தினமணி கதிர்

புள்ளிகள்

குருஷேவின் மனம் மாற்றிய அசோகர்!

கோட்டாறு கோலப்பன்

ஒருமுறை பிரதமர் ஜவாஹர்லால் நேருவும், ரஷிய தலைவர் குருஷேவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, 'உலகிலேயே வலிமை வாய்ந்த ரஷியப் படைதான். இப்போது கியூபாவைப் பிடிக்க, பெரிய கப்பற்படை போய்க் கொண்டிருக்கிறது' என்றார் குருஷேவ்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கலிங்கப் போரைப் பற்றியும், அதன் விளைவாக அசோகர் மனம் மாறிய விவரத்தையும் கூறினார். அவை குருஷேவின் மனதை மாற்றியது. உடனே கியூபா சென்ற கப்பற்படையை ரஷியாவுக்குத் திரும்ப குருஷேவ் உத்தரவிட்டார்.

மகாத்மா காந்தியிடம் ஒரு வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர் பேட்டி எடுக்கும்போது, 'நடைமுறைக்கு ஏற்றநிலையில் தாங்கள் நட்பைப் பற்றி ஒரு தெளிவான விளக்கம் அளித்தால் அதை மக்களிடம் அறிவிக்க முடியும். அதனால் மிகுதியான மக்கள் நண்பர்களை அடையும் வழியை அறிந்துகொள்வார்கள்' என்று கேள்வி கேட்டார்.

இதற்கு காந்தியோ, 'நட்பைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதே!' என்றார். 'அப்படியென்றால் உங்களுக்கு நண்பர்களே இல்லையா?' என்று வியப்போடு கேட்டார் நிருபர்.

உடனே காந்தி, 'எனக்கு பகைவர்களாக யாரும் இல்லை. அவ்வாறு இருந்தால்தானே நட்பின் பெருமை தெரியவரும். நான் என் கண்களில் படுகின்றவர்களையெல்லாம் என்னைப் போலவே நேசிக்கிறேன். அவர்களும் அவ்வாறே நேசிக்கின்றனர்' என்றார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் இல்லத்தில் கிருஷ்ணய்யர் என்ற சமையல்காரர் இருந்தார். ஒருநாள் மாலை ராஜாஜியிடம், 'இன்னிக்கு ஸ்பெஷல் அக்காரவடிசல் பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பாருங்கள்' என்று கூறி, கிண்ணம் நிறைய அக்காரவடிசலை அளித்தார்.

கிண்ணத்திலிருந்து அக்காரவடிசலை வேறொரு தட்டில் தள்ளிவிட்டு, மீதமுள்ளவற்றை நிதானமாக ருசித்து சாப்பிட்டார் ராஜாஜி. 'ரொம்ப நன்னா இருக்கு. ஆனா நீ வெல்லம் வெச்சிருக்கும் பாத்திரத்தில் கட்டெறுப்பும் வந்திருக்கும் போய் கவனி' என்றார் ராஜாஜி.

கிருஷ்ணய்யருக்கு ஆச்சரியம். அன்று அக்காரவடிசல் செய்ய வெல்லம் எடுத்த போது, அதில் கட்டெறும்பு ஊர்வது கண்டு, வெயிலில் சற்றுநேரம் வைத்தார். பயன்படுத்தியதுபோக மீதமுருந்ததை இறுக்கமான மூடி போட்ட பாத்திரத்துக்கு மாற்றியிருந்தார். இதுகுறித்து யோசித்து கொண்டே கிருஷ்ணய்யர், 'எப்படி கண்டுபிடித்தீர்கள்' என்று கேட்டார்.

இதற்கு ராஜாஜி, 'வெல்லத்தில் கட்டெறும்பு ஊர்ந்திருந்தால் அந்த வெல்லத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கும் பண்டத்தில், லேசான புளிப்பு எட்டிப் பார்க்கும்' என்றார். இதைக் கேட்ட சமையல்காரர் அசந்து போய் நின்றார்.

'வானொலி நிலையத்துக்கு ஒரு நாடகத்தை எழுதி அனுப்பினேன். ஒலிபரப்ப ஏற்றதல்ல என நிராகரித்து அனுப்பி விட்டனர். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் ஒரு பகுதியைத் தழுவி எழுதப்பட்ட படைப்பு அது. அதைதான் வானொலி நிலையம் நிராகரித்தது. அதே நாடகத்தை திருவாரூர் ராமபாலகான வினோத சபாவில் அரங்கேற்றினேன். பின்னர் அந்த நாடகத்தை திரைக்கதை வடிவமாக்கினேன். வெற்றிகரமான படமாக அமைந்தது. அதுதான் மந்திரிகுமாரி' என்றார் ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

ஒருமுறை வி.கே.ராமசாமி, நாடக வித்தகர் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை உள்ளிட்டோர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் நாடகம் நடத்த உதவி கேட்டு சென்றனர்.

உள்ளே சென்று ஒரு வார இதழை எடுத்து வந்து, 'நல்ல கதை கேட்டீங்களே. இதில் முப்பதாம் பக்கத்தில் நல்ல கதை இருக்கு. போய் பாருங்க?' என்று என்.எஸ்.கிருஷ்ணன் கூறி, அனுப்பிவைத்துவிட்டார்.

'நிதி கேட்டால் பத்திரிகையைக் கொடுத்து கதை படிக்கச் சொல்லிவிட்டாரே' என்று விரக்தி கலந்த ஏமாற்றத்தோடு திரும்பினர்.

பின்னர் அவர்கள் வேண்டா வெறுப்பாக முப்பதாம் பக்கத்தைத் திருப்ப, அங்கு மூன்றாயிரம் ரூபாய் இருந்துள்ளது.

அமெரிக்க அதிபராக கென்னடி இருந்தபோது, 1963-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லஸ் நகரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அப்போது துணை அதிபராக இருந்த லிண்டன் பி.ஜான்சன், 'எஸ்.ஏ.எம். 26000' என்ற எண் கொண்ட தனி விமானத்தில் பயணித்துகொண்டிருந்தார்.

கென்னடி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, லிண்டன் ஜான்சன் பறக்கும் விமானத்திலேயே புதிய அதிபராகப் பதவியேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்?

அமித் ஷாவுடன் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனை!

15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

மத்திய அரசுக்கு ரத்தக் கொதிப்பும், மாநில அரசுகளுக்கு இரத்தச் சோகையும் ஏற்பட்டுள்ளது!-மு.க.ஸ்டாலின் பேச்சு செய்திகள்:சில வரிகளில் | 23.8.25

SCROLL FOR NEXT