தினமணி கதிர்

சென்னையில் படகு போட்டிகள்....

தனி நபராகவோ அல்லது குழுவாகவோ துடுப்புகளால் செலுத்தும் படகுப் போட்டிகளுக்கு 'ரெகாட்டா' என்று பெயர்.

எஸ். சந்திரமெளலி

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிலிபைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் உள்ள படகோட்டும் சங்கங்கள் ஒருங்கிணைத்து நடத்திவரும் 'தூரக் கிழக்கு நாடுகளுக்கான அமெச்சூர் படகோட்டும் சங்கம்' சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'ரெகாட்டா' போட்டிகள் சென்னையில் ஜனவரி 6 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தப் போட்டிகளை நடத்திய 'சென்னை போட் கிளப்' கேப்டன் ரவீந்திரன், துணை கேப்டன் சுமனா, செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் ஓர் சந்திப்பு:

'ரெகாட்டா' போட்டிகள் குறித்து..?

தனி நபராகவோ அல்லது குழுவாகவோ துடுப்புகளால் செலுத்தும் படகுப் போட்டிகளுக்கு 'ரெகாட்டா' என்று பெயர்.

இந்த ஆண்டு சென்னை, கொல்கத்தா, பூணே போன்ற நகரங்களிலில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் படகோட்டும் அணிகள் பங்கு பெற்றன. இதுவரை 80 முறை போட்டிகள் நடந்துள்ளன, 81-ஆவது போட்டிகளை நடத்தும் வாய்ப்பு சென்னைக்கு கிடைத்தது.

போட்டிகளில் பங்கேற்பவர்கள் இரு புறங்களிலும் வரிசையாக நின்றுகொண்டு, தங்கள் துடுப்புக்களைத் தூக்கிப் பிடித்து தலைமை விருந்தினர்களை வரவேற்பது மிகவும் வித்தியாசமான ஒரு நிகழ்வு.

படகோட்டும் வீரர்கள் படகுகளில் இருந்தவாறே பங்கேற்ற கயிறு இழுக்கும் போட்டி பார்வையாளர்களை உற்சாகத்துக்குள்ளாக்கியது.

படகு ஓட்டுதல் பிரபலமாகவில்லையே ஏன்?

படகு ஓட்டுதல் பணக்காரர்களின் பொழுதுபோக்கு என்ற எண்ணம்தான் இருக்கிறது. படகு ஓட்டுவது என்பது சாதாரணமான விஷயமில்லை. சவால்கள் நிறைந்தது. அதற்கேற்ற உடல்வாகு இருக்க வேண்டும்.

அதீத கவனம் வேண்டும். மனமும், உடலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒரு குழுவாக படகு ஓடும்போது, மற்ற அனைவரோடும் இணைந்து பல உடல்கள், ஒரு மனம் என்பது போல செயல்பட வேண்டும்.

படகோட்டுவதற்கான வசதி எல்லா இடங்களிலும் அமைந்திருக்காது. மற்ற விளையாட்டுகளைப் போல படகு ஓட்டுபவர்களுக்கு விளையாட்டுக்கான சிறப்புப் பிரிவில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கிடைப்பதில்லை. ரயில்வே, இதர நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதில்லை. இதுபோல பல காரணங்கள் சொல்லலாம்.

சென்னையில் படகோட்டுதல் எப்படி தொடங்கியது?

சென்னையில் கொசஸ்தலை ஆறு, கூவம், அடையாறு என மூன்று ஆறுகள் ஓடியதால், பொழுதுபோக்குக்கு ஆங்கிலேயர்கள் படகுகளை ஓட்டத் துவங்கினார்கள்.

1867-இல் எண்ணூர் கடல் பகுதியின் முகத்துவாரத்தில் படகுகளை ஓட்டினர். அதன்பிறகு, அந்தச் சங்கம் விரிவடைந்து தற்போதுள்ள அடையாறு கரைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

சென்னை போட் கிளப் பற்றி?

சென்னை மாநகரத்தின் மிகப் பழமையான விளையாட்டு, பொழுதுபோக்கு அமைப்பு 'சென்னை போட் கிளப்'. 1867-இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு ராஜ அண்ணாமலைபுரத்தில், அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

150 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் சுறுசுறுப்பாக செயல்பட்டுவருகிறது. தென் கிழக்கு ஆசியாவின் மிகவும் பழைமையான போட் கிளப்களில் ஒன்று என்ற முறையில், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போட்

கிளப்கள் உருவாவதற்கு வழிகாட்டியாக உள்ளது. படகு ஓட்டுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க, அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் இங்கே இருக்கின்றனர். அவர்களிடம் பயிற்சி பெற்று, சென்னை போட் கிளப் உறுப்பினர்கள் பலர் ஏராளமான போட்டிகளில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றனர்.

இளைய தலைமுறையினர்களிடையே படகு ஓட்டுவதில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களுக்குப் பயிற்சி அளித்து சாதனைகள் புரிவதற்கு ஊக்குவிக்கிறோம். அவர்களுக்கான உறுப்பினர் கட்டணத்தில் கணிசமான சலுகையும் வழங்குகிறோம்.

சிறுவயது முதலே கடலோடும், துடுப்போடும் வளையவரும் மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள, திறமையான இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம்.

எங்கள் கிளப்பில் 21 வயது முதல் 90 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். படகு ஓட்டுபவர்கள் அல்லாதவர்கள் என்றும் ஒரு பிரிவு உண்டு. அவர்கள் பொழுதுபோக்கு, நட்புறவுக்காக உறுப்பினர்களாக இருக்க முடியும்.

ஆரம்பக் காலத்தில் 56 உறுப்பினர்களோடு துவங்கப்பட்ட சென்னை போட் கிளப்பில், இன்று இரண்டாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

ஆரம்பக் காலத்தில் போட் கிளப் உறுப்பினர்களின் சந்தா மாதம் நான்கு ரூபாய் அல்லது காலாண்டுக்கு 10 ரூபாயாக இருந்தது. கிளப் உணவகத்தில் காலை சிற்றுண்டியும் மதிய உணவும் ஒரு ரூபாய் எட்டணா. இரவு உணவு இரண்டு ரூபாய் எட்டணா.

1967-இல் போட் கிளப்பின் தலைவர் பொறுப்பேற்ற முருகப்பா குழும நிர்வாகி எம்.எம்.முத்தையா, போட் கிளப்பின் பல்வேறு வகையான வளர்ச்சிகளுக்கும் காரணமானவர்.

இந்தியா சுதந்திரம் பெற்று, ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது, அவர்களுக்கு நெருக்கமான சென்னையின் வர்த்தகத் துறையினரிடம் இந்த போட் கிளப் நிர்வாகத்தை ஒப்படைத்தனர். ஆரம்பம் முதலே சென்னை போட் கிளப் குறித்த அனைத்து

தகவல்களும் புகைப்படங்களோடு ஆவணப்படுத்தப்பட்டன. கிளப்பின் முழு வரலாற்றை எழுத்தாளர் எஸ். முத்தையா நூலாக எழுத, அது 2010-இல் வெளியானது.

சென்னை போட் கிளப்பின் பெண் படகோட்டிகள் பற்றி?

பெண் படகோட்டிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல பெண் படகோட்டிகளின் அம்மாக்களே இங்கே உறுப்பினர்களாகி, படகோட்டியவர்கள்.

படகு போட்டியின் சுவாரசியம் எது?

பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களின் படகோட்டும் அணிகளுக்கு இடையிலான போட்டி பிரபலமானது.

சென்னை போட் கிளப்பில், சென்னை அணிக்கும், இலங்கையின் கொழும்பு அணிக்கும் இடையில் நடக்கும் போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT