அ.கௌரிசங்கர்
அரசமுத்து - இதுதான் அவனுடைய பெயர். குழந்தைக்கு அரச யோகம் உண்டு என்று பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஜோசியர் பழனி சொன்னதாலேயே அவனுக்கு அந்தப் பெயரை வைத்து விட்டார்கள் அவனுடைய பெற்றோர் மாணிக்கமும், லட்சுமியும்.
போகப் போகத்தான் தெரிந்தது பெயருக்கும் யோகத்துக்கும் பொருத்தம் கிடையாது என்று. அதற்காக அந்த ஜோசியரை மீண்டும் நேரில் பார்த்து கோபித்துகொள்ளவா முடியும்?
பள்ளிக்கூடம் என்ற வார்த்தையைக் கேட்டாலே, அரசமுத்துவுக்கு வேப்பங்காய் நினைவு தான் வந்து போகும். ஒருவழியாக கிராமத்துப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டான். அவனுக்கு அந்தப் படிப்பே இமயமலைக்கு சமானம்.
கிராமத்து வயல்களில் நாற்று பறிப்பது, களையெடுப்பது என்று காலம் காலமாக மாணிக்கமும், லட்சுமியும் வேலை பார்த்து வந்த நிலையில், சென்னைக்கு சென்றால், நல்ல வேலை கிடைக்கும் என்று சிலர் சொல்லக் கேட்டு, மூட்டை முடிச்சுகளை எடுத்துகொண்டு, சிறுவன் அரசமுத்துவையும் அழைத்துகொண்டு வந்து சேர்ந்தனர்.
சைதாப்பேட்டை அடையாறு ஆற்றை அடுத்த வீடுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துகொண்டு விட்டார்கள். மாதம் ஐம்பது ரூபாய் வாடகை. ஒற்றை அறைதான். அனைத்தும் அந்த அறைக்குள் தான். படுக்கை, சமையல் போன்ற இத்தியாதிகள். காலைக்கடன்களை முடிப்பதற்கு இருக்கவே இருக்கிறது ஆற்றங்கரை.
சென்னையில் வேறு வழியின்றி புகலிடம் வருபவர்களுக்கு இதுபோன்ற இடங்கள்தான் சொர்க்கலோகமாக இருந்தன. கணக்கிலடங்காகச் சிரமங்களை சகித்துகொள்ளும் மனப்பான்மையுள்ளவர்களுக்கு இங்கு தங்குவது சாத்தியம்.
ஒருவழியாக மாணிக்கம் பலூன்களை விற்க கற்றுகொண்டான். அதற்கும் சில காரணங்கள் இருந்தன. அவனுடைய குடில் இருந்த சந்தில் வசித்த இருபது குடும்பங்களுக்கும் பலூன் விற்பதுதான் தொழில். இவனும் அவர்களோடு சேர்ந்து பலூன் விற்கத் தொடங்கினான். தெரிந்தோ, தெரியாமலோ இந்தத் தொழிலை கற்றுவிட்டான். ஏற்றுகொண்டும் விட்டான்.
இதைத்தவிர வேறு எந்தத் தொழிலும் அவனுக்கு தெரியாது என்ற நிலைக்கும் நாளடைவில் தள்ளப்பட்டான். மொத்தத்தில், இலகுவான வேலை செய்ய பழகியவன் வேறு வேலைகளுக்கு முயற்சிகள் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதாவது வேறு தொழில்கள் செய்யவேண்டும் என்ற ஆவல் வரும்போதெல்லாம், ஆவலை விலக்கி வைத்து தான் இதுவரை பழகியிருக்கிறான்.
பலூன்களை விற்று விற்று - என்ன சந்திர மண்டலத்துக்காகச் செல்லமுடியும் ? நாளடைவில் பள்ளிக்குச் செல்ல விரும்பாத தன்னுடைய மகன் அரசமுத்துவையும் தொழிலில் இணைத்துகொண்டான்.
காலப் போக்கில் அரசமுத்து வளர்ந்து பெரியனவாக மாற, மாணிக்கம் தம்பதியர் மீண்டும் கிராமத்துக்குச் செல்ல முடிவு எடுத்த நிலையில், அரசமுத்துவுக்கு வாரிசு அடிப்படையில் தொழில் கைமாறியது. ஏன் என்றால், அரசமுத்துவுக்குத் திருமணம் என்ற ஒன்றையும் செய்து வைத்துவிட்டான் மாணிக்கம்.
தற்போது இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன. கடைசி குழந்தை ஒன்றரை வயது; ஒழுகின மூக்கோடு அவன் முன்பு அமர்ந்துகொண்டு அவனையே பார்த்துகொண்டு இருப்பாள். அப்பா என்றாலே அவளுக்கு உயிர். அவனுடைய வேலை முடிந்து விட்டு, வீட்டுக்கு வந்தவுடன், அந்தக் குழந்தை அவனை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை. அந்தக் குழந்தையின் கண்கள், அதன் பார்வை அன்றைய தினத்தில் அவன்பட்ட சிரமங்களை மறக்கடிக்கச் செய்துவிடும்.
சைதாப்பேட்டை மார்க்கெட்டில் கடை விரித்திருக்கும் ராமசாமி கடை தான் அந்தச் சந்தில் பலூன் வியாபாரம் செய்பவர்களுக்குத் தொழிலுக்குத் தேவையான சகல உபகரணங்களைத் தரும் ஒரு கடையாக மாறியிருந்தது. இன்னொரு காரணம், ராமசாமி கடனுக்கும் பொருள்களைத் தருவார்.
தேவைப்படும்போதெல்லாம், அரசமுத்துவும் ராமசாமி கடைக்குச் சென்று அவனுக்கு வேண்டிய பலவிதமான அளவுகளில் கிடைக்கும் பலூன்கள்; ஊதியவுடன் அவற்றை இறுக்கக் கட்டுவதற்குத் தேவையான மெல்லிசான நூல் கண்டு, ஓரளவு ரப்பர் பேன்ட் - இப்படியாகக் கிட்டத்தட்ட ஒரு சிறிய தொழில் நிறுவனம் போன்ற அவனுடைய பலூன் தயாரிப்பு நிறுவனத்துக்குத் தேவையான அணைத்து சாமான்களை வாங்கிவைத்து விடுவான்.
வியாபாரம் சூடு பிடிக்கிற காலங்களில் தினமும் அவருடைய கடைக்குச் செல்ல வேண்டியது வரும். இவர்களுக்காகவே இரவு 12 மணி வரை சில நேரங்களில் ராமசாமி கடையை திறந்து வைத்திருப்பார்.
முந்தின தினம் வாங்கி வைத்திருந்த பலூன்கள், நூல் கண்டுகள் இவற்றை ஒரு கான்வாஸ் பையில் வைத்திருப்பான் அரசமுத்து. அந்த கான்வாஸ் பை அவனுடன் பத்து வருடங்களாகப் பயணித்துகொண்டு வருகிறது. இடது தோளில் தொங்கிக் கொண்டு இருக்கும். மூன்றாவது தெருவில் இருக்கும் கணேசன் டெய்லரிடம் சொல்லி, பைக்குள் மூன்று தனித் தனி அறைகள் இருக்குமாறு செய்துகொண்டு விட்டான்.
ஒன்றில் பலூன்கள்; இரண்டாவது அறையில் நூல் கண்டு. மூன்றாவது அறையில் ரப்பர் பேண்டுகள்.
அரசமுத்து தொழிலுக்குச் செல்கிறான் என்றால், தலையில் ஒரு முண்டாசு, இடது தோளில் கான்வாஸ் பை.
வலது கையில் ஆறு அடி நீளமுள்ள ஒரு கொம்பு; அதில் ஏற்கெனவே ஊதி தயாராகயிருக்கும் பலூன்களை சிறிய குச்சிகளில் கட்டி சொருகி வைத்திருப்பான். கிட்டத்தட்ட இருபதுக்கு மேலான பலூன்கள் பல திசைகளில் நீட்டிக்கொண்டு இருக்கும். இவைதான் அவனுடைய விளம்பர பேனர்.
இடது கை மணிக்கட்டில் தொங்கிக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கும் ஒரு மஞ்சள் பை. அதுதான் அவனுடைய பணப் பெட்டி. சில்லறைகள் நிறைந்திருக்கும். மஞ்சள் பையின் இரண்டு கைப்பிடிகளில் ஒன்று கிழிந்துவிட்டது. அதை சணல் கயிற்றால் கட்டி வைத்திருக்கிறான். கேட்டால் பல கடைக்காரர்கள் அதைவிட நல்ல பைகளை அவனுக்கு இலவசமாகவே தருவார்கள். அவனிடம் அவர்கள் கேட்டும் வைத்திருக்கிறார்கள்.
"என்னடா இந்த வேலை? தினமும் கையில் ஒரு நீளமான குச்சி எடுத்துகொண்டு, தெரு தெருவாக சுற்றிக்கொண்டே இருக்கிறோமே; வெயிலில் காய்கிறோம்; மழையிலும் நனைகிறோம். இப்படியெல்லாம் நாம் வேலை செய்யவேண்டுமா?' என்று சொல்லிக் கொண்டே, அந்தக் குச்சியிடம் கோபித்துகொண்டு, பல நாள்கள் சந்தின் முனையில் இருக்கும் வேப்ப
மரத்தின் கீழே படுத்திருந்திருக்கிறான்; சில சமயங்களில் சாலையோரங்களில் மரங்களின் அடியிலும் படுத்திருந்திருக்கிறான்; கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். ஆனால் அவனுடைய கண்கள் கண்ணீரை வெளியில் விட அனுமதிப்பதில்லை.
வேலையை உதறித் தள்ளும் முடிவுக்கு வரும் காலகட்டங்களில் அவனுடைய பெண் குழந்தையின் கண்கள், அவன் மீது வைத்திருக்கும் அதன் நம்பிக்கையான பார்வை அவனுடைய வேலை பளுவை தள்ளி வைத்துவிடும். அந்தக் குழந்தைக்கு நன்றாகத் தெரியும். அவன் கடலை மிட்டாய் வாங்கி கொடுப்பவன் என்று. அவன் தன்னுடைய அப்பன் என்று அம்மை சொல்லி அவளுக்குத் தெரிந்திருந்தாலும், அந்த பெண் குழந்தைக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றே ஒன்று - "இவன் நமக்கு தினமும் கடலை மிட்டாய் வாங்கிக்கொடுப்பவன்' என்பதுதான்.
ஆனால் அவன் வெளியில் கடும் வெயிலில் அலைந்து, மழையில் நனைந்து, காற்றில் பறந்து வரும் தூசிகளை மூக்குத்துவாரங்களில் ஏற்றிக்கொண்டு, பல நபர்களின் ஏச்சுகளையும் சுமந்து கொண்டு அலைந்து சம்பாதித்து வந்த காசில்தான் அவளுக்கு மிட்டாய் வாங்கி வந்து கொடுக்கிறான் என்பது அந்த குழந்தைக்குத் தெரியாது. அதற்கான மனப்பக்குவம் வருவதற்கு காலங்கள் பிடிக்கும் என்பது தான் விதி.
வெளியே தெருக்களை எல்லாம் சுற்றிவிட்டு வீடு வந்து சேரும்போது மணி ஆறு அல்லது ஏழு ஆகி
விடும். அதற்கு மேல் அவனுக்கு வியாபாரம் இருக்காது. அவனுடைய வியாபாரம் அப்படி. கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் நேரம் காலம் பார்க்காமல், பலூன்கள் விற்றுகொண்டிருக்கலாம். சில சமயங்களில் இரவு பன்னிரண்டு மணி வரை கூட விற்று வந்திருக்கிறான்.
குழந்தைகள் என்ற வாடிக்கையாளர்களைத் தவிர வேறு யாரும் அவனை கண்டு கொள்ளுவதேயில்லை. அப்படி கண்டு கொள்ளுவதாக இருந்தாலும் குழந்தை
களோடு வரும் பெரியவர்கள் மட்டும்தான். அதுவும் அந்தக் குழந்தைகள் அவனைப் பார்த்து பலூன் வாங்கித் தந்தால்தான் உண்டு என்று அடம் பிடித்தால்தான். இல்லையென்றால் அதுவும் இல்லை. இந்தத் தொழிலுக்கு வந்த பின்னர் குழந்தைகளின் மனதை நன்றாகத் தெரிந்து கொள்ள பழகிக்கொண்டு விட்டான். இவனை ஒரு குழந்தை பார்த்து, அடுத்த நொடியில் இவன் அந்த குழந்தையைப் பார்த்து புன்முறுவல் செய்து விட்டால், அவனுடைய வியாபாரம் முக்கல்வாசி முடிந்தமாதிரிதான். அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்தக் குழந்தை கையில் ஒரு பலூன் சகிதம் நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கலாம்.
கோயில் கொடை, திருவிழாக்கள் போன்ற நாள்களில் அவனுக்கு வியாபாரம் களை கட்டும். இந்த மாதிரி நாள்கள் வரும்போது, அடுத்த தெருவில் வசிக்கும் அமல்ராஜ் தான் அவனுக்கு கை கொடுத்து உதவுவான். ரூபாய் ஐநூறு அல்லது ஆயிரம் கடன் வாங்கி, விதவிதமான பலூன்கள், ரப்பர் பேண்டுகள். கட்டுவதற்கு தேவையான நூல் கண்டுகள், ஒன்றரை அடி நீளமுள்ள குச்சிகள் போன்றவற்றை மெயின் ரோட்டில் கடை போட்டிருக்கும் ராமசாமியிடம் வாங்கி வந்து விடுவான். அவன் இடது பக்கத் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் கான்வாஸ் பையில் அவற்றை போட்டு பிரித்து வைத்து கொள்ளுவான். அவனுடைய கை தேவைக்கு தகுந்தவாறு பைக்குள் நுழைந்து தேவையான பொருள்களை எடுக்கும். அப்படி பிரித்து வைத்துகொண்டால் தான், தேவைக்குத் தகுந்தவாறு வெற்று பலூன்களை விசுக்கென்று எடுக்க முடியும். இல்லாவிட்டால் பாக்கெட்டுகளை பிரிப்பதற்கே நேரம் ஆகிவிடும். நேரத்தை தன்வசப்படுத்துவதில் அவன் கில்லாடி. நன்றாக படித்து விட்டு, அலுவலகத்தில் அதிகாரி அளவுக்கு வேலை பார்க்கும் மன பலம் கொண்டவன் அவன். படிப்பு மண்டையில் ஏறவில்லை. அதன் அருமையை பற்றி அவனுக்கு சொல்லித்தர எவரும் முன்வரவில்லை என்பது தான் நிதர்சனம்.
வெளியே சுற்றி விட்டு வீடு வந்து சேரும்போது மூன்று வயது பையனுக்குப் பிடித்த மசால் வடையும், இளவயது பெண் குழந்தைக்கு பிடித்த கடலை மிட்டாயும் வாங்கி கொடுப்பது அவனுக்கு வழக்கம்.
நல்ல மழை பெய்துவிட்டால், மெயின் ரோட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அரை மணி நேரம். தெரு முனையில் இருக்கும் பரந்த ஆலமரத்தின் கீழே ஒரு மணி நேரம் இப்படியாக நின்று நின்று நேரம் கடந்துவிடும். தெருக்களில் தண்ணீர் கரை கடந்து ஓடும். குழந்தைகளைப் பார்ப்பதே அரிது தான். பெரிய, பெரிய அபார்ட்மென்டுகளில் பால்கனி கம்பிகளைப் பிடித்துகொண்டு, இவனுடைய ஊதல் குரல் கேட்டு வெளியே வந்து நிற்கும் குழந்தைகள் நிறைய உண்டு. அவர்களுக்காக பல படிக்கட்டுகள் இறங்கி வந்து பலூன் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் அரிதிலும் அரிது. அபார்ட்மென்ட் வாட்ச்மேன்கள் இவனை அண்ட விட மாட்டார்கள்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகிறதே என்று மனது வாதித்துகொண்டே இருக்கும். பத்து பலூன்கள் விற்றால் இவனுக்கு முப்பது ரூபாய் லாபம் கிடைக்கும். நூறு பலூன்கள் விற்றால் கையில் முந்நூறு ரூபாய் வைத்துகொண்டு தலை நிமிர்ந்து வீட்டுக்குள் செல்லலாம். இப்படி சில நாள்கள் நடந்து விடும். அந்த நாள்கள் அவனுக்கு படைத்தவனால் அருளப்பட்ட நாள்கள்.
நல்ல மழை பெய்து விட்டால், அந்த மசால் வடையும், கடலை மிட்டாயும் வாங்கி வருகின்ற அளவுக்கு கூட அவனிடம் காசு இருக்காது. நொந்து விடுவான்.
ஆறு மணி ஆனவுடன், குழந்தைகள் வீட்டு வாசலுக்கு வந்து விடும். இன்னும் சிறிது நேரம் ஆகிவிட்டால், தெருவுக்கு வந்து தெருமுனையை உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கும். காசில்லை என்றால், தெருமுனை கடந்து உள்ளே நுழையும் தைரியத்தை இவன் தொலைத்து விடுவான். குழந்தைகள் நிற்பது இவனுக்கு அங்கிருந்து பார்த்தால் நன்றாகத் தெரியும். வீட்டு வேலைக்கு போய் வந்து கொண்டிருக்கும் மனைவி வரும் வழியில் நின்று கொள்ளுவான். அவளுக்கும் தெரிந்து விடும். அவனுடைய வருமானம் அன்று எவ்வளவு வந்திருக்கும் என்று. ஒன்றும் சொல்ல மாட்டாள். அவனிடம் இருபது ரூபாய் எடுத்து கொடுத்து விடுவாள். இவனும் மசால் வடையும், கடலை மிட்டாயும் வாங்கி கொண்டு வந்து விடுவான். இது கணவன் மனைவி இருவருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்.
வாழ்க்கையின் நிதர்சனங்களை நன்கு தெரிந்து கொள்ள பழகிவிட்டான் இவன். முந்தின நாள் இரவில் மறு நாள் வியாபாரத்துக்கு வேண்டிய பலூன்களை கடையில் வாங்கி வைத்து விடுவான். அதை கட்டுவதற்கு தேவையான சிறிய நூல் பந்தையும் வாங்கி வைத்துகொள்ளுவான். அவனுடைய இலக்கு குழந்தைகள் அதிகம் வாழும் தெருக்கள்தான். இப்பொழுது எல்லாம் சென்னை போன்ற நகரங்களில் அபார்ட்மெண்ட்களில் இவனை அனுமதிப்பது இல்லை. கிராமங்களில் அதிகம் வியாபாரம் ஆவது இல்லை. இவனுடைய இலக்கு இவை தான் சென்னை மெரினா பீச்; பெசன்ட் நகர் பீச்; கோவில் திருவிழாக்கள்; சர்ச் திருவிழாக்கள் போன்றவைதான்.
ஒரு நல்ல இடமாக பார்த்து நின்று கொள்ளுவான். குழந்தைகள் பார்வையில் அவன் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். இதற்காகவே அவன் ஒரு ஊதுகுழல் வாங்கி வைத்திருக்கிறான். அதை ஊதும்போதே பழகிய குழந்தைகள் இவனை பார்த்து வரத் துடிக்கும்.
குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். தங்களுடைய பெற்றோர்களை எப்படியாவது வாங்க வைத்து விடுவார்கள். முதலில் பக்குவமாகப் பேசுவார்கள். அதில் பெற்றவர்கள் மசியவில்லை என்றால், தீவிரவாதத்தை கையில் எடுத்து விடுவார்கள். அடம் பிடிப்பார்கள்; முரண்டு செய்வார்கள். தரையில் விழுந்து, அன்றுதான் அணிந்திருந்த புது சட்டை, துணிமணிகள் போன்றவைகளை அழுக்காக்கி விடுவார்கள். அவர்களுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல. பலூன் என்று வரும்போது, அந்த துணிமணிகள் பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. குழந்தைகளின் தீவிரவாதம் தோற்றதாக சரித்திரம் இல்லை. ஒரு பலூன் பத்து ரூபாய் தானே என்று பெற்றோர்கள் வாங்கியும் கொடுத்து விடுவார்கள்.
கையில் காசை வாங்கிவிட்டு குழந்தைகளின் கைகளில் அன்புடன் அவன் தரும் பலூனின் வாழ்க்கை எத்தனை நிமிடங்கள் என்று எவராலும் கணிக்க முடியாது. சில சமயங்களில் பலூன் விற்கும் அவனை குழந்தைகள் கடந்து செல்லும்போதே சில நேரங்களில் வெடித்துவிடும். அந்த மாதிரி சூழ்நிலைகளில் அவன் வேறு ஒரு பலூன் ஊதி தந்துவிடுவான். காசு வாங்க மாட்டான். அரசமுத்துவின் வாடிக்கையாளர் சேவை இந்தளவில் மற்றவர்களை காட்டிலும் பெரிதாக பேசப்பட்டது. மிஞ்சிப்போனால், அப்படி வெடித்து விடும் பலூன்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து பலூன்களுக்கு அதிகம் இருக்காது. மாற்று பலூன்களை அவன் தரும்போதே குழந்தைகளின் பெற்றோர்களின் மனதையும் தன்வசப்படுத்தி விடுவான்.
பலூன்களின் வயது மிஞ்சிப்போனால் இரண்டு நாள்கள் அதிகம் என்றே சொல்லலாம். குழந்தைகள் வீட்டுக்குக் கொண்டு சென்ற பிறகு, இரண்டு நாள்கள் கழித்து காற்று இறங்கி சிறிதாகக் கட்டிலுக்கு கீழே ஒரு மூலையில் ஒதுங்கிப் போய் உறங்கிக்கொண்டிருக்கும். குழந்தைகள் புத்திசாலிகள். அவற்றை கண்டு கொண்டு அன்றைய தினம் வேறு பலூன் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.
தினம்தோறும் சைதாப்பேட்டை பிரதான சாலையில் இருக்கும் சர்ச்சுக்கு மாலை ஆறு மணிக்கு செல்லும் வழக்கம் கொண்டவன் அரசமுத்து. மாலை நேரப் பிரார்த்தனைக்கு தவறாமல் பலர் வருவார்கள். அதிலும், ஞாயிற்றுக்கிழமை அதிகம் வருவார்கள்.
மைதிலி சிறிய பெண். அவளுக்கு ஆறு வயது தான் ஆகிறது. இதுவரை அவனிடம் மூன்று முறை பலூன்கள் வாங்கியிருக்கிறாள். என்ன காரணமோ தெரியாது. அவளுக்கு அவனைப் பிடித்து போய்விட்டது. ஒருமுறை அவனிடம் பலூன் வாங்கிவிட்டு அவள் அவளுடைய அம்மாவிடம் செல்ல முயற்சிக்கையில், பலூன் வெடித்து விட்டது. அவள் கேட்காமலேயே, இவன் வேறு ஒரு பலூன் ஊதி தந்து விட்டான். மைதிலியின் அன்பையும் பெற்று விட்டான். அவளுடைய அம்மாவின் அன்பையும் பெற்று விட்டான்.
அன்று சனிக்கிழமை மைதிலி அவனிடம் கேட்டாள்.
'நீ பலூன் விற்பவர் தானே?''
'ஆமாம்டா..?''
'அந்த பலூனில் எதை வைத்து விற்கிறாய்?''
'அதனுள் காற்றை அடைத்து விற்கிறேன்.''
'காற்றை எந்த கடையில் வாங்குகிறாய்?''
'காற்று வாங்கவேண்டியது இல்லை.''
'காற்று விலைக்கு கிடைக்குமா?''
'எங்கு வேண்டுமானுலும் கிடைக்கும். உனக்கு முன்னாலும் கிடைக்கும், எனக்கு முன்னாலும் கிடைக்கும்.
எல்லோருக்கும் கிடைக்கும். நமக்கு முன்னால் சுற்றிக் கொண்டு இருக்கும். காற்றை பிடித்து ஊது
குழல் மூலம் பலூனின் வாய்க்குள் செலுத்திவிடவேண்டும். பிறகு காற்று வெளியில் வராத வகையில் நூலை வைத்து அதன் வாயை கட்டிவைத்து விடவேண்டும். இனி வெளியில் உள்ள காற்று நமக்கு தான்.''
அரசமுத்துவுக்கு ஆச்சரியம் வந்தது. இந்தளவுக்கு குழந்தைக்கு புரியும் வகையில் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு அறிவு அவனுக்கு இருக்கிறது என்பது அப்போது தான் அவனுக்கு வெளிச்சமாகியது.
'எனக்கு சொல்லிக்கொடேன்.''
இப்பொழுது இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவது என்று தெரியாமல் திகைக்க ஆரம்பித்தான்.
வெற்று பலூன் ஒன்றை கான்வாஸ் பையில் இருந்து வெளியில் எடுத்தான். பலூனில் காற்று அடைக்கும் ஊதுகுழலை எடுத்தான். அந்தக் குழந்தை பார்க்கிற மாதிரி, பலூனின் வாயைத் திறந்து அந்த குழலின் வாய்ப்பகுதியில் சொருகி வைத்துவிட்டு, பலூனை குழலின் முன்புறம் இறுக்கப் பிடித்துகொண்டு காற்று அடிக்க ஆரம்பித்தான். காற்று உள்ளே செல்ல செல்ல, பலூன் பெரிதாக ஆரம்பித்தது. அதை பொறுமையாக வெளியில் எடுத்து நூலால் கட்டிவிட்டு அந்த குழந்தைக்கு கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டது குழந்தை. முகத்தில் சந்தோசமிகுதியால், பிரகாசம் வர ஆரம்பித்தது.
'நான் நேற்றும் இதே மாதிரி தான் உன்னிடம் இருந்து ஒரு பலூன் வாங்கிவிட்டு சென்றேன். வீட்டுக்குச் சென்றவுடன், சிறிதாகி விட்டது. இப்போது ஒரு மூலையில் கிடக்கிறது. காற்று இல்லாததால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. எனக்கு இனிமேல் பலூன் வேண்டாம்; காற்று மட்டும்தான் வேண்டும். நான் இப்பொழுது ஒரு சிறிய டப்பா கொண்டு வந்திருக்கிறேன். அதில் காற்றை அடைத்து கொடுத்து விடு. நான் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, காற்று இல்லாத பலூனில் நுழைத்துவிடுகிறேன். தேவைப்பட்டால், என்னுடைய அண்ணன் அமுதனிடம் சொல்லி காற்றை பலூனுக்குள் விடச்சொல்லிவிடுவேன்.''
அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. குழந்தை பிடிவாதமாக அவனுடைய கையில் அந்த டப்பாவை திணித்தது.
'உனக்கு இப்பொழுது காற்றை எப்படி டப்பாவில் அடைப்பது என்று தெரியாவிட்டால் பரவாயில்லை. மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு விடு. நான் இரண்டு நாள் கழித்து வருகிறேன். இந்த டப்பாவில் காற்றை அடைத்து வைத்திருந்து கொடுத்து விடு'' என்று சொல்லிவிட்டு, அப்படியே மெதுவாக நடந்து நடந்து சென்று பக்கத்து கடையில் நின்று கொண்டிருந்த அவளுடைய தாயுடன் சேர்ந்து நடந்து செல்ல ஆரம்பித்தது. விக்கித்து நின்றான் அரசமுத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.