கொற்றவை வழிபாடு தமிழ்நாட்டில் பழங்காலம் முதலே இருந்துவருகிறது. இந்தத் தாய்த் தெய்வம் குறித்து பழந்தமிழர் இலக்கியங்கள் பேசுகின்றன. குறிப்பாக, சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரி கொற்றவையின் இயல்பு, வடிவத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. கொற்றவை வழிபாடானது துர்க்கை வழிபாடாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
கலையம்சத்துடன் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ள கொற்றவைச் சிற்பங்களை காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் கடற்கரை கோயில்களிலும் இருக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்தத் தாய்த் தெய்வத்தின் சிற்பங்களும், இதன் வழிபாடும் பரவலாக அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. இந்த மாவட்டத்திலுள்ள கொற்றவைச் சிற்பங்களில், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் அரங்கநாதர் கோயிலில் அமைந்துள்ள சிற்பம் பழமையானதாகும்.
பனைமலை தாளகிரீஸ்வரர் கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றவை சிற்பம், பல்லவர் கால சிற்பக் கலைக்கு சிறந்ததொரு சான்றாகும். சிங்கத்தின் மீது அமர்ந்து சிம்மவாஹிணியாகப் போருக்கு ஆயத்தமானவளாக இந்தக் கொற்றவை காட்சியளிக்கிறாள்.
போர் முடிவுற்று மகிஷனின் (எருமை) தலை மீது நிற்கும் கொற்றவை (துர்க்கை) சிற்பங்கள், பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட தனிச்சிற்பங்களாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. பெரும்பாலும் இந்தச் சிற்பங்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவைகளாக இருக்கின்றன. இவை இப்போதும் வழிபாட்டில் இருந்து வருகின்றன.
எட்டு கரங்களில் ஆயுதங்களில் ஏந்தியவாறு காட்சித் தருகிறாள். சில இடங்களில் இவளது வாகனமாக மான் காட்டப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் மான், சிங்கம் இரண்டுமே இடம்பெற்றுள்ளன.
பெரும்பாலான சிற்பங்களில் அடியவர் இருவர் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். தன்னையே பலி கொடுத்துகொள்பவராகவும், மற்றொருவர் பூஜை செய்பவராகவும் சித்திரிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் செஞ்சி சாலையில், நேமூர் என்னுமிடத்தில் கொற்றவைக்குப் பலி கொடுக்கப்பட்ட தலைகள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்ட நிலையில் தனிச்சிற்பம் அமைந்துள்ளது.
திருவெண்ணைய்நல்லூர் அருகேயுள்ள பெண்ணைவலம் கிராமத்தில் உள்ள அரிய கொற்றவைச் சிற்பமானது 69ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் மேல் இடப்பக்கத்தில் கடிவாளத்துடன் கூடிய குதிரை இடம்பெற்றுள்ளது.
பொதுவாக, ஐயனார் சிற்பங்களில் அவரது வாகனமாக குதிரை காட்டப்பட்டிருக்கும். ஆனால், இங்கு கொற்றவை சிற்பத்தில் குதிரை இடம்பெற்றுள்ளது புதுமையிலும், புதுமையாகும்.
புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கோ.விஜயவேமுகோபால், 'ஐயனாருக்கு இணையாகக் கருதி இதைச் செய்திருக்கலாம்' எனத் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.