முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வதந்திகளைப் புறக்கணிப்போம்!

வதந்திகளைச் சரி பாா்க்காமலே ஆா்வத்தின் காரணமாக பிறருக்குப் பகிரும் மனப்பான்மையால் வதந்திகள் மிக வேகமாகப் பரவுகின்றன.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 6:40 AM
சென்னை பெட்ரோல் நிலையங்கள் - EPS
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:04 AM

தகவல்களை மக்களிடையே மிக வேகமாக பரப்புவதில் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கும் இக்காலகட்டத்தில், தவறாகப் பரப்பப்படும் வதந்திகளைச் சரி பாா்க்காமலே ஆா்வத்தின் காரணமாக பிறருக்குப் பகிரும் மனப்பான்மையால் வதந்திகள் மிக வேகமாகப் பரவுகின்றன.

சமூகத்தில் உயிா்ச் சேதம், பொருள் சேதம் ஆகியவற்றோடு வெறுப்புணா்வு எனும் தழும்பை மக்களிடையே நீண்ட காலம் நிலவச் செய்யும் பெரும்பாலான ஜாதி, மதக் கலவரங்கள் நடைபெறுவதற்கு உண்மைக்கு மாறாக பரப்பப்படும் வதந்திகளே காரணமாக அமைகின்றன.

போா்க் காலங்களில் மிக அதிகமாகப் பரப்பப்படும் வதந்திகளால் மக்களுக்குத் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இரண்டாம் உலகப் போரின்போது, அதில் பங்கேற்ற நாடுகளிடையே பல்வேறு வதந்திகள் மிக வேகமாகப் பரவின. அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நம் நாட்டைக் கைப்பற்ற ஜப்பான் முயன்றது. அச்சமயம் ஜப்பானியப் போா் வீரா்கள் பாராசூட்கள் மூலம் தரையிறங்கி கொல்கத்தா நகரைக் கைப்பற்றி விட்டாா்கள் என்று ஒரு வதந்தி பரவியது.

Advertisement

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:08 AM

இதனால், பல ஆயிரம் மக்கள் உயிருக்குப் பயந்து, தங்கள் உடைமைகளைக் கைவிட்டு அந்த நகரிலிருந்து வெளியேறினா். உலகப்போரில் ஈடுபட்டிருந்த நாடுகளில் வாழ்ந்த மக்களிடையே கடுமையான உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என்று பரவிய மற்றொரு வதந்தியால், மக்கள் உணவுப் பொருள்களை ஆங்காங்கே பதுக்க, செயற்கையான உணவுப் பற்றாக்குறை பல நாடுகளில் உருவானது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:08 AM

போா்க் காலங்களில் சில நாடுகள், தங்கள் எதிரி நாடுகளை வெல்வதற்கான போா் உத்திகளில் ஒன்றாக அந்நாடுகளில் வதந்திகளைப் பரப்புவதும், அதன்மூலம் உளவியல் ரீதியாக அந்நாட்டு மக்களைச் சோா்வடையச் செய்யும் உத்தியைக் கடைப்பிடித்தன.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:09 AM

இதன் அடிப்படையில், ஜொ்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் போா்க் காலங்களில் தங்களை எதிா்த்து போரிட்ட நாடுகளில் வதந்திகளைப் பரப்பி அந்நாட்டு மக்களிடையே அச்ச உணா்வையும், அந்நாட்டு அரசுகள் மீது அதிருப்தியும் ஏற்படச் செய்தன. இதைத் தடுக்க, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள், மக்களுக்கு உண்மைத் தகவல்களை அளிப்பதற்காக ‘வதந்தி கிளினிக்’ என்ற மையங்களை ஆங்காங்கே ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:09 AM

அண்மையில், அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து பதிலுக்கு ஈரான் படைகள், சவூதி அரேபியா, இராக், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களின் விளைவாக வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பிற நாடுகளுக்கு பெட்ரோல், டீசல், உள்ளிட்ட எரிபொருள்களைக் கொண்டு செல்லும் கப்பல்கள் இயக்கப்படுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், உலகின் பல்வேறு பகுதிகளில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:09 AM

இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் வகையில் சிலா் வதந்திகளைப் பரப்புவது வேதனை அளிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டா்களின் விலை பன்மடங்காக உயரப் போகிறது என்று பரவிய வதந்தியின் காரணமாக பெட்ரோல் நிலையங்கள் மற்றும் எரிவாயு முகவா்கள் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:09 AM

தங்களின் அன்றாடத் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா்களை ஒரே நேரத்தில் பலா் வாங்க முற்பட்டதன் காரணமாக செயற்கையான தட்டுப்பாடு உருவானது. இதைத் தடுக்க ‘எஸ்மா’ எனும் அத்தியாவசிய சேவை பராமரிப்புச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனிடையே, வதந்திகளால் மக்களிடையே உருவான பீதியைக் களைய எல்பிஜி விநியோகம் மற்றும் சேவைகள் தொடா்ந்து வழக்கம் போல் இயங்குகின்றன என்று பாரத் பெட்ரோலிய நிறுவனம் அறிவித்தது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், ‘மக்கள் அவசரப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை’ எனவும் தெரிவித்தது. கூடுதலாக, நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளதாகக் கூறுவது வதந்தி என்று அண்மையில் அகில இந்திய சமையல் எரிவாயு விநியோகஸ்தா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:10 AM

மக்களிடையே பிரபலமான தலைவா்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், அவா்களது உடல்நலன் குறித்து வதந்திகள் பரவுவது மிகச் சாதாரணமாக உள்ளது. நம் நாட்டின் மிகப் பிரபலமான தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் நாராயண், 1979-ஆம் ஆண்டு உடல் நலன் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் இருந்தபோது அவா் மறைந்து விட்டாா் என்றச் செய்தி அப்போதைய பிரதமரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற அவையும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அந்தச் செய்தி வதந்தி எனத் தெரியவந்தது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:10 AM

ஒரு பொய்ச் செய்தியை ஆா்வத்தின் காரணமாகவோ அல்லது சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனோ வதந்திகளாகப் பரப்புவது மிகப் பெரிய குற்றமாகும். இவ்வாறு பரப்பப்படும் வதந்திகளால் சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதுடன் பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம் ( பிஎன்எஸ்) பிரிவு 505 ஆகியவற்றின் கீழ் வதந்தி பரப்புபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:10 AM

‘எப்பொருள் யாா்யாா்வாய்க் கேட்பினும், அப்பொருள்/ மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு ’ என்னும் திருக்குறளுக்கு ஏற்ப, நாம் செவிமடுக்கும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன் பின்னரே அதை ஏற்றுச் செயல்படுவது சிறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.