ஒரு முயற்சி செய்து பார்ப்போம்
மாநகரப் பிள்ளைகளுள் மிகப் பெரும்பாலோர் ஆங்கில வழிப் பள்ளிகளில் பயில்கிறார்கள். அப்பள்ளியில் எல்லாம் ஆங்கிலமே. வீட்டிலும் ஆங்கிலம் பேசிப் பெற்றோர்கள் தகுதி மேம்படுத்துகிறார்கள். பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாமற் போய்விடுகிறது. ஒன்று செய்யலாமா? முதலில் நாம் (பெற்றோர்) வீட்டிலும், வெளியிலும் இயன்றவரை தமிழில் பேசுவோம் என்று முடிவெடுத்து, ஒரு திங்கள் முயற்சி செய்யுங்கள். முதலில் கடினமாக, முடியாததாகத் தெரியும். பின்னர் நன்கு பழகிவிடும்.
பிள்ளைகளைத் தினம் ஒரு திருக்குறள் படித்துச் சொல்லுமாறு கூறுங்கள். அக்கறையுடன், சரியாகச் சொல்லுகிறானா? சொல்லுகிறாளா? என்று கவனித்துப் பிழையிருப்பின் திருத்துங்கள். முதலில் நீங்கள் அந்தக் குறளைப் படித்திருக்க வேண்டும். காலையில் 'குட்மார்னிங், இரவில் 'குட் நைட்' சொல்வதற்குப் பதிலாக 'வணக்கம்', 'தூங்கப்போறேன்' என்று சொல்லுமாறு பழக்குங்கள். பள்ளிக்குச் செல்லப் புறப்படும்போது டாடா, பைபை சொல்லாமல் 'அம்மா போய் வரேன்', 'அப்பா வரட்டுமா?' என்று சொல்லச் செய்யுங்களேன்.
'டிபன்' என்பதற்குப் பதிலாகச் சிற்றுண்டி என்றும். 'லஞ்ச்' என்பதற்கு மாற்றாக மதிய உணவு அல்லது சாப்பாடு என்றும், 'ஸ்நாக்ஸ்' - தின்பண்டம் என்றும் 'லஞ்ச் பிரேக்' - உணவு இடைவேளை என்றும், 'ஹோம் ஒர்க்கை' - வீட்டுப்பாடம் என்றும் 'மார்னிங்', 'ஈவினிங்' என்பன -காலை, மாலை என்றும், 'சன்டே', 'மன்டே' - ஞாயிறு, திங்கள் என்றும் இப்படிச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்படுத்திப் பாருங்கள். முதலில் கேலியாக - சிரிப்பாக இருக்கும்.
நாளடைவில் இப்பழக்கம் படிந்துவிடும். 'செந்தமிமும் நாப் பழக்கம்' என்பதை மறவாதீர்கள். புத்தகம், குறிப்பேடு என்பனவும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
'ஹலோ' என்பதை விட்டு, எவ்வளவு பேர் இப்போது 'வணக்கம்' சொல்லுகிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது. 'பஸ்ஸில் வந்தேன் -ஆட்டோவில் வந்தேன்' என்பதைப் பேருந்தில் வந்தேன், தானியில் வந்தேன் என்று சொல்லுங்கள். நான்கு நாள் மிகவும் சிரமமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். பின்னர் அது வாடிக்கையாகிவிடும். 'ட்ரிப்ளிக்கேன்' என்று சொல்லிப் பழகிய நாக்கு, திருவல்லிக்கேணி என்று சொல்ல மறுக்கும். திரும்பத் திரும்ப முயன்றால் திருவல்லிக்கேணி வந்து ஒட்டிக் கொள்ளும்.
'எக்மோர்' என்பதை விட்டு, எழும்பூர் என்று சொல்லிச் சொல்லிப் பழகுங்கள். உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், நடுவணரசு என்றெல்லாம் ஊடகங்களில் கேட்கும், படிக்கும் நாம், எழும்பூர் என்று சொல்லுவதில் சிக்கல் ஒன்றும் இல்லையே! 'ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்' - வணிக வளாகம் என்றும், 'டூர்' போகிறோம் - சுற்றுலா போகிறோம் என்றும் 'ட்ரெயினில்' என்பதைத் தொடர் வண்டியில் என்றும் சொல்லிப் பாருங்கள். எல்லாம் நம் ஊடகங்களில் புழக்கத்தில் இருக்கும் சொற்களே. தமிழர்கள் மனம் வைத்தால் எதையும் செய்து முடிப்பார்கள். ஆனால் மனம் வைக்க வேண்டுமே!
'லெட்டர் வந்ததா!' என்று சொல்லாமல், மடல் வந்ததா? என்றும் 'டிரைவர்' வந்து விட்டாரா? என்று சொல்லாமல் ஓட்டுநர் வந்துவிட்டாரா? என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள். சிலசமயம் நம்மைக் 'கிறுக்கர்' என்று பிறர் எடைபோடக் கூடும். கூச்சப்பட வேண்டாம். தமிழ்க் கிறுக்கன் ஆவதில் தவறில்லை. ஃபிரண்டு என்னாது நண்பர் என்று சொல்லுங்கள். (நண்பன் - நண்பி என்றும் பயன்படுத்தலாம்). மகிழுந்து அல்லது தானி (ஆட்டோ) ஓட்டுநரிடம் வழி சொல்லும்போது 'லெப்ட்', 'ரைட்' என்று சொல்வது எளிதாக இருக்கிறது. அவர்களுக்கும் புரிகிறது. இதனை மாற்றி இடப்பக்கம், வலப்பக்கம் என்று சொல்லிப் பாருங்கள். முதலில் இடராகத்தான் இருக்கும். நாமும் சொல்லி இடர்ப்பட்டோம். இப்போது பழகிவிட்டதே, நீங்களும் முயன்று பாருங்கள்!
(தமிழ் வளரும்)
இதையும் படிக்க.. ஆயகலையும் தூய தமிழும் - பிழையற்ற தமிழ் அறிவோம்! – 54
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.