமையாகக் கற்றேன்.
கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருவனந்தபுரம் அருகேயுள்ள வெஞ்ஞாரமூடில் அலுவலகம் வைத்து இயங்கி வருகிறேன். தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலப் பகுதிகளில் பள்ளிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்பட பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறேன்.
பதினைந்து ஆண்டுகளாக, மூன்று ஆயிரத்துக்கும் மேல் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தி, பள்ளிக் குழந்தைகளையும் மகிழ்வித்து வருகிறேன். குழந்தைகளின் வகுப்பறை கற்பித்தலை புத்துணர்ச்சியூட்டும் தருணங்களாகவே மேஜிக் மாற்றிவிடுகிறது.
தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் முன் நிகழ்ச்சி நடத்தும்போது நானும் குழந்தையாக மாறிவிடுவது போன்ற எண்ணம் ஏற்படுவதுண்டு.
குழந்தைகளுக்காக கயிறை கம்பாக மாற்றுவது, கம்பை (செங்கோல் போன்றது) பூவாக மாற்றுவது, பந்தை முயலாக மாற்றுவது, பலூனை உடைத்து புறாவாக மாற்றுவது, காலியாக உள்ள பெட்டியிலிருந்து பூங்கொத்து உருவாக்குவது, சீனியை (சர்க்கரை) சாக்லேட்டாக மாற்றுவது என பல்வேறு வகை மாயாஜாலங்களை செய்து வருகிறேன். நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மந்திரக்கோல், சுவாரசியமான வார்த்தைகள், தனித்துவமான பாணி போன்றவை குழந்தைகளை வியக்க வைக்கிறது.
பெரியவர்களுக்கான சுவாரசியமான பல நிகழ்ச்சிகளும் செய்வதுண்டு. மாயாஜாலங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும்போது பார்வையாளர்களாக உள்ள பெரியவர்கள், குழந்தைகளை நிகழ்ச்சியில் ஒன்றிக்க வைப்பதில் தான் அதன் வெற்றியே அடங்கியுள்ளது.
பிரபல மலையாள தொலைக்காட்சிகளில் மேஜிக் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல சாதனை நிகழ்வுகளையும் நிகழ்த்தியுள்ளேன்.
இன்றைய நவீன உலகில் மேஜிக் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. தற்போது பல இடங்களில் மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இளைய தலைமுறையினர் பலர் மேஜிக் கலையை எளிதாக நிகழ்த்தி வருகிறார்கள். நான் எதிர்காலத்தில் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் மேஜிக் கலைஞராக மாறுவேன்'' என்கிறார் அருண்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.