சுமார் அறுபது ஆண்டுகளாக, 'டெரகோட்டா' படைப்புகளுடன் உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார் ஆர். தங்கையா. இதனால் அவர் 'டெரகோட்டா' தங்கையா என்றே அழைக்கப்படுகிறார். பதினைந்து வயதில் தொடங்கிய அவரது கலைப் பயணம் எழுபது வயதைக் கடந்தும் உற்சாகத்துடனே இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அறந்தாங்கி பெருநாவலூர் அருகேயுள்ள வளத்தக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர். தங்கையா. 1953-ஆம் ஆண்டில் ராமையா வேளாரின் மகனாகப் பிறந்தார். எஸ்எஸ்எல்சி படித்தவர். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே, தாய் மீனாட்சியிடமிருந்து கைவினைக் கலையைக் கற்கத் தொடங்கினார். அதன்பிறகு எம். ரெங்கசாமி என்பவரிடம் முழுமையாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்.
களிமண்ணைக் கொண்டு தயாரிக்கப்படும் அய்யனார் சிற்பங்கள், குதிரைகள், நாய் உருவங்கள் இவரது சிறப்புகள். மழையூர் அய்யனார்கோயில் சிற்பம் இவரது உள்ளூர் முகம்.
தில்லி அருங்காட்சியகத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர், போபாலிலுள்ள அய்யனார் கோவில், உதய்ப்பூரிலுள்ள நந்தி, மைசூரு அருங்காட்சியகத்திலுள்ள அய்யனார் சிலைகள் இவரது கைவண்ணம்.
1993-இல் கிரீஸ், 2001-இல் தென்கொரியா, 2002-இல் தைவான், 2008-இல் ஜப்பான், 2018-இல் மலேசியா, 2019-இல் மியான்மர் போன்ற நாடுகளுக்கும் இந்திய நாட்டின் கைவினைக் கலைஞராக சென்று வந்துள்ளார் தங்கையா.
தனது கலைப்பயணம் குறித்து தங்கையா கூறியது:
'நான் செல்லுமிடங்களில் நமது பாரம்பரிய 'டெரகோட்டா' களிமண் சிற்பங்களைச் செய்து வைத்து வைத்து, வரும்போதெல்லாம் இந்திய மண்ணின் திறமையைப் பதிவு செய்து வருகிறேன் என்ற பெருமை
ஏற்படும். அந்தந்த நாடுகளில் உள்ள மண்ணை வைத்தே, அவற்றைச் செய்கிறேன். மண்ணைப் பதமாக குழைப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணி. அதில் பிழை ஏற்படவே கூடாது. காலால் மிதித்து மிதித்து சிற்பம் செய்வதற்கேற்ற பக்குவத்தை உருவாக்கிட வேண்டும்.
ஜப்பானில் அந்த நாட்டின் வெள்ளை மண்ணில் குதிரை செய்து சுட்டால், வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொடுக்கிறது. கைவினைப் பொருள்கள் மீதான கவனமும் அக்கறையும் நம் மக்களுக்கு இருப்பதில்லை. நுட்பமான அந்தத் திறனை உரிய வகையில் புரிந்து கொள்வதுமில்லை.
அரசு நிறுவனங்கள்கூட அண்மைக்காலம் வரையிலும் மிக சொற்பமான ஊதியத்தையே கொடுத்து வந்தனர். நான் வெளிநாடுகளுக்குப் புறப்படும்போதெல்லாம் உரிய ஊதியத்தை வலியுறுத்திக் கேட்டுப் பெற்று வந்திருக்கிறேன். இந்தக் கலையை வளர்ப்பதற்கான முயற்சிகளும் அரசிடம் இல்லை. பயிற்சி அளிக்கும் ஏற்பாடுகளும் இல்லை.
இதுபோன்ற மண்ணின் கலைகளைக் கற்றுக் கொண்டு, சுற்றுச்சூழலையும் கெடுக்காமல் இருக்கவும் இப்போதுள்ள இளைஞர்களுக்கு புரிதல் இல்லை. இவற்றையெல்லாம் ஏற்படுத்த வேண்டும். கடினமான பணிதான்.
வரும் செப்டம்பர் 21 முதல் 10 நாள்கள் பிகாரில் ஓவியப் பயிற்சிக்கு எனது மகள் சிவயோகத்துடன் செல்கிறேன். அதன்பிறகு, அக்டோபர் 7 முதல் ஒரு வாரகாலப் பயிற்சி அளிப்பதற்காக , மத்தியப் பிரதேசத்திலுள்ள குவாலியருக்கு எனது தலைமையில் 11 கலைஞர்கள் செல்கிறோம்' என்கிறார் தங்கையா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.