முகப்பு
தினமணி கதிர்

பாலிவுட் ஸ்டூடியோ!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் 'அமரன்' படம் தீபாவளிக்கு வெளியானது.

Updated On : 15 டிசம்பர், 2024 at 12:00 AM
சாய் பல்லவி
பகிர்:
Updated On : 14 டிசம்பர், 2024 at 7:48 PM

சாய் பல்லவிக்கு எதிராக பாலிவுட்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் 'அமரன்' படம் தீபாவளிக்கு வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முகுந்த் வரதராஜனின் நினைவிடத்துக்குச் சென்று சாய் பல்லவி மரியாதையும் செலுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இந்திய ராணுவத்துக்கும், ஹிந்துத்துவாவுக்கும் எதிராக சாய் பல்லவி பேசினார் என்று குற்றம்சாட்டி, 'சாய் பல்லவியின் திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும்' என 'எக்ஸ்' தளத்தில் ட்ரென்ட் செய்து வருகின்றனர் சிலர்.

Advertisement

2022-இல் 'விராட பர்வம்' என்ற தெலுங்கு படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் சாய் பல்லவி பேசுகையில், 'இந்திய ராணுவத்தின் செயல்பாடு என்பது நமக்குத் தேசப் பக்தி, தேசப் பாதுகாப்பு. ஆனால், மற்றநாடுகளைப் பொருத்தவரை அது தீவிரவாதம்.

அவர்களது பார்வையில் இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகள், இந்தியர்களின் பார்வையில் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தினர் தீவிரவாதிகள். எப்படி இருந்தாலும் இரண்டுமே வன்முறைதான். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை' ' என்று சாய் பல்லவி பேசியிருந்தார்.

மதத் தீவிரவாதங்கள் குறித்து பேசியிருந்தவர் அவர் மேலும் கூறியிருந்தது:

'நான் நடுநிலையான எண்ணவோட்டங்கள் கொண்ட குடும்பச் சூழலில் வளர்ந்தேன். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே எனக்குக் கற்றுகொடுத்தார்கள். இடதுசாரி, வலதுசாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதில் யார் சரி, யார் தவறு என்று என்னால் சொல்ல முடியவில்லை. அண்மையில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் பார்த்தேன். அதில், காஷ்மீரி பண்டிட்டுகள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பதைப் பற்றிக் கூறினார்கள்.

அதேசமயம் அண்மையில், பசுவை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர், முஸ்லிம் எனச் சந்தேகப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் இங்கு நடந்துள்ளது. அந்த நபரைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' எனக் கோஷங்களை எழுப்பினார்கள். காஷ்மீரில் நடந்ததற்கும் சமீபத்தில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம். என்னைப் பொருத்தவரை எந்தச் சூழலிலும் வன்முறை என்பது தவறான அணுகுமுறை.

இடதுசாரி, வலதுசாரி என எந்தப் பக்கம் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்க வேண்டியது அவசியம். நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டியது அவசியம். நான் நடுநிலையாக இருக்கிறேன். அப்படியே வளர்க்கப்பட்டேன். ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதைவிட்டுவிட்டு அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று பேசியிருந்தார்.

'உண்மையில் சாய் பல்லவி வன்முறைக்கு எதிராகத்தான் பேசினார். இந்திய ராணுவத்தைத் தவறாகப் பேசவில்லை' என்று சாய்பல்லவியின் ரசிகர்கள் விளக்கமளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஹிந்துத்துவாவுக்கு எதிராகப் பேசியதாகக் கூறி, பாலிவுட் நடிகர்களின் பல ஆண்டுகளுக்கு முந்தையக் காணொலிகளைத் தூசி தட்டி எடுத்து, அவர்களின் திரைப்படம் வெளியாகும் சமயத்தில் சமூகவலைதளங்களில் பகிர்ந்து ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சிலர்.

பாலிவுட் திரையுலகமே இதுபோன்ற சர்ச்சைகளால்தான் சரிவைச் சந்தித்து வருவதாகப் பலரும் குற்றச்சாட்டாகக் கூறியிருந்தார். குறிப்பாக, இயக்குநர் அனுராக் காஷ்யாப் கடுமையாகப் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Updated On : 14 டிசம்பர், 2024 at 7:49 PM
வருண் தவான்

'தெறி' ஹிந்தி ரீமேக்!

2016-இல் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் பாலிவுட் ரீமேக்தான் 'பேபி ஜான்'. விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவானும், சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், எமி ஜாக்சன் நடித்த பாத்திரத்தில் நடிகை வமிகா கேபியும், இயக்குநர் மகேந்திரன் கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராஃப் நடித்திருந்தனர்.

இதையெல்லாம் தாண்டி ஸ்பெஷலாக. சல்மான் கான் கேமியோ செய்திருக்கிறார். தமிழ் பதிப்பில் இதுபோன்ற சப்ரைஸ் கேமியோக்கள் எதுவும் இடம்பெறவில்லை. இத்திரைப்படம்தான் கீர்த்தி சுரேஷின் பாலிவுட் அறிமுகம்.

ஹிந்தி ரீமேக்கில் இதுபோன்ற சில விஷயங்களை மெருகேற்றுவதற்காக சேர்த்திருக்கிறார்கள் என்பது வெளியாகியுள்ள டிரைலரில் தெரிய வருகிறது. தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் சமீபத்தில் வெளியாகியிருந்த இப்படத்தின் 'நைன் மடகா' பாடல் சமூக வலைதளங்களில் அதிரடி வைரல். சமந்தா, தமன்னா என பல முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் பதிவிட்டு வருகிறார்கள்.

அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வருகிறது. இதுவரை தமிழிலிருந்து ஒரு டஜன் படைப்புகள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரீமேக் எப்படியான புதுமையான விஷயங்களுடன் நம்மை ஆச்சரியப்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On : 14 டிசம்பர், 2024 at 7:49 PM
ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி ரெஸ்டாரன்ட்டில் மாயமான கார்!

மும்பை தாதர் பகுதியில் கோஹினூர் ஸ்கொயர் கட்டடத்தின் 48-ஆவது மாடியில் திறந்த பால்கனியில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் 'பாஸ்டியன்' ரெஸ்டாரன்ட் செயல்படுகிறது. வாடிக்கையாளர்கள் நிலவைப் பார்த்தவாறே சாப்பிடும் வகையிலான இந்த ரெஸ்டாரன்டுக்கு பணக்கார வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

2016-ஆம் ஆண்டு முதல் செயல்படும் டெஸ்டாரன்டில் 2019-இல் ஷில்பா ஷெட்டி 50 சதவீதம் பங்குகளை வாங்கினார். இந்த ரெஸ்டாரண்டிற்கு ருஹான் பெரோஸ் கான் என்ற தொழிலதிபர் தன் நண்பர்கள் இரண்டு பேருடன் தனது பி.எம்.டபிள்யூ காரில் வந்தார். அவர் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சாவியை பார்க்கிங் பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டு ரெஸ்டாரன்ட் சென்றார். அவர் சாப்பிட்டு விட்டு வந்தபோது, கார் காணாமல் போய் இருந்தது.

அதிகாலை 2 மணிக்கு மர்ம நபர்கள் அக்காரைத் திருடிச் சென்றது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. புகாரின்பேரில் தாதர் சிவாஜி பார்க் போலீஸார் வழக்குப் பதிந்து, திருடர்களைத் தேடி வருகின்றனர். காரின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.