தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: விரல் புண் குணமாக வழி என்ன?

நான் ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் வேலை செய்கிறேன்.

எஸ். சுவாமிநாதன்

நான் ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் வேலை செய்கிறேன். அடிக்கடி ரசாயனம் விரல் நுனியில் பட்டு விடுவதால், விரல் நுனி வீக்கம், எரிச்சல், வலி, தெறிப்பு உண்டாகிய பிறகு உடைந்து, புண்ணாகி எளிதில் ஆறாமல் விரலைச் சுற்றி பரவிக் கொண்டே போவதால் மிகவும் வேதனைப்படுகிறேன். இது குணமாக வழி என்ன?

-மாரியம்மா, ஈரோடு.

இந்த நோயை 'விரல் சுற்றி' என்றும் 'நகச் சுற்றி' என்றும் பெயரிடலாம். நகத்தின் இடுக்கில் ரசாயனக் கலவை சேர்ந்து கொள்ளும்போது, இவற்றை எடுக்கும்போது காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எடுக்காமலேயே விட்டுவிட்டால், உள்ளேயே ஊறிப் போய் விஷமாக மாறி சீழ் பிடித்துக் கட்டி போல் வீங்கி விடும். பிறகு சீழ் நேரடியாக வெளிவராமல் விரலைச் சுற்றி பரவிக் கொண்டே போகும்.

பதுங்கியபடி உட்புறத்தில் நிற்பதால் புண் ஆறாமல் குத்துவலியை ஏற்படுத்தி, மிகுந்தத் துயரத்தை அளிக்கும். தொழில் சார்ந்த உபாதையாக இது இருப்பதாலும், வேறு வேலைக்குச் செல்ல முடியாத வறுமையான சூழ்நிலையாலும் உங்கள் உபாதைக்கான தீர்வு என்பது கிடைக்கும். ஆனால், எளிதாகக் கிடைக்காது.

விரலின் இரண்டு ஓரங்களிலும் செல்லும் சுத்த இரத்தவாகினியான ஸிரைகள் விரலின் நுனியில் இரண்டும் சேர்ந்து ஒரு வலைபோல் பின்னிக் கிடக்கும். அவ்வாறே நரம்புகளும் கிடக்கின்றன. இதனால் விரல்நுனி ஒரு மர்மஸ்தானமாகிறது. இந்த அரிய வலியைக் காப்பாற்றவே விரல் நுனியில் நகங்கள் இருக்கின்றன. உள்ளங்கைப்புறம் மாம்ஸ கண்டரங்களும் தடித்த தோலும் பாதுகாப்பாய் அமைந்துள்ளன.

இப்படியொரு மர்மஸ்தானத்தில் ரசாயனம் சேர்ந்து விஷமாகி விரல் சுற்றியாகி துன்புறுத்துவது மிகவும் ஆபத்தானது. விரல் சுற்றி ஏற்பட்டுள்ள விரலை நீட்டிக் கொண்டு அதனடியில் ஒரு கிண்ணத்தை ஏந்திக் கொண்டு, ஒரு ஸ்பூனால் 'பிண்ட தைலம்' எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை ஊற்றிக் கொண்டே இருக்கவும்.

விரல் முழுவதுமாக நனையும்படி, விரலைத் திருப்பித் திருப்பி தைல தாரையின் கீழே காண்பிக்கவும். கிண்ணத்தில் விழும் தைலத்தை மறுபடியும் மறுபடியும் ஸ்பூனில் எடுத்து தாரையை ஊற்றவும். கால் மணி நேரம் இவ்வாறு செய்த பிறகு எரிச்சல், வலி எல்லாம்

குறைந்து போயிருப்பதைக் காணலாம். விரலைத் தொட்டால் சூடும் இருக்காது. இவ்வாறு தினம் 4 முதல் 6 தரம் வரையில் செய்ய வேண்டும். பிறகு இந்தப் பிண்ட தைலத்தில் நனைந்த பஞ்சினால் விரல் நுனியை மூடி வைக்கவும். ஒரு தரம் உபயோகித்தத் தைலத்தையே மூடி வைத்திருந்து மறுபடி மறுபடி உபயோகிக்கலாம். 'சததௌதகிருதம்' எனும் ஆயின்ட்மெண்ட்டையும் விரல் நுனியில் தடவி, மூடி வைக்கலாம். ஆயினும் தைல தாரையை மறந்துவிடக் கூடாது.

கடுக்காயின் தோலை வினிகர் எனும் காடி விட்டு வெண்ணெய்போல் அரைத்து வினிகரையே குழப்பி அந்த விரலின் மேல் கனமாகப் பற்றிட்டு வைக்கலாம். இப்பற்று முழுவதும் உலர்ந்து போகும் முன் இதைக் களைந்துவிட்டு தாரை செய்ய வேண்டும். பிறகு மறு

படியும் பற்றிடவும். 'சதகுப்பை' எனும் கடைச் சரக்கையும் மேற்சொன்ன விதத்திலேயே காடியில் அரைத்து உபயோகிப்பதும் நல்லது.

'தைல தாரை' மற்றும் 'பற்றிடுதல்' எனும் சிகிச்சை முறைகளால் உட்புற விஷமெல்லாம் திரண்டு உருண்டு தானாகவே உடையும் நிலைக்கு வந்துவிடும். அப்பொழுது வீக்கத்தின் ஒரு பகுதி சிறிது வெளுப்பு நிறந்தோன்றி சீழ் பிடித்திருந்தல் அறிகுறியை சுருக்கென்று ஊசியில் குத்துவது போன்ற வலியை உருவாக்கித் தெரியப்படுத்தும். ஒரு துளி வெளியில் வந்தும் வராமலும் நிற்கவும் செய்யலாம்.

நல்ல கொழுந்து வெற்றிலை 10 அல்லது 15 எடுத்து நன்கு சுத்தமாகத் துடைத்து கற்சுண்ணாம்பை அளவோடு அவற்றில் தடவி, மைய வெண்ணெய் போல் விழுதாக அரைத்து, அரை அங்குல கனம் விரல் நுனி முழுவதும் மூடும் விதத்தில் தடவி, அதன் மேல் துணியைக் கட்டி, இரவு படுத்துறங்கிக் காலையில் வெந்நீரில் பற்றைக் கரைக்க வேண்டும்.

சீழெல்லாம் உறிஞ்சப்பட்டு, வலி எரிச்சல் குத்த முதலிய சகலமும் குணமாகிவந்துவிடும். சீழ் பிடித்த இடத்தில் சிவந்த புண் இருக்கும். அதில், ஆமணக்கெண்ணெயுடன் கற்சுண்ணாம்பின் தெளிந்த நீரை சிறுகச் சிறுகக் கூட்டி வந்த குழம்பைத் துணியில் நனைத்துப் போட்டால், எங்கேனும் ஒளிந்திருக்கும் சீழ், கசிந்துவந்து துணியில் அடியில் சேரும். முதலாளிடம் உங்கள் பிரச்னையைக் கூறி, கையுறை அணிந்து செய்வது நல்லது.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பூங்காற்று... ஸ்ரேயா கோஷல்!

SCROLL FOR NEXT