நடிகர் ஆர்யா 
தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ: சென்னை அணிக்கு ஆர்யா கேப்டன்!

நடிகர் ஆர்யா அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

டெல்டா அசோக்

சோதனையை சந்தித்தால் சாதனை - ரஜினியை மேற்கோள் காட்டிய சிவா!

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்திருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில், ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படம் இது. இப்படத்தின் கதை பேசும் விஷயங்களை மையமாக வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செட் அமைத்திருக்கிறார்கள். இதன் அறிமுக விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு திரைப்படம் பற்றிய சுவாரசியங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இதில் சிவகார்த்திகேயன் பேசும் போது, 'இயக்குநர் சுதா என்ன சொல்கிறாரோ... அதைச் செய்தால் போதும்னு இருந்தோம். இந்தப் படத்தின் கேரக்டர்களில் நடிக்கிறது கொஞ்சம் சவால். அந்த சவாலை நாங்க அனைவரும் ஏத்துக்கிறதுக்குத் தயாராக இருந்தோம்.

நடிகர் சிவகார்த்திகேயன்

சோதனையை சந்திச்சாதான் சாதனைன்னு நம்ம தலைவர் ரஜினி சொல்ற மாதிரி, இந்தப் படம் அப்படியான ஒரு சாதனையாகத்தான் இருக்கும்னு நான் நம்புறேன். அவ்வளவு விஷயங்களை நாங்க கடந்து வந்திருக்கோம். எனக்கும் அதர்வா ப்ரோவுக்கும் சாப்பாட்டுலதான் கனெக்ஷன். என்னை ஸ்வீட் சாப்பிட வச்சிட்டு பிறகு அவர் மட்டும் வொர்க் அவுட் செய்திடுவாரு.

நான் 'அது இது எது' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது, அதர்வா ப்ரதர் அவருடைய முதல் படத்தின் ப்ரோமோஷனுக்கு முரளி சாரோட வந்திருந்தாரு. இன்னைக்கு அவருடன் இணைந்து நான் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. பெர்பார்மன்ûஸத் தாண்டி முயற்சி இருந்தால் தமிழ் ரசிகர்கள் மேல கொண்டு போய் உட்கார வச்சிடுவாங்க.

அப்படி வந்தவன்தான் நான். ஹீரோவாக இத்தனை ஆண்டுகள் நடிச்ச பிறகு வில்லனாக நடிக்கிற முடிவை எடுப்பது கொஞ்சம் சவாலான விஷயம். அவர் இந்தப் படத்துக்குத்தான் வில்லன். எனக்கு எப்போதுமே நான் காலேஜ்ல பார்த்து வியந்த ஹீரோதான். இங்க இருக்கிறதுலேயே சீனியர் அவர்தான். அதனால்தான் அவருடைய பெயர் முதல்ல இருக்கும். இந்த மாதிரியான படக்குழு, இந்தப் படத்தின் டைட்டில் எல்லாமே கிடைத்திருப்பது அந்த பராசக்தியின் அருள்தான்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பிரச்னையைப் பேசும். அதுகூடவே காதல், வீரம், பாசம், புரட்சினு எல்லாம் பேசுகிற படமாக இருக்கும். இந்தப் பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி நல்ல கொண்டாட்டமாக இருக்கும்.' என்றார்.

சென்னை அணிக்கு ஆர்யா கேப்டன்!

இந்திய ரசிகர்கள் கொண்டாடும் இரு பெரும் துறைகளான சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை ஒரே புள்ளியில் இணைக்கும் பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் திகழ்கிறது. நாடெங்கும் உள்ள முக்கிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு அணிகளுடன், இந்த லீக் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அணியின் உரிமையாளர்களாக திரைத்துறை பிரபலங்கள் உள்ள நிலையில், சென்னை அணியை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ் மற்றும் நடிகை-தயாரிப்பாளர் ஸ்ரீப்ரியா ராஜ்குமார் இணைந்து வாங்கியுள்ளனர்.

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களைத் தயாரித்து வருபவருமான ஐசரி கே. கணேஷ் இந்த இரு துறைகளும் இணையும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் சென்னை அணியை ஸ்ரீப்ரியா ராஜ்குமார் உடன் இணைந்து வாங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சென்னையில் வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழாவில், நடிகர் சரத்குமார், நடிகை மீனா ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் ஆர்யா அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். மேலும் பல முன்னணித் திரையுலக நட்சத்திரங்கள் அணியில் இணைந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரும் போஜ்புரி அணியின் கேப்டனுமான மனோஜ் திவாரி, வங்காள அணியின் உரிமையாளர்கள் போனி கபூர் மற்றும் ராஜ் ஷா, பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் புனித் சிங் மற்றும் நவராஜ் ஹன்ஸ், கேரள அணியின் கேப்டன் உன்னி முகுந்தன், தெலுங்கு அணியின் கேப்டன் சச்சின் ஜோஷி மற்றும் தெலுங்கு அணியின் முக்கிய வீரரும் இசையமைப்பாளருமான தமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜனவரி 16-ஆம் தேதி முதல் இப்போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

அவர்களின் பெயர்களைச் சொன்னால் - ராதிகா ஆப்தே வருத்தம்!

நடிகை ராதிகா ஆப்தே நடித்திருக்கும் 'ராத் அகேலி ஹை: தி பன்சால் மர்டர்ஸ்' என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்துக்காக அளித்த நேர்காணல்களில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்.

நடிகை ராதிகா ஆப்தே. படங்கள் - இன்ஸ்டாகிராம்

அதில் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பாலிவுட்டில் உள்ள டாக்சிக் சூழலை உணர்ந்து பல பெரிய வாய்ப்புகளை நிராகரித்ததாகவும், பணத்தேவை காரணமாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்தபோது கடும் பாலியல் பாகுபாட்டை சந்தித்ததாகவும் அவர் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பாலிவுட் பற்றி ராதிகா ஆப்தே பேசுகையில், 'சில பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும் போது அவர்களின் உண்மை முகத்தை உணர்ந்தேன். அவர்கள் மோசமானவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதிலிருந்து அவர்களுடன் இனி ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என முடிவு செய்தேன்.

அவர்களின் பெயர்களைச் சொன்னால், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். பின்னர், கடும் பண நெருக்கடியில் இருந்த போது தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கச் சென்றேன். அங்கும் மோசமான அனுபவங்களைச் சந்தித்தேன். எனக்கு உண்மையிலேயே அப்போது பணம் தேவைப்பட்டது. தென்னிந்தியப் படத்துக்காகச் சென்றிருந்தபோது ஒரு முறை சிறிய ஊரில் படப்பிடிப்பு நடந்தது. அந்த செட்டில் நான் மட்டுமே பெண். அவர்கள் செய்யச் சொன்ன விஷயங்கள் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. எனக்கு மேனேஜர் இல்லை, ஏஜெண்ட் இல்லை. என் டீம் முழுவதும் ஆண்களே இருந்தனர். பெண்கள் இல்லாத அந்தச் சூழலில் அவர்கள் என்னை அப்படிச் செய்யச் சொன்னது உச்சகட்ட பாகுபாடு.

நான் வழக்கமாக தைரியமானவள். ஆனால் அந்த நாள்களை நினைத்தாலே இதயம் படபடக்கிறது. மீண்டும் அந்தச் சூழலில் இருந்தால் அழுது விடுவேன். எந்தப் பெண்ணும் அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது' எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி அறிவிப்பு எப்போது? டி.டி.வி.தினகரன் பதில்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் : கமருதீன் - விஜே பார்வதி மோதல்

40 வயதில் 40 கோல்கள்... 1,000 கோல்களை நெருங்கும் ரொனால்டோ!

"தன் கட்சியைப் போலவே தங்கச்சி மீதும் பாசம் கொண்டிருந்தார்" விஜயகாந்த் குறித்து தமிழிசை சௌந்தரராஜன்

பிரமிளா - நான் சந்தித்த பிரபலங்கள் - 38

SCROLL FOR NEXT