பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கல்லூரிப் பேராசிரியர், சமூக ஆர்வலர், இயற்கை மருத்துவர்.. என பன்முகங்களைக் கொண்ட நித்தி கனகரத்தினத்தை 'தமிழ் பாப் இசையின் முன்னோடி' என்றே அழைக்கின்றனர்.
இலங்கையில் பிறந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் பாப் இசைத் துறையில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர் நித்தி கனகரத்தினம். இவர் பாடிய 'சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே' , 'கள்ளுக்கடைப் பக்கம் போகாதே' உள்ளிட்ட பாப் இசைப் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.
யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பராயை பூர்விகமாகக் கொண்ட இவர், கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்தில் விவசாயப் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியவர். பின்னர், ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விக்டோரியா பல்கலைக்கழகத்தில் மூலிகை மருத்துவயியல், உயிரியல் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், எண்பது வயதைக் கடந்து மெல்பேர்ன் நகரில் வசித்து வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'நான் மூன்று வயதிலேயே பாடியதாக என் அம்மா சொல்வார்கள். அப்போது பிரபலமாக இருந்த 'நாட்டியக் குதிரை, நாட்டியக் குதிரை, நாலாயிரம் பொன் வாங்கலியா.....' என்ற பாடலை சிறு வயதிலேயே நான் பாடினேன். பத்து வயதில் இருந்து எட்டு ஆண்டுகள் பள்ளி, கல்லூரி நாடகங்களில் நடித்துள்ளேன்.
ட்ரம்ப் வாசிப்பதை முதலில் கற்றுக் கொண்டேன். இதன் பிறகு நண்பன் லஷ்மண் ஞானப்பிரகாசத்தின் உதவியால் கிடார் இசையை அறிந்தேன். பியானோ வாசிப்பதிலும் எனக்கு அனுபவம் உள்ளது.
1967-இல் இலங்கையில் நான் ஹாரிடி தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தபோது, நல்ல கருத்துகளையும், ஒலிநயம், இசை நயங்களையும் எழுதிய பாடல்தான் 'சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே?....' என்ற பாடல். பின்னர், இசைத்தட்டு வடிவிலும் 44 பாடல்கள் வெளிவந்தன. 1972-இல் எனது பாடலை பயன்படுத்திக் கொள்வதாக, சிலோன் மனோகர் கேட்டதால் அனுமதித்தேன். அவர் இந்தப் பாடலை பாடும்போதெல்லாம், எனது பாடல் என்பதை எந்த இடத்திலும் சொல்லவில்லை.
கல்லூரிக் காலத்திலும் எனக்கு பலரும் மேடை அமைத்துகொடுக்க நிறைய பாடல்களை தமிழ், ஆங்கிலத்தில் எழுதி இசையமைத்துப் பாடினேன். யாழ்ப்பாணம் மாநகரச் சபையின் பெளர்ணமி தினக் கலை விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் எனது பாடல்கள் வரவேற்பைப் பெறத் தொடங்கி, உலகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியது.
'கள்ளுக்கடை பக்கம் போகாதே.. ' என்ற பாடலை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் மதுவிலக்கு பிரசாரப் பாடலாகப் பயன்படுத்தியது எனக்கு பெருமைதான். இதனால் 'சீர்திருத்தக் கவிஞர்' என யாழ் முஸ்லிம் மக்கள் எனக்கு பட்டம் அளித்தார்கள்.
'சோளம் சோறு..', 'லண்டன் மாப்பிள்ளை...', ஐயையோ அவள் வேண்டாம்..'', 'மனிதன் மாறவில்லை..', 'ராசநாயகம், அடிடா சுந்தரலிங்கம்..', 'ஊரு கெட்டுப் போச்சு..', 'எல்லாமே என் பிள்ளைகள்...' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் பலரும் கேட்டு ரசிக்கின்றனர்.
எனது பல பாடல்களை இந்தியத் திரைப்படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'கார்கி' என்ற தமிழ் படத்தில்தான் எனது பெயரை ' பாடலாசிரியர் - பாடகர்' எனக் குறிப்பிட்டனர். தமிழில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றி, இசையமைத்து, பாடி இருக்கிறேன். இவற்றில் சுமார் 20 பாடல்கள் இறைவனைப் புகழும் பாடல்களாகும். நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் அனைத்து கடவுள்களையும் மதிப்பவன். அதனால் என் பாடல்களில் இறைவன் என்ற சொல்லைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளேன்.
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் பாடல்கள்தான் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தின. நகைச்சுவையோடு சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை கூறுவதை நானும் ஏற்று, என் பாடல்களில் அதைக் கொண்டு வந்தேன். என்னுடைய கலை பயணத்தில் சம்பாதித்த பணத்தை வைத்துத்தான், இந்தியாவில் விவசாயத்தில் மேல் படிப்பு படித்தேன்.
பின்னர், இலங்கையில் பிரதிப் பணிப்பாளர், நோய் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட பல பணிகளில் பணியாற்றினேன். என்னுடைய கல்விக்காக ஆஸ்திரேலியாவிலிருந்த என்னுடைய மைத்துனர் அழைப்பின்படி, அந்த நாட்டுக்குச் சென்று 'உணவு விஞ்ஞானம்',, ' உணவு பாதுகாப்பு', 'மருந்துவியல்', 'இயற்கை வைத்தியம்' உள்ளிட்டவற்றை பயின்றேன். பின்னர், ஆஸ்திரேலிய நாட்டிலேயே தங்கி விட்டேன்.
இலங்கையில், இனக் கலவரத்தால் தமிழ் பெண்கள் பலரும் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று ஐந்து தையல் பாடசாலைகளைத் தொடங்கினேன். அதனால் அவர்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்தேன். இதனால் இன்றும் 200 குடும்பங்கள் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
என் ஓய்வூதியச் சேமிப்பு பணத்தில் 'ஆதூலர் சாலை' எனும் இயற்கை மருத்துவ மையத்தை தொடங்கி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இயங்கும் ஒரு தனியார் சங்கத்தின் பொறுப்பிலே ஒப்படைத்துள்ளேன்.
கிளிநொச்சியில் உள்ள மலையாளபுரம் கிராமத்தில், 696 குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைக்கவும், வீடுகள் கட்ட உபகரணங்களை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளேன்.
என் மறைவுக்குப் பின்னர், என்னுடைய உடலையே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆய்வுக்காகத் தர வேண்டும் என்று என் குடும்பத்தாரிடம் கூறியிருக்கிறேன். இது பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன். கலையுலகில் என் பெயர் பிரபலம் அடைந்துள்ளதோடு, உரிய அங்கீகாரம் அடைந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.அதேபோல பாடல் கலைஞன் என்ற விதத்தில் உலகம் முழுவதும் பிரயாணம் செய்து என் கல்வித் தகுதியை வைத்து, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதும் விருப்பமாக உள்ளது.
கணக்காளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எனது மனைவி செல்வராணி. எங்களுக்கு ஒரு ஆண், இரண்டு பெண்கள். மூத்தவள் நியூரோ சயின்ஸ் படித்துள்ளார். மன நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இளையவள் மருந்தியல் படித்து, உலகம் முழுவதம் பயணித்து மருத்துவர்களுக்கு ஆலோசனை கூறி வருகின்றார். மகன் பூந்தோட்டங்களை உருவாக்கித் தரும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
பாப் இசையின் வரலாறு, அனுபவம் குறித்து 'என் இசையும் என் கதையும்' , ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி இனத்தில் உள்ள மொழிகளில் தமிழின் தடயங்கள் உள்ளிட்ட நான்கு நூல்களை எழுதி வருகின்றேன். உணவின் முக்கியத்துவம் குறித்து சித்த மருத்துவத்தை பற்றி நூல் எழுத விரும்புகிறேன்.
இறைபாடல்களை எழுதி வருகிறேன். புதிய பாடல்களை இசையமைத்துப் பாட விரும்புகிறேன். பாரம்பரிய உணவுகளை உண்டால், இளைஞர்கள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
இலங்கையில் இருந்தபோது வசதி குறைவாக இருந்தாலும், நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தோம். நான் வாழும் ஆஸ்திரேலியா நாட்டின் அதிக அளவில் பணம் கிடைக்கிறது. என்றாலும், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவில்லை என்பதே உண்மை. தற்போது எண்பது வயதாகிறது. இன்னும் இருபது ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து கலைக்கும், சமுதாயத்துக்கும் பயன்பட வேண்டும் என்பதும் என் விருப்பமாக உள்ளது.
சிறந்த பாடகருக்காக உலகளாவிய அளவில் பல்வேறு விருதுகளையும், இயற்கை புற்றுநோய் தடுப்பில் ஆஸ்திரேலிய மக்களுக்கு செய்த சேவைக்காக,ஆஸ்திரேலிய பிரதமர் விருதையும் பெற்றுள்ளேன். 2025 மார்ச்30 -இல் என் பணிகளைக் கெளரவிக்கும் விதமாக, ஆஸ்திரேலியா வாழும் தமிழர்கள் பாராட்டு விழாவை நடத்த உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்கிறார் நித்தி கனகரத்தினம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.