சவூதி அரேபியாவில் மலைகள், வறண்ட பூமி, பாலைவனம்... என ஒருபக்கம் இருந்தாலும், சரித்திரச் சின்னங்களுடன் கடலும், பாலைவனைச் சோலைகளும் உள்ளன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுகுளு இடங்களும் சவூதி அரேபியாவில் உள்ளன.
சவூதிக்கு முதல்முறையாகச் சாலை வழி சுற்றுலாப்
பயணத்தை இந்தியாவைச் சேர்ந்த குழுவினர்
பிப்ரவரி 17-இல் தொடங்க உள்ளனர். இந்தக்
குழுவுக்குத் தலைமையேற்றுள்ள கோவையைச் சேர்ந்த தொழில் முனைவோர் மீனாட்சி சாய் அரவிந்த் கூறியதாவது:
'சுற்றுலா செல்வது எனக்குப் பிடிக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செல்வேன். நான் ஏற்பாடு செய்யும் பயணம் வித்தியாசமானது. பயணம் சாலை வழியாக, காரில்தான் அமையும். பயணிகள்தான் மாறி, மாறி காரை ஓட்ட வேண்டும்.
இந்தியாவின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று வந்த நான், தரைவழி மார்க்கமாக காரில் இரண்டு தோழிகளுடன் சேர்ந்து 'கோவை டூ லண்டன்' பயணத்தை 2017-இல் மேற்கொண்டேன். மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா வழியாக ஐரோப்பாவில் நுழைந்து ஆஸ்திரியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து.. என தொடர்ந்தோம். கடைசியாக, இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனை அடைந்தோம். 24 நாடுகளை சுமார் 26 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு 72 நாள்களில் கடந்தோம்.
இந்த அனுபவம் தந்த உற்சாகத்தில் , மற்றொரு நீண்ட சாலைப் பயணத்தை சாதனைப் பயணமாக்கத் தொடங்கினேன். கோவையிலிருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்கு எனது தலைமையில் 8 பேர் இரண்டு கார்களில் 2019-இல் சென்று வந்தோம். நான்கு நாடுகள் வழியாக, 20 ஆயிரம் கி. மீ பயணித்தோம். இந்தப் பயணத்தில் ஆண்களும் கலந்து கொண்டனர்.
இதற்குப் பிறகு, அஜர்பைஜான், துருக்கி, ஜியார்ஜியா, நமீபியா, திபெத், மஸ்டாங் மங்கோலியா போன்ற நாடுகளுக்கு குழுவினருடன் சென்று வந்தேன். இந்த இடங்களுக்குப் போக வர விமானம். அந்தந்த நாடுகளுக்குச் சென்றதும் , கார்களை வாடகைக்கு எடுத்துகொண்டு பயணிப்போம். எனது சுற்றுலாவில் சாகசம், சாதனை, பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும்.
சவூதி அரேபியா பயணத்தில் திருநெல்வேலியிலிருந்து ஒருவரும், அமெரிக்காவாழ் இந்தியர் ஒருவரும் என நான்கு ஆண்கள். 8 பெண்களும் பங்கேற்கின்றனர். பயணக் குழுவினர் அவரவர் இடங்களிலிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு வந்துவிட வேண்டும். அங்கு ஒன்று சேர்ந்து தேவையான கார்களை வாடகைக்கு எடுத்துகொண்டு நாங்களே இயக்கி, 12 நாள்களில் பல இடங்களைக் கண்டு கடைசியில் சவூதியின் தலைநகரான ரியாத்தை அடைவோம். அங்கிருந்து அவரவர் இடங்களுக்கு விமானத்தில் திரும்புவோம்.
பல மாதங்கள் சவூதி அரேபியாவின் வரைபடத்தைப் பார்த்து, பார்க்க வேண்டிய இடங்கள், தூரம், தங்கும் விடுதிகளைத் தீர்மானித்து பயணத் திட்டத்தை வகுத்துள்ளேன்.
சவூதி என்றாலே நினைவுக்கு வருவது மெக்கா- மதினாவும், திரவத் தங்கமான எரி எண்ணெய்தான்.
உலகில் அரங்கேறிவரும் மாற்றங்களைக் கண்டுகொள்ளாமல் சவூதி அரேபியா இருந்துவந்தது. தற்போது துபையின் அபரிமித வளர்ச்சியைக் கண்டு, விழித்துகொண்டு உலகின் பிரமாண்ட கட்டடங்கள், நகரங்களை நிர்மாணிக்க முனைந்ததுடன், சவூதியின் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சின்னங்களைச் சுற்றிப் பார்க்க உலக சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகிவிட்டது. இதனால் இங்கு பயணத்தைத் தொடங்கியுள்ளேன்.
சவூதியின் நிலப் பரப்பு இந்தியாவின் நிலப் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்காக இருந்தாலும், சவூதியின் மக்கள் தொகை மூன்றே முக்கால் கோடிதான்! ரியாத், ஜெட்டா, தம்மாம், மக்கா, மதினா என மிகப் பெரிய நகரங்கள் ஐந்தும், 80 சிறு நகரங்களும் உள்ளன. சவூதியில் இஸ்லாம் பரவுவதற்கு முன்புள்ள வம்சத்தினர் மலையைக் குடைந்து கட்டியிருக்கும் இல்லங்கள், கோயில்கள் உள்ளன. டைஃப் நகரத்தில் அமைந்துள்ள ரோஜா தோட்டங்களில் இருந்து பன்னீர் தயாரிக்கின்றனர். ரோஜா இதழ்களை ஜாம், ஜெல்லிகளில் பயன்படுத்துகின்றனர்.
குளிர்காலத்தில் பனிக்கட்டிகள் உருவாகும். பல நாள்கள் இரவு நேரத்தில் வெப்பம் சைபர் டிகிரியைத் தொடும். இங்கு இரும்புக் கம்பியில் நகரும் 'கேபிள் கார்' பிரசித்தம்.
சவூதி பயணம் முடிந்ததும், சில மாத இடைவெளிகளில் அர்மேனியா, ஐஸ்லேண்ட், ஒமான் கிரிகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் செல்ல உள்ளேன்' என்கிறார் மீனாட்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.