தினமணி கதிர்

தனிச்சிறப்புடைய நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள்

'எத்தனையோ இடங்களில் குத்துவிளக்குகள் தயாரிக்கப்பட்டாலும், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட நாச்சியார்கோவில் விளக்குகளுக்கு என்று தனிச்சிறப்புகள் உண்டு.

தினமணி செய்திச் சேவை

சுஜாதா மாலி

'எத்தனையோ இடங்களில் குத்துவிளக்குகள் தயாரிக்கப்பட்டாலும், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட நாச்சியார்கோவில் விளக்குகளுக்கு என்று தனிச்சிறப்புகள் உண்டு. புவிசார் குறியீடு பெற்ற பெருமைமிக்க நாச்சியார்கோவில் குத்துவிளக்கு தயாரிப்புக்குத் தேவையான மண் எடுத்தல், கரு தயாரித்தல் எனச் சார்புடைய வேலைகளை குடிசைத் தொழிலாக இங்கு வீடுகள்தோறும் செய்துவருகின்றனர்.

பூஜை விளக்குகள், தொங்கல் விளக்குகள் என ஏகப்பட்டவை உள்ளன. கிளி விளக்கு, மயில் விளக்கு, யானை விளக்கு, அன்னப்பட்சி விளக்கு, நாக விளக்கு, சர விளக்கு என வித்தியாசமாக விளக்குகளைத் தயார் செய்கிறோம்' என்கிறார் நாச்சியார்கோவில் ஸ்ரீ சாய் எல்லோரா மெட்டல்ஸ் உரிமையாளர் கருணாகரன், அவரது மகன் நவீன்.

விளக்குத் தயாரிப்புக் கூடத்தில் அவர்களுடன் பேசியபோது:

'பஞ்சபூதங்களின் அம்சமாகத் திகழும் விளக்குகளைத் தொடக்கக் காலத்தில் மண்ணில்தான் செய்துள்ளனர். இதைச் செய்வதற்குத் தேவைப்படும் சிறப்பான வளம் நிறைந்த மண் நாச்சியார்கோவிலில் மட்டுமே கிடைப்பதுதான்.

'பிரம்மா தனது படைப்புத் தொழிலுக்குத் தேவையான மண்ணை இங்கிருந்துதான் பெற்றார்' என்கிறது திருச்சேறை புராண வரலாறு. அந்தப் பாரம்பரியத்தின் நீட்சியாக தற்காலத்தில் செய்யப்படும் பித்தளை விளக்குகளையும் இதே மண்ணை கருவாக வைத்துத்தான் வார்க்கிறார்கள். கைகளால் உருவாக்கப்படுவது இந்த விளக்குகளின் நேர்த்திக்கு முக்கியக் காரணமாகும்.

சாதாரணமாக, வீட்டுப்புறங்களில் கிடைக்கும் மண்ணைத் தான் வேலைக்கு எடுக்கிறோம். அதுவே மிகுந்த கனிமவளம் மிகுந்ததாக, மென்மைத் தன்மை உடையதாக இருக்கிறது. சேகரித்த மண்ணை பலமுறை சலித்துச் சுத்தப்படுத்திப் பதப்படுத்துவது முதல் வேலை.

அச்சுப் பெட்டிகளில் உள்ள வார்ப்புகளைச் சுற்றி இந்த மண்ணை நிரப்பி இறுக்குவது அடுத்த நிலை. இதே நேரத்தில் வேறொரு பக்கத்தில் உலையில் வார்ப்புக்குத் தேவையான உலோகத் துகள்களைக் கொதிக்க வைக்கத் துவங்கி விடுவோம். காலையில் துவங்கும் பணி இது. பக்குவம் வருவதற்கு மதியமாகி விடும்.

பின்னர், மண் அடைத்த பெட்டிகளில் உள்ள குழாய் துளைகளின் வழியாக, உலைகளில் கொதித்துக் கொண்டிருக்கும் உலோகக் கலவையை (பிராஸ்) முகர்ந்து ஊற்றுவது தான் மிக முக்கியமான கட்டம். கை, கால்களில் பட்டுவிட்டால் ஓட்டை விழுந்து விடும்.

மேலே தெறித்து தீக்காயம் ஆகிவிடும் அபாயமும் உண்டு. உயர் வெப்பநிலையில் இந்தக் குழம்புக்கலவை ஊற்றிய சில நிமிடங்களிலேயே உறைந்துவிடும். இப்பொழுது அச்சுப்பெட்டிகளைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே தேவையான வடிவம் தயாராக இருக்கும் . இப்படியாக விளக்கின் பீடம், தகளி, தண்டு, முகம் ஆகியவற்றை தனித்தனியாகத் தயார் செய்கிறோம். இப்போது முதல் கட்டப் பணி தயார்.

வார்ப்பு வேலை முடிந்தவுடன் கிடைத்த விளக்குப் பாகங்கள் சொரசொரப்பாக இருக்கும். இவற்றைக் கடைசல் இயந்திரத்தில் கொடுத்து உருவேற்றுவது அடுத்தக் கட்டம். அதன் பிறகு மெருகுப் பிடித்தல். ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு விதமான மெஷின் வேலை. சிறியதும் பெரியதுமாக வித்தியாசங்கள் உண்டு. பல நிலைகளில் செய்யப்படும் இந்த வேலைகளால் விளக்கில் உள்ள சிறுசிறு குறைகளையும் கண்டுபிடித்து, நீக்கி விடுவோம்.

இப்படி பாலிஷ் செய்வதற்கு நல்ல அனுபவம் வேண்டும். இவை ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டிய வேலை. இப்படிப் பலமுறை மெருகு ஏற்றியவுடன்தான் விளக்குக்கு நல்ல வடிவமும், பளபளப்பும் கிடைக்கும். கூடவே அதில் மரை, கடைசல் , டிசைன் வேலைகளைச் செய்து அழகுபடுத்துவோம். பிறகு பாகங்களை ஒன்றுடன் ஒன்று பொருத்திச் சரிபார்ப்பது முக்கியமான வேலை. இத்தனை படிகளுக்குப் பிறகுதான் கடைக்குக் கொண்டு வந்து காட்சிப்படுத்துவோம்.

இந்தத் தொழிலில் எல்லா வேலைகளையும் ஒரே இடத்தில் செய்ய முடியாது. ஒரு பட்டறையில் வார்ப்பு வேலை நடக்கும்போது பாலிஷ் வேலை நடக்காது. தீ விபத்து ஏற்பட்டுவிடும் அபாயம் அதிகம். இப்படித் தனித்தனிப் பட்டறைகளில் வருடம் முழுவதும் சங்கிலித் தொடர் போல வேலைகள் நடைபெற்றுகொண்டே இருக்கும்.

எல்லா பட்டறைகளிலும் நம்முடைய மூலதனம் கிடப்பில் இருக்கும். தவிர ஏதேனும் விபத்து ஏற்பட்டுவிட்டால் மருத்துவச் செலவு, நஷ்ட ஈடு என எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் திவாலாகி தொழிலைவிட்டவர்கள் ஏராளம். ஆயிரக்கணக்கான பேர் இந்தப் பரம்பரைத் தொழிலை விட்டுவிட்டு இன்று வேறு ஊர்களுக்குச் சென்று விட்டார்கள். தற்பொழுது 30 முதல் 40 நிறுவனங்களே நல்ல முறையில் இயங்கி வருகின்றன.

நிறைய வெளிநாட்டவர்கள், கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்காக வருடம் முழுவதும் ஏற்றுமதி நடந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்க நாட்டவர்கள் அதிகமாக விரும்பி வாங்குகிறார்கள். அதேபோல் வட இந்திய மக்களும் இதனை பாரம்பரிய கைவினைப் பொருளாகக் கருதி விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாடிக்கையாளர்களுக்காக தற்காலத்தில் இணையத்திலும் ஈடுபட வேண்டியுள்ளது.

வெளிநாடுகள் வரை நம்முடைய தயாரிப்புகள் செல்வதில் எங்களுக்குப் பெருமை. கர்வம் என்றுகூடச் சொல்லலாம். அனைவரும் வணங்கிடக் கூடிய விளக்குகளைத் தயாரிக்கும் இந்தத் தொழிலை செய்வதே பெரும் பாக்கியம். இல்லங்கள்தோறும் நிறைந்திருக்கும் இறைத்தன்மைக்குக் காரணமாக இருக்கிறோம் என்பதே இந்தப் பிறவியில் நாங்கள் செய்த புண்ணியம்தான். இது இறைவனின் கொடை.

குத்து விளக்குகளை எல்லாரும் வாங்குகிறார்கள். ஹிந்துக்கள் பெரும்பாலும் வழிபாட்டுக்காக வாங்குவார்கள். ஹிந்து நண்பர்களுக்கு விசேஷ காலங்களில் பரிசுப்பொருளாக அளிப்பதற்காகப் பிற மதத்தவர்களும் வாங்குகிறார்கள். பலர் வீடுகள், அலுவலக அறைகளில் அலங்காரப்பொருளாக வைக்கிறார்கள். முகப்பில் புத்தர், குழந்தை விநாயகர், சாயிபாபா போன்ற சின்னங்களைக் கொண்டுள்ள விளக்குகளை அலங்காரத்துக்காக வாங்குகின்றனர். திருவிளக்கு என்பது புனிதமான பொருள் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருப்பதே இதற்குக் காரணம்' என்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை நீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT