முகப்பு
தினமணி கதிர்

'தி முகாப்' பிரமாண்டம்

'என்ன செய்தாலும் பெரிதாகச் செய். வித்தியாசமாகச் செய்' என்பது துபையின் தாரக மந்திரம்.

Updated On : 3 நவம்பர், 2024 at 5:18 PM
பிரமாண்டம் - Picasa
பகிர்:

'என்ன செய்தாலும் பெரிதாகச் செய். வித்தியாசமாகச் செய்' என்பது துபையின் தாரக மந்திரம். கடலில் ஆடம்பர வில்லாக்கள், புர்ஜ் கலிஃபா எனும் உலகின் மிக உயர்ந்த கட்டடம், கண்ணைக் கவரும் பூக்கள் நிறைந்த பிரமாண்ட பூங்கா, சர்வதேச கண்காட்சி, அகன்ற சாலைகள், அதிநவீன அறிவியல் அருங்காட்சியகம்... என்று சர்வதேச நகரமாக துபை உயர்ந்தபோது, செளதி அரேபியா பின்தங்கிவிட்டது.

பெட்ரோல் விற்பனை, மெக்கா மதீனாவுக்கு சமயச் சுற்றுலாவுக்கு ஆண்டுதோறும் வந்து செல்லும் கோடிக்கணக்கானப் பயணிகளால் வரும் வருமானத்தை நம்பியிருக்கும் சௌதி அரேபியா தனது சமூகக் கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. பெண்கள் கார் ஓட்ட அனுமதி, திரையரங்குகள் திறப்பு, அழகிப் போட்டி நடத்துதல் என்று சௌதி அரேபியாவும் மாறிவருகிறது.

'தபுக்' மாவட்டத்தின் நியோமில் சவூதி அரேபிய அரசு கட்டி வரும் ஒரே நேர்கோட்டில் அமைந்த 'தி லைன்' என்னும் ஸ்மார்ட் சிட்டி, கார்பன் மாசு உமிழ்வுகள் இல்லாத வகையில் உருவாகி வருகிறது. 500 மீட்டர் உயரமும், 200 மீட்டர் அகலமும், 170 கி.மீ நீளமுள்ள இந்த சொகுசு நகரில் 90 லட்சம் பேர் வாழலாம்.

Advertisement

உலகின் மிக உயரமான கோபுரமான 'புர்ஜ் கலிஃபா'வைப் பின்னுக்குத் தள்ள, உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக இருக்க சவுதி திட்டமிடப்பட்ட 'ஜெத்தா கோபுரம்' இன்னும் முடிக்கப்படவில்லை. அதற்குள் புதிய அறிவிப்பை சௌதி அரேபியா அரசு செய்துள்ளது.

தலைநகரான ரியாத்தில் மையத்தில் 400 மீட்டர் நீள, அகல, உயரம் கொண்ட கன சதுர வடிவ கட்டிடமான 'தி முகாப்' பிரம்மாண்டமாக கட்டப்படும் என்று அறிவித்துள்ளது. 'தி முகாப்' கட்டி முடிக்கப்பட்டால், அது உலகின் மிகப்பெரிய கட்டமைப்பாக மாறும். இந்த வானளாவிய கட்டடம், நியூயார்க்கின் சின்னமான எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை போல் இருபது மடங்கு இட வசதியாக, இருபது லட்சம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.

இந்தக் கட்டடத்தை கட்டி முடிக்க சுமார் 5 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட கட்டடத்தில் 1,04,000 வீடுகளுடன், 250 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான இட வசதிகள் இருக்கும்.

வீடுகளைத் தவிர சில்லறை விற்பனை, பெருநிறுவன, கலாசார மையங்கள் வணிக வளாகங்கள் அமையும். அருங்காட்சியகம், பல்கலைக்கழகம், திரை, நாட்டிய, இசைக் கலை அரங்குகள் என்று எண்பதுக்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு, கலாச்சார மையங்கள் ஆகியன இடம் பெறும்.

சுருக்கமாகச் சொன்னால், ஆடம்பரத்தை உச்சமாக அவதாரம் எடுக்கப் போகும் 'தி முகாப்' உலக மக்களை ஈர்க்கும் சுற்றுலா தலமாகவும் மாறும். சௌதியின் இந்த அறிவிப்பைக் கேட்ட துபைஅடுத்து என்ன பிரமாண்டத்தை கட்டப் போகிறதோ ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.