முனைவர் ஜி.குமார்
'ஷேர் ஏ பஞ்சாப்' (பஞ்சாப்பின் சிங்கம்) என்ற பெயரைப் பெற்ற மகாராஜா ரஞ்சித் சிங், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டின் வடமேற்குப் பகுதியை ஆட்சி செய்தார். சீக்கிய மதத்தின் முதல் அரசரான இவர், 'நாட்டின் மதச்சார்பற்ற அரசர்' என்று அழைக்கப்படுகிறார்.
இவர் தனது ஆட்சியின்போது, அமிர்தசரஸில் 'ஹர்மிந்தர் சாஹிப்' என அழைக்கப்பட்ட சீக்கியர்களின் புனித ஆலயத்தை தங்கத்தால் வேய்ந்து பொற்கோயிலாக மாற்றினார். அதே அளவிலான தங்கத்தை வாரணாசி விசுவநாதர் கோயிலுக்கும், லாகூர் சுனேரி என்ற பழமையான மசூதிக்கும் அளித்தார்.
இவரது அரசவையில் சீக்கியர்களைத் தவிர, ஹிந்துக்களும் முகமதியர்களும் அங்கம் வகித்தனர். ஐரோப்பியர்களுக்கும் பதவிகளை வழங்கியிருந்தார். மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் ராணிகளாக இருந்துள்ளனர்.
1780-ஆம் ஆண்டு நவம்பர்13-இல் அன்றைய பஞ்சாப் பிரதேசத்தின் குஜ்ரன்வாலா என்ற இடத்தில் பிறந்தவர் ரஞ்சித் சிங். இவரது இயற்பெயர் புத் சிங். இளம் வயதில் பெரியம்மை நோய் பீடித்ததால், அவரின் இடது கண் பார்வை மங்கியது. மேலும், முகத்தில் தழும்புகளும் உண்டாயின.
ஒளரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர் முகலாய அரசு சரியத் தொடங்கியது. அன்றைய பஞ்சாப் பிரதேசத்தை சீக்கியர்களின் சில பிரிவுகள் தத்தம் வசம் எடுத்துக் கொண்டனர். அவற்றில் ஒரு பிரிவின் சிற்றரசராக இருந்து சில பகுதிகளை நிர்வகித்து வந்தவர் மகா சிங். அவரது மகன்தான் புத் சிங். பின்னாளில் இவர், பீர் முகம்மது என்பவரின் படைகளை எதிர்த்து வெற்றி கண்டார். 'ரஞ்சித்' என்பதற்கு 'வெற்றி' என்பது பொருள். அதைக் கொண்டாடும் விதமாக, மகாசிங் தனது மகன் 'புத் சிங்' பெயரை 'ரஞ்சித் சிங்' என்று மாற்றி விடுகிறார்.
ரஞ்சித் சிங்கின் 12-ஆம் வயதில் மகாசிங் மறைவுற்றார். இளம்வயதிலேயே ரஞ்சித் சிங் தனது பிராந்தியத்தை ஆளும் பொறுப்பை ஏற்கிறார்.
1798 முதல் 1800 வரை நடைபெற்ற பல போர்களில் ரஞ்சித் சிங் அனைத்து சீக்கியர்களை ஒன்றிணைத்ததுடன், ஆப்கானிஸ்தானியர்களையும், முகலாயப் படைகளையும் எதிர்த்து வெற்றி காண்கிறார்.
1801-இல் தனது 21-ஆவது வயதில் ரஞ்சித் சிங் தன்னை முழு பஞ்சாப் - ஜம்மு பிராந்தியத்தின் மகாராஜாவாக அறிவித்துக் கொள்கிறார். லாகூர் தலைநகராகிறது. அவர் மகாராஜாவாக முடிசூடியபோது கோயில்கள், மசூதிகள், குருத்துவாராக்கள் என அனைத்திலும் பிரார்த்தனை செய்யப்பட்டன. இவர் பசுவதையைத் தடுத்ததோடு, வழிபாட்டுத் தலங்கள் இடிப்பு
களையும் அறவே ஒழித்தார். ஆங்கிலேயருடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருந்த இவரது ஆட்சிக் காலம் 1839-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி வரை இருந்தது.
சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் நினைவாக, பட்னா சாஹிப், ஹசூர் சாஹிப் என இரண்டு குருத்வாராக்களை நிறுவினார். இவர் பெற்ற செல்வங்களில் கோஹினூர் வைரமும் ஒன்றாகும்.
2022-ஆம் ஆண்டில் அவரது சிலை இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டது. அமிர்தசரசில் ராம் பாக் அரன்மணையில் அவரது நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.