சித்தரிக்கப்பட்டது 
தினமணி கதிர்

வாழ்க்கைக்கு தேவை வண்ணத்துப் பூச்சிகள்!

கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் கொண்ட வண்ணத்துப்பூச்சிகள் தஞ்சாவூர், அதன் சுற்றுப் பகுதிகளில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகமாகக் காணப்படுகின்றன.

வி.என். ராகவன்

கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் கொண்ட வண்ணத்துப்பூச்சிகள் தஞ்சாவூர், அதன் சுற்றுப் பகுதிகளில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக, மரங்கள் நிறைந்த பகுதிகளில் வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

இதுகுறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த அருங்கானுயிர் காப்பு, சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஆர். சதீஷ்குமாரிடம் பேசியபோது:

'வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களே இனப் பெருக்கக் காலம். ஏழெட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தஞ்சாவூரில் வண்ணத்துப் பூச்சிகள் அதிகமாக உள்ளன. கோவை, திருச்சி ஸ்ரீரங்கம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் பெருமளவில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி வளாகம், இருப்புப் பாதை வழித்தடங்கள், விளார் அய்யங்குளம், ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணை உள்பட மரங்கள் நிறைந்த பகுதிகளில் வண்ணத்துப் பூச்சிகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

சிவப்புடல் அழகி (கிரிம்ஸன் ரோஸ்), நீல வரியன் (புளூ டைகர்), வெந்தய வரியன் (பிளைன் டைகர்), கொன்னை வெள்ளையன் (காமன் எமிகிரன்ட்), எலுமிச்சை அழகி (லெமன் பட்டர்பிளை), கருவேப்பிலை அழகி (காமன் மொர்மான்), புல் மஞ்சள் (காமன் கிராஸ் யெல்லோ), முப்புள்ளி புல் மஞ்சள் (திரீ ஸ்பாட் கிராஸ் யெல்லோ), விகடன் (காமன் பைரோட்), நீல வசீகரன் (புளூ பன்சி), பழுப்பு வசீகரன் (லெமன் பன்சி), வரி ஆமணக்கு சிறகன் (ஆங்கில்டு கேஸ்டார்) உள்பட 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன.

நிகழாண்டு கோடை மழை தொடர்ச்சியாகப் பெய்ததால், வண்ணத்துப் பூச்சிகள் விரும்பி சாப்பிடக்கூடிய பழ வகைச் செடிகள் பரவலாக முளைத்துள்ளன. குறிப்பாக, வெளிநாட்டு வகையைச் சார்ந்த உண்ணிச் செடிகள் அதிக அளவில் முளைத்துள்ளன.

இது ஆக்கிரமிப்புச் செடியாக இருந்தாலும், வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கக் கூடியது. அதிலுள்ள பழங்களும், பூக்களும் வண்ணத்துப் பூச்சிகளின் இனப் பெருக்கத்துக்கு சாதகமானவை. இந்தச் செடி வேறெந்த செடிகளையும் வளரவிடாமல் அழிக்கக் கூடியது. இதனால் வனப் பகுதிகளில் இந்தச் செடிகள் அழிக்கப்படுகின்றன.

வண்ணத்துப் பூச்சிகளால் சில பழ வகைச் செடிகளுக்கு பாதகமும், பல்வேறு பழ வகைச் செடிகளுக்கு சாதகமும் உள்ளன.

தேனீ போன்று வண்ணத்துப் பூச்சிகளும் பூக்களில் தேனைக் குடிப்பதால் மகரந்தச் சேர்க்கை ஏற்படுகிறது. இதனால் மா, பலா, நெல்லி உள்ளிட்ட பழ வகை மரங்கள், செடிகளில் காய்ப்புகள் அதிகரிப்பதற்கு வண்ணத்துப் பூச்சிகள் பயனுள்ளதாக இருக்கின்றன.

எலுமிச்சை உள்ளிட்ட செடிகளில் இலைகளைத் தின்று சேதத்தை விளைவிக்கின்றன. இதனால், விவசாயிகள் வண்ணத்துப் பூச்சிகள் அதிகமாக வருவதை விரும்ப மாட்டார்கள். எனவே, வனப் பகுதிகளுக்கு மட்டுமே வண்ணத்துப் பூச்சிகள் சாதகமாக உள்ளன.

வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வில் முட்டை, லார்வா, பியூப்பா, வண்ணத்துப் பூச்சி என 4 நிலைகள் உள்ளன.

இணை சேர்ந்ததற்குப் பின்பு பெண் வண்ணத்துப் பூச்சி முட்டை இடுவதிலிருந்து அதனுடைய வாழ்க்கை சுழற்சி தொடங்குகிறது. லார்வா, பியூப்பாவைத் தொடர்ந்து நான்காவது நிலையில் வண்ணத்துப் பூச்சி வெளியே வருகிறது. வண்ணத்துப் பூச்சிகளில் ஆண், பெண் வேறுபாட்டை அறிந்துகொள்வது கடினம்.

முட்டைகளில் இருந்து வெளியே வரும் லார்வாக்கள் சாப்பாட்டுப் பிரியர்கள். இவற்றின் முதல் உணவு முட்டையின் ஓடு. இதையடுத்து, இலைகளைத் உண்ணத் தொடங்குகிறது. வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் இவை தோலை உரித்துவிடும். அதனால் எது ஆண், எது பெண் என்று கண்டுபிடிப்பது கடினம்.

சிலந்திகள், குளவிகள், ஓணான்கள் போன்றவை லார்வாக்களை உண்ணும் முக்கிய எதிரிகள். இவை உணவு உண்ணும் வேட்கையுடன் லார்வாக்களின் அருகில் வரும். சில லார்வாக்கள் சிக்கிக் கொள்ளும். வேறு சில தந்திரமாகத் தப்பித்துக் கொள்வதும் உண்டு.

சில லார்வாக்கள், சிறிய பாம்பு போல தங்களின் சுபாவத்தை மாற்றிக் கொள்ளும். வேறு சில லார்வாக்கள் பறவைகளின் எச்சத்தைப் போல நடித்து, துர்நாற்றம் வீசி எதிரிகளை அருகில் நெருங்க விடாமல் செய்யும்.

ஆனால், இவை தோற்றுப் போவது மனிதர்களிடம்தான். விளைந்ததை எல்லாம் ஒட்டுமொத்தமாகக் கூட்டம், கூட்டமாகத் தின்னும் புழுக்களைத் துரத்த மனிதர்கள் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கிறார்கள். இவற்றின் அழிவு நமக்கே ஆபத்தை விளைவிக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், வண்ணத்துப் பூச்சிகள் நலமுடன் வாழ்வது அவசியம். வண்ணத்துப் பூச்சிகளுக்கான கிராமங்களை உருவாக்கி, அவற்றுக்குரிய சூழல் மண்டலங்களை ஏற்படுத்த வேண்டும்.

இயற்கையின் இந்த அற்புதப் படைப்புகளைப் புவியிலிருந்து அழிந்து விடாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவற்றை குழந்தைகளுக்குக் காட்டி, பாதுகாக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்' என்கிறார் சதீஷ்குமார்.

-வி.என். ராகவன்,

படங்கள் எஸ். தேனாரமுதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT