'மின்னுவது எல்லாம் பொன் அல்ல' என்பது பழமொழி. 'வலைதளங்களில் வரும் செய்திகள் எல்லாம் உண்மை அல்ல' என்பது புதுமொழி.
விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள 'வாத்தியார் இருப்பு' என்ற 'வத்ராப்' (வத்திராயிருப்பு) அருகில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் கூமாபட்டி அல்லது கும்மாபட்டி என்ற பேரூராட்சியின் இயற்கை அழகை, ஏரியையும், பிளவக்கல் அணையையும் காணொளியாக்கி, 'ஊட்டி என்னங்க? கொடைக்கானல் என்னங்க? கூமாபட்டிக்கு வாங்க? உங்க எல்லா பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும்க ..' என்று ஒரு யூ டியூபர் கூவிக் கூவி சொன்னார்.
'எங்கே இருக்கு இந்த கூமாபட்டி' என்று தமிழக மக்கள் இணையத்தில் தேடிப் பார்க்கத் தொடங்கினர். உடனே 'கூமாபட்டி' டிரெண்டிங் ஆனது.
'கூமாபட்டியில் நிலங்கள் விற்பனைக்கு..' என்கிற விளம்பரக் காணொளிகள் இணையத்தை மொய்க்கத் தொடங்கிவிட்டன. பரபரப்புச் செய்திகளால் கூமாபட்டி பேசுபொருளாக, சுற்றுலா ஆர்வலர்களும் கூமாபட்டியைப் பார்க்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிப் போகின்றனர் .
'கூமாபட்டி பிளவக்கல் அணை பகுதியில் பொதுமக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி இல்லை. அதனால் சுற்றுலாப் பயணிகள் கூமாபட்டி வருகை தந்து ஏமாற வேண்டாம். மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுடன் வெளியிடப்படும் விடியோக்கள் சுற்றுலாப் பயணிகள் தவறாக வழிநடத்தும் ‘ என்று தமிழ்நாடு பொதுப்பணித் துறை அறிவிப்பை வெளியிடும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது.
சிறிய அணையான பிளவக்கல் அணையை ஒட்டி அமைந்திருக்கும் பூங்கா கூட பராமரிப்பின்றி பூட்டப்பட்டுள்ளது. அதை புனரமைக்கும் பணிக்கு ரூ.10 கோடி தேவை என்று திட்டம் போடப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே பூங்காவுக்கு புதுப்பொலிவு கிடைக்கும்.
தேனியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் பகுதிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இயற்கை அழகில் போட்டி போடுபவை. அதிலும் ஸ்ரீவில்லிபுத்தூரின் செண்பகத் தோப்பையொட்டி ஆற்று மணலில் கூமாபட்டிக்கு அருகில் இருக்கும் அத்திக் கோயில் வரை நடந்து சென்றால் உலகத்தையே மறந்துவிடலாம். அத்தனை அழகு.
அதுபோல, கூமாபட்டியின் மலையை ஒட்டிய வயல்வெளிகள் அழகாக இருந்தாலும், 'மறைக்கப்பட்ட தீவு... சொர்க்கம்' என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்திகள். இத்தனைக்கும் அந்த யூ டியூபர் கூமாபட்டியில் வசிப்பவர் அல்ல. கூமாபட்டியில் நல்ல உணவங்களோ, தங்கும் விடுதி இல்லை. அங்கு வசிப்போர் எண்ணிக்கை 13,200 மட்டுமே!
கூமாபட்டியில் தெரு நாய்கள் அதிகம். அடையாளம் தெரிந்த உள்ளூர்வாசிகளையே கடித்து வைக்கின்றன. சுற்றுலாப் பயணிகளிடம் எப்படி தெரு நாய்கள் நடந்து கொள்ளும் என்று சொல்லவா வேண்டும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.