அருள்செல்வன்
'காலம்காலமாக எழுதி வரும் எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிடைக்கிறதா? புதுமைப்பித்தன் காலம் முதல் எழுதி வரும் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். எத்தனை பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன? இந்த ஆதங்கத்தையே நான் வெளிப்படுத்துகிறேன். ஆனால் அதற்கே எதிர்ப்புகள் வருகின்றன' என்கிறார் எழுத்துலகில் பொன் விழா கொண்டாடும் நாஞ்சில்நாடன்.
அவரது முதல் சிறுகதை 'விரதம்' 1975- இல் 'தீபம்' இதழில் வெளிவந்தது. இதுவரை 175 சிறுகதைகள், 250 கவிதைகள், 600 கட்டுரைகள், ஆறு நாவல்களை எழுதியவர். எழுத்தை இன்றும் தொடர்கிறார். 'சொல்ல மறந்த கதை', 'பரதேசி', 'மண்டேலா' போன்ற திரைப்படங்களில் கதைப் பங்களிப்பு செய்துள்ள அவரிடம் திரைத்துறையைச் சார்ந்து பேசினோம்.
சிறு வயதில் அனுபவம்..?
எங்கள் ஊர் வீரநாராயணமங்கலம் என்கிற எளிய கிராமம். சிறு வயதில் இருந்து எனது உடல்நிலை காரணமாக, விளையாட்டில் ஆர்வம் இல்லை. 'தமிழன்' எனும் நூல் நிலையத்தில் மாலை ஐந்து முதல் ஏழு மணி வரை இலங்கை வானொலியில் திரைப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதைக் கேட்பதே ஒரு பரவச அனுபவமாக இருக்கும்.
திரைப்படம் பார்ப்பது என்பது எட்டாக்கனியாக இருந்தது. நாகர்கோவிலில் 5 திரையரங்கங்கள் இருந்தன. 6 கி.மீ. செல்ல வேண்டும். அப்பா காசு கொடுக்க மாட்டார் . புன்னைக்கொட்டைகளைச் சேகரித்து, காசு சேர்த்துப் படங்களுக்குச் செல்வேன். தரை டிக்கெட் இரண்டணா . பெஞ்ச் டிக்கெட் நாலணா. பால்கனி அதற்கு மேல், ஆறணா. நான் கல்லூரி செல்லும் வரை தரை டிக்கெட்டில்தான் திரைப்படம் பார்த்தேன்.
திருவிழாக் காலங்களில் வெட்ட வெளியில் திரை கட்டி படங்களைத் திரையிடும்போது, விடிய விடிய பார்த்ததுண்டு. எம்ஜிஆர் , சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோரின் திரைப்படங்களைப் பார்ப்போம். 'குலேபகாவலி', 'பராசக்தி', 'சிவகங்கைச் சீமை' போன்ற படங்கள் பார்த்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
எனது பெரியப்பா என்.எஸ். நாராயண பிள்ளையோ 'நாடோடி மன்னன்' உள்ளிட்ட 66 திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர்.
பூதப்பாண்டி அருகே மணத்திட்டை என்ற ஊரில் ஒரு திரையரங்கம் திறப்பதற்காக, எம்ஜிஆர் வந்தபோது அவருடன் எனது பெரியப்பாவும் வந்தார். எம்ஜிஆர் தனது காரில் இருந்து பெரியப்பாவை ஊரில் இறக்கி விட்டுச் சென்றார். அப்போது நான் எம்ஜிஆரை ஐந்தடி தூரத்தில் பார்த்தேன்.
நான் இருபது வயதில் சென்னை வந்தபோது என்னை ரிக்ஷாவில் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு எனது பெரியப்பா அழைத்துச் சென்றார். எம்ஜிஆர் மீது அவ்வளவு ஈடுபாடு உண்டு.
நான் எம். எஸ். சி. படிக்க திருவனந்தபுரம் சென்றபோது, இரு ஆண்டுகள் மலையாளத் திரைப்படங்களைப் பார்த்தேன். மலையாளத்தில் கதை சொல்கிற விதம், அந்தப் பண்பாட்டைச் சொல்வது போன்றவை என்னை வசீகரம் செய்தன. அது மாறுபட்ட உலகமாக இருந்தது. 1972இல் மும்பைக்குச் சென்றேன்.
மும்பையில் படங்கள் பார்த்தீர்களா?
மும்பைக்கு வேலை தேடித்தான் சென்றேன். பெரிய வருமானம் இல்லை. அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் தொடர்பால் நா. முத்துசாமி, ஞான ராஜசேகரன் போன்றவர்கள் அறிமுகமாகினர்.
அவர்களின் 'நாற்காலிக்காரர்கள்', 'வயிறு' போன்ற நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அங்கே ஹிந்தி, மராத்தி, ஆங்கில நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தன. அவையெல்லாம் பரீட்சார்த்த முறையில் அமைந்தவை. எல்லாமே சோதனை முயற்சிகள்.
ஸ்மிதா பாட்டீல், அமோல் பலேகர் ,சித்ரா பலேகர், ஓம்புரி, அம்ரீஷ்பூரி, நஸ்ருதீன் ஷா போன்றவர்கள் நடித்த நாடகங்களையும், திரைப்படங்களையும் பார்த்தேன். எதார்த்த நடையிலான திரைப்படங்கள் என்னைக் கவர்ந்தன. அதையெல்லாம் பார்த்தவுடன் தமிழ்ப் படங்கள் மீது எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது.
உங்கள் கதையில் வெளிவந்த 'சொல்ல மறந்த கதை' பேசப்பட்டது. அதன் பிறகு ஏன் தொடரவில்லை?
என் 'தலைகீழ் விகிதங்கள்' என்கிற கதை தங்கர்பச்சான் இயக்கத்தில் 'சொல்ல மறந்த கதை'யாக வந்து 25 ஆண்டுகள் தாண்டி விட்டன . அது வெற்றி பெற்றதில் மகிழ்ச்சிதான்.
ஆனாலும் தொடர்ந்து தமிழ்த் திரைப்படத் துறையில் ஈடுபடவில்லை.இயக்குநர் ஞான ராஜசேகரன் மும்பையில் இருந்தபோது, எனக்கு நண்பர். அவர் 'பாரதியார்', 'பெரியார்' படங்கள் இயக்கியபோது நான் உதவியாக இருந்தேன்.
'நான் கடவுள்' படத்தை பாலா எடுத்தபோது, என்னை அதற்கு எழுதச் சொன்னார். அது ஜெயமோகனின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 'அவரிடமே வசனம் எழுதுமாறு கேளுங்கள்' என்று கூறினேன். 'பழக்கமில்லை' என்றார்.அப்போது ஒரு மலையாளப் படப்பிடிப்புக்காக கோவை வந்திருந்த ஜெயமோகனை பாலா அனுப்பிய சுகாவுக்கு நான் அறிமுகம் செய்து வைத்தேன்.
இதன்பின்னர் ஜெயமோகன் எழுதினார். 'பரதேசி' படத்தில் அதர்வா கதாபாத்திரத்தின் கதை என்னுடையதுதான். 'இடலாக்குடி ராசா' என்பது அந்தச் சிறுகதை. அதிலிருந்த அந்தப் பாத்திரத்தை எடுத்துகொண்டார்.எனவே அதில் நான் எழுதினேன்.
நான் தமிழில் எழுதிய சிறுகதையை 'காவ்ட்டி' என்ற பெயரில் மராத்தியில் திரைப்படமாக எடுத்தார்கள். 'காவ்ட்டி' என்றால் 'சிற்றூர்க்காரன்' என்று அர்த்தம். சில குறும்படங்களுக்கும் என்னுடைய கதையை எடுத்திருக்கிறார்கள்.
மது பற்றி நான் எழுதியதன் தாக்கத்தில், அதன் தரவுகளை வைத்து 'மதுபானக் கடை' எடுத்து இருப்பதாக படத்தின் இயக்குநரே கூறியிருந்தார். எனது 'இந்நாட்டு மன்னர்' சிறுகதையைக் குறும்படமாக எடுத்தார்கள். அதையே பெரிய படமாக ‘மண்டேலா' என்று எடுத்தார்கள் .அதற்கு தேசிய விருதும் கிடைத்தது.
சுகாவின் 'படித்துறை' திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் நான், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் மூன்று பேரும் பாடல்களை எழுதினோம். அதற்காக இளையராஜாவுடன் இரண்டு நாள் விவாதத்தில் இருந்தோம். அவருக்கு என் மீது தனி அன்பு உண்டு . அந்தப் பாடல் அனுபவம் மறக்க முடியாதது.
உங்கள் கதைகளைத் திரைப்படமாக பார்த்தபோது அந்த உணர்வு எப்படி இருந்தது?
எழுத்து என்கிற வடிவம் வேறு. திரை வடிவம் என்பது வேறு. திரை வடிவாக மாற்றும்போது திரையின் காட்சி மொழிக்கு ஏற்றபடி சிலவற்றை மாற்றிக் கொண்டுதான் உருவாக்குவார்கள். எனது 'இந்நாட்டு மன்னர்கள்' கதையை 'மண்டேலா'வில் நல்ல கற்பனை கலந்து திரைப்படத்துக்காக மாற்றி சுவாரசியமாக உருவாக்கி இருந்தார்கள். இந்தக் கதை எழுதி 45 ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் படமாக எடுத்திருந்தார்கள்.
'பரதேசி' படத்தில் நான் திரைக் கதை, வசனம் எழுதினேன். படப்பிடிப்பு சிவகங்கையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் ஒரு கிராமத்திலும், மானாமதுரை அருகே ஓர் ஊரிலும், மூணாறு அருகிலும் நடைபெற்றது. அப்போதெல்லாம் நான் படப்பிடிப்புக்குச் சென்றேன். இப்படி முப்பது நாள்கள் பாலா கூடவே நான் இருந்தேன்.அதற்குப் பிறகு நான் அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால் தொடர முடியவில்லை . ஓராண்டுக்கு முன் பாலா என்னிடம் எனது அனைத்து சிறுகதைகளையும் கேட்டு வாங்கி இருக்கிறார். நல்ல வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக் கொள்வதாகக் கூறி இருக்கிறார் .
'எட்டுத்திக்கும் மதயானை' எனது ஆறாவது நாவல். முன்னணி இயக்குநர்களே அதன் கதையிலிருந்து பகுதி பகுதியாக எடுத்துப் பல படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அது பற்றி என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
தமிழ் திரையுலகம் பற்றி கசப்புடன் விமர்சனம் செய்வது ஏன்?
தமிழ்த் திரையுலகம் வணிக நோக்கில் சென்று கொண்டிருக்கிறது. அவ்வாறே பெரும்பாலான திரைப்படங்கள் வருகின்றன. எனவே அவற்றின் மீது எனக்கு ஒரு சலிப்பு வந்துவிட்டது. திரையரங்கம் சென்று நான் திரைப்படம் பார்த்து, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன.
நல்ல படம் என்று யாராவது சொன்னால் சேனலில் பார்த்து விடுவேன். அவ்வளவுதான். பாலா, மிஷ்கின், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நன்கு அறிமுகமாகி நட்பானவர்கள். மணிரத்னத்திடமும் நல்ல அறிமுகம் உண்டு. இருந்தாலும் தமிழ்த் திரையுலகில் ஈடுபாடு இல்லை.
இன்றைய வணிகத் திரைத் துறையில் இருந்து சிந்தனாபூர்வமாக நான் முரண்படுகிறேன். அது செல்கிற திசையும் அங்கே நிலவி வருகிற சூழலும் எனக்கு முரண்பட்டதாக இருக்கிறது. நமக்கான இடம் அது அல்ல என்கிற எண்ணம் இருப்பதால் தொடர்ந்து ஈடுபடுவதில்லை.
தமிழ்த் திரையுலகம் பற்றிய உங்களுக்கு ஆதங்கம் உண்டா?
திரைப்படக் கலை என்பதையும் தாண்டி வணிகமாக ஆகிவிட்டது. தமிழ்ப் பண்பாடும் வாழ்க்கையும் இல்லை என்பது என்னுடைய கருத்து. கதாநாயகிகளின் தோற்றம், உடல் மொழி, தலையசைப்பு, முகபாவனை, நடவடிக்கைகள், பேச்சு எல்லாம் இருப்பதைப் போன்ற பெண் தமிழ்நாட்டில் எங்குமே இருக்க மாட்டாள். எல்லாமே போலியானவை. தமிழர்களின் பேசுபொருள், சிந்தனை எல்லாமே திரைப்படமாகவே இருக்கிறது. இங்கே அரசியலுக்கும் திரைத்துறைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் முரண்பாடானது. மட்டுமல்ல வருந்தத்தக்கதும்கூட.
தமிழ்நாட்டை 25 மாநிலமாகப் பிரித்தால் 25 நடிகர்களை முதல்வராக்கிவிடலாம். அந்த அளவுக்கு அனைவருக்கும் அரசியல் ஆசை உள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை தீர்மானிக்கக் கூடிய இடத்தில் திரைத் துறை இருப்பது என்பது மிகவும் வருந்தத்தக்கது.
ஐம்பது ஆண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளன் ஒருவனைப் பேருந்தில் கூட யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தலைமுடி சீவுகிற ஒரு காட்சியில் வந்த ஒரு நடிகனை 12 கோடி தமிழர்களுக்கும் தெரிகிறது. இப்படி திரைத்துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அபாயமானது. எல்லோரும் மருத்துவருக்கும், பொறியாளருக்கும் ஏன் படிக்க வேண்டும் ? நடிக்க வேண்டியதுதானே என்று சொல்லும்படி நிலைமை உள்ளது. மற்ற மொழிகளில் அப்படி இல்லை.
நான் மம்முட்டியிடம் நேரில் பேசியிருக்கிறேன்.அவரது 'பொந்தன் மாட' படத்தை நான் பார்த்தேன் என்று கூறினேன். அப்போது 'அதை இங்கே பார்த்திருக்க முடியாதே.எங்கே பார்த்தீர்கள்?' என்றார். 'திருவனந்தபுரத்தில் எனது மாமியார் வீடு உள்ளது. அங்கே சென்றபோது நான் பார்த்தேன்' என்றேன். அப்படி இயல்பாகப் பேசினார்.
அமோல் பலேகர் 'என்.எஃப். டி.சி.'யில் இருந்தார். அப்போது நான் அவரைப் பார்க்கச் சென்றபோது என்னை லிப்ட் வரை வந்து வழியனுப்பினார்.
மகாராஷ்டிர எம்எல்ஏ கேப்டன் தமிழ்ச்செல்வனின் அழைப்பில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்ற விழாவில் நான் பொது மேடையிலேயே பேசினேன். '11 கோடி மராத்தியர்கள் இருக்கும் மாநிலத்தில் 180 படங்கள்தான் எடுக்கிறார்கள். ஏழரை கோடி மக்கள் கொண்ட தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 300 படங்கள் எடுக்கிறார்கள் 'என்றேன். அந்த மேடையில் நடிகர் விவேக்கும் இருந்தார்.
திரைத் துறை என்பது பொழுதுபோக்கு. அது இங்கே வேறு வகையாக உள்ளது. காலை 6 மணிக்கே திரைப்படம் பார்க்கச் செல்கிற ரசிகன் எப்போது விழித்திருப்பான்?எப்போது புறப்பட்டு இருப்பான்? இப்படி ஒரு மோகத்தை எங்கும் பார்க்க முடியாது. அந்தத் திரைத்துறை அரசியலில் மற்ற இடங்களில் செலுத்தும் ஆதிக்கம் இங்கு அதிகம். இங்கே நடிகைகள்தான் கடவுளுக்குச் சமமாகப் பார்க்கப்படுகிறார்கள்.
திரைத்துறையில் சொல்லப்படுகிற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வியாபாரத்துக்கு ஏதாவது கணக்கிருக்கிறதா? முப்பது ஆண்டுகள் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெறும் அரசு ஊழியன் ஒருவனுக்கு பிள்ளைகள் திருமணம் முடிந்து, ஒரு வீடு இருக்கலாம் அவ்வளவுதான். ஆனால் நடிகர்களின் சம்பளம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அவர்களுக்குத்தான் எல்லாப் புகழும் பணமும் விருதுகளும் கிடைக்கின்றன. மத்திய அரசின் பத்ம விருதுகளும் எளிதாகக் கிடைக்கின்றன.
காலம்காலமாக எழுதி வரும் எழுத்தாளனுக்கு அந்த அங்கீகாரம் கிடைக்கிறதா? புதுமைப்பித்தன் காலம் முதல் இப்படி எழுதி வரும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எத்தனை பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன?இந்த ஆதங்கத்தைத் தான் நான் வெளிப்படுத்துகிறேன். ஆனால் அதற்கே எதிர்ப்புகள் வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.