தினமணி கதிர்

உயர்கல்விக்கு வழிகாட்டி!

'குரு-சிஷ்யன் உறவு என்பது தூய்மையானது; புனிதமானது. தாய்-சேய் உறவைவிட மிக உன்னதமானது. விலைமதிப்பில்லாதது' என்பர்.

ஆர். முருகன்

'குரு-சிஷ்யன் உறவு என்பது தூய்மையானது; புனிதமானது. தாய்-சேய் உறவைவிட மிக உன்னதமானது.

விலைமதிப்பில்லாதது' என்பர். அந்த வகையில், 'வறுமை ஒழிப்பு, இயலாதவர்களுக்கு உதவி' என்ற அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் மூவரின் பெயரால் தொடங்கப்பட்ட 'பி.எஸ்.ஆர். டிரஸ்ட்., உயர்கல்வியை எட்ட முடியாத பலருக்கும் கல்வியைக் கற்க உதவிடும் ஏணியாக உயர்ந்து நிற்கிறது.

திருச்சி தில்லை நகரில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிலர் தங்களுக்கு பாடம் கற்றுத் தந்து, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராக வழிகாட்டிய உயிரியல் ஆசிரியர் பாண்டியன் (பி), கணித ஆசிரியர் சந்தானகோபால் (எஸ்), வேதியியல் ஆசிரியர் ராம்குமார் (ஆர்) ஆகியோரது முதல் எழுத்துகளை இணைத்து உருவாக்கியதுதான் இந்த அறக்கட்டளை.

தென்னூர் மூலைக் கொல்லையில் இயங்கும் இந்த அறக்கட்டளையின் நிறுவனர் ஷேக் அப்துல்லாவிடம் பேசியபோது:

'பிளஸ் 1 பயிலும்போது 2011-இல் இந்த அறக்கட்டளையைத் தொடங்கினோம். என்னுடன் பயின்ற மாணவர்கள், சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்கள் எனப் பலரும் தற்போது இணைந்து 314 பேர் தன்னார்வலர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாதம்தோறும் தலா ரூ.250 வழங்குகின்றனர்.

முதலில், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சத்தான உணவு, கல்வி என்ற அடிப்படையில் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் சேவையை தொடங்கினோம். பின்னர், குடும்ப அட்டை இல்லாதவர்கள், திருநங்கைகள், இலங்கை அகதிகள், சாலையோரம் வசிப்பவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என தேடிச் சென்று உதவிகளை வழங்கினோம்.

கரோனா காலத்தில், இரு ஆண்டுகள் தொடர்ந்து சாலையோர, ஆதரவற்ற, உணவு கிடைக்காத நபர்களை தேடிச் சென்று மூன்று வேளையும் உணவு வழங்கினோம்.

திருச்சி, திருவண்ணாமலை, பழனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முகநூல் வாயிலாக உதவி கோரும் நபர்கள், உதவிடும் இளைஞர்களையும் இணைத்து நிதி பெற்று அந்தந்த பகுதிகளில் நல உதவிகளைச் செயல்படுத்துகிறோம்.

பதினான்கு ஆண்டுகளுக்கு முன் பள்ளிப் பருவத்தில் சிறிய விதையாக நட்டது, இன்று மாபெரும் சோலையாக வளர்ந்து நிற்கிறது.

ஆண்டுக்கு 7 மருத்துவர்கள், 7 பொறியாளர்கள், 7 இதர உயர்கல்வி படிப்புகள் என்ற வகையில் 21 பேருக்கு இலக்கு. இருப்பினும் உதவி கேட்டு வரும் அனைவரையும் படிக்க வைக்கிறோம். இதுவரை 367 பேர் உயர்கல்வி பயின்றுள்ளனர். இந்தாண்டு மட்டும் 89 பேர் பயிலுகின்றனர். எங்களது உதவியால் பலரும் பணியிடங்ககளில் அமர்ந்து, தான் பெற்ற உதவியை பிறருக்கு திரும்ப வழங்குகின்றனர். இதுவே குருவுக்கும் சிஷ்யர்களுக்கும் கிடைத்த பெருமையாகவே கருதுகிறோம்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட கொடும்பாளூர் அரசு மருத்துவமனையின் வட்டார மருத்துவ அலுவலர் ராகவி, முக்கியமான தன்னார்வலாக இயன்ற உதவிகளை வழங்கி வருகிறார். அறக்கட்டளை வாயிலாக, பல முக்கியத் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுகிறோம்.

கற்கத் தோள் கொடு: பெற்றோர் இல்லாத மாணவர்கள், பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்கள், படிக்க வசதியில்லாத மாணவர்கள் என்ற 3 தகுதியைக் கொண்டு, மாணவ, மாணவியர்களைத் தேர்வு செய்கிறோம். அவரவர் விரும்பிய கல்லூரிகளில், விரும்பிய படிப்புகளுக்கான அனைத்துச் செலவுகளையும் அறக்கட்டளையே வழங்குகிறது. படிப்பு முடித்து, அவர்கள் வேலையில் சேர்ந்து முதல் மாத ஊதியம் பெறும் வரை உதவிகள் தொடரும்.

கல்விக் காடு: பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்ற ஆலோசனையை 2015-ஆம் ஆண்டு முதல் பள்ளிகளைத் தேடிச் சென்று அளிக்கிறோம்.

கொடுத்து உண்: ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்து உணவுகளை வழங்கி, காலை 9 முதல் மாலை 5 மணி வரை ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் விளையாட்டு, கல்வியைக் கற்றுத் தரும் பராமரிப்பு மையங்களை திருச்சி, சிதம்பரம், திருவண்ணாமலையில் நடத்திவருகிறோம்.

பாத்திரம்: சாலையோரம் வசிப்போருக்கு தினம்தோறும் மூன்று வேளை உணவு அவரவர் இருப்பிடம் தேடிச் சென்று வழங்குகிறோம். இதன்படி, திருச்சியில் மட்டும் 150 பேர் பயன்பெறுகின்றனர்.

சொல் மனமே: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஆலோசனை வழங்குகிறோம். எங்களைத் தேடி வரும் மாணவர்களுக்கு அவரவர் இருப்பிடம் அருகிலேயே உள்ள சிறந்த உளவியல் நிபுணரைத் தேர்வு செய்து ஆலோசனை அளிக்கப்படுகிறது.

250 கைகள்: எங்களது கல்வித் திட்டங்களுக்கு உதவிடும் வகையில் அறக்கட்டளையின் தன்னார்வலர்களாக உள்ளவர்கள் மாதம்தோறும் ரூ.250 வழங்குகின்றனர். இந்த நிதியை கற்கத் தோள் கொடு, கல்விக் காடு திட்ட செலவுகளுக்கு பயன்படுத்துகிறோம்.

இ-தாந்தினா: அறக்கட்டளையின் 314 தன்னார்வலர்கள் மட்டுமல்லாது ரத்த தானம் அளிக்க முன்வரும் அனைவரையும் ஒருங்கிணைத்து அவ்வப்போது முகாம்களை நடத்துவது, அவசர ரத்தம் தேவைப்படுவோருக்கு உடனடியாக ரத்தம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறோம்' என்கிறார் ஷேக் அப்துல்லாஹ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT