எண்ணிப் பார்க்க முடியாத சாதனையை அசாத்தியமாக நிகழ்த்தியுள்ளார் இரண்டு வயது எட்டு மாதமானஆண் குழந்தை சாய் ரியாஸ்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள மஞ்சாலுமூடு, குருவியோடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சஜின்மோன் - ராஜிகா தம்பதியின் மகன் சாய் ரியாஸ். இந்தக் குழந்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் 50 மீட்டர் தூரத்தை 18 விநாடிகளில் ஓடி 'வேர்ல்டு வைடு ரெக்கார்டு'புத்தகத்திலும், 100 மீட்டர் தூரத்தை 40 விநாடிகளில் ஓடி 'இந்திய சாதனை புத்தகத்திலும்' இடம்பிடித்துள்ளது.
தாய் ராஜிகாவிடம் பேசியபோது:
'சாய் ரியாஸ் தவழும் பருவம் முதல் படுசுட்டி. சிறு இடைவெளி கிடைத்தால் வெளியே ஓட்டம் பிடிப்பது வழக்கம். வீட்டில் இருக்கும் பொருள்களை அநாவசியமாகத் தூக்கி வீசுவதும் உண்டு. சுட்டித்தனம் நிறைந்த செயல் எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
குழந்தையின் அசாத்தியத் திறமையைக் கண்டவுடன் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. சாய் ரியாஸ் இரண்டு வயது ஐந்து மாதங்கள் இருக்கும்போது, 100 மீட்டர் தூரத்தை 40 விநாடிகளில் கடந்தான். இந்தச் சாதனையை இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்' 2024 நவம்பரில் அங்கீகரித்தது. 50 மீட்டர் தூரத்தை 18 விநாடிகளில் ஓடியை 'வேர்ல்டு வைல்ட் ரெக்கார்டு' அங்கீகரித்தது.
சமையலுக்காக வாங்கி வைத்திருக்கும் ஐந்து கிலோ எடையுள்ள அரிசி பொட்டலத்தை தூக்குதல், எனது அண்ணியின் 12 கிலோ எடையுள்ள குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடுதல்.. என சாய் ரியாஸின் சுட்டித்தனங்கள் ஆச்சரியம் அடைய வைக்கின்றன. தற்போது சாய் ரியாஸ் தனது இரு கைகளிலும் தலா 7.5 கிலோ வீதம் மொத்தம் 15 கிலோ எடையை 10 விநாடிகளுக்கு மேல் தூக்கியுள்ளார்.
குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் அழுத்தம் கொடுக்க கூடாது. குழந்தைக்கு எதில் அதிக ஈடுபாடு இருக்கிறதோ அதில் கொஞ்சம் சுதந்திரமும், ஊக்கமும் கொடுத்தால் வாழ்க்கையில் நன்றாக வருவார்கள். எதிர்காலத்தில் அவன் என்னவாக விரும்புகிறானோ, அதற்கு உதவியாக இருப்பேன். அவன் விரும்பும் படிப்பை படிக்க வைப்பேன்'' என்கிறார் ராஜிகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.