முகப்பு
தினமணி கதிர்

பாலிவுட் பக்கம்!

பாலிவுட் நடிகர் நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Updated On : 21 ஜூலை, 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 20 ஜூலை, 2024 at 7:18 PM

நானா படேகருக்கு பயம்

பாலிவுட் நடிகர் நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழில் விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகருடன் ஹிந்தி படத்தில் சேர்ந்து நடித்திருந்தார். அப்போது படப்பிடிப்பின்போது நானா படேகர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டினார்.

Advertisement

குறிப்பாக 2018-ஆம் ஆண்டு 'மீ டூ' மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளைப் பலரும் முன் வைத்தபோது, தனுஸ்ரீ தத்தாவும் நடிகர் நானா படேகர் பாலியல் ரீதியாகத் தன்னைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நானா படேகர், 'அது பொய்யான குற்றச்சாட்டு. அதனால்தான் நான் கோபப்படவில்லை. படப்பிடிப்பில் என்ன நடந்தது என்று அங்கிருந்த அனைவருக்குமே தெரியும். திடீரென்று, 'நீங்கள் அதைச் செய்தீர்கள், இதைச் செய்தீர்கள்' என்று யாரோ ஒருவர் சொன்னால், நான் என்ன சொல்லமுடியும்? அதற்கு எல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது' என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

இது பேசுபொருளாகி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும்தனுஸ்ரீ தத்தா, 'நானா படேகர் பொய் சொல்லும் நோயுள்ளவர். பொய் சொல்வதையே தனது இயல்பாகக் கொண்டவர். ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு இப்போது பதிலளித்துள்ளார். அதுவும் முழுக்கப் பொய்யாகத்தான் பேசியிருக்கிறார். அவருக்கு இப்போது பயம் வந்துவிட்டது. அவருக்கு முன்பிருந்த ஆதரவு இப்போது இல்லை. அவரை ஆதரிக்கும் அவரது நண்பர்கள் கூட்டமே அவரது குணம் தெரிந்து அவரை கைவிட்டு ஓரங்கட்டிவிட்டனர். பேட்டியில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக என் மீது கோபமே கொள்ளவில்லை என்று கூசாமல் பொய் சொல்கிறார். அவரைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரிந்துவிட்டது. அவரது பொய்கள் இனி அவருக்குப் பலனளிக்கப் போவதில்லை' என்று கூறியிருக்கிறார்.

Updated On : 26 ஜூலை, 2024 at 2:41 PM

ஃபிட்னஸ் என்பது ஆரோக்கியம்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார்.

தற்போது ஹிந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் 'மகாராஜ்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் ஷாலினி பாண்டே பேசியிருப்பது, 'இப்போது நான் ஃபிட்டாக இருக்கிறேன். ஆனால், ஆரம்பக் காலத்தில் என் உடலை வைத்து நிறைய பேர் கேலி செய்தனர். அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் நடிக்கும்போதும், அதற்குப் பிறகும் நிறைய உருவக் கேலிகளை நான் எதிர்கொண்டேன். அப்போது நான் கொஞ்சம் குண்டாக இருந்தேன். ஃபிட்னஸ் என்பது உடல் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது, உடல் தோற்றத்துடன் சம்பந்தப்பட்டதல்ல' என்று கூறியிருக்கிறார்.

'ஹிந்தி தெரிந்த நான், தென்னிந்திய திரைப்படத்தில் நடித்துகொண்டிருந்ததால் எனக்கு அந்தந்த மாநில மொழிகள் தெரியவில்லை. இதை என் மேலாளர் தவறாகப் பயன்படுத்தி சில விஷயங்களைச் செய்து என்னை ஏமாற்றினார். அந்தச் சமயத்தில் என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் நமக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது' என்றும் அவர் பேசியிருக்கிறார்.

Updated On : 26 ஜூலை, 2024 at 2:41 PM

மனம் திறந்த காதலர்!

தனது ஆரம்பக் காலங்களில் உச்சத்திலிருந்த தமன்னா அண்மைக்காலமாக, மிகக் குறைந்த அளவிலான திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் 'காவாலா..' பாடலில் நடனமாடி ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார். இதைத் தொடர்ந்து ஹிந்தி வெப் சீரிஸ்களிலும், திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் வர்மாவுடன் இணைந்து வெப்சீரிஸிஸ் ஒன்றில் தமன்னா நடித்திருந்தார். இதற்குப் பிறகு அவர்கள் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது. இருவரும் காதலித்துவருவதாக, பாலிவுட்டில் புரளிகள் பரவின. இருவரும் எந்தவிதமான பதிலும் கூறாமல் அமைதி காத்தனர்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து மனம் திறந்து பேசியிருக்கும் நடிகர் விஜய் வர்மா, 'ஆரம்பக் காலத்தில் இதுபோன்ற செய்திகளைப் பார்க்கும்போது எங்களுக்கே ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. எங்களது தனிப்பட்ட விஷயங்களையும், பந்தங்களையும் தெரிந்துகொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களா என்று வியப்பாக இருந்தது. தமன்னாவுக்கும் எனக்கும் ஆழமான, அன்பான பந்தம்தான் இருக்கிறது. எங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் புரளிகளை நாங்கள் இருவருமே மகிழ்ச்சியாக சந்திக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.