இந்தியாவின் 'நயாகரா'
சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உள்பட்ட பஸ்தார் மாவட்டத்தில் உள்ள 'சித்ரகூட்' நீர்வீழ்ச்சி' சுற்றுலாப் பயணிகள் விரும்பத்தக்க சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உள்பட்ட பஸ்தார் மாவட்டத்தில் உள்ள 'சித்ரகூட்' நீர்வீழ்ச்சி' சுற்றுலாப் பயணிகள் விரும்பத்தக்க சுற்றுலா தலமாக மாறியுள்ளது. அமெரிக்கா, கனடாவில் பிரசித்திப் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியை போன்றிருப்பதால், இது 'இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி' என்று அழைக்கப்படுகிறது.
பஸ்தார் மாவட்டத்தில், ஜக்தல்பூரின் மேற்கே,
சித்ரகூடில் உள்ள 'குதிரைவாலி' பள்ளத்தாக்கில் இருந்து இந்திராவதி ஆறு 95 அடி உயர குன்றின் கீழே நீர்வீழ்ச்சியாக விழுகிறது.
இந்திராவதி ஆறு ஒடிஸாவின் காலஹண்டி மாவட்டத்தில் உருவாகி, ஒடிஸா, சத்தீஸ்கர் மாநிலங்களில் சுமார் 390 கி.மீ. பயணித்து பத்ரகாளி என்ற இடத்தில் கோதாவரி ஆற்றில் சங்கமிக்கிறது.
சித்ரகூட் நீர்வீழ்ச்சியின் அகலம் மழைக்காலத்தில் 300 மீட்டர் வரை விரியும். நீர்வீழ்ச்சியின் பேரழகை அருகில் படகில் சென்று பார்க்கலாம். சூரியனின் பயணத்துக்கு ஏற்ப நீர்வீழ்ச்சியின் நிறம் மாறும். அவ்வப்போது நீர்ச் சிதறல்களால் வண்ண வானவில் பல இடங்களில் தோன்றி மறையும்.
வனப் பகுதியின் மையத்தில் உள்ள இந்தக் கம்பீரமான நீர்வீழ்ச்சியை ஜூலை முதல் அக்டோபர் வரையில் ரசிக்க உகந்த மாதங்களாகும். ஜூலை தொடக்கத்தில் இந்தப் பகுதியில் மழை பெய்வதால், இந்திராவதி ஆறு பெரிய அளவிலான வண்டலைச் சுமந்து கொண்டு இளம் பழுப்பு நிறத்தில் பயணிக்கும். அதுவும் பார்வையாளர்களைக் கவரும் காட்சியாக அமைகிறது.
வெண்நிற நீர்வீழ்ச்சியைக் காண விரும்பும் புகைப்படக் கலைஞர்கள், இயற்கை ஆர்வலர்களுக்கு அக்டோபர் முதல் பிப்ரவரி பொருத்தமான மாதங்கள்.
சித்ரகூட் நீர்வீழ்ச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், பார்வதி தேவியின் பெயருடைய குகைகள், பழங்குடியினர் வணங்கும் புனித தண்டேஸ்வரி கோயில் உள்ளிட்டவை உள்ளன.
சித்ரகூட் நீர்வீழ்ச்சி அடைவது எப்படி?:
சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரிலிருந்து 284 கி.மீ. தொலைவில் சித்ரகூட் நீர்வீழ்ச்சி உள்ளது. ராய்ப்பூரிலிருந்து டாக்ஸியில் சுமார் ஐந்து மணி நேரத்தில் சென்றடையலாம்.
'கிராண்டுல் விசாகப்பட்டினம்' இருப்புப் பாதையில் உள்ள ஜக்தல்பூர் ரயில் நிலையம் சித்ரகூட் அருவிக்கு அருகேயுள்ள ரயில் நிலையம் . பயணிகள் விசாகப்பட்டினத்துக்கு விமானம் மூலம் பயணித்து, ஜக்தல்பூருக்கு ரயிலில் செல்லலாம்.
ஜக்தல்பூர் ரயில் நிலையத்திலிருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ள 'சித்ரகூட் நீர்வீழ்ச்சி' செல்ல டாக்ஸிகள் கிடைக்கும். இதற்கு சற்று தூரத்தில் 'திரத்கர் நீர்வீழ்ச்சியும் உண்டு. ஒரே நாளில் இரண்டு நீர்வீழ்ச்சிகளையும் காணலாம். இந்தப் பகுதியில் பறவைகள் அதிகம் வருவதால், பறவை ஆர்வலர்கள் வருகையும் உண்டு.
'கோண்ட்', 'மரியா' , 'முரியா' உள்ளிட்ட பழங்குடியினர் இங்கு அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் கலைச் சின்னங்கள், கைவினைகளைப் பொருள்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
ஜக்தல்பூர் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள 'தண்டமி' சொகுசு ரிசார்ட், சித்ரகூட் நீர்வீழ்ச்சி பயணத்தின்போது தங்குவதற்கு ஏற்ற இடமாகும். அறை எண் 101- இலிருந்து நீர்வீழ்ச்சியைப் பார்க்கலாம். இயற்கையுடன் நெருக்கமாக உணரவும், தங்கியிருக்கும் போது கூட சித்ரகூட் நீர்வீழ்ச்சியைக் காணவும் இந்த விடுதி மிகவும் பொருத்தமான இடத்தில் அமைந்துள்ளது.