தினமணி கதிர்

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 182

சிறைச்சாலையில் இருப்பவர்களைச் சந்திப்பதற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன.

கி. வைத்தியநாதன்

சிறைச்சாலையில் இருப்பவர்களைச் சந்திப்பதற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. யாரும் எவரும்போய், சிறையில் கைதியாக இருப்பவர்களைச் சந்தித்துவிட முடியாது. அதற்கு முதலில் விண்ணப்பம் அளித்து அனுமதி பெற வேண்டும் என்பது மட்டுமல்ல, யாரைச் சந்திக்க விரும்புகிறோமோ அவர்கள் நம்மை சந்திக்க ஒப்புதல் தர வேண்டும்.

இதையெல்லாம் சொல்லி, லெட்சுமி சிவபார்வதியை வருத்தப்பட வைக்க நான் விரும்பவில்லை. அவரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் 11 மணிக்கு லெட்சுமி சிவபார்வதிக்கும் அவருடன் வந்திருக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சுமார் 10.30 மணிக்கெல்லாம் தனது ஆதரவு

எம்.எல்.ஏ.க்கள் தனித்தனி கார்களில் புடைசூழ லெட்சுமி சிவபார்வதி மத்திய சிறைச்சாலை வாசலுக்கு வந்தார். அங்கே ஏற்கெனவே பல பத்திரிகையாளர்கள் விவரம் அறிந்து

காத்திருந்தனர்.

காரில் இருந்தபடியே கண்ணாடியை இறக்கி சுற்றுமுற்றும் பார்த்த லெட்சுமி சிவபார்வதி, என்னைத்தான் தேடுகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவரது காரை நெருங்கியதும் அவரது முகம் மலர்ந்தது. என்னை அருகில் அழைத்தார்.

''அவரைப் சந்திப்பதில் எந்தவிதப் பிரச்னையும் இருக்காதே...? அனுமதி தந்துவிட்டார்கள்தானே? நீங்களும் என்னுடன் வருவீர்களா?'' என்று ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டார்.

அவரது குரலில் எதிர்பார்ப்பு இருந்ததே தவிர, பதற்றம் இருக்கவில்லை. இந்தச் சந்திப்பின் மூலம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது

தான் லெட்சுமி சிவபார்வதியின் நோக்கமே தவிர, ஜெயலலிதா மீதான அன்போ, அக்கறையோ, அனுதாபமோ அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. என்னால் ஏன் அவருடன் உள்ளே வர முடியாது என்பதை சுருக்கமாக விளக்கிவிட்டு, அவருக்கு எந்தவிதப் பிரச்னையும் இருக்காது என்பதை உறுதிப்படுத்தினேன். அவரது முகம் மலர்ந்தது.

அதற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட லெட்சுமி சிவபார்வதி காரில் இருந்து இறங்கினார். பத்திரிகையாளர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி அவர் சென்ற விதமே என்னை வியப்பில் ஆழ்த்தியது.

தனது எம்.எல்.ஏ.க்களையும் தன்னுடன் அழைத்துச் சென்று பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். குறிப்பிட்ட நேரம் நெருங்கி விட்டதால் ஜெயலலிதாவை

சந்தித்த பிறகு அவர்களுக்கு விவரமாகப் பேட்டி அளிப்பதாகக் கூறிவிட்டு, தனது எம்.எல்.ஏ.க்களுடன் லெட்சுமி சிவபார்வதி சிறைச்சாலைக்குள் நுழைந்தார்.

அவரை உள்ளே அழைத்துச் செல்ல, இரண்டு சிறைத்துறை அதிகாரிகள் பணிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவருமே நன்றாகத் தெலுங்கு பேசக்கூடியவர்கள் என்பதைப் பார்த்தபோது, உள்துறைக்குப் பொறுப்பான முதல்வர் கருணாநிதி எல்லாவற்றையும் துல்லியமாகத் திட்டமிட்டிருக்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு சிறைக்குள் நடந்த ஜெயலலிதா - லெட்சுமி சிவபார்வதி சந்திப்பு எப்படி இருந்தது என்பதை சிறைத்துறை அதிகாரி ஒருவர் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

''ஜெயலலிதா முகத்தைப் பார்த்ததுமே லெட்சுமி சிவபார்வதி 'ஓ'வென்று அழத் தொடங்கிவிட்டார். ஓடிப் போய் அவரைக் கட்டிப்பிடித்து அவர் அழுதபோது, பிரபல நடிகையாக இருந்த ஜெயலலிதாவேகூட அதைப் பார்த்துத் திணறிப் போனார் என்றுதான் சொல்ல வேண்டும். பலமுறை லெட்சுமி சிவபார்வதி தெலுங்கில் எதையோ சொல்லிக்கொண்டு அழுவதும், அவரை ஜெயலலிதா தட்டிக் கொடுத்து அமைதிப்

படுத்துவதும் தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் வேடிக்கையாக இருந்தது.

ஜெயலலிதா புன்முறுவலுடன் கடைசிவரை இருந்தாரே தவிர, லெட்சுமி சிவபார்வதி அழுகையுடன் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் எதற்காகவும் சற்றும் மனம் கலங்கவில்லை. சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் அவர்கள் சந்திப்பு தொடர்ந்தது. லெட்சுமி சிவபார்வதியுடன் வந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேரும் சிலைகள்போல எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தனர்'' - இவைதான் அந்த சந்திப்பு குறித்து சிறைத்துறை அதிகாரி என்னிடம் தெரிவித்த விவரம்.

ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு, மத்திய சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தார் லெட்சுமி சிவபார்வதி. வெளியில் வரும்போதே, அங்கே குழுமியிருந்த பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிப்பதற்குத் தயாராக அவர் இருந்தார். சிறையில் ஜெயலலிதாவுடனான சந்திப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் செய்தியாகப் போகிறது என்பதை தெரிந்திருந்ததால்தான் ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு அவர் வந்திருக்கிறார் என்பதை அவரது நடவடிக்கைகள் வெளிப்படுத்தின.

''என்னைப் போலவே பாதிக்கப்பட்ட பெண் அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக இந்த நிலைமைதான் அரசியலில் காணப்படுகிறது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில், பெண்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதன் அடையாளம்தான் இந்தக் கைது.''

''அவர் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்... ஜெயலலிதா கைது செய்யப்பட்டிருப்பதே தவறு என்று நீங்கள் கருதுகிறீர்களா?''

''ஊழலில் ஈடுபட்டார் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம். அதற்கு முன்பே கைது செய்யப்பட்டிருப்பது தவறு என்றுதான் சொல்கிறேன்.''

''உங்கள் சந்திப்புக்கு என்ன காரணம்? உங்களுக்கு ஏன் ஜெயலலிதா மீது இப்படியொரு திடீர் அக்கறை?''

''ஜெயலலிதாவைக் கைது செய்ததையும், அவர் வீட்டில் சோதனை நடத்தியதையும் எங்கள் கட்சி ஏற்கெனவே கண்டித்திருக்கிறது. பெண் அரசியல்வாதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதால் அவருக்கு ஆறுதல் கூறுவதற்காகத்தான் நான் வந்தேன்.''

''ஜெயலலிதாவுடன் என்ன பேசினீர்கள்?''

''ஜெயலலிதாவுக்கு ஆறுதல் கூறத்தான் நான் வந்திருக்கிறேனே தவிர, அரசியல் பேச வரவில்லை. எங்களது கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் இயங்குகின்றன. அதனால் கூட்டணி குறித்தும் பேச வேண்டிய அவசியம் எழவில்லை.''

''சிறைச்சாலையில் ஜெயலலிதா எப்படி இருக்கிறார்?''

''அவர் மன தைரியத்துடனும் உறுதியுடனும்தான் இருக்கிறார். அவரை சிறையில் பார்த்தபோது என்னால்தான் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் மன உறுதியுடன் இருக்கிறார். இந்தக் கைது தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி, மிகப் பெரிய மாற்றத்துக்கு வழிகோலும், பார்த்துக் கொண்டே இருங்கள்.''

''நீங்கள் வேறு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?''

''சந்திரபாபு நாயுடுக்கும் கருணாநிதிக்கும் வித்தியாசம் கிடையாது. எனக்கு எதிராக சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதுபோல, தமிழ்நாட்டில் கருணாநிதியின் ஆட்சி ஜெயலலிதா மீது பழிவாங்கும் நடவடிக்கையை முடுக்கிவிட்டிருக்கிறது. இதற்கான விலையை அவர்கள் கொடுக்கத்தான் போகிறார்கள்...''

லெட்சுமி சிவபார்வதியும் அவரைத் தொடர்ந்து அவரது ஏழு எம்.எல்.ஏ.க்களும் காரில் ஏறிச் சென்றுவிட்டனர். சிறைச்சாலைக்கு வந்தபோது காரில் அமர்ந்தபடி என்னைத் தேடிய லெட்சுமி சிவபார்வதியின் கண்களுக்கு சந்திப்பு முடிந்துவிட்ட நிலையில், என்னைத் தெரியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை!

மத்திய சிறைச்சாலையில் இருந்து நான் சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி விரைந்தேன். ஜெயலலிதாவின் ஜாமீன் விசாரணை குறித்த வாதம் நீதிபதி சிவப்பா அமர்வில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதுதான் அதற்குக் காரணம். நான் அந்த வழக்கின் வாதத்தைக் கேட்க விரும்பியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஜெயலலிதா சார்பில் அன்று ஆஜராக இருந்தவர் பிரபல வழக்குரைஞரான தில்லியிலிருந்து வந்திருந்த தேவிதாஸ் தாக்கூர்.

தேவிதாஸ் தாக்கூர் எனக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர். அவரை வழக்குரைஞராக அல்லாமல் அரசியல்வாதியாகத்தான் எனக்கு அதிகம் பழக்கம். அவரது வாழ்க்கைப் பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. அதைப் பதிவு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

பள்ளிக்கூடத் தலைமையாசிரியராக இருந்த தேவிதாஸ் தாக்கூர் வழக்குரைஞராக இருந்த நண்பர் ஒருவரின் தூண்டுதலால் சட்டப்படிப்பில் சேர்ந்தார். சட்டத்தில் பட்டம் பெற்ற தாக்கூர், விரைவிலேயே ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் முக்கியமான வழக்குரைஞர்களில் ஒருவரானார். அடுத்த கட்டமாக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி பதவியைத் துறந்து அரசியலில் குதித்தார், காஷ்மீர் மாநிலத்தின் அமைச்சராகவும், துணை முதல்வராகவும் உயர்ந்தார்.

1990-இல் அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். அவர் ஆளுநராக இருந்தபோது, அஸ்ஸாமில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் புதிய உத்திகளைக் கையாண்டார் என்கிற பாராட்டு அவருக்குக் கிடைத்தது. அரசியல் போதும் என்று முடிவெடுத்து தில்லிக்குத் திரும்பி, வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்போதுதான் அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அரசியல் சாசனம் குறித்த குறிப்பிடத்தக்க வல்லுநர்களில் அவரும் ஒருவர்.

நான் அவரது வாதங்களைக் கேட்பதற்கும், அவரை சந்திப்பதற்கும்தான் உயர்நீதிமன்றத்துக்கு விரைந்தேன்.

நான் நுழைந்த நேரத்தில், வழக்குரைஞர் தேவிதாஸ் தாக்கூர் தனது வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார். மடை திறந்த வெள்ளம் பாய்வதுபோல, அவரது வாதங்களில் தங்குதடையில்லாமல் சட்டப் பிரிவுகளும், முந்தைய வழக்குகள் குறித்த மேற்கொள்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நின்றன. நீதிபதி சிவப்பாவும், அந்த நீதிமன்றத்தில் இருந்த வழக்குரைஞர்கள், பார்வையாளர்களும் தேவிதாஸ் தாக்கூரின் வாதத்தைக் கூர்ந்து கவனித்தனர். அனைவரது கவனக் குவிப்பும் அவர்மீது இருந்தது.

''லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையிலோ, ரிமாண்ட் அறிக்கையிலோ ஜெயலலிதா மீது எந்தக் குற்றமும் சாட்டப்

படவில்லை. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்காகவே அட்டர்னி ஜெனரல் அறிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். இன்னொரு வேடிக்கை என்னவென்றால், தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்த அதிகாரியே, இப்போது ஜெயலலிதாவுக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கியது தொடர்பாகத் தொடர்பு இருப்பதைக் காட்ட எந்தவொரு ஆவணமும் இல்லை. ஊகம்தான். கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். நான்கு மாதங்களாக நிலுவையில் இருந்த விசாரணையில் பழிவாங்கும் நோக்கம்தான் தெரிகிறதே தவிர, குற்றத்தை நிரூபிக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை'' - இப்படித் தொடர்ந்து தேவிதாஸ் தாக்கூரின் வாதம்.

முன்னாள் முதல்வர் ஒருவர் தொடர்புடைய வழக்கில், அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி இன்னொரு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் வாதிட்ட வழக்கு இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

தனது வாதத்தை முடித்துக்கொண்டு தேவிதாஸ் தாக்கூர் உட்கார்ந்தபோது, அங்கே இருந்த அனைவரும் நீதிமன்றம் என்பதால் கரகோஷம் செய்யாத குறை.

அரசு வழக்குரைஞர் நடராஜன் எழுந்து, ''வருமானத்தைவிட அதிகமாக சொத்துகளைச் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்'' என்கிற தகவலைத் தெரிவித்தார். நீதிபதி சிவப்பாவின் முகத்தில் அதிருப்தி பரவியதைப் பார்க்க முடிந்தது.

''இது மாதிரியான வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள யாராவது ஒரு நபரைக் குறிப்பிடுங்கள் பார்க்கலாம்'' என்று நீதிபதி கேள்வி எழுப்பியபோது, அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT