ஆண்கள் மட்டும் கோலோச்சும் பாடப் புத்தகங்கள் தயாரிப்பு, விற்பனையில் , திருச்சியிலிருந்து அகில இந்திய அளவில் தடம் பதிக்கும் நிறுவனமாக விளங்குகிறது மூன்று பெண்களால் நடத்தப்படும் 'மரியா பப்ளிஷர்ஸ் (பி.) லிமிடெட்'. சுமார் 450-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களைத் தயாரித்து, விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த நிறுவன இயக்குநரில் ஒருவரான டோரதி, சந்திரமுகி 2 உள்ளிட்ட 20 படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர். மற்றொரு இயக்குநர் கேதரின், இங்கிலாந்தில் கிரியேட்டிவ் ரைட்டிங் தொடர்பாக எம்.ஏ. படித்தவர்.
இருவரிடம் பேசியபோது:
'எங்கள் தந்தை ஏ.ஜெய்சங்கரின் பூர்விகம் சென்னை. பாடநூல்கள் தயாரிக்கும் நிறுவனமொன்றின் விற்பனைப் பிரதிநிதியாக, திருச்சியில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றினார். அப்போது 'மரியா என்டர்பிரைசஸ்' என்ற பெயரில் பிற பதிப்பகங்கள் தயாரிக்கும் பாடப் புத்தகங்களை விற்பனை செய்து வந்தார். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிகுலேஷன், மாநிலப் பாடத் திட்டங்களுக்கு ஏற்ப பாடப் புத்தகங்களையும் தயாரித்தும் விற்பனை செய்தார்.
2022 செப்டம்பர் மாதத்தில் மாரடைப்பால், தந்தை காலமானபோது, 'மரியா என்டர்பிரைசஸ்' நிறுவனத்தில் மிகக் குறைவான தொழிலாளர்களே பணியாற்றிக் கொண்டிருந்தனர். திடீரென எங்கள் குடும்பம் நிலைகுலைந்தது.
உடனிருந்த உறவினர்கள் செய்த முறைகேடுகளால் பணமும் பறிபோனது.
எனது தாய் நிர்மலா மனம் தளரவில்லை. அவருக்குத் துணையாக, நாங்கள் இருவரும் நின்றோம். நாங்கள் மூவரும் பாடப் புத்தகங்கள் தயாரிப்பு குறித்து கற்றோம். வங்கிக் கடனுதவியுடன் தொழிலை மேம்படுத்தினோம்.
தற்போது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, பிகார், மத்தியப் பிரதேசம், ஒடிஸ்ஸா, புதுச்சேரி, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாடப் புத்தகங்களை விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம்.
பல்வேறு வகையான பாடத்திட்டங்களுக்கு ஏற்ப 450-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடப் புத்தகங்கள் தயாரித்து வழங்குகிறோம். எண்ம (டிஜிட்டல்) வடிவிலும் பள்ளி நிர்வாகத்தினர் கேட்பதால், அதற்கேற்பவும் நாங்கள் வடிவமைக்கிறோம். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, சம்ஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் புத்தகங்கள் அச்சிட்டு விநியோகிக்கிறோம்.
ஆக்ஸ்போர்டு போன்ற பிரபலமான பதிப்பகங்கள் மிகப் பெரிய நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் பாடப் புத்தகங்களை வழங்குகின்றன. ஆனால் எங்கள் நிறுவனமோ நகரங்கள், கிராமப்புறப் பள்ளிகளுக்குத் தேவையான பாடப் புத்ததங்களைத் தயாரித்து வழங்குகிறது.
பாடத் திட்டத்துக்குத் தேவையான பாடங்களை அந்தந்த மொழிகளில் ஆசிரியர்கள் மூலம் தயாரித்து அவற்றை டிசைன் செய்து சிவகாசி, மும்பையில் அச்சிட்டு பள்ளிகளுக்கு அனுப்புகிறோம்.
இதுதவிர, ஐக்கிய அமீரக நாட்டுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். விரைவில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துச் செயல்படுகிறோம்..
புதுதில்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் பதிப்பாளர்கள் வெளியிடங்களுக்கு வந்து புத்தகங்களை விற்பனை செய்வார்கள். ஆனால் முதல் முறையாக, தென் பகுதியான திருச்சியில் இருந்து வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்குப் புத்தகங்களை விற்பனை செய்கிறோம். இது மிகவும் பெருமையான விஷயம்.
தற்போது மரியா பப்ளிஷர்ஸ் நிறுவனத்தின் விற்றுமுதல் ஆண்டுக்கு ரூ.20 கோடியாகும். திருச்சி, மைசூரு ஆகிய இடங்களில் குடோன்கள் அமைத்தும், விநியோகம் செய்கிறோம்.
எங்கள் ஊழியர்களை எங்களது குடும்பத்தினர் போலப் பாதுகாக்கிறோம். அவர்களுக்கு மருத்துவ உதவிகள், பி.எஃப். எனத் தேவையானவற்றைச் செய்கிறோம்.
உற்பத்தி, விற்பனையில் இப்போது எங்கள் நிறுவனத்தில் சுமார் 110 பேர் பணிபுரிகின்றனர். இவர்களோடு ஆண்டுக்கொரு முறை திருச்சியில் கூடி அடுத்த ஆண்டுக்கான இலக்கு குறித்து முடிவு செய்திறோம். கரோனா காலத்திலும் 70 சதவீதம் ஊதியம் தந்தோம். பலருக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பையும் வழங்கியுள்ளோம்.
விரைவில் அகில இந்திய அளவில் விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்'' என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.