'இந்திய இளைஞர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற உனது அனுபவத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடு. அதுதான் எனது ஆசை' என்று தன் கணவரும் ராணுவ வீரருமான சந்தீப் சர்மா சொன்னதையே வேதவாக்காகக் கொண்டுள்ளார் பி.இ பட்டதாரி தமிழ்வாணி.
திருச்சியில் உள்ள தென்னூர் நெடுஞ்சாலையில் செல்போன்கள், மடிக்கணினிகள்,கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பு, பழுது நீக்கும் பயிற்சி நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வரும் இவர், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சியை அளித்துள்ளார். அதில் பல ஆயிரம் பேர் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில், இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துகொண்டிருந்த தமிழ்வாணியை சந்தித்து பேசியபோது:
'நான் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பொறியியல் படிப்பு படித்து முடித்ததும், புதுதில்லியை அடுத்த நொய்டாவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றினேன்.அப்போது எனக்கும் ராணுவத்தில் பணியாற்றி வரும் ஹரியானாவை சேர்ந்த சந்தீப் சர்மாவுடன் காதல் ஏற்பட்டது. எனக்கு ஹிந்தி தெரியாது, அவருக்கு தமிழ் தெரியாது. இருவரும் ஆங்கிலத்தில்தான் பேசிக் கொள்வோம். 2016 -இல் திருமணம் செய்து கொண்டோம்.
பல ஐ.டி. நிறுவனங்கள் திடீரென சரிவை சந்தித்தபோது, நான் பணியைவிட்டு விட்டு சொந்த ஊரான திருச்சிக்கு வந்து விட்டேன். அப்போது என் கணவர், 'எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. உனக்கு செல்போன்கள்,மடிக்கணினிகள்,கண்காணிப்பு கேமராக்கள் பராமரித்தல், பழுது நீக்குதல் தெரியும். இளைஞர்கள் பலரும் பொருளாதார முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். உனக்குத் தெரிந்தவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.
நாட்டை பாதுகாக்கும் பணியில் நான் இருக்கிறேன். நீயோ இளைஞர்களை முன்னேற்றும் பணியில் ஈடுபடு. பெண் என்று யோசிக்காதே' என்றார். அவரது தேசப்பற்று என்னை வியக்க வைத்தது.
நான் ஐ.டி. நிறுவனத்தில் பணியில் சேருவதற்கு முன்பாகவே செல்போன்கள், மடிக்கணினிகள் பராமரித்தல் பழுது நீக்கும் பயிற்சியையும் திருச்சியில் நடத்தி வந்தேன். அந்த அனுபவத்தில் மீண்டும் பழுது நீக்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன். தற்போது எனது நிறுவனத்தில் 6 பெண்கள் உள்பட 18 பேர் பணியாற்றுகின்றனர். அதே நிறுவனத்தில் பயிற்சியை அளிக்கத் தொடங்கினேன்.
சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் பயிற்சி கொடுப்பதற்கான சான்றிதழும் பெற்றேன். தமிழ்நாட்டிலேயே இந்தப் பயிற்சியை வழங்குவோரில் பெண் நான் மட்டும்தான். தற்போது தேசியத் திறன் பயிற்சி மையம், மகளிர் திட்டம், மாவட்ட முன்னோடி வங்கிகளால் நடத்தப்படும் சுயதொழில் பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் செல்போன்கள்,மடிக்கணினிகள்,கண்காணிப்பு கேமராக்கள் பழுது நீக்குதல், பராமரித்தல் தொடர்பான ஒரு மாத பயிற்சிகளை நடத்தும் பயிற்சியாளராக இருந்து வருகிறேன்.
பல மாவட்டங்களுக்குச் சென்று ஒரு மாதம் வரை தங்கியிருந்து, இருபாலருக்கும் பயிற்சி கொடுத்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் பணியை செய்து கொண்டிருக்கிறேன். என்னிடம் பயிற்சி முடித்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் வரை இருக்கலாம். அவர்களில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்தமாகக் கடை வைத்துள்ளனர். என்னிடம் பயிற்சி பெற்ற பலரும் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், புதிதாக எதையாவது கண்டுபிடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
தற்போது நானே 'கிரையோஜெனிக் கண்காணிப்பு கேமராக்கள்' என்ற பெயரில் கேமராக்களைத் தயாரித்து, காப்புரிமையும் பெற்று விட்டேன். குறைந்த விலையில் தேவைப்படும் இடங்களில் இவற்றைப் பொருத்தி வருகிறோம்.
அடுத்த முயற்சியாக சூரிய மின்சக்தி தகடுகள் (சோலார் பேனல்கள்) தயாரித்து வீடுகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகளில் பொருத்துகிறோம். சோலார் பேனல்கள் தயாரிக்க விரும்புபவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சியளித்து வருகிறேன். மின் கட்டணச் செலவு இல்லாமல் வாழ சோலார் தகடுகளை பயன்படுத்தலாம் என்பது குறித்தும், அரசு மானியத்தை எடுத்துச் சொல்லி மானியமும் பெற்றுத் தந்து வீடுகள், நிறுவனங்களில் சோலார் பேனல்களை பொருத்தி வருகிறேன்.
ஓரளவுக்கு என் கணவரின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். எனக்கு இரு ஆசைகள் உள்ளன.அதில் ஒன்று குஜராத்தில் மின்தகடுகள் அதிகமாக உற்பத்தி செய்வதைப் போல தமிழ்நாட்டிலும் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை தொண்டு நிறுவனங்களுக்கும்,இளைஞர்களுக்கும் இலவசமாக செய்து கொடுக்கவும் ஆவலாக உள்ளது.
எனது சொந்த தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் கண்காணிப்பு கேமராக்களை நாட்டின் எல்லைப் பகுதிகளில் அந்நியர்கள் யாரும் உள்ள வந்து விடாதவாறு கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட வேண்டும்.
காஷ்மீரில் லடாக் பகுதியில் என் கணவர் சந்தீப் சர்மா எல்லைப் பாதுகாப்பு படையில் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார். நான்கு மாதங்களுக்குப் பிறகு பஹல்காம் தாக்குதலுக்கு 3 நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தவர் தீடீரென அழைப்பு வந்ததால் புறப்பட்டு போய் விட்டார். 'ராணுவம்தான் என் வாழ்க்கை, துப்பாக்கி தான் என் மனைவி' என்று அவர் அடிக்கடி சொல்லுவதும் உண்டு' என்கிறார் தமிழ்வாணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.